சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for மே 2007

என் தூரம் கடப்பேனே…..

8 மறுமொழிகளுடன்

dhooram

எனது பத்தாவது வயதில் என் அப்பா இறந்துப் போனார். அவரின் கல்லறையை அவரின் சொந்த ஊரில் கட்டினார்கள். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நான்கைந்து கி.மீ. தொலைவில் இருந்தது அந்த இடம். அந்த ஊருக்குப் பேருந்துகள் கிடையாது. என்னிடம் அப்போது மிதிவண்டியும் இல்லை. பல நாட்கள் கல்லறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தப்போதெல்லாம் நான் கடக்க வேண்டிய அந்த தூரம் என் முன்னால் சவால் விட்டபடி நீண்டுக் கொள்ளும்.

என்னை சங்கடப்படுத்திய முதல் தூரம் அது தான்.

நாம் யாருமே தூரத்தை தூரமாக