சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for பெப்ரவரி 2008

மரத்தடி

2 மறுமொழிகளுடன்

நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அலுவலகத்திலிருந்து கிளம்புகிற நாட்களில் அது நாள் வரை இருந்த போக்குவரத்து நெரிசலை பழிவாங்குவது போல கார்கள் பறக்கின்றன. கட்டுப்பாடென்பதில்லாமல் சீறிப் பாய்கின்றன. தடுப்பதற்கு எதுவுமில்லை என்பது போல தார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்கிறோம். “உச்சிப் பொட்டு தெறிக்கிற” இசையுடன் ஒரு இரவு அப்படி சென்றுக் கொண்டிருக்கையில் கார் அழகான வளைவுகளில் அபாயகரமான திருப்பங்களையும் அபாயகரமான வளைவுகளில் அழகான திருப்பங்களையும் மேற்கொண்டபடி சென்றுகொண்டிருந்தது. அமைதியான சென்னை சந்துகளில் உறங்க ஆயத்தமான நாய்கள் பதறி சிதறி ஓடின. எதற்கும் நிற்பதாயில்லை என்ற வைராக்கியத்துடன் மிக வேகமாக திரும்புகையில் அதிர்ச்சியுற்று காரை கிரீச்சிடவைத்து அதிர வைத்தாள் ஒரு பெண். பித்து பிடித்தவள். நடு ரோட்டில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். “சாவி எங்கே? சாவி எங்கே?” என்று எங்களைப் பார்த்து கத்துகிறாள்.  தொலைவில் சில ஆண்கள் கவனித்தபடி நின்றுக்கொண்டிருந்தனர். யார் அவள், எந்த சாவியை வெகு காலமாக தேடுகிறாள், நாங்கள் கடந்த பின் அவள் நிலை என்ன?

இது போன்ற ஊர் உறங்குகிற வேளையில் ஊர்தியில் வெறி கொண்டு பறக்கிற நேரங்களில் நான் பார்த்த மேலும் இரண்டு வித்தியாசமான காட்சிகள் – கோட்டூர்புர குறுக்கு சந்தில் நாங்கள் திரும்ப எத்தனித்த போது ஒரு புதரில் இருந்து மான் ஒன்று எட்டிப் பார்த்தது; நீல் மெட்டாலிக்கா ஒவ்வொரு தெரு முக்கிலும் வைத்திருக்கும் சக்கரம் பொருந்திய குப்பைத்தொட்டியில் சிறுவன் ஒருவனை ஏற்றி நான்கு சிறுவர்கள் ஊர்வலமாக தள்ளிக்கொண்டு சென்றது.

******************
70களில் அரசாங்க வேலைக்கு சென்ற பெண்கள் அனைவரடிமும் ஒரு சாகசக் கதையிருப்பதை கவனிக்கிறேன். ஒன்று வீட்டில் இருப்பவர்கள், அண்டையில் இருப்பவர் எதிர்ப்பை மீறுகிற சாகசம் அல்லது பயணம் என்றொரு சாகசம். எங்கோ ஊர் பேர் தெரியாத இடத்திற்கு தினமும் சென்று வந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டதில் இருக்கிறது நிர்வாகத் தன்மையின் ரகசியம். என் அம்மாவுடன் பணிபுரிந்த அவரின் தோழி நான் எப்போது ஊருக்கு சென்றாலும் என்னை வந்து பார்த்துவிட்டு போவார். அவர் வேலைக்கு சேர்ந்த 70களில் அவரின் பள்ளிக்கு பேருந்து வசதி குறைவு. காலையில் ஒன்று, மாலையில் ஒன்று. நேரத்தோடு வருமென்று சொல்ல முடியாது. அதுவும் பேருந்திலிருந்து இறங்கி நீண்ட செம்மன் சாலையில் பதினைந்து நிமிடம் நடந்து செல்லவேண்டும். மாலையில் பெரும்பாலும் அவர் நடந்து சென்று ரோட்டை அடைவதற்குள் பேருந்து சென்று விடுமென்பதால் அவர் ஒரு விசில் வாங்கி வைத்துக்கொண்டாராம். தூரத்தில் பேருந்தைக் கண்டால் உடனே விசிலை ஊதுவாராம். நடத்துனருக்கு அது தான் உடனடி தந்தி. பேருந்து சில நிமிடம் நின்று அவரை ஏற்றிச் செல்லுமாம். காலையில் தினம் பேருந்தை தவற விடுபவர்கள் இதை பத்து முறை திரும்பத் திரும்பப் படிக்கவும்.

