சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for நவம்பர் 2007

தீதும் நன்றும் – இரண்டாம் பாகம்

without comments

முதல் பாகம்

குப்பையா தாத்தா கோவிலை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தார். “புனர் தரிசன ப்ராப்பிரஸ்த்து” என்று சொல்லிக்கொண்டார். போன வருடம் இறந்து போன சாரதி பூஜாரி தான் இதை ரொம்ப வருடங்களுக்கு முன் சொல்லிக் கொடுத்தார். இதன் அர்த்தம் “மீண்டும் இந்தக் கோயிலை காணும் வரத்தை கொடு” என்பதாம்.

குப்பையாவிற்கு அதை விட பெரிய வரம் தேவையில்லை.

அவரின் அம்மா பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த போது மழைக்கு இந்தக் கோயிலில் ஒதுங்கிவிட்டு மருத்துவச்சிக்கு சொல்லியனுப்பினார்களாம். அவள் வருவதற்குள் கோயில் மண்டபத்திலேயே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிறந்தார் குப்பையா. அவரின் பாட்டி கடவுளே பிரசவம் பார்த்ததாக சொல்லுவாள்.

சிறு வயது முழுக்க கோவிலில் விளையாடுவதிலேயே கழிந்தது. முதன் முதலில் தேங்காய் கடை வைத்தது கோயில் வாசலில் தான். அவருக்கு வாழ்க்கையை சம்பாதித்து கொடுத்தது அக்கோயில். திருமணம், பையனின் காதுகுத்து துவங்கி திருமணம் வரை எல்லாம் அங்கேயே தான்.

இப்போது யாருமில்லை அவருடன். கோயிலைத் தவிர.

கோயிலைப் பற்றி பல செய்திகள் சேகரித்து வைத்திருந்தார். அதை வைத்து அவர் சொல்லும் கதைகள் ஊரில் பிரபலம். நானூறு வருடப் பழமையான கோயில். இன்று பராமரிப்பின்றி கிடக்கிறது.

எதிர்க்கட்சி தலைவரின் சொந்த ஊர் இது. அவர் முதலமைச்சராக இருந்த பொழுது கூட குப்பையா நேரில் சென்று கோயிலைப் புதுப்பிக்க மனு கொடுத்தார். பிரயோஜனமில்லை.

மீண்டும் கோயிலைத் திரும்பி பார்த்தார். சில சமயங்களில் கோயிலும் தானும் ஒன்று தான் என்று தோன்றும் அவருக்கு. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டு, இப்போது யாரும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது, இரண்டும்.

உயிர் போவதற்குள் இதை யாராவது புதுப்பித்தால் அவருக்கு ஆனந்தமாயிருக்கும். அது வரை அவர் உயிர் போகவும் போகாது.

அடுத்த தெரு தாண்டியவுடன் இடி விழுந்தது போல ஓசை கேட்டது. குப்பையா சற்று நிலைகுலைந்து விட்டார். கோயில் தெருவிலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான். சட்டையெங்கும் ரத்தக்கறை. அவனை நிறுத்தினார். கோயிலில் குண்டுவெடித்ததாக பெரும் முயற்சிக்குப்பிறகு சொன்னான். உறைந்து போனார் குப்பையா.

 

“எதிர்கட்சி தலைவர் கோபால பாண்டியனின் சொந்த ஊரான குளித்தலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குண்டுவெடிப்பில் பலியான வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. விளம்பரத்துக்குப்பின் மீண்டும் இணைவோம்..”

மாலினி வேகமாக குறிப்பெடுத்தாள். சில வருடங்களுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்கு அவள் சென்றிருந்தாள். இதழியல் படித்துக்கொண்டிருந்த போது பழமைவாய்ந்த கோயில்களைப் பற்றி அவள் குறும்படம் எடுத்த போது அந்தக் கோயிலுக்கு போனாள். அப்போதிலிருந்து வருடம் தோறும் செல்கிறாள்.

