Archive for ஜனவரி 2008
செ.பு.க. + புத்தகங்கள் – 2007 & 2008
நான் இதுவரை கொண்டாடிய இருபத்தி சொச்சம் பொங்கல் பண்டிகைகளில் இந்த பொங்கல் உருப்படியான ஒன்று. காரணம் சென்னை புத்தக கண்காட்சி(செ.பு.க.)க்கு சென்றது. முப்பதோராவது புத்தக கண்காட்சிக்கு முதல் முறையாக செல்கிறேன்(கை தட்டவும்). அதை பற்றிய சில குறிப்புகள், சென்ற வருடம் நான் படித்த புத்தகங்கள், இந்த வருடம் படிக்கப் போகும் புத்தகங்கள் அத்தனையும் இதோ இங்கே.
செ.பு.க:
* சுமார் இருநூறு கடைகள். சுலபமாக கடைகளை கண்டுபிடிக்க உதவி செய்யும் வகையில் கடைகளுக்கு எண்களும் நுழைவு வாயில்களில் எந்தெந்த கடைகள் எங்கு இருக்கின்றன என்ற அட்டவனை(வினைல் போர்டு) வைத்திருந்தார்கள்.
* பொங்கல் பண்டிகை என்ற போதும் நல்ல கூட்டம். எல்லா வயதுகளிலும் எல்லா தரப்பிலிருந்தும் மக்கள். மக்களோ மக்கள்.
* பரபரப்பாக விற்றுக் கொண்டிருந்த புத்தகம் – “பொன்னியின் செல்வன்”. விதம் விதமான அச்சுகளில் விதம் விதமான தரத்தில் விதம் விதமான தள்ளுபடியில் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. நான் பார்த்ததில் சிறந்த விலை – 185. சாரதா பதிப்பகம்.
*விகடன், குமுதம் கடைகளில் தான் அதிக கூட்டம்.
*எழுத்தாளர் சுஜாதா வந்திருந்தார். உயிர்மை பதிப்பக கடையில் அவரைக் காண முடிந்தது. (உப குறிப்பு – சுஜாதாவின் நூல்களை அதிகம் வெளியிட்டது அந்த பதிப்பகமே). பழுப்பு நிற ஸ்வெட்டர் அணிந்திருந்தார். களைத்திருந்தார். “சௌக்கியமா இருக்கீங்களா?” என்று அவரை கேட்க முடிந்தது. நான் வாங்கிய அவரின் புத்தகத்தில் கையெழுதிட்டார். அவரிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி – “ரோபோ கதை என்ன?”
*காவல் துறை அதிகாரியான சைலேந்திர பாபுவை பற்றிய புத்தகத்தை விற்றுக்கொண்டிருந்த ஒரு பதிப்பகத்தார் அவருக்கு ஒரு மினி பேனர் வைத்திருந்தார்கள், தமிழக வரலாற்றில் சினிமா/அரசியல்/ஆன்மீக புள்ளிகளுக்கு தவிர மற்றவர்களுக்கு வைக்கப்படும் முதல் பேனர் என்ற அறிவிப்பு இல்லாமல்.
*அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் தன்னைப் பற்றிய புத்தகங்கள் வெளியிட்ட கடையில் அமர்ந்து சரளமாக எல்லோரிடமும் பேசியபடி கையெழுத்திட்டுக்் கொண்டிருந்தார்.
*எது சம்பந்தமான புத்தகங்கள் விற்கப்படவில்லை என்று ஒரு போட்டிக் கேள்வி வைத்திருக்கலாம்.
* அத்தனை சீக்கிரம் பெனசிர் புட்டோவைப் பற்றிய சிறப்பு புத்தகம், அழகான அட்டைகளுடன் தரமான அச்சில் விற்றுக்கொண்டிருந்தது ஆச்சரியம். (கிழக்கின் மகள்) உண்மையிலேயே தமிழ் புத்தகச் சந்தை விரிந்திருக்கிறது.
