சொர்க்கத்தின் குழந்தைகள்

Children of heaven என்ற எழுத்துகளோடு உடனே துவங்குகிறது படம்.
அழகான பிங்க் நிற ஷூ ஒன்றை தைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். மீண்டும் அணிவதற்கு ஏதுவாக அதை மாற்றுகிறார். அதை பெற்றுக் கொண்டு புறப்படுகிறான் அலி. வயது பத்து இருக்கும். அம்மாவுக்காக உருளைக்கிழங்குகள் வாங்க காய்கறிக் கடைக்கு வெளியே தன்னுடைய பைகளை வைத்து விட்டு செல்கிறான். அழுகிய காய்கறிகளை அள்ளிச் செல்லும் தள்ளுவண்டி அங்கு வருகிறது. தவறுதலாக அந்த ஷூ இருக்கும் பை எடுத்துச் செல்லப்பட்டுவிடுகிறது.
காய்கறிக்கடைக்கிறார் இதற்கு மேல் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாதென அலியிடம் சொல்கிறார். அடுத்த முறை பணத்தை கொடுக்குமாறு சொல்கிறார். அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லுவதாக கூறிவிட்டு வெளியே வந்தால், ஷூக்களை காணவில்லை! தேடிப் பார்க்கையில் தவறுதலாக காய்கறி கூடைகளை கீழே தள்ளிவிட காய்கறிக் கடைக்காரர் அவனை அங்கிருந்து துரத்திவிடுகிறார்.
வேகமாக வீட்டுக்கு ஓடுகிறான் அலி. தெருவில் நுழையும் போதே அவர்கள் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு அம்மாவை சத்தம் போட்டுக்கொண்டிருப்பது தெரிகிறது. வீட்டின் உள்ளே சாரா – அவனது ஆறு வயது தங்கை – சில நாட்களுக்கு முன்னால் பிறந்த தம்பியை தூங்க வைத்துக்கொண்டிருக்கிறாள். தயங்கி தயங்கி அவளிடம் ஷூக்கள் தொலைந்ததை சொல்கிறான். அடுத்த நாள் தான் பள்ளிக்கு போகமாட்டேனென அழுகிறாள் சாரா.
ஷூக்களை எப்படியும் கண்டுபிடித்துவிடுவதாக வாக்கு தந்துவிட்டு அம்மாவிடம் இதை சொல்ல வேண்டாமென கெஞ்சுகிறான். மீண்டும் ஷூக்களை தேடி ஓடுகிறான். பலனில்லை.
அன்று இரவு அப்பா அலியை திட்டிக்கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று தெரிந்தும் அவளுக்கு எந்த உதவியையும் அலி செய்வதில்லை என்று அவருக்கு கோபம். அலியும் சாராவும் அமைதியாக வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சாரா யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, “நாளைக்கு நான் பள்ளிக்கு எப்படி செல்வது?” என்று நோட்டில் எழுதி அலியிடம் காண்பிக்கிறாள். அப்பா அம்மாவுக்கு தெரியாமல் இப்படி எழுதியபடி அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இரானில் பெண்களுக்கு அதிகாலை முதல் மதியம் வரையும், ஆண்களுக்கு மதியம் முதல் மாலை வரை பள்ளி வகுப்புகள் நடைபெறும். ஆக, சாரா காலையில் அண்ணனுடைய ஷூவை அணிந்து கொண்டு பள்ளிக்கு போவதாகாவும், பள்ளி முடிந்ததும் வழியில் காத்துக்கொண்டிருக்கும் அண்ணனிடம் ஷூக்களை தந்துவிடுவதாகவும் முடிவு செய்கிறார்கள். இப்படியாக அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சமாளிக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.
குழந்தைகள் உலகம் எத்தனை அழகானது? அடம்பிடித்து அழுகிற குழந்தைகள் இருந்தாலும், வீட்டின் ஏழ்மையை அத்தனை சிறு வயதில் புரிந்துகொண்டு இந்த இருவரும் ஒரு ஜோடி ஷூவிற்காக படும் அவஸ்தைகளை கவிதைக்கு உரிய அழகோடு விவரிக்கிறது படம்!