“மாத்யூ! அந்த ஊருல குப்பையானு ஒரு தாத்தா இருக்காரு. அவரக் கேட்டா இன்னும் நிறைய விஷயம் கிடைக்கும். எனக்கு தெரிஞ்சத டேட்டா செண்டருக்கு அனுப்பிட்டேன். நம்ம டீம உடனே அங்க போக சொல்லுங்க. க்விக்.” மாலினி முழு நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.

“ஓ குட் மாலினி! கண்டிப்பா” பரப்பரப்பாக நகர்ந்தான்.

சற்று நடந்த பின் திரும்பி அவளைப் பார்த்து “வெரி ஸ்மார்ட் ஐடியா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

“டீ.வியைத் தொடர்ந்து பார்க்கவும்.” ப்ரவீணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு செய்தி வாசிக்க தயாரானாள் மாலினி.

 

“குப்பையா நிறைய விஷயங்கள் சொன்னீங்க. ரொம்ப நன்றி. அரசு உடனே கோயில புதுப்பிக்க உத்தரவு போட்டிருக்காங்க. நீங்க அதுக்காக எவ்வளவு போராடியிருக்கீங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்” தேர்ந்த வாசிப்பாளினி போல ஒருத்தி பேசிக்கொண்டிருந்தாள்.

அம்மா அழுகையை இன்னும் நிறுத்தவில்லை. “பாவிங்க! உருப்படுவானுங்களா கோயில கூட விட மாட்டேங்கிறானுங்க…யாரு அந்தப் பையனோ கோயிலுக்கு வந்து உயிர் போயிடுச்சே…” இதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.

“உன்ன கோயிலுக்கு போ போன்னு விரடிட்டே இருந்தேனே” மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி தேம்பினாள்

தேவியை திரும்பிப் பார்த்து சொன்னாள் “அழாத தேவி, கடவுள் எப்பவும் நம்ம கூடவே இருப்பார். நல்லதே நடக்கும்”

தேவி தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கண்களில் கண்ணீர் தேங்கியிருந்ததால் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை தேவிக்கு.

முற்றும்

Written by aravind

நவம்பர் 27, 2007 இல் 2:51 பிற்பகல்

கதை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

அழகிய தமிழ் மகன்

ஒரு மறுமொழியுடன்

கல்லூரி மாணவன் குரு (விஜய்) ஓட்டப்பந்தைய வீரர். தற்செயலாக சந்திக்கிற அபிநயா(ஸ்ரேயா) மீது காதல் கொள்கிறார். அது வெற்றியும் பெறுகிறது. குருவுக்கு ESPயின் காரணமாக பின்னர் நடக்க இருக்கும் விஷயங்கள் முன்கூட்டியே தெரிய வருகிறது. அதில் ஒன்று – அபிக்கு அவர் மூலமாகவே ஆபத்து வருமென்பது. கவலையில் குரு அவரைப் பிரிகிறார். அந்த இடத்தில் வந்து சேர்கிறார் அவரைப் போலவே இருக்கும் ப்ரஸாத்(இன்னொரு விஜய்).

பின்னர் நடப்பது வழக்கமான ஆள்மாறாட்ட காமெடிகள்.

ஆள்மாறாட்ட கதைகளில் நீங்கள் என்ன எல்லாம் லாஜிக் இல்லா மேஜிக் எதிர்பார்க்கலாமோ அதெல்லாம் இதிலும் உண்டு. கோடம்பாக்க டைரக்டர்ஸுக்கு ஒரு வேண்டுகோள் – ஆள்மாறாட்ட கான்செப்ட்டை தமிழ் சினிமா ரொம்பவே அடித்து துவைத்து விட்டது. அதை இனிமே எடுக்காதீங்களேன்! ப்ளீஸ்!

கதையை அவசரப்பட்டு சொல்லாமல் முதல் பாதியில் காமெடி செண்டிமெண்ட் அடிதடி எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். கதை கவிழ்த்து விட்டாலும் முதல் பாதி கொஞ்சம் கைகொடுக்கிறது.