*இத்தனை ஆயிரம் புத்தகம் விற்றது, இத்தனை லட்சம் புத்தகம் விற்றது என்ற புள்ளிவிவரங்கள் உதவாது. எத்தனை பேர் படித்தார்கள் என்பது முக்கியம்.
*வந்திருந்த கூட்டத்தை கண்டு நான் முதலில் வியந்தாலும் அதில் எத்தனை பேர் உண்மையாக புத்தகம் வாங்க வந்திருந்தார்கள் என்பதை நான் எளிதாக கணக்கிட்டு விட்டேன். அந்த ஃபார்முலா – > (வந்திருந்த மொத்த தொகை) - (நடிகை ரோஹினி வந்ததும் கையில் இருந்த புத்தகத்தை அவசரமாக எறிந்து விட்டு அவர் இருந்த கடைக்கு சென்றவர்கள்).
*செ.பு.க சுவாரஸ்யமாக இருந்தாலும், அது தொடர்பான விஷயங்களில் எனக்கு பிடிக்காத ஒன்று பத்திரிக்கைகளில் அது முடிந்ததும் எழுதப்படும் “புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகமாகியுள்ளது” போன்ற தலைப்புகளில் எழுதப்படும் வரண்ட கட்டுரைகளும், அதில் வரும் (முறையே) மென்பொருள் வல்லுனர், இல்லத்தரசி, மாணவன் ஆகியோரின் பேட்டிகள்.
புத்தகங்கள் – 2007
படித்து முடித்த புத்தகங்கள்:
* The Kite Runner – Khaled Hossini
ஆப்கானின் கவலையளிக்கிற நிலையை முதல் முறையாக படிக்கிறேன். கதை கிட்டதட்ட தமிழ் சினிமா கதை போல உள்ளது. ஆனாலும் அதன் நம்பகத்தன்மை அசாதாரணமானது. காலேத் பிரமாதமாக யோசித்திருக்கிறார். அமீர் – ஹாசன் இரு நண்பர்கள் சிறுவர்களாக இருப்பதில் துவங்கி ஒரு வாழ்க்கையை விளக்கிச்செல்கிறது. ஆஃப்கானில் தாலிபன் ஆட்சி நடுவில் வந்த பின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை படித்துப் பாருங்கள். ஹாசன் மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரம் போல் தோன்றினாலும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாத்திரம். அமீர் உங்களை என்னைப் போன்றவன். சாதரணமானவன். அப்பாவின் அன்பை பெற பட்டம் விடும் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டம் சுவாரஸ்யம். முதல் புத்தகமாம் காலெத்துக்கு. பிரமாதம்.
* The Memoirs of a Geisha – Arthur Golden
நம்முடைய பண்டைகால தாசிகள் போல ஜப்பானிய geishaக்கள். ஒரு சின்னப் பெண் எப்படி அந்த சந்தைக்குள் கொண்டு செல்லப்படுகிறாள் என்பதில் துவங்கி அவளின் போராட்டங்களும் துயரங்களும் தான் கதை. ஆனால் அதை அழுது வடித்து சொல்லாமல் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார். இது உண்மையில் எங்கோ நடந்த கதை என்ற உணர்வு பெரும் பலம். புதிய நிலப்பரப்பு, கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்துகொள்ளும் ஆவல் உள்ளவர்கள் நிச்சயம் படிக்கலாம். நல்ல நடையுடன், ஏராளமான உவமைகளுடன் எழுதப்பட்டிருக்கிறது. உண்மைக்கதை என்பதால் பல இடங்களில் கதை சண்டிக்குதிரை போல நகர மறுக்கிறது. பின் பாதி நாவலின் நீளம் அலுப்பு.