******************

மஞ்சள் பூக்களின் மேல் எனக்கு என்ன ஈர்ப்பு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சிறுமழையில் எழுதிய ஒரு கவிதையில் அவை பூத்திருந்தன. அதை படித்து விட்டு தோழி ஒருவர் கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய ஒரு கவிதையிலும் அவை வந்திருந்ததை நினைவு படுத்தினார். போன வாரம் எழுதிக்கொண்டிருந்த ஒரு கவிதையிலும் அவை நான் சொல்வதை மதிக்காமல் மறுபடி பூத்தன. யோசித்து பார்த்தால் கவிதை யோசிக்கிற பொழுதெல்லாம் சில காட்சிகள் தவறாமல் என் மனது காட்சிப்படுத்திக்கொள்கிறது. அதிலே மஞ்சள் பூக்களும் உண்டு. ஆனால் அவை மரத்தில் இருப்பதேயில்லை. எப்போதும் எங்கேயாவது சிதறி விழுந்தோ, விழுந்துக்கொண்டோ இருக்கின்றன. ரயில் நிலையம் பற்றி எழுதத் தொடங்கினால் ப்ளாட்ஃபார பெஞ்சில் சிதறிக் கிடக்கினறன. உளவியல் காரணங்கள் ஏதேனும் இருக்குமா என்று யோசிக்க சுவாரசியமாக தான் இருக்கின்றது. ஆனால் யோசித்து முடித்த பின் அப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை பூர்வ ஜென்மம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதேனும் இருக்கலாம். மஞ்சள் பூக்களை அலட்சியப்படுத்தியதால் அடுத்த ஜென்மத்தில் அதைப் பற்றி கவிதை எழுதிக் குவிப்பதாக ஒரு சாபம் இருக்கலாமோ என்னவோ.

******************

Written by aravind

பெப்ரவரி 21, 2008 இல் 7:04 மு.பகல்

Socks relief 2007

10 மறுமொழிகளுடன்

ரொம்பவே பிரபலமான “தமிழன்” “இமயம்” “ராஜ் டிஜிட்டல் பிளஸ்” சேனல்கள்ல வெயில் கொளுத்துற மதியானத்துல ஒரு ப்ரோக்ராம் வரும் பாத்திருக்கீங்களா? அரைகுறை ட்ரெஸ்ல அஞ்சாறு வெள்ளக்காரன்/காரி எதேதோ எக்ஸர்சைஸ் மிஷின வெச்சிகிட்டு மிதிக்கிறாங்க, ஓடுறாங்க, ஆடுறாங்க… ஒவ்வொண்ணும் பயங்கற உப்யோகமான பொருட்கள்… அதுவும் அவங்க பேசற தமிழ் இருக்கே, யப்பா! புல்லரிக்குது நினச்சாலே அத நான் இப்போ!

அவங்களோட பொருட்கள், விளம்பர யுத்தி இதெல்லாம் ரொம்ப பிடிச்சு போய் நான் அவங்க கிரியேட்டிவ் டீம்ல சேரலாம்னு இருக்கேன். அதுக்கு ஒரு ட்ரையல் இங்க.

    ***********

ஒரு பெரிய அரங்கத்துல வேலை வெட்டி இல்லாத நிறைய பேர் உக்காந்திருக்காங்க. நட்ட நடுல சௌகர்யமா உட்காரவே முடியாத ரெண்டு சேர். அதுல ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேருக்கு நடுல நம்ம காம்பியரர் டயானா.

டயானா: வணக்கம். உங்கள சந்தோஷமும் அச்சரயமும் பட வைக்கிற நிறைய பொருட்கள உங்களோட வீட்டுக்கெ அனுப்பி வைக்கிற நாங்க உங்களுக்காக கண்டுபிடிச்சிருக்கிற இன்னொரு பொருள் “Socks releif 2007″. இத பத்தி நான் சொல்றதுக்கு முன்னாடி நம்ம ஸ்டூடியோவுக்கு வந்திருக்க ஸ்டெல்லா அவங்களுக்கு இந்த பொருள் என்னவொரு அற்புதத்த செஞ்சுது சொல்ல ஆசைப்படுவாங்கன்னு நினைக்கிறேன்.

