சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for டிசம்பர் 2007

சொர்க்கத்தின் குழந்தைகள்

7 மறுமொழிகளுடன்

 02.jpg

Children of heaven என்ற எழுத்துகளோடு உடனே துவங்குகிறது படம்.

அழகான பிங்க் நிற ஷூ ஒன்றை தைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். மீண்டும் அணிவதற்கு ஏதுவாக அதை மாற்றுகிறார். அதை பெற்றுக் கொண்டு புறப்படுகிறான் அலி. வயது பத்து இருக்கும். அம்மாவுக்காக உருளைக்கிழங்குகள் வாங்க காய்கறிக் கடைக்கு வெளியே தன்னுடைய பைகளை வைத்து விட்டு செல்கிறான். அழுகிய காய்கறிகளை அள்ளிச் செல்லும் தள்ளுவண்டி அங்கு வருகிறது. தவறுதலாக அந்த ஷூ இருக்கும் பை எடுத்துச் செல்லப்பட்டுவிடுகிறது.

காய்கறிக்கடைக்கிறார் இதற்கு மேல் கணக்கில் வைத்துக் கொள்ள முடியாதென அலியிடம் சொல்கிறார். அடுத்த முறை பணத்தை கொடுக்குமாறு சொல்கிறார். அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லுவதாக கூறிவிட்டு வெளியே வந்தால், ஷூக்களை காணவில்லை! தேடிப் பார்க்கையில் தவறுதலாக காய்கறி கூடைகளை கீழே தள்ளிவிட காய்கறிக் கடைக்காரர் அவனை அங்கிருந்து துரத்திவிடுகிறார்.

வேகமாக வீட்டுக்கு ஓடுகிறான் அலி. தெருவில் நுழையும் போதே அவர்கள் வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு அம்மாவை சத்தம் போட்டுக்கொண்டிருப்பது தெரிகிறது. வீட்டின் உள்ளே சாரா – அவனது ஆறு வயது தங்கை – சில நாட்களுக்கு முன்னால் பிறந்த தம்பியை தூங்க வைத்துக்கொண்டிருக்கிறாள். தயங்கி தயங்கி அவளிடம் ஷூக்கள் தொலைந்ததை சொல்கிறான். அடுத்த நாள் தான் பள்ளிக்கு போகமாட்டேனென அழுகிறாள் சாரா.

ஷூக்களை எப்படியும் கண்டுபிடித்துவிடுவதாக வாக்கு தந்துவிட்டு அம்மாவிடம் இதை சொல்ல வேண்டாமென கெஞ்சுகிறான். மீண்டும் ஷூக்களை தேடி ஓடுகிறான். பலனில்லை.

அன்று இரவு அப்பா அலியை திட்டிக்கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என்று தெரிந்தும் அவளுக்கு எந்த உதவியையும் அலி செய்வதில்லை என்று அவருக்கு கோபம். அலியும் சாராவும் அமைதியாக வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சாரா யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, “நாளைக்கு நான் பள்ளிக்கு எப்படி செல்வது?” என்று நோட்டில் எழுதி அலியிடம் காண்பிக்கிறாள். அப்பா அம்மாவுக்கு தெரியாமல் இப்படி எழுதியபடி அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இரானில் பெண்களுக்கு அதிகாலை முதல் மதியம் வரையும், ஆண்களுக்கு மதியம் முதல் மாலை வரை பள்ளி வகுப்புகள் நடைபெறும். ஆக, சாரா காலையில் அண்ணனுடைய ஷூவை அணிந்து கொண்டு பள்ளிக்கு போவதாகாவும், பள்ளி முடிந்ததும் வழியில் காத்துக்கொண்டிருக்கும் அண்ணனிடம் ஷூக்களை தந்துவிடுவதாகவும் முடிவு செய்கிறார்கள். இப்படியாக அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சமாளிக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.