இரு வெவ்வேறு கோடிகளில் இருக்கிறது இருவரின் பள்ளிகளும். பள்ளி முடிந்ததும் கூட்டிலிருந்து விடை பெறும் பறவை போல சிறகடித்து பறக்கிற குழந்தைகளுக்கு மத்தியில் வேகமெடுக்கிறாள் சாரா. வழியில் அண்ணன் காத்துக்கொண்டிருக்க மூச்சு வாங்க ஓடுகிறார்கள். யாருமில்லாத சந்து ஒன்று காத்திருக்கும் அலியும் அவளும் ஷூக்களை மாற்றிகொண்டு ஒரு வார்த்தை பேசாமல் எதிர் எதிர் பக்கம் ஓடுகிறார்கள்.
சில நாட்கள் இப்படியே கழிகிறது. ஒரு காலையில் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் நின்றபடி தன் ஷூவையும் மற்றவர்களில் ஷூக்களையும் ஏக்கமாக பார்க்கிறாள் சாரா. வரிசையாக ஒவ்வொரு ஷூவாக பார்த்தபடி வருகையில் கண்ணில் சிக்குகிறது அந்த பிங்க் ஷூ! பாட இடைவேளையில் சாரா வெளியே வந்து அந்த மைதானம் முழுக்க இருக்கும் குழந்தைகளின் கால்களை பார்த்தபடி நடக்கிற காட்சியில் அந்தச் சிறுமியின் நடிப்பும், சிலிர்க்க வைக்கிற இசையும் மனதை பிசைகிறது. அந்த பிங்க் நிற ஷூவை அணிந்திருக்கும் ரோயாவிடம் சாராவுக்கும் இடையே மலர்கிற நட்பு, குழந்தைகளுக்கே உரிய இன்னொஸென்ஸ்!
35,00 குழந்தைகளை பரிசீலித்து இந்த இரு குழந்தைகளையும் தேர்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். பொறுப்பான அண்ணனாக அலியும், அத்தனை அழகான சாராவும் அச்சு அசலாக உங்கள் கண்முன் உயிர்பெறுகிறார்கள். சட் சட்டென சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும், சாமர்த்தியமாக ஷூ இல்லாமல் சமாளிப்பதும் அத்தனை அறிவும் அழகும் அக்குழந்தைகள்! உடம்பு முடியாத அம்மாவுக்கு உதவுவது, கஷ்டப்படும் அப்பாவிடம் ஷூ கேட்கக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளும் சாகசங்களென, தலைப்புக்கு ஏற்ப “சொர்க்கத்தின் குழந்தைகள்!”
இயக்குனர் மஜித் மஜிதி குழ்ந்தைகளுக்கான படம் எடுப்பதில் புகழ் பெற்றவர். மென்மையான உணர்வுகளை அழகியலோடு சொல்லிய விதத்தில் ஜெயித்திருக்கிறார். சாரா ஒவ்வொரு முறை மூச்சு வாங்க ஓடுகிற ஒவ்வொரு காட்சியும் நமக்கு உயிரே போகிறது. ஒரு நாள் அப்படி அவள் ஓடுகையில் ஒரு ஷூ சாலையோர கால்வாயில் விழுந்து அடித்து கொண்டு செல்ல, சாரா அதை துரத்தி கொண்டு செல்லும் காட்சி நான் இதுவரை பார்த்திலேயே மிகச் சிறந்த காட்சி! பதைபதைக்க வைக்கிற இசையும், சாராவின் ஓட்டத்தை பின் தொடரும் காமிராவுமாக அத்தனை அசத்தலான இயக்கம்!
சினிமாவில் கவிதை சொல்ல முடியும் என்பதற்கு அந்த க்ளைமாக்ஸ் அழுத்தமான உதாரணம்!
வெகு நாட்களுக்குப்பின் ஒரு திரைப்படத்தை பார்த்த பின் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, படபடப்பு என அத்தனை உணர்வுகளும் மிக எளிதாக ஏற்பட்டது. ஏழ்மையை இத்தனை அழகாக சொல்ல முடியுமா என்ற ஆச்சர்யம் எழுகிறது. எல்லா வேளையிலும் பக்கபலமாக வருகிற நண்பர்களைப் போல இசையும் ஒளிப்பதிவும்!
95 நிமிடங்கள் மட்டுமே ஓடினாலும், நினைவில் அழுத்தமாக இடம் பிடிக்கிற படம். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று!
நல்ல படம் எடுக்க லட்சம் லட்சமாக பணம் வேண்டுமென்று யார் சொன்னது?? ஒரு ஜோடி ஷூ போதுமென்பது மஜித்தின் வாதம்!
கொசுறு: 1999ல் வெளிவந்த பெர்ஷியன் படம். இயக்குனர் – மஜித் மஜிதி. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.
கொசுறு 2: உடனே பார்க்கவும்!
