சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

மரத்தடி

leave a comment »

கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் சேர்ந்து விட்டது. இத்தனைக்கும் தினம் ஏதாவது எழுதுகிறேன். ஒரு வாக்கியமாவது எழுதுகிறேன். பல விஷயங்கள் யோசிக்கிறேன். சில ஆழ் மனதைப் பேசும் எண்ணங்களாக இருக்கின்றன. சில மெல்லிய நகைச்சுவை முலாமுடன் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை அழகானது என்று மட்டுமே வகைப்படுத்த முடிகிறது. சில இது அதுவென வகைபடுத்த முடியாமல் எழுதிவிட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக சேமிக்கப் படுகிறது. நிற்காத ஆறென ஓடிக்கொண்டேயிருக்கிற எண்ணங்களை பேசவே இந்த மரத்தடி. வாரா வாரம் எழுதுவேன், மாதா மாதம் எழுதுவேன் போன்ற உத்திரவாதங்களை விட, சுவாரஸ்யமாக எழுதுவேன் என்ற உத்திரவாதத்தை தர விரும்புகிறேன்.

******************

என்னோடு நெருங்கிப் பழகுத் தொடங்குபவர்களுக்கு எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழ வாய்ப்புகள் குறைவு. பொதுவாகவே, கடவுளைத் தொழாதவர்கள் எந்நேரமும் ஒரு விவாதக் குழந்தையை கிள்ளி அழ வைக்கவே விரும்புகிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எல்லோரும் தங்களது வாழ்வை தங்கள் விருப்பப்படி வாழ உரிமையுள்ளவர்கள் என்பது என் கருத்து. ஆக, நான் கடவுளைப் எதிர்த்து பிரசாரம் செய்வதில்லை. கடவுள் இருக்கிறார், இல்லை என்ற பிரிவுகளில் சேராமல் கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்குத் தேவையில்லை என்று நினைப்பவன். என் எழுத்துக்களில் எப்போதாவது அதைப் பற்றி சொல்வது உண்டு. அது போன்ற பேச்சுகளில் நான் ஏன் ஈடுபடக் கூடாது என்பதற்கு மீண்டும் ஒரு பலமான விடை எனக்கு சென்ற வாரம் கிடைத்தது.

சமீபத்தில் என் உறவினள் ஒருத்தி முதுகில் அடிபட்டு படுக்கையில் இருக்கிறாள். எல்லோரும் மிகவும் வருத்ததில் இருக்கிறார்கள். வேறு பணி காரணமாக தஞ்சாவூர் சென்ற போது என் பெரியப்பா அருகில் இருக்கும் முல்லைக்குடி என்ற கிராமத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னார். அங்குள்ள ஒரு அம்மனிடம் இதற்கு முன்பு இதே போன்ற ஒரு விஷயத்திற்காக வேண்டி அது நிகழ்ந்ததாக அவர் நம்புகிறார்.

அதனால் அந்த கிராமத்தை தேடிச் சென்றோம். அங்கு கோயில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. மிகச் சிறிய கோயில் அது. எதிரே இருந்த ஒற்றைக் குடிசையில் சாவி வாங்கி நாங்களே திறந்து சென்றோம். நாங்கள் வந்து திறப்போம் என்று இத்தனை நாளாக அந்த அம்மன் காத்திருந்தாள் போலும். வழிபட்டு விட்டு திரும்பிய போது பெரியப்பாவின் மகிழ்சிக்கு அளவே இல்லை. அலைபேசியில் அனைவரையும் அழைத்து வேண்டிக் கொண்டது பற்றியும் விரைவில் குணமாகும் என்ற நம்பிக்கையையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்படி என்னைச் சுற்றி எல்லோரும் கடவுளின் பெயரால் மகிழ்ச்சியும் அமைதியும் கொள்ளும் போது நான் நடுவில் புகுந்து குழப்புவதில் எந்த அர்த்தமுமில்லை.

******************

அது ஏன் சிலர் புல்வெளியில் அமர்ந்து பேசும் போது அனிச்சையாக புற்களை பிடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. நாங்கள் நால்வர் தஞ்சாவூர் பெரிய கோயில் புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அதில் ஒருவர் பேசுவதற்காக உட்கார்ந்தாரா இல்லை புற்களை பிய்த்து எறிய உட்கார்ந்தாரா எனத் தெரியவில்லை. ஒரு வாக்கியம் பேசி முடிக்கும் போது கொத்தாக கொஞ்சம் புற்களை பிடுங்கி பக்கத்தில் “ஸ்வாஹா” என்பது போல குவித்து வைக்கிறார். கோபமாக உக்கிரமாக பேசும் போது இன்னும் நான்கு புற்கள் சேர்ந்து பிடுங்கப் படுகிறது. மற்றவர் பேசுகையில் அவர் அதிகம் பிடுங்குவதில்லை. அவரைப் பேச விடாமல் பார்த்துக்கொள்கிற அளவுக்கு கருணையின்றி பிடுங்கிக் கொண்டிருந்தார். இப்படிச் செய்கிற எல்லோருக்கும் கட்டுப்படுத்த முடியாத நோய் இதெனில், தத்தம் தலை முடிகளை பிய்த்து எறியும்படி கேட்டுக்கொள்கிறேன். தலையில் ஒன்றும் இல்லையென்றால், அடுத்தவரின் தலையை தாரளமாக உபயோகிக்கலாம்.

******************

பழமொழிகள் சுருக்கமாக இருப்பது எழுதுபவரின் சௌகர்யம். அதை தவறாக புரிந்து கொள்வது நம் சௌகர்யம் போல. “காசிக்கு போனவன் காலை தொட்டு கும்பிடு. பழனிக்கு போனவன் பாதத்தை தொட்டு கும்பிடு” என்று ஒரு பழமொழி உண்டு. இது ஏதோ புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தவர்களெல்லாம் புனிதர்கள் என்று தப்பாக அர்த்தம் செய்யப்படுவதாக நினைக்கிறேன். அந்தக் காலத்தில் காசி வரை நடந்து ஒருவன் சென்று, திரும்ப ஊர் வந்து சேர்கிறான் என்றால், நிஜமாகவே அவன் கால்களை தொட்டு வணங்கலாம். அவ்வளவு ஆரோக்கியமாக இருந்திருப்பான். அதே தான் பழனி மலைக்கு சென்று வந்தவனுக்கும். ஆனால் அதை தப்பாக அர்த்தம் செய்துக்கொள்வதின் விளைவு தான் போலிச் சாமியார்கள் என்று தோன்றுகிறது.

******************
காற்று வீசும்………….

Written by aravind

ஜனவரி 22, 2008 இல் 7:05 மு.பகல்

மறுமொழி இடுக