* The Master Carpentar – M.T.Vasudhevan Nair
மலையாள எழுத்துலகின் முக்கியமான எம்.டி.வி எழுதிய “பெரும்தச்சன்” என்ற கதை வழி வழியாக சொல்லப்பட்ட ஒரு நாடோடிக்கதை. அதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கும் போது அதற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் எம்.டி.வி. அந்த திரைக்கதையின் மொழிபெயர்ப்பு இது. திரைக்கதை படிப்பது மிக சுவாரஸ்யமாகவும் சுலபமாகவும் இருக்கிறது. பல இடங்களில் நமது கற்பனையில் காட்சியைப் பார்க்க முடிகிறது. அந்த படத்தில் நடித்தவர்கள் பெயர் பட்டியலில் எனக்குத் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்ததால் இன்னும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. மிகவும் போற்றப்பட்ட பணிவான தச்சன் ஒருவனின் மகன் அவனை அந்தக் கலையில் வெல்லும் கட்டம் தான் கதை.
* நிழல்வெளிக் கதைகள் – ஜெயமோகன்
ஜெயமோகனை படிக்க வேண்டும் என்ற நெடுநாள் ஆவலை தீர்த்துக் கொள்ள படித்த புத்தகம். சிறுகதைத் தொகுப்பு. அத்தனை பேய்க் கதைகள்! விதம் விதமான பேய்க்கதைகள்.காதல், கள்ளக்காதல், விலை மாது, பிளவாளுமை என பல தளங்களில் இயங்குகின்றது பேய்கள். உக்கிரமும் வக்கிரமும் கொண்ட பேய்கள். காமம் இல்லாத கதைகளே இல்லை. “இது தான் ஜெயமோகனின் நடை” என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. அவரின் எழுத்தை படிக்கத் துவங்க இது சரியான புத்தகமில்லை என்று நினைக்கிறேன். சிறந்த கதை என்று இப்போது நினைத்துப் பார்த்தால் சுவர்கள் முழுக்க கதவுகள் வரைகிற அந்த ஓவியனின் கதையும் பிளவாளுமையில் சிக்கிக் கொள்கிற அண்ணனின் கதையும்.
* உறுபசி – எஸ்.ராமகிருஷ்னன்.
என்னை பாதித்த எழுத்தாளர்களில் ஒருவர். விகடன்,காலச்சுவடு,தீராநதிகளில் இவரை படித்திருக்கிறேன். அவர் எழுதிய முழு புத்தகத்தை முதன் முறையாக படிக்கிறேன். வாழ்க்கையில் தோற்றுப் போனவன் ஒருவனின் கதை என்று சொல்லாம். கதை சொல்லும் விதம் புதுமை. குழந்தைகளுக்கான பத்திரிக்கைகளில் வண்ணம் தீட்ட படம் கொடுத்திருப்பார்கள். அதில் முதலில் மஞ்சள் வரும் இடங்களிலெல்லாம் அதை நிரப்பிவிட்டு, பின்னர் பச்சை, நீலம் என்று முடிக்க வேண்டும். அது போல முதலில் ஒரு கதாபாத்திரம் அந்த கதையில் தன் பங்கை சொல்லி முடிக்கிறது. பின்னர் அடுத்த கதாபாத்திரம். நிறைவாக ஒரு அழகிய ஓவியம் வர வேண்டும். ஆனால் எனக்கு நிறக் கோளாறு ஏற்பட்டாற் போல இருந்தது. கொஞ்சம் ஏமாற்றம் தான்.
* தன்வெளிப்பாடு – சுநீல் கங்கோபாத்தியாய்.
பெங்களூருவில் ஐந்து நாட்கள் ஒரு வீட்டைக் காக்க வேண்டும் என்ற அவசர சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய ஏதோ ஒரு புத்தகம். அழகிய பெங்காளிப் பெண்களின் வர்ணனைகளைத் தவிர வேறொன்றுமே நினைவில் இல்லை!