[...] படிக்க இங்கு க்ளிக் [...]
சொர்க்கத்தின் குழந்தைகள் « திரை விமர்சனம்
டிசம்பர் 31, 2007 இல் 1:58 பிற்பகல்
தொடர்பான செழியனின் (உலக சினிமா – விகடன்) விமர்சனம்:
(சுவாரசியம்: உலகசினிமாத் தொடரின் முதல் படம் இதுதான்! Sorry for hijacking the post & the author:-))
_____________________________________________
‘உங்கள் காலணிகள் சரியாகப் பொருந்தும் போது, அதை மறந்துவிடுகிறீர்கள்’ என்று ஜென் பழமொழி ஒன்று உண்டு. பொருந்தாத காலணிகள், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னை அறிவிக்கும். அவஸ்தைப்படுத்தும். காலணிகள் வழியில் அறுந்துவிடும்போதும் தொலைந்துபோகும்-போதும் நமக்கு ஏற்படும் மன உணர்வுகள் நுணுக்கமானவை.
இதுபோன்றதொரு மிக மென்மையான உணர்வை வைத்து, ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா? முடியும் என்ற நம்பிக்கை ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ என்ற இரான் நாட்டுப் படத்தைப் பார்த்ததும் ஏற்பட்டது. ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம், தொலைந்துபோன இரண்டு காலணி களைப் பற்றியது.
எட்டு வயது அலி. அவன் தங்கை, ஆறு வயது சாரா. அப்பாவுக்குக் கூலி வேலை. உடல்நலம் சரியில்லாத அம்மா, கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்கிறாள். பள்ளிக்குப் போய் வரும் நேரம் தவிர, மற்ற நேரத்தில் அலி தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்வான். சாரா, தங்கச்சிப் பாப்பாவைப் பார்த்துக் கொள்கிறாள். ஒரு நாள் சாராவின் பிய்ந்துபோன ஷ¨க்களைத்தைப் பதற்காக எடுத்துச் செல்லும் அலி, வழி யில் அதைத் தொலைத்து விடுகிறான்.
ஷ¨ இல்லாமல் பள்ளிக்குச் செல்ல முடியாது. அழுகிறாள் சாரா. குடும்பம் இருக்கும் நிலையில் புது ஷ¨ வாங்குவதைக் கற் பனைகூட செய்ய முடியாது. தொலைந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லப்போவதாக சாரா அழுகிறாள்.
அப்பாவிடம் சொன்னால் இருவருக்கும் அடி விழும் என்கிறான் அலி. இக்கட்டான நிலையில் என்ன செய்வது? அலி ஒரு யோசனை சொல்கிறான். இரானில் பெண்கள் பள்ளி மதியத்துடன் முடிந்துவிடுகிறது. பையன்களுக்கு மதியத்தில்தான் பள்ளி துவங்குகிறது. எனவே அலியின் ஷ¨வை இருவரும் மாற்றி மாற்றி அணிந்து செல்லலாம் என்பது யோசனை. வேறுவழியின்றி சாரா சம்மதிக்கிறாள். தன் பிஞ்சுக் கால்களுக்குப் பொருந்தாத அண்ணனின் ஷ¨வை மாட்டிக்கொண்டு கண்கள் கலங்க, சாரா பள்ளிக்குச் செல்கிறாள்.
இருவரது பள்ளிகளும் அருகருகே இல்லை. வெவ்வேறு மூலைகளில் இருக்கின்றன. எனவே, தனக்குப் பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் ஷ¨வைக் கொடுப்பதற்காக சாலை களில், தெருக்களில், சந்துகளில் வேகவேகமாக சாரா ஓடிவருகிறாள். மூச்சிரைக்க ஷ¨வைக் கழற்றி, அண்ணன் அலியிடம் தருகிறாள். அவசர அவசரமாக அந்த ஷ¨வை மாட்டிக்கொண்டு தன் பள்ளியை நோக்கி ஓடத் துவங்குகிறான் அலி. கால் களை மாற்றிக்கொண்டு ஓடும் ஷ¨வின் ஓட்டம் தொடர்கிறது.
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்குள் நடக்கும் ஓட்டப்பந்தயம் பற்றிய ஓர் அறிவிப்பை அலி பார்க்கிறான். விளையாட்டு ஆசிரியரிடம் போய் போட்டிக்கு, தன் பெயர் கொடுக்கிறான். தான் ஓட்டப்பந்த யத்தில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசு வாங்கப் போவதாகச் சொல்கிறான். ஏன் மூன்றா வது பரிசு என்று சாரா கேட்கிறாள். அந்தப் போட்டியின் மூன்றாவது பரிசு ஒரு ஜோடி ஷ¨க்கள் என்று அலி சொல்கிறான். சாராவின் முகத்தில் மலர்கிறது புன்னகை.