குருவாக வருகிற விஜய் வழக்கத்தை விட செம ஃபிரெஷ்! வழக்கமான காதல், டான்ஸ், ஃபைட், காமெடி என வருகிறார். “எல்லா புகழும்..” மாஸ் பாடலில் விஜய் ஆடுகிற நடனம் க்ளாஸ்!

ப்ரஸாத் – இன்னொரு விஜய் – நடிப்பில கொஞ்சம் ஸ்கோப் உண்டு. குருவை விட பிரமாதமான டைமிங் காமெடியில். இரண்டாம் பாதியை அனுமார் போல தூக்கி நிறுத்துவதே ப்ரஸாத் தான். டையலாக்கை கடித்து கடித்து பேசுவது வில்லத்தனமாக இருந்தாலும் போக போக கொஞ்சம் ஓவர்டோஸ். இமேஜ் வட்டத்துக்குள் இருக்கிற விஜய் புதிதாக எதையோ செய்ய முயன்றதே பெரிய விஷயம். ஒவ்வொரு முறையும் “எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமோ?” என்று சொல்வது வெடிச் சிரிப்பு.
என்னடா தமிழ் சினிமாவே நம் பின்னால் பைத்தியம் பிடித்து அலைகிறதே… கொஞ்சமாவது நடிக்க முயற்சி பண்ணலாமென்று உறுத்த வேண்டாமா ஷ்ரேயாவுக்கு! டையலாக்கை கூட இன்னும் ஒழுங்காக யசைக்கவில்லையென்றால் எப்படி?? “மத்த” விஷயத்திலெல்லாம் ரொம்ப ஸ்டெடியாகவே இருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேனென்று பேட்டி பேட்டியாக நமீதா பெருமையடித்துக் கொண்டது இதைத் தானா?? ஐயோ பாவம்!

வில்லனாகவே பார்த்து பழகிய ஆஷிஷ் வித்யார்த்தியை ஷ்ரேயாவின் அப்பாவாக நல்லவராக வருவதை நம்பமுடியவில்லை! இதோ இப்போ வில்லனாக மாறுவார் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

ஷிண்டே இன்னொரு ஐயோ பாவம். லூஸு வில்லனாக இன்னொரு படம் செய்யாதீங்க ப்ளீஸ்! பாரதியாராக நடிச்சவர் சார் நீங்க… தமிழ் சினிமால உங்களுக்கு வேலையே இல்லை…. வேற எங்கயாச்சும் போய்டுங்க.

குருவின் அப்பா அம்மா எபிசோட் முதல் பகுதியின் டோட்டல் கலகல. அப்பா “அலோ” சொல்லியே சிரிக்கவைக்கிறார். அம்மா கீதா படு பாந்தம்.

கஞ்சா கருப்பு, சந்தானம், சத்யன், பாஸ்கர் அனைவரும் ஓகே.

உங்கள் காதலனைப் போலவே ஒருவன் வந்தால் உங்களால் யார் பொய் சொல்கிறார் என்று அடையாளம் சொல்ல முடியாதா?? அப்புறம் காதலித்து என்ன புண்ணியம்?? தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் அடி முட்டாள்கள்
போலிருக்கிறது.

அதுவும் குரு கொஞ்ச நாள் காணாமல் போன போது அவர் நண்பர்கள் அவரை தேடுவதாகவே காணோம். அவர்களுக்கும் உண்மையான குரு யாரென்று தெரியவில்லை… அட போங்க பா!

பாலசுப்ரமெணியனின் காமிரா ரொம்பவே துல்லியம். விஜய், ஷ்ரேயா எல்லாரும் மினுங்குகிறார்கள். படத்தின் க்ராபிஃஸ் காட்சிகளில் பட்ஜெட் பல்லை இளிக்கிறது.