குழந்தைகள் உலகம் எத்தனை அழகானது? அடம்பிடித்து அழுகிற குழந்தைகள் இருந்தாலும், வீட்டின் ஏழ்மையை அத்தனை சிறு வயதில் புரிந்துகொண்டு இந்த இருவரும் ஒரு ஜோடி ஷூவிற்காக படும் அவஸ்தைகளை கவிதைக்கு உரிய அழகோடு விவரிக்கிறது படம்!

இரு வெவ்வேறு கோடிகளில் இருக்கிறது இருவரின் பள்ளிகளும். பள்ளி முடிந்ததும் கூட்டிலிருந்து விடை பெறும் பறவை போல சிறகடித்து பறக்கிற குழந்தைகளுக்கு மத்தியில் வேகமெடுக்கிறாள் சாரா. வழியில் அண்ணன் காத்துக்கொண்டிருக்க மூச்சு வாங்க ஓடுகிறார்கள். யாருமில்லாத சந்து ஒன்று காத்திருக்கும் அலியும் அவளும் ஷூக்களை மாற்றிகொண்டு ஒரு வார்த்தை பேசாமல் எதிர் எதிர் பக்கம் ஓடுகிறார்கள்.

சில நாட்கள் இப்படியே கழிகிறது. ஒரு காலையில் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் நின்றபடி தன் ஷூவையும் மற்றவர்களில் ஷூக்களையும் ஏக்கமாக பார்க்கிறாள் சாரா. வரிசையாக ஒவ்வொரு ஷூவாக பார்த்தபடி வருகையில் கண்ணில் சிக்குகிறது அந்த பிங்க் ஷூ! பாட இடைவேளையில் சாரா வெளியே வந்து அந்த மைதானம் முழுக்க இருக்கும் குழந்தைகளின் கால்களை பார்த்தபடி நடக்கிற காட்சியில் அந்தச் சிறுமியின் நடிப்பும், சிலிர்க்க வைக்கிற இசையும் மனதை பிசைகிறது. அந்த பிங்க் நிற ஷூவை அணிந்திருக்கும் ரோயாவிடம் சாராவுக்கும் இடையே மலர்கிற நட்பு, குழந்தைகளுக்கே உரிய இன்னொஸென்ஸ்!

35,00 குழந்தைகளை பரிசீலித்து இந்த இரு குழந்தைகளையும் தேர்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். பொறுப்பான அண்ணனாக அலியும், அத்தனை அழகான சாராவும் அச்சு அசலாக உங்கள் கண்முன் உயிர்பெறுகிறார்கள். சட் சட்டென சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும், சாமர்த்தியமாக ஷூ இல்லாமல் சமாளிப்பதும் அத்தனை அறிவும் அழகும் அக்குழந்தைகள்! உடம்பு முடியாத அம்மாவுக்கு உதவுவது, கஷ்டப்படும் அப்பாவிடம் ஷூ கேட்கக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளும் சாகசங்களென, தலைப்புக்கு ஏற்ப “சொர்க்கத்தின் குழந்தைகள்!”

இயக்குனர் மஜித் மஜிதி குழ்ந்தைகளுக்கான படம் எடுப்பதில் புகழ் பெற்றவர். மென்மையான உணர்வுகளை அழகியலோடு சொல்லிய விதத்தில் ஜெயித்திருக்கிறார். சாரா ஒவ்வொரு முறை மூச்சு வாங்க ஓடுகிற ஒவ்வொரு காட்சியும் நமக்கு உயிரே போகிறது. ஒரு நாள் அப்படி அவள் ஓடுகையில் ஒரு ஷூ சாலையோர கால்வாயில் விழுந்து அடித்து கொண்டு செல்ல, சாரா அதை துரத்தி கொண்டு செல்லும் காட்சி நான் இதுவரை பார்த்திலேயே மிகச் சிறந்த காட்சி!  பதைபதைக்க வைக்கிற இசையும், சாராவின் ஓட்டத்தை பின் தொடரும் காமிராவுமாக அத்தனை அசத்தலான இயக்கம்!