ஓட்டப்பந்தய நாள் வருகிறது. வித விதமான புதிய ஷ¨க்களும், ட்ராக் ஷ¨ட்டும் அணிந்து நிற்கும் வசதியான மாணவர்கள் நடுவே, எளிய யூனிஃபார்ம் அணிந்து தனது அழுக்கான பழைய ஷ¨வுடன் அலியும் நிற்கிறான். பந்தயம் துவங்குகிறது. அலிக்கு அவன் விரும்பிய மூன்றாவது பரிசு கிடைத்ததா? சாராவின் பிரச்னை தீர்ந்ததா? ஒரு முறை படத்தைப் பாருங்கள்.
அலியும் சாராவும் வசிக்கும் வீடு மிகச் சிறியது. அறைகளே இல்லை. இந்தச் சிறிய வீட்டுக்குள் ஷ¨ தொலைந்துபோனதை அம்மா& அப்பாவுக்குத் தெரியாமல் எப்படிப் பேச முடியும்? சாரா தன் கணக்கு நோட்டில், ‘ஷ¨ இல்லாமல் பள்ளிக்குப் போக முடி யாது’ என்று எழுதிக் காட்டுகிறாள். அலி தான் எழுதிய நோட்டைக் கொடுக்கிறான். மாறி மாறி இருவரும் எழுதிக் காட்டுகிறார்கள். முடிவில் அலி, ‘என் ஷ¨வைப் போட்டுக் கொள்’ என்று எழுதிக் காட்டுகிறான். இப் போது சாராவின் பிஞ்சு விரல் என்ன எழுதுவது என்று தெரியாமல் கையி லிருக்கும் குட்டிப் பென்சிலைச் சுரண்டுகிறது. முகங்களைக் காட்டாமல் விரல்களின் வழியே குழந்தைகளின் உணர்வைச் சொல்லும் இக்காட்சி அழகானது.
ஒருநாள் சாராவுக்கு பள்ளித் தேர்வு நடக்கிறது. சாரா தேர்வு எழுதுவதைவிட டீச்சரின் பர்தாவை மீறித் தெரியும் கைக்கடிகாரத்தையே பார்க்கிறாள். பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் ஷ¨வை நேரத்துக்குள் கொடுக்க வேண்டுமே. எனவே, அவசர அவசர மாக எதையோ எழுதி நிரப்பி டீச்சரிடம் கொடுத்துவிட்டு ஓடத் துவங்குகிறாள். பொருந்தாத ஷ¨ என்பதால் ஓடும்போது ஒரு ஷ¨ கழன்று சிறிய கால்வாயில் விழுந்துவிடுகிறது. ஓடும் நீரில் ஷ¨ ஓடத் துவங்குகிறது. இருபுறமும் தாவித் தாவி அதைப் பின் தொடர்ந்து ஓடு கிறாள். கடைசியில் கால்வாயின் எடுக்க முடியாத அடைப்புக்குள் ஷ¨ சிக்கிக்கொள்ள, அழத் துவங்குகிறாள் சாரா.
வழக்கமான கார் துரத்தல் களையும் சேஸிங் காட்சிகளை யும் பார்த்துப் பழகிய நமக்கு, நீரில் ஓடும் ஷ¨வைத் துரத்தும் சாராவின் இயலாமையும் வறுமையும் கண்கலங்க வைக்கிறது. சாரா அழுவதைப் பார்த்து அங்கிருக்கும் ஒருவர் ஷ¨வை எடுத்துக் கொடுக்கிறார். நனைந்த ஷ¨வைப் போட்டுக்கொண்டு சோகத்துடன் அண்ணனை நோக்கி வருகிறாள். அலி நகம் கடித்தபடி காத்திருக்கிறான். ‘ஏன் லேட்?’ என்று திட்டுகிறான். சலிப்புடன் ஷ¨வை அவன் முன்னால் கழற்றிப் போட்டு, ‘என்னால் இனியும் பொறுக்க முடியாது. அப்பாவிடம் சொல்லப் போகிறேன்’ என்று சாரா சொல்கிறாள். ‘சொன்னா ரெண்டு பேருக்கும் அடிவிழும்.’ ‘பரவால்ல, சொல்லத்தான் போறேன்.’ ‘சொல்லு, சொன்னாலும் புது ஷ¨ கிடைக்காது. அப்படியே வாங்கணும்னா அப்பா யாருகிட்டயாவது போய் கடன்தான் வாங்கணும்’ என்று அலி சொல்ல, அமைதியாகிறாள் சாரா. குடும்பத்தின் வறுமையைக் குழந்தைகள் உணரும் இந்தக் காட்சி நெருடலானது.