வாங்கி வைத்த புத்தகங்கள்:
* Notes from a dead house – Dostoyevesky:
வாங்கும் போது தெரியாது அவர் இம்மாம் பெரிய எழுத்தாளர் என்று. ஏனோ பழைய புத்தகக் கடையில் இதைப் பார்த்ததும் வாங்கத் தோன்றியது. படித்து விட்டு சொல்கிறேன்.
* மகாராஜாவின் ரயில் வண்டி – அ.முத்துலிங்கம்.
புத்தகங்கள் 2008:
இந்த வருடம் முழுமைக்குமான புத்தகங்களை இப்போதே வங்கியாயிற்று. எல்லாம் செ.பு.க.வில் வாங்கியது.
1) 401 காதல் கவிதைகள் – புறநானூறு – ஒரு எளிய அறிமுகம் – சுஜாதா
2) ஜெயமோகன் குறுநாவல்கள்
3) ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – ஆ வூ வென்று பலரும் பேசுகிறார்கள் இதைப் பற்றி. அப்படி என்ன தான் இருக்கிறதென்று பார்த்து விடுகிறேன்.
4) என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
5) கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – தமிழ் எழுத்தாளர்கள் தங்களைப் பாதித்த புத்தகங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியுள்ளார்கள்.
டிசம்பர் 31 2008 அன்று ஒரு கட்டையுடன் என்னை தேடி வந்து இவற்றையெல்லாம் படித்தேனா என்று கேட்டு விட்டுச் செல்லவும்.
முகங்கள் மறத்தல்

முழுதும் முகங்கள் வரையப்பட்ட
ஒரு புத்தகத்தை
பாதுகாக்க வேண்டியிருக்கிறது
காலத்திடமிருந்து
நினைவின் ஆதிப்பக்கங்களை
கரையானாகிக் கரைத்திருக்கிறது
காலம்
சில முகங்களின்
சிரிப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது
சில கண்களின்
ஓளியைக் காணோம்
சில முகங்கள்
பளிச்சென இருக்கின்றன
யாருடையதென்ற குறிப்பைக் காணோம்
சில பக்கங்களை திறக்கையில்
ஒரு குரல் ஒலிக்கிறது
பல வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது
ஒரு பாவனை உயிர் பெறுகிறது
சில முகங்களை
முழுதும் நீக்கி விட்டாலும்
கருணையுடன் சிறு குறிப்புகளை
எழுதி வைத்திருக்கிறது காலம்.
ஐந்தாம் வகுப்பு
நண்பனுக்கான பக்கத்தில்
பள்ளியை விட்டு விடுதலையாகும்
பரவசத்தை மட்டும்
விட்டு வைத்திருக்கிறது.
சில பக்கங்கள்
தண்ணீர் ஊற்றப்பட்ட
தெளிவின்மையுடன்
பரிதவிக்கிறது
அடுத்த முறை பார்க்கையில்
எது எது இருக்குமோ
காலம் முழுமையாக
வெற்றி பெற்றிருக்கும்
வெள்ளைப் பக்கங்களை
மீண்டும் தடவித் தடவி
பார்த்து விட்டு
படுக்கச் செல்கிறேன்
முகங்கள் மறத்தல்
ஒரு மென் வன்முறை.
மரத்தடி
கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் சேர்ந்து விட்டது. இத்தனைக்கும் தினம் ஏதாவது எழுதுகிறேன். ஒரு வாக்கியமாவது எழுதுகிறேன். பல விஷயங்கள் யோசிக்கிறேன். சில ஆழ் மனதைப் பேசும் எண்ணங்களாக இருக்கின்றன. சில மெல்லிய நகைச்சுவை முலாமுடன் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை அழகானது என்று மட்டுமே வகைப்படுத்த முடிகிறது. சில இது அதுவென வகைபடுத்த முடியாமல் எழுதிவிட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக சேமிக்கப் படுகிறது. நிற்காத ஆறென ஓடிக்கொண்டேயிருக்கிற எண்ணங்களை பேசவே இந்த மரத்தடி. வாரா வாரம் எழுதுவேன், மாதா மாதம் எழுதுவேன் போன்ற உத்திரவாதங்களை விட, சுவாரஸ்யமாக எழுதுவேன் என்ற உத்திரவாதத்தை தர விரும்புகிறேன்.