சினிமாவில் கவிதை சொல்ல முடியும் என்பதற்கு அந்த க்ளைமாக்ஸ் அழுத்தமான உதாரணம்!

வெகு நாட்களுக்குப்பின் ஒரு திரைப்படத்தை பார்த்த பின் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, படபடப்பு என அத்தனை உணர்வுகளும் மிக எளிதாக ஏற்பட்டது. ஏழ்மையை இத்தனை அழகாக சொல்ல முடியுமா என்ற ஆச்சர்யம் எழுகிறது.  எல்லா வேளையிலும் பக்கபலமாக வருகிற நண்பர்களைப் போல இசையும் ஒளிப்பதிவும்!

95 நிமிடங்கள் மட்டுமே ஓடினாலும்,  நினைவில் அழுத்தமாக இடம் பிடிக்கிற படம்.  நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று!

நல்ல படம் எடுக்க லட்சம் லட்சமாக பணம் வேண்டுமென்று யார் சொன்னது?? ஒரு ஜோடி ஷூ போதுமென்பது மஜித்தின் வாதம்!

கொசுறு: 1999ல் வெளிவந்த பெர்ஷியன் படம். இயக்குனர் – மஜித் மஜிதி. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

கொசுறு 2: உடனே பார்க்கவும்!

Written by aravind

டிசம்பர் 31, 2007 இல் 1:51 பிற்பகல்

ஹி ஹி – 2

without comments

பக்கம் பக்கமா வசனம் பேச பிடிக்காத தமிழ் சினிமா காரெக்டரே இல்ல. இருந்தாலும், நடுவுல கொஞ்சம் வசனத்த குறச்சுட்டு, விஷுவலா சில விஷயங்கள சொல்ல ஆரம்பிச்சாங்க. சில பேர் சிம்பாலிசம் யூஸ் பண்ணாங்க. எல்லா நல்லா தான் இருக்கும். ஆனா, அதுக்காக எல்லா சினிமாலயும் ஒரு காலத்துல இதே சிம்பாலிஸம்ஸ் யூஸ் பண்ணி கழுத்தறுத்தாங்க! துணிய ஒரு லிமிட்டுக்கு மேல அடிச்சு தோச்சா கிழிஞ்சிரும்!! சரி, அப்படி சில சிம்பாலிஸம்ஸ் என்னன்னு பாப்போமா……

ரெயில்வே ட்ராக் சேர்றது / பிரியறது :

ஏதோ மனஸ்தாபம் ரெண்டு பேர் பிரியறாங்க. விட்டுத் தொலைய வேண்டியது தானே. இதுக்காக எக்மோர் போய், பெர்மிஷன்லாம் வாங்கி, ஒரு நாள் முழுக்க ட்ராக்க சேத்து பிரிச்சு ஷாட் ஷாட்டா எடுத்துஏன் சார் ஏன்?? க்ளைமாக்ஸ்ல வேற வழி இல்லாம அதே ஜோடி சேரும் போது அதே ட்ராக் அப்படியே சேரும். இப்படி காமிச்சா நிஜமாவே அவங்க சேந்தா என்ன எஃபெக்ட் கிடைக்குமோ அது கிடைக்கும் அப்படிங்கிறது கோடம்பாக்க ஐதீகம்.
கை கழுவறது :

குடும்ப தலைவர் சாப்டுட்டு இருப்பார். தலைவி பறிமாறுவாங்க. குழம்பு ஊத்தும்போது ஒண்ணும் கேட்க மாட்டாங்க. ரசம் ஊத்தும்போது கூட ஒண்ணும் பேச மாட்டாங்க. அவர சாப்பிட்டு முடிச்சதும் அவர்டஅப்போ, அந்த கல்யாணம்?” அப்படினு சீரியஸா எதாவது கேப்பாங்க. உடனே அவர் அந்த அம்மாவ ஒரு லுக் விட்டுட்டு, தட்டுலயே கை கழுவிடுவாரு. க்ளோசப்ல கை நல்லா கழுவுறாரான்னு நம்மளுக்கு வேற காட்டுவாங்க. கை கழுவலனா நாறிடுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல அவர் கை கழுவினா கூட, அந்த அம்மா, “அவ்ளோ தான்! இந்தக் கல்யாணம் நடக்காதுஅப்படினு நினைச்சிப்பாங்க!