ஆடியோவில் கேட்டதை விட பாடல்கள் திரையில் கொஞ்சம் பரவாயில்லை. “பொன்மகள்” ரீமிக்ஸ் தொடங்கும் முன்னர் தியேட்டரில் அவ்வளவு அப்ளாஸ். பிண்ணனி இசையை ரஹ்மானின் எந்த அஸிஸ்டெண்ட் போட்டார்??

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர முயற்சிக்கிறவர் விஜய். குறிப்பாக குழந்தைகள். படத்திலும் அது நன்றாக தெரிகிறது. அந்த குட்டி பெண் எபிஸோட் க்யூட். பின்னர் எதற்கு “தமிழ்நாட்டு மன்மதனே வாராய்” போன்ற முகஸ்துதிகளும், ஹவுஸ் ஓனர் ஷகிலாவும்?

இயக்குனர் பரதனுக்கு முதல் படம். இவரின் குரு “கில்லி” தரணி. தீபாவளி மெகா ரிலீஸ், அதுவும் விஜயை வைத்து… பின்னி பெடலெடுத்திருக்க வேண்டாமா?? முதல் படமென்பதால் என்னவோ பட்டாம்பூச்சி, எறும்புக்கெல்லாம் ஸீன் வைத்திருக்கிறார். டையலாக் குடுக்காத வரைக்கும் சந்தோஷம்.

முதல் பாதி அநியாயத்துக்கு நீளம். ஏற்கனவே மூச்சு முட்டி ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாம் பாதி க்ளைமாக்ஸில் பொத்தென கீழே விழுகிறது. இந்த வருடத்தின் மிக மோசமான க்ளைமாக்ஸ்.

விஜய் ரசிகர்களை பாதி கவர்ந்து, விஜய் ரசிகரல்லாதவரை பாதி கவர்ந்து.. தீபாவளி ரேஸில் ‘பொல்லாதவனை’ வெல்லாதவன், அழகிய தமிழ் மகன்! ;)

Written by aravind

நவம்பர் 25, 2007 இல் 5:10 மு.பகல்

தீதும் நன்றும்

3 மறுமொழிகளுடன்

3.

 

2.

 

1.

 

0.

 

“On air” என்று விக்ரம் சைகையில் சொன்னான்.

 

குரல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள் மாலினி. மாலினி ஐயர்.  

 

விக்ரம் உற்சாகமில்லாமல் இருப்பது போல் தோன்றியது. அவளும் அப்படி தானே இருக்கிறாள். உற்சாகம் தொலைந்து பல நாட்களாகி விட்டது. இது இன்னுமொரு நாள். அவ்வளவே.

 

“வணக்கம். இது மாலினி ஐயர். தற்போதைய முக்கிய செய்திகள்..”

 

இன்னும் எத்தனை நாள் இந்த தொலைக்காட்சியில் இருக்கப்போகிறோமென நினைத்துக்கொண்டாள். வேலைக்கு வர வெறுப்பாய் இருந்தது.

 

“தமிழக அமைச்சரவை பரப்பரப்பான சூழ்நிலையில் இன்று.”

 

இன்று காலை கூட ப்ரவீண் ஆறுதல் சொன்னான். இதில் என் தவறு எதுவும் இல்லை என்பது அவனது வாதம். நல்ல குரல் வளம், நாட்டு நடப்பில் ஆர்வம், பொது அறிவு, அரசியல் ஆட்டத்தின் நுணுக்கங்கள் எல்லாம் அவளிடம் இருக்கிறது. பார்ப்பவர்கள் கவனம் சிதறாமல் செய்திகளை கேட்கும் அளவுக்கு அவள் அமைதியான அழகு தான். இருந்தும்

 

“தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில் தலை தூக்கியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்.”