ஸ்டெல்லா: கண்டிப்பா (சிரிப்பு)

டயானா: அப்ப நீங்க நிச்சயம் சொல்லணும் அதோட அற்புதத்த பத்தி

ஸ்டெல்லா: முன்னெல்லாம் என் ஹஸ்பெண்ட் வீட்டுக்கு சாயந்திரம் வரும் போது ரொம்ப ஜாலியா இருப்பாரு. பாக்கவே சந்தோஷமா இருக்கும் எனக்கு. கடவுள் எங்களுக்கு நிறையவே சந்தோஷத்த கொடுத்திருக்காருன்னு நினச்சிப்பேன். அவரு பாட்டெல்லாம் பாடிகிட்டே வருவாரு. சாயந்திரம் அவரு வரும் போது நான் கதவ திறந்ததும் அவரு பாடுவாரு – “இந்தியாவோட தலைநகரம் டில்லி, நீ தாண்டி என்னோட மல்லி” அப்படின்னு

டயானா: ஓ வாவ்! ஹி மஸ் பி வெரி ரொமாண்டிக் (அரங்கமே சிரிக்குது)

ஸ்டெல்லா: ஆமாம் (வெட்கம்). இப்படி சந்தோஷமா இருந்த எங்களோட வாழ்க்கையில ஒரு பிரச்சினை வந்தது. நான் அத எதிர்பார்க்கவே இல்லை. அது எங்கள ரொம்பவே கஷ்டப்படுத்திச்சு.

டயானா: ஓ நோ!

ஸ்டெல்லா: யா டயானா! இவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. மூணு பத்து ரூபாய்க்கு விக்கிற கடையப் பாத்தாலே இவருக்கு மூக்கு வேர்க்க ஆரம்பிச்சிடும். வேண்டாம்னு சொன்னாலும் என் பேச்ச அவரு கேட்கறதே இல்ல. அப்படிதான் ஒரு தடவ விக்கியோட வெக்கேஷனுக்கு நாங்க வெனிசுலா போயிருந்தப்போ அங்க மூணு பத்து ரூபாய்க்கு வித்திட்டு இருந்த சாக்ஸ் வாங்கினாரு. அதுல போட்டிருந்த ரெட் கலர் எம்ப்ராய்ட்ரி பூ எனக்கு பிடிக்கவே இல்ல. இருந்தும் அவரு வாங்கிட்டாரு. அத தான் ஆஃபீஸ்க்கு போட்டுட்டு போக ஆரம்பிச்சாரு. அப்போத்திலேர்ந்து தான் பிரச்சினை. சாயந்திரம் வீட்டுக்கு வரும் போது டில்லி மல்லி பாட்டு பாடறத நிறுத்திட்டாரு. ஒரு மாதிரி மூடியா இருந்தாரு. வீட்டுக்குள்ள வந்ததும் ஷூ சாக்ஸ கழட்டிட்டு முழங்கால சொறிய ஆரம்பிச்சிட்டாரு. உங்க வீட்டு சொறி எங்க வீட்டு சொறி இல்ல. நைட் தூக்கத்துல கூட சொறிய ஆரம்பிச்சிட்டாரு. சாக்ஸ் கொஞ்சம் தடிமனா இருந்ததால அப்படி ஆயிடுச்சு. இது எல்லாருக்கும் வர பிரச்சினை தான். இருந்தும் எனக்கு கவலையா இருந்தது.

டயானா: சோ சேட் ஸ்டெல்லா. கொஞ்சம் சீக்கிரம் மேட்டருக்கு வாங்க.

ஸ்டெல்லா: யா டயானா நிச்சயமா! டீ.வி. ல வர உங்க ப்ரோக்ராம நான் பாக்கவே மாட்டேன். அது ஒரு மாதிரி போரடிக்கும். சாக்ஸ் போடாமலே சொறியனும் போல இருக்கும் உங்க ப்ரோக்ராம் பாத்தா (அரங்கத்தில் சிரிப்பு). ஒரு தடவ ரிமோட் ரிப்பேர் ஆகி ஒரு சேனல்ல டீ.வி நின்னுடுச்சு. அதுல உங்க ப்ரோக்ராம் போட்டப்ப வேற வழியில்லாம பாத்தேன். அதுல தான் இந்த Socks relief 2007 பாத்தேன். இட்ஸ் இண்டீண்ட் எ பூண் வார் யஸ்! அதிசயமா இருந்தது அத பாக்கும் போது

டயானா: தாங்க்ஸ் ஸ்டெல்லா. ரொம்ப போர் அடிக்குது உங்க கதை எனக்கு. இப்போ நம்ம நான்ஸிய கேட்கலாம். பாவம் அவங்களும் ஸ்டூடியோக்கு வந்திருக்காங்க இல்லியா?