தினம் பள்ளிக்குத் தாமதமாக வந்தாலும், அலி வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கிறான். இதைப் பாராட்டி வகுப் பாசிரியர் அவனுக்கு ஒரு பேனாவைப் பரிசளிக்கிறார். அலி அதை சாராவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறான். பேனா கிடைத்த மகிழ்ச்சியில் ஷ¨ தொலைந் ததை இனி எப்போதும் அப்பாவிடம் சொல்ல மாட்டேன் என்கிறாள் சாரா.
ஒருநாள் பிரேயர் வகுப்பில் நிற்கும்போது தொலைந்துபோன தனது ஷ¨வை இன்னொரு சிறுமி அணிந்திருப்பதை சாரா பார்த்து விடுகிறாள். நேரடியாகக் கேட்கவும் முடியாது. எனவே, பள்ளி முடிந்ததும் அவள் பின்னாலேயே சென்று அவள் வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்கிறாள். பிறகு, அலியை அழைத்துக்கொண்டு ஷ¨வை வாங்கிவரும் வேகத்துடன் இருவரும் அவனது வீடு நோக்கிச் செல்கிறார்கள். அந்த வீட்டை நெருங்கும்போதுதான் தெரிகிறது… அந்தச் சிறுமியும் ஏழை. அவளது அப்பா பார்வையற்றவர். அவர்களின் வறுமையை உணர்ந்து அலியும் சாராவும் ஷ¨வைக் கேட்காம லேயே திரும்புகிறார்கள். ஒரு வசனம்கூட இல்லாமல் வெளிப்படும் குழந்தை களின் இந்த மனிதாபி மானம் நம்மை நெகிழவைக்கிறது.
அலி கொடுத்த பேனாவை மைதானத்தில் தவறவிடு கிறாள் சாரா. தொலைந்த ஷ¨வை அணிந்திருக்கும் அதே சிறுமி, சாராவின் பின்னால் வருகிறாள். விழுந்த பேனாவை எடுத்துச் செல்கிறாள் என்றா லும், மறுநாள் சாராவைப் பார்த்துத் தொலைந்த பேனாவைக் கொடுக்கிறாள். அவளைத் திருடி என நினைத்த சாரா குழம்புகிறாள். ஷ¨ உன்னுடையது என்பது தெரியாமல்தான் நான் அணிந்திருக் கிறேன் என்ற அர்த்தம் மறைமுகமாக வெளிப்படும் இக்காட்சி, வறுமையிலும் அந்தக் குழந்தையிடம் இருக்கும் நேர்மையை அழகாக வெளிப்படுத்துகிறது.
ஓட்டப்பந்தயம் துவங்குகிறது. நீண்ட பந்த யத்தின் இடையில் அலி தளர்வடையும்போது, சாரா மூச்சிரைக்க ஓடிய காட்சிகள் அவன் நினைவில் வரும். படத் தொகுப்பின் அற்புதம் என இந்தக் காட்சியைச் சொல்லலாம். ஓட்டப் பந்தயம் முடிந்ததும் அலி வீட்டுக்கு வருகிறான். பழைய ஷ¨வை கழற்றிப் போடுகிறான். பாதம் முழுக்க ஷ¨ அழுந்திச் சிராய்த்த காயங்கள். வீட்டின் முன்னாலிருக்கும் நீர்த் தொட்டியில் கால்களை வைக்கிறான். தான் அடைந்தது வெற்றியா… தோல்வியா என்று அவனுக்குத் தெரியவில்லை. சோர்வுடன் தலை குனிகிறான். நீர்த் தொட்டியில் இருக்கும் தங்க மீன்கள் அவனது கால்களைச் சுற்றி வருகின்றன. அவனது காயங்களை முத்தமிடத் துவங்கு கின்றன. இசை பெருக, கவிதை போன்ற இந்தக் காட்சியின் மேல் எழுத்துக்கள் மேல் நோக்கி நகர படம் நிறைவடைகிறது.