கடல் சீறும் / காத்து வீசும் / பறவையெல்லாம் ஃப்ரீஸ் ஆய்டும்! :

இது எல்லா படத்துலயும் வரும். அதிர்ச்சிய காட்டணும்கிறது தான் அப்ஜெக்டிவ். கடல் கொந்தளிக்கும். மரமெல்லாம் பேய் மாதிரி ஆடும். தேமேனு பறந்திட்டிருக்க பறவையெல்லாம் அப்படியே நின்னுடும். அப்படியே பாக்கிறவங்களும் உறைஞ்சு போய்டுவாங்களாம்!! சில சோம்பேறி டைரக்டர்ஸ், வேற கடல், வேற காத்து, வேற பறவை கூட்டம்னு கூட ட்ரை பண்ணாம, பழைய படத்துலேர்ந்து அந்த ஸீன அப்படியே சுட்டு போட்டிருவாங்க. “கலைஞரின் கண்ணம்மாபடத்துல இதோட உச்சகட்ட கிரியேட்டிவிட்டி நடந்துது. மீனாவுக்கு நினைவு திரும்ப போது சுனாமியே வந்துடுச்சு!! இன்னாது? மீனா யார்னே ஞாபகம் இல்லையா?? ஃப்ரீஸ் பண்ணுங்கடா எல்லாத்தையும்!! 

 பூவும் பூவும் கிஸ் பண்ணிக்கறது:

பாவப்பட்ட ரெண்டு அஸ்ஸோஷியேட் டைரக்டர்ஸ் ரெண்டு பூவ புடிச்சிகிட்டு, காமிரால தலை காட்டாம குனிஞ்சு ஒளிஞ்சு நின்னு, டைரக்டர் டேக் சொன்னதும், அந்த ரெண்டு பூவயும் அப்படியே அலேக்கா திருப்பி கிஸ் பண்ணவெப்பாங்க. சூர்யகாந்தி பூவா இருந்தா நல்லது. அட அட! என்ன ஒரு கிரியேட்டிவிட்டி(பாரதிராஜா?????). ஹீரோ ஹீரோயின் கிஸ் பண்ணி தொலச்சாக் கூட வெட்டித் தொலையலாம், இந்தக் கொடுமைய என்ன பண்றதுனு சென்ஸார்ல ரொம்ப நாள் யோசிச்சிருப்பாங்கனு நினைக்க்கிறேன். எத்தனை குழந்தைங்க ஏம்மா பூவும் பூவும் முட்டிகிதுனு கேட்டுச்சுங்களோ! இதுல அடுத்த ஸ்டெப் வேற ஒண்ணு கண்டுபிடிச்சாங்க. ஹீரோவும் ஹீரோயினும் பாட்டு பாடிகிட்டே ஒரு புதருக்குள்ள போய்டுவாங்க. அப்படியே கையால ரெண்டு பேரும் அந்த புதர உலுக்கு உலுக்குன்னு உலுக்குவாங்க!! ச்சீ ச்சீ!!

சக்கரம் சுழல்றது:

கால சக்கரம் சுழன்றதுஅப்படினு யாரோ ரூம் போட்டு யோசிச்சு எழுதிட்டாங்க. அத காட்றோம்னு ஒவ்வொருத்தரும் நம்மள எப்படியெல்லாம் கொடும படுத்தினாங்க. சைக்கிள் சக்கரத்துல ஆரம்பிச்சு டெய்லரிங் மிஷின் சக்கரம் வரைக்கும் ஒண்ண விடாம சும்மா சுத்து சுத்துனு சுத்த விட்டாங்க. சில டைரக்டர்ஸ் இத விட்டுட்டு, ஒரு செடிய நட்டு ஒரு சின்ன பையன தண்ணி விடச் சொல்லி எடுத்துட்டு, கட் பண்ணி, மன சாட்சியே இல்லாம அந்த செடிய புடிங்கிட்டு, அதே இடத்துல ஒரு பெரிய செடி வெச்சு, பெரிய ஆளா ஒருத்தர தண்ணி ஊத்த வெச்சு (அப்பா, மூச்சு முட்டுதே), அதன் மூலமா சிம்பாலிக்கா சில பல வருஷம் ஆய்டுச்சுன்னு காட்டி புரட்சி பண்ணாங்க!

 புருஷன் செத்து போறது: தாலி, பூ, குங்குமம். இது மூணும் தான் டார்கெட். புகுந்து விளயாடினாங்க எல்லாரும். அதுவும் குங்குமத்த எப்படியெல்லாம் தற்செயலா அழிக்கலாம்னு ஒரு பெரிய ரிசர்ச்சே பண்ணாங்க. ஒழுங்கா மாட்டி வைக்காத கல்யாண ஃபோட்டோ விழுந்ததன் காரணமா அப்பாவி புருஷன்கள் நிறைய பேரு செத்திருக்காங்க. இந்த சிம்பாலிஸத்தின் விளைவு? கணவன் இறந்ததும் மனைவிக்கு ஃபிரீயா டெலிபதி தந்தி வந்துடும். அப்ப கூட, அடுத்த ஸீன்ல யாராச்சும் அழுதுகிட்டேஉங்க புருஷன் செத்திட்டாருமாஅப்படினு ஓவர் ஆக்ட் பண்ணி சொல்லும் போது, எனக்கு ஏற்கனவே தெரியுமேஅப்படினு அதிகப்பிரசங்கித்தனமா சொல்ல மாட்டாங்க. எதிர்பாராம இப்படி நடந்துடுச்சேனு னு அழுவாங்க.சரி போதும்னு நீங்க சாதரணமா சொன்னாலே எனக்குப் புரியும். சிம்பாலிஸம்லாம் வேணாம் :P

சொசுறு : முந்தைய ஹி ஹி : 1

குட்டிக்கவிதைகள்

without comments

pogodrop.jpg

மௌனத்தை
கிழிக்கிற
சத்தம்
அடங்கியபின்
அதை விட சத்தமாய்
மீண்டும்
அறையும்
மௌனம்.

———-

குழந்தைகள்
போட்டிக்கு இல்லாத
இரவில்
பூங்கா ஊஞ்சலில்
ஆடுகிறது
காற்று.
———-

இலை சிந்தும்
மரமொன்றை
படமாக
வரைந்து வைத்தேன்
அதை யார் யாரோ
எடுத்துப் பார்க்கையிலெல்லாம்
விழுந்தது
இன்னுமொரு இலை.

——–

ஆற்றைத்
தொட்டும் தொடாமலும்
பறக்கிற
பறவையுடன்
போட்டியிட்டு
நீந்துகிறது
அதன் நிழல் மீன்.

Written by aravind

டிசம்பர் 16, 2007 இல் 7:16 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

கல்லூரி

3 மறுமொழிகளுடன்

kallori161107_22.jpg

எந்த உண்மையான சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டதல்ல இப்படம் என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது படம். மொத்த படத்திலும் இருக்கிற ஒரே ஒரு பொய் அது மட்டுமே!

முதல் நாள் கல்லூரிக்கு வருகிற ஜூனியர்களுக்கு சீனியர்கள் கானா அறிவுறை சொல்லும் பஸ் பயணத்துடன் ஹை வோல்டேஜில் துவங்குகிறது படம். ஏற்கனவே பழக்கமான ஒன்பது நண்பர்களுடன் பத்தாவதாக ஒருத்தி இணைய, தொடர்கிறது கல்லூரிக் கதை. அந்த ஒன்பது பேரின் நடிப்புக்கும் ஒரு சபாஷ்!