என்னோடு நெருங்கிப் பழகுத் தொடங்குபவர்களுக்கு எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழ வாய்ப்புகள் குறைவு. பொதுவாகவே, கடவுளைத் தொழாதவர்கள் எந்நேரமும் ஒரு விவாதக் குழந்தையை கிள்ளி அழ வைக்கவே விரும்புகிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எல்லோரும் தங்களது வாழ்வை தங்கள் விருப்பப்படி வாழ உரிமையுள்ளவர்கள் என்பது என் கருத்து. ஆக, நான் கடவுளைப் எதிர்த்து பிரசாரம் செய்வதில்லை. கடவுள் இருக்கிறார், இல்லை என்ற பிரிவுகளில் சேராமல் கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்குத் தேவையில்லை என்று நினைப்பவன். என் எழுத்துக்களில் எப்போதாவது அதைப் பற்றி சொல்வது உண்டு. அது போன்ற பேச்சுகளில் நான் ஏன் ஈடுபடக் கூடாது என்பதற்கு மீண்டும் ஒரு பலமான விடை எனக்கு சென்ற வாரம் கிடைத்தது.
சமீபத்தில் என் உறவினள் ஒருத்தி முதுகில் அடிபட்டு படுக்கையில் இருக்கிறாள். எல்லோரும் மிகவும் வருத்ததில் இருக்கிறார்கள். வேறு பணி காரணமாக தஞ்சாவூர் சென்ற போது என் பெரியப்பா அருகில் இருக்கும் முல்லைக்குடி என்ற கிராமத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னார். அங்குள்ள ஒரு அம்மனிடம் இதற்கு முன்பு இதே போன்ற ஒரு விஷயத்திற்காக வேண்டி அது நிகழ்ந்ததாக அவர் நம்புகிறார்.
அதனால் அந்த கிராமத்தை தேடிச் சென்றோம். அங்கு கோயில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. மிகச் சிறிய கோயில் அது. எதிரே இருந்த ஒற்றைக் குடிசையில் சாவி வாங்கி நாங்களே திறந்து சென்றோம். நாங்கள் வந்து திறப்போம் என்று இத்தனை நாளாக அந்த அம்மன் காத்திருந்தாள் போலும். வழிபட்டு விட்டு திரும்பிய போது பெரியப்பாவின் மகிழ்சிக்கு அளவே இல்லை. அலைபேசியில் அனைவரையும் அழைத்து வேண்டிக் கொண்டது பற்றியும் விரைவில் குணமாகும் என்ற நம்பிக்கையையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்படி என்னைச் சுற்றி எல்லோரும் கடவுளின் பெயரால் மகிழ்ச்சியும் அமைதியும் கொள்ளும் போது நான் நடுவில் புகுந்து குழப்புவதில் எந்த அர்த்தமுமில்லை.
அது ஏன் சிலர் புல்வெளியில் அமர்ந்து பேசும் போது அனிச்சையாக புற்களை பிடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. நாங்கள் நால்வர் தஞ்சாவூர் பெரிய கோயில் புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அதில் ஒருவர் பேசுவதற்காக உட்கார்ந்தாரா இல்லை புற்களை பிய்த்து எறிய உட்கார்ந்தாரா எனத் தெரியவில்லை. ஒரு வாக்கியம் பேசி முடிக்கும் போது கொத்தாக கொஞ்சம் புற்களை பிடுங்கி பக்கத்தில் “ஸ்வாஹா” என்பது போல குவித்து வைக்கிறார். கோபமாக உக்கிரமாக பேசும் போது இன்னும் நான்கு புற்கள் சேர்ந்து பிடுங்கப் படுகிறது. மற்றவர் பேசுகையில் அவர் அதிகம் பிடுங்குவதில்லை. அவரைப் பேச விடாமல் பார்த்துக்கொள்கிற அளவுக்கு கருணையின்றி பிடுங்கிக் கொண்டிருந்தார். இப்படிச் செய்கிற எல்லோருக்கும் கட்டுப்படுத்த முடியாத நோய் இதெனில், தத்தம் தலை முடிகளை பிய்த்து எறியும்படி கேட்டுக்கொள்கிறேன். தலையில் ஒன்றும் இல்லையென்றால், அடுத்தவரின் தலையை தாரளமாக உபயோகிக்கலாம்.