 

இருந்தும் அவள் இங்கு வெற்றிப்பெறவில்லை. ஏன் இப்படி

 

மாத்யூ அறைக்குள் வருவது தெரிந்தது. செய்தி வாசிப்பில் கவனம் செலுத்தினாள் மாலினி. மாத்யூ ஏற்கனவே அவள் மேல் குறை சொல்லிக்கொண்டிருந்தான். இவள் செய்தி வாசிக்கும் அன்று அமைச்சரவை கூடி ஒழுங்காக நடக்கிறது. இந்தியா போட்டியில் தோற்றுப்போகிறது. உலகம் எப்போதும் போலிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் கூட ஏதும் அறிக்கைவிடுவதுவில்லை. அது இவளின் தவறா? பரப்பரப்பான செய்திகளை இவளே உருவாக்க முடியுமா என்ன??

 

“கோலிவுட்டின் முக்கிய நிகழ்வுகளுடன் அஞ்சனா தயாராக இருக்கிறார் ஓவர் டூ

 

ச்சே! மாலினி வெறுப்புடன் வெளியே வந்தாள். அஞ்சனாவிற்கு கூட சிவாஜி படம் வெளிவந்த போது ஒரு வாய்ப்பு கிடைத்தது. சரியாக பயன்படுத்திக்கொண்டாள்.

 

“மைல்ட் காஃபி ஒண்ணு” யாரும் இல்லை கேஃபிடேரியாவில்.

 

பிரவீணுடன் திருமணமாகி ஓராண்டு கழிந்துவிட்டது. இந்த வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. ஏதாவது சவாலாக செய்ய வேண்டும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பிரவீண் கூட அடிக்கடி

 

என்ன அது???

 

சில ஆங்கிலப்படங்களின் துவக்க காட்சிகளில் அவள் குழம்பிவிடுவாள். காட்சிகள் விரைந்து கண்முன் ஓடுமே தவிர ஒன்றும் புரியாது. அது போல இருந்தது கண்ணாடி வழியே நியூஸ் எடிட்டிங் அறையைப் பார்க்க.

 

கண்டபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். விக்ரம் வேறு தொலைபேசியில் பேசியபடி எதையோ எழுதிக்கொண்டிருந்தான்.

 

காஃபி கோப்பையை வைக்க திரும்பிய போது, மாத்யூ அவசரமாக வந்தான்.

 

“மாலினி. அர்ஜ்ண்ட். கோ ஆன் ஏர். சீக்கிரம். சீக்கிரம் ஐ சே”

 

        ********************************

 

“மேடம்.. எனக்கு பகல் நிலவு படத்துலேர்ந்து ‘பூமாலையே தோள் சேரவா’ பாட்டு போடுங்களேன்

 

கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்த தேவி தொலைக்காட்சியை திரும்பிப் பார்த்தாள்.

 

“இன்னும் கிளம்பலையா நீ அம்மா.

 

அந்தப் பாடலை கேட்க கேட்க எரிச்சலாக வந்தது. இந்தப் பாடலை ரிகார்ட் செய்ய கடைக்குச் சென்ற போது தான் ரவியைப் பார்த்தாள்.

 

“இந்தப் பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா?” இது தான் அவன் அவளிடம் பேசிய முதல் வார்த்தை.

 

“தேவீ. கோவிலுக்குப் போறியா இல்லையா?” அம்மா அடுத்த அறையிலிருந்து கத்தினாள்.

 

இப்போது அவனை தான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாள் என்ன செய்வாளோ.

 

“போறேம்மா

 

ஒரேடியாக போய்விடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே இரண்டு பெண்களை ஏமாற்றியிருக்கிறான். இவள் தன்னை இழப்பதற்கு முன் சுதாரித்துக்கொண்டாள். அவன் எண்ணம் நிறைவேறாது என்று தெரிந்ததும் விலகிடுவான் என்று நினைத்தாள். ஆனால்.

 

அவன் சொன்னது எல்லாம் பொய். செய்துகொண்டிருப்பதாய் சொன்ன வேலை பொய். காதலிப்பதாய் சொன்னது பொய். இப்படியே போனால் திருமணம் அவனுக்கு நடக்காது என்பதால்  எப்படியாவது அவளை மணக்க முயல்கிறான். அதற்கு அவன் கிளப்பப் போகும் புரளி, அவன் குழந்தையை அவள் சுமக்கிறாள் என்பது தான்.