முதல் காட்சி தைக்கப்படும் ஷ¨வில் துவங்குகிறது. கடைசிக் காட்சி வெற்றுக் கால்களில் முடிகிறது. இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையும் முரணும் படத்தின் மொத்தக் கதையையும் நமக்கு குறிப்பாக உணர்த்திவிடுகிறது.
1996&ல் வெளியான இப்படம் உலகம் முழுக்க விருதுகளையும் நன்மதிப் பையும் பெற்றது. இரான், இஸ்லாமிய நாடு என்பதால், அங்கு சென்சார் விதிகள் கடுமையானவை. முக்காடிட்ட பெண்களின் முகத்தையும் கை விரல்களையும் மட்டுமே காட்ட முடியும். எனவே, இங்கிருக்கும் இயக்குநர்கள் குழந்தைகளை மையமாக வைத்துப் படங்களை எடுக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி. நடிகராக இருந்து பின் இயக்குந ரானவர். ‘Colour of Paradise’, ‘Father’, ‘Baran’ இவரது முக்கியமான பிற படங்கள்.
பள்ளிப் பருவத்தில் நாம் எதையாவது தொலைப்பதும் அதை அம்மா& அப்பாவுக்குத் தெரியாமல் மறைப்பதும் இயல்பானது. ஆனால், அதையே ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாக எடுக்க முடியும் என்பதுதான் சாதனை. படத்தைப் பார்த்த பின்பு எங்காவது வினோதமான சூழலில் செருப்புகளைப் பார்த்தால் மனம் பதைக்கிறது. கலவரத்தின் பின்பு சாலையில் சிதறிய செருப்புகள், வெள்ளத்தில் மிதந்து செல்லும் செருப்புகள், சாலையோரம் கிடக்கும் அறுந்த செருப்புகள் என ஒவ்வொன்றும் தான் இழந்த மனிதனின் கதையைச் சொல் கின்றன.
சமீபத்தில் கடற் கரையில் பார்த்தேன். மணல் முழுக்கச் சுவடுகள். அதில் பாதி அமிழ்ந்த நிலையில் குழந்தையின் ஒற்றைக் காலணி. அதைப் பார்த்ததும் அலியும் சாராவும் நினைவுக்கு வந்தார் கள். தன் பள்ளிகளின் தெருக்களுக்கு இடையே ஓடிய அந்தக் குழந்தைகள் போல, மணலில் அமிழ்ந்த அந்த பிஞ்சுக் காலணியை அணிந்து பால்யம் நோக்கி ஓடத் துவங்கியது என் நினைவு!
venkatramanan
டிசம்பர் 31, 2007 இல் 3:23 பிற்பகல்
Venkatramanan,
Thanks a lot dude!! I remember reading this. I follow that series in Vikatan every week. In fact, that series kindled the interest in me to watch many movies. I was longing to read Chezhiyan’s narration after watching it last week. Thanks for sharing
Aravindan
டிசம்பர் 31, 2007 இல் 3:32 பிற்பகல்
மிக அழகான கதை!இருவருமே ரொம்ப ரசித்து விவரித்திருக்கிறீர்கள். குடும்பம் என்ற கூட்டில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யனமான உணர்வுகள்.நீங்கள் எழுதியதைப்பார்த்ததுடன் நேரிலேயே அந்த கதாபாத்திரங்கள் உலா வந்தது போல ஒரு உணர்வு. நம்ம வாழ்க்கையிலும் கொஞ்சம் கொஞ்சம் (முன்னே பின்னே)இதே மாதிரி விஷயங்கள் நடக்கத்தானே செய்கின்றன?
அன்புடன்
கமலா
kalyanakamala
ஜனவரி 2, 2008 இல் 11:57 மு.பகல்
நன்றிகள் கமலாம்மா. தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் சொல்வது மிகவும் சரி. எல்லோர் வாழ்க்கையில் இது போன்ற அழகான நிகழ்வுகளும் உணர்வுகளும் நிறைந்து கிடக்கின்றன.
aravind
ஜனவரி 2, 2008 இல் 4:36 பிற்பகல்
[...] பயன்படுத்தியது! (உப குறிப்பு – சில்ட்ரென் ஆஃப் ஹெவன் படத்தை “தாரே ஜாமீன் பார்” குழந்தை [...]
தேநீரில் சிநேகிதம் - 1 « சிறுமழை
ஆகஸ்ட் 16, 2008 இல் 5:31 பிற்பகல்
இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.
ரவிசங்கர்
செப்டம்பர் 2, 2008 இல் 11:23 மு.பகல்