பழமொழிகள் சுருக்கமாக இருப்பது எழுதுபவரின் சௌகர்யம். அதை தவறாக புரிந்து கொள்வது நம் சௌகர்யம் போல. “காசிக்கு போனவன் காலை தொட்டு கும்பிடு. பழனிக்கு போனவன் பாதத்தை தொட்டு கும்பிடு” என்று ஒரு பழமொழி உண்டு. இது ஏதோ புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தவர்களெல்லாம் புனிதர்கள் என்று தப்பாக அர்த்தம் செய்யப்படுவதாக நினைக்கிறேன். அந்தக் காலத்தில் காசி வரை நடந்து ஒருவன் சென்று, திரும்ப ஊர் வந்து சேர்கிறான் என்றால், நிஜமாகவே அவன் கால்களை தொட்டு வணங்கலாம். அவ்வளவு ஆரோக்கியமாக இருந்திருப்பான். அதே தான் பழனி மலைக்கு சென்று வந்தவனுக்கும். ஆனால் அதை தப்பாக அர்த்தம் செய்துக்கொள்வதின் விளைவு தான் போலிச் சாமியார்கள் என்று தோன்றுகிறது.
யாருமற்ற அரங்கம்

யாரேனும் காத்துக்கொண்டிருக்கலாம்
இந்த நொடியில் ஒரு கடைசி சந்திப்பிற்காக.
அப்போது யோசிக்கப்படலாம்
இதுவரையிலான எல்லா சந்திப்பிற்கும்
அடையாளமாய் சொல்லப்பட்ட
அந்த மரத்தின் பெயர்.
இந்த சந்திப்பிற்கான வார்த்தைகள்
பூத்திருக்கின்றன அந்த மரத்தில்.
எந்தப்பூ முதலில் உதிரும்?
காத்திருப்பின் போதே
உதிர்ந்து விடுகிற பூக்கள்
இனி நினைவில் எப்போதும் மணக்கும்.
தாமதமாக வந்துக்கொண்டிருப்பவரின் அவசரமும்
காத்துக்கொண்டிருப்பவரின் பொறுமையும்
இறுகக் கை கோர்க்கும்.
நினைவுப்பக்கங்களை புரட்டும்
காத்திருப்பின் நடங்கும் கைகள்.
கேட்க நினைத்து
கேட்காமல் விட்ட கேள்விகளையும்
கேட்கப்படும் என்று நினைத்து
தயாராக வைத்திருந்த பதில்களையும்
அந்தக் காத்திருப்பு அரங்கேற்றும்
யாருமில்லாத அரங்கத்தில்.
மிகுதியானவை வெட்டப்பட்டு
இல்லாதவை நிரப்பப்பட்டு
உறவு முழுமையாக்கப்படும்
அந்தக் காத்திருப்பு
முக்கியமானதாகிறது
எல்லா சந்திப்புகளை விடவும்.
வருங்கால தனிமையின் சுவடுகளை
தன் கால் தடங்களில் விட்டபடி
இறந்த கால நினைவுகள்
மெதுவாக நடந்து செல்லும்
கடைசி காத்திருப்பின் பெரு வெளிகளில்.