கடைசியாக எப்போது உங்கள் நண்பர்களின் சாயலையோ தெரிந்தவர்களின் சாயலையோ திரையில் பார்த்தீர்கள்? இந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் ஒன்றே ஒன்றாவது உங்களுக்கு யாரையோ ஞாயபகப்படுத்தும்! அத்தனை அழகும் இயல்பும் கதாபாத்திரங்கள்!

யார் இந்த ஹேமலதா?? வறுமையின் பிடியிருந்து மீள முயலும் தன்னையும் நண்பர்களையும் எப்போதும் நல்வழிப்படுத்தி, நாகரீகம் கற்றுத் தந்து, பக்குவப்படுத்தி, பெண்களையும் ஆண் பெண் நடபையும் இழிவுபடுத்துவோரை அடிக்க பாயும் பெண்ணாய் அசத்தியிருக்கிறார்.

யாரோ போல் அந்நியமாய் அறிமுகமானாலும் போகப் போக கச்சிதமான முகபாவங்களும் காதல் குழப்பங்களுமாய் கவர்கிறார் தமன்னா. “கேடி” , “வியாபாரி” படங்களுக்குப் பின் காணாமல் போக இருந்தவருக்கு கோடம்பாக்க கல்லூரியில் க்ராண்ட் ரீ அட்மிஷன்!

நண்பர்கள் காதலிக்க கூடாது என்று எண்ணும் ஒருத்தியும், நண்பனை காதலிக்கு அவள் தோழியும் கடைசி கட்டத்தில் மனம் விட்டு பேசிக்கொள்கிற காட்சி ஆஹா!

அடக்க ஒடுக்கமான ஏழை மாணவனாய் கவர்கிறார் அகில். தமன்னா தன்னை கவனிக்கவில்லை என்று கலங்கும் போதும், பின்னர் தமன்னாவின் ஆர்வம் அறிந்து குதூகலிக்கும் போது அத்தனை இன்னொசென்ஸ்!

நண்பர்கள் அனைவரும் கனக் கச்சிதம். அவர்களின் குடும்பப் பிண்ணனியை நச்சென ஒரே காட்சியில் சொல்லியிருப்பது பக்குவம்! தமன்னா தன்னுடைய அப்பாவை “டாடி” என்றழைப்பதை அறிந்து மற்றவர்கள் தத்தம் அப்பாக்களை அப்படி அழைத்துப் பார்த்து கனவு காண்கிற காட்சி குபீர் சிரிப்பு!!

அகில் தமன்னாவுக்கிடையேயான ஈர்ப்பு மெது மெதுவாய் வளர்வது அழகு. காதலா நட்பா என்று தவித்து உருகும் தருணங்களில் கறை ஒட்டிக்கொண்ட கர்ச்சீஃப் மற்றும் தொடர்ந்து துரத்தி வரும் ரிஷப்ஸன் பாட்டு சிம்பாலிஸம்கள் கவிதை.

செழியனின் காமிரா செழிப்பு. தமன்னா இவ்வளவு அழகா என்று வியக்க வைக்கிறார். மழையில் கால்பந்து விளையாடும் போது இரு மனங்கள் தனியே கால்பந்து ஆடும் காட்சி ஜிலீர்!

பலவிதமான டிஃபன் பாக்ஸுகள் உலர்கிற அந்த விளம்பர ஹோர்டிங் ஐடியா பளிச்!

நன்றாக எழும்பி வந்த பந்தில் சூப்பர் சிக்ஸர் அடிக்காமல் டொக்கு வைத்திருக்கிறார் ஜோஷ்வா! “உன் அருகில்” பாடல் மட்டும் தாலாட்டு. பிண்ணனி இசையின் பிண்ணனியில் “காதல்”!

எளிமையே பிரம்மாண்ட அழகு என்று அழுத்தம் திருத்தமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் பாலாஜி ஷக்திவேல். ஷங்கர் தயாரிப்பில் அதை நிருபித்திருப்பது மிகச் சிறந்த கோடாம்பாக்க irony! இருவருக்கும் ஒரு ராயல் சல்யூட்!