 

ஏற்கனவே அவன் ஒரு பெண்ணை அவன் ஏமாற்றியது ஊருக்கே அரசல் புரசலாக தெரிந்தபோது தான் இவளுக்கும் தெரிந்தது. அப்போது தான் அவனிடமிருந்து விலகினாள். இப்போது இவளையும் ஏமாற்றினான் என்று அவன் பொய் சொன்னால் கூட ஊரார் நம்பக்கூடும்.

 

கோவிலில் காத்துக்கொண்டிருப்பான்.

 

போன வாரமே ஊருக்கு வெளியே வரவழைத்தான். போகவில்லை. இன்றும் அவனைப் பார்க்கவில்லை என்றால், அவன் பிரச்சினை செய்யத் தொடங்குவான்.

 

இரவெல்லம் யோசித்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவனிடம் தன்னை இழக்கவில்லை என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்?

 

கடிகாரம் கவலையேதுமின்றி ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கான கெடுவை குறைத்துகொண்டேயிருந்தது.

 

 

யாருடைய உதவியைக் கேட்பது. அப்பாவுக்கு ஏற்கனவே அவள் மேல் நம்பிக்கை கிடையாது. அம்மாவுக்கு பயப்படுவதை தவிர எதுவும் தெரியாது.

 

சொல்லிப்பார்க்கலாம் என்று தோன்றியது. அம்மாவையும் அழைத்துச் சென்று அவனை கண்டிக்கலாமா. எதுவும் பிடிபடவில்லை.

 

“அம்மா..”

 

“இன்னும் போகலயா நீ நேரம் ஆகுதுடி.”

 

“உன்கிட்டே

 

அதற்குள் பக்கத்து வீட்டு சிறுவன் ராமுவின் அழுகை சத்தம் கேட்டது. சாதாரண அழுகை இல்லை. மிதமான அலறல்.

 

தேவி அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தாள். ராமுவின் சட்டையெங்கும் ரத்தக்கறை. தேம்புவதும் உளறுவதும் மூச்சு வாங்குவதுமாய் இருந்தான்.

 

“அங்க அங்க” அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

தொடரும்…. 

Written by aravind

நவம்பர் 20, 2007 இல் 4:54 பிற்பகல்

கதை, சிறுகதை, தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

ஹி ஹி

7 மறுமொழிகளுடன்

நம்ம வாழ்க்கையில் பண்ண தப்பெல்லாம் அப்பப்ப நினச்சு பாக்கணும்…. ஏன்னு அப்புறம் சொல்றேன்…. இப்போ முதல்ல ஃப்ளாஷ்பேக் கேளுங்க!

 

பத்து வருஷத்துக்கு முன்னாடி…. நான் ஏழாவது படிச்சிட்டிருக்கப்போ….. எனக்குள்ள ஒரு கவிஞன் இருக்கிறத கண்டுபிடிச்சேன்!!…. லட்டு பத்தி தான் நான் முதல் முதல்ல கவித எழுதினேன்…. அதுக்கப்புறம் தோசையப் பத்தி… அத படிச்சுட்டு என் அக்கா ரெண்டு பேரும் புல்லரிச்சு போய்டாங்க…. அவங்க தோழிகள் கிட்ட காமிச்சு புகழ்ந்ததால திடீர் ஸ்டார் ஆய்ட்டேன்….

 

 

ஆனா ஏனோ, எனக்குள்ள இருந்த கவிஞன் லீவ்ல போய்ட்டான்… ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல…. நாலு வருஷம்….. பதினொன்னாவது படிக்கற போது நான் ஒரு முடிவு பண்ணேன்…. போன வருஷம் விழுந்து விழுந்து படிச்சேன்… அடுத்த வருஷமும் விழுந்து விழுந்து படிக்கணும்… அதனால இந்த வருஷம் படிக்கவே கூடாது!! சரி ஓகே…. ஆனா என்ன பண்றது?? அப்போ தான் எனக்குள்ள இருந்த கவிஞன் முழிச்சிக்கிட்டான்….

 

தினம் தினம் கவிதை எழுதினேன்…. க்ளாஸ்ல எல்லோருக்கும் காமிப்பேன்… எல்லோரும் மிரண்டுட்டாங்க… அடடா… அற்புதம்… பிரமாதம்… பின்னிப் பெடலெடுக்கிறான் பையன்… அப்படினு எல்லோரும் பாராட்டினாங்க….

 

முத்திப் போய் ஒரு நாள் சாயந்திரம்…. என்ன நானே வைரமுத்துவா கற்பனை பண்ணிகிட்டு மாடிக்கு போனேன்…. வானம் இருந்தது…. ஏன் வானத்த பத்தி ஒரு கவிதை எழுதக்கூடாதுன்னு யோசிச்சேன்…. உடனே கவித கவித…..

 

அதுக்கு முன்னாடி…..”ட்றொய்ங்ங்ங்…” அப்படினா என்ன தெரியுமா?? தெரிஞ்சுக்குங்க…. நம்ம சிவாஜி நடிச்ச திருவிளையாடல் படத்துல ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீன் போகும் போது ஒரு சவுண்ட் குடுப்பாங்கல்ல…. அதான் “ட்றொய்ங்ங்ங்…” ஓகே??

 

 

நான்: (உணர்ச்சிவசப்பட்டு….) ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் வானமே!!

 

வானம் திடுக்கிட்டு: என்னடா??

 

நான்: (கவித மாதிரி படிங்க….)

 

இந்தியப்பெண் கூட ஒரு நாளைக்கு

இரு சேலை தான் அணிவாள்!!

ஆனால் நீயோ??

 

வானம்: என்னடா பினாத்துற??

 

 

நான்: நல்ல பகலில் நீலச்சேலை

 

ட்றொய்ங்ங்ங்…

cloud5.jpg


 

நான்: மாலையிலே மஞ்சள் சேலை

 

ட்றொய்ங்ங்ங்…

 nature16.jpg


 

 

 

 

 

 

 

நான்: போகப் போக சிவப்புச்சேலை

 

ட்றொய்ங்ங்ங்…

 

nature17.jpg

 

நான்: இரவினிலே கருப்புச்சேலை

 

ட்றொய்ங்ங்ங்…

moon.jpg

 

 

நான்: இதெல்லாம் அணிகிறாயே?? உன் கணவன் என்ன செல்வச் சீமானோ??

 

வானம் : தூ!

 

எனக்குள் இருக்கும் கவிஞன் : வானம் துப்பியது! மழை!!

 

வானம் அப்புறம் ஒண்ணும் பேசல.

 

 

இப்படி ஒரு கவித எழுதி எல்லாருக்கும் காமிச்சேன்…. எல்லோரும் அழுதுட்டாங்க….

 

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா……

 

கருத்து :

 

1) நாம வாழ்க்கையிலே தப்பு பண்ணனும். அப்ப தான் ஏதாச்சும் கத்துக்க முடியும்.

 

2) நம்ம பண்ற தப்பு எப்படி இருக்கணும்னா, அத இப்போ நினைச்சு பாத்தா சிரிப்பு வரணும். அந்த மாதிரி தப்பு மட்டும் பண்ணனும்.

 

3) கூடுமானவரைக்கும் வானம் பூமி எல்லாம் இழுக்காதீங்க. :P

 

கொசுறு : ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் வெச்சீங்கனா, என்னோட கடந்த கால கவிதைகள இங்க அள்ளி விடறேன்!

 

Written by aravind

நவம்பர் 17, 2007 இல் 2:06 பிற்பகல்

கவிதை, பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,