நான்ஸி: தாங்க்ஸ் டயானா, முன்னெல்லாம்..

டயானா: ஓ நோ நான்ஸி, வியூவர்ஸ் சேனல மாத்திடுவாங்க. கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க

நான்ஸி: கண்டிப்பா டயானா. எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு சுருக்கமா பேசத் தெரியாதவங்க அடிக்கடி ரயில தவர விட்டுடுவாங்கன்னு…

டயானா: ஹா ஹா ஹா

நான்ஸி: யா, ஜேம்ஸும் நானும் அடிக்கடி பார்க்ல சந்திப்போம். நிறைய பேசுவோம். எங்கள சுத்தி நிறைய லவ்வர்ஸ் இருப்பாங்க. சில மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நாங்களும் அவங்கள மாதிரி சந்தோஷமா தான் இருந்தோம். எப்போ ஜேம்ஸுக்கு இனாமா வந்த சாக்ஸ அவன் போட ஆரம்பிச்சானோ அப்போ வந்தது பிரச்சினை. பார்க் வந்ததும் அவன் முழங்கால சொறிய ஆரம்பிச்சிடுவான். எனக்கு எம்பேரஸிங்கா இருக்கும். அடிக்கடி சண்டை கூட வரும். நான் சொல்லுவேன் இப்படி “ஜேம்ஸ் நீ என்ன சொறிஞ்சா கூட பரவாயில்ல! இங்க வந்து நீ உன்னையே சொறிஞ்சிட்டிருந்தா எப்படி?”

டயானா: யூ ர் நாட்டி நான்ஸி

நான்ஸி: ஹா ஹா, அதுக்கு ஜேம்ஸ் சொல்லுவான் ” டியர் உனக்கு அரிச்சா கூட நான் உன்ன சொறிய மாட்டேன். என்னையே சொறிஞ்சுக்குவேன். ஏன்னா உனக்கு வலிக்கும்” அப்படின்னு

டயானா: நோ கமெண்ட்ஸ் நான்ஸி

நான்ஸி: அப்புறம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டணும்னு நான் போகாத டாக்டர் இல்ல. யூஸ் பண்ணாத மருந்து இல்ல. ஆனா எங்க கெட்ட விதி அது சரியாகவே இல்ல. நான் சொல்லுவேன் ஜேம்ஸ் கிட்ட “எப்படி உங்க அம்மா எனக்கு எரிச்சல் அந்த மாதிரி உனக்கு இது”னு.

டயானா வாட்சை பார்க்கிறார்.

நான்ஸி: அப்போ தான் உங்க ப்ரோக்ராம் பாத்தேன். வாவ்! இட்ஸ் அ மிராக்கள்! இத வாங்கி சும்மா கைல வெச்சி பாத்தா போதும்! எரிச்சல் சரியாய்டும்! என்னால நம்பவே முடில. ஜேம்ஸ் அப்புறம் சொறியறதே இல்ல. இதோட விலை வெறும்..

டயானா: அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன் நான்ஸி. இந்த மேஜிக் ரிலீஃப் பத்தி கேட்டீங்க இல்ல! இத வாங்கி யாருக்கு அரிக்குதோ அவங்க கைல குடுங்க. அவங்க இத ரெண்டு தடவ உத்து பாத்தா போதும். ரெண்டே நாள்ல சரியாய்டும். ஆனா ஒண்ணு, இது வேலை செய்யணும்னா நீங்க அதுக்கப்புற சாக்ஸ் போடறதயே நிறுத்திடனும். அப்ப தான் ஃபுல் எஃபெக்ட் கிடைக்கும்!

பார்வையாளர்கள்ல ஒரு பாட்டி: இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது ரொம்ப சிறப்பா இருக்கும்னு நான் நினைக்கிறேன். ஸ்டீபன் இத கேட்ட சொல்லுவார் “வாவ்!”

டயானா: இன்னுமும் ஏன் யோசிக்கிறிங்க. உடனே எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க 1800 800 123 453 8764. ஆர்டர் பண்ணுங்க Socks relief 2007. இதோட விலை வெறும் பிஸாத்து 4999 மட்டும் தான்.

அரங்கமே கை தட்ட காமிரா அப்படியே டயானா கிட்டேர்ந்த ஸூம் அவுட் ஆகுது

***********

சொல்லுங்க! நான் கிரியேட்டிவ் டீம்ல சேரலாம் தானே?

Written by aravind

பெப்ரவரி 12, 2008 இல் 6:58 மு.பகல்