திரைக்கதை கட்டமைப்பு அநியாயத்திற்கு இயல்பு. ஒரு கட்டத்தில் படத்தில் எதுவுமே இல்லையா என்று கொஞ்சம் சலிப்பு தட்டிவிடுகிறது. அது ஒரு மைனஸாகியும் விடுகிறது.

படத்தில் கதையில்லை தான். ஆனால், நம் எத்தனை பேரின் வாழ்க்கையில் ஒரு கதை இருக்கிறது?? இது அப்படி சிலரின் வாழ்க்கை.

குட்டைப் பாவாடை பெண்கள், காதல் மட்டும் அரங்கேறும் வகுப்புகள், கோமாளிப் பேராசியர்கள், மூன்றாம் தர கவர்ச்சி நாயகிகள் பேராசிரியைகளாக வலம் வந்த அத்தனை கோடம்பாக்க கல்லூரிகளுக்கும் நெத்தியடியாக இப்படத்தை தந்திருக்கிறார் பாலாஜி ஷக்திவேல்! இந்த “கல்லூரி” அத்தனை டவுன் கல்லூரிகளின் நகல்! இல்லை இல்லை அசல்!!

திரையரங்கிலிருந்து வெளிவரம் பொழுது ஏதேதோ கேள்விகளும் நினைவுகளும். தன் அடுத்த படத்தையும் தமிழ் சினிமாயின் முக்கிய சினிமா ஆக்க வேண்டுமென்ற பாலாஜி ஷக்திவேலின் ஆர்வத்திற்கு அதை நிறைவேற்றியதற்கும் பாராட்டுக்கள்!

தமிழ் சினிமாவின் கல்லூரி அராஜகங்களுக்கும் கேள்வி கேட்கப்படாமல் இருக்கிற அரசியல் அராஜகங்களுக்கும் ஒரே சாட்டையில் இரட்டை சவுக்கடி இந்த கல்லூரி!

ரேட்டிங் :

5992full_star-thumb.gif5992full_star-thumb.gif5992full_star-thumb.gif5992full_star-thumb.gif5992no_star-thumb.gif ப்ளஸ் thumbs_up.gif

Written by aravind

டிசம்பர் 10, 2007 இல் 2:25 பிற்பகல்

நிலவு பூத்த குளம் – சில குறிப்புகள்

4 மறுமொழிகளுடன்

moon_water.jpg

வீதியில் செல்லும் காதலியை
விழியால் ஜன்னல்வழி படமெடுக்கும் காதலன் போல
வானவீதியில் சென்ற நிலவை
படமெடுத்துக்கொண்டது குளம்.

விளையாடிவிட்டு தாமதமாக
வீட்டுக்கு வரும் பிள்ளையாகப்     பதுங்கிவந்து
ஊர் முழுக்க திரட்டி வந்த புழுதி போக
தன் கைகளை மெதுவாக குளத்தில் கழுவியது காற்று.

வெகுநேரம் பேரம் பேசியபின்
ஒரு பூவை சுமக்க சம்மதித்தது குளம்.
மகிழ்ச்சியுடன் மரம் சிந்திய ஒற்றைப்பூ
நீந்தி மெதுவாக அடைந்தது குளத்தின் அம்முனை.

இரவில் பூக்கும் புதுமலர் நிலவைக்கண்டு
இன்றும் குழம்பிய தவளை
உற்றுப் பார்த்தபடி இருந்துவிட்டு
சட்டென்று பாய்ந்தது குளத்தில் பூத்த நிலவில்.

வானம் – விரிந்த குளம்
அங்கே நிலவும் விண்மீன்களும்
குளம் – துண்டு வானம்
நிலவின் நிழலும் நிஜ மீன்களும்.

Written by aravind

டிசம்பர் 5, 2007 இல் 3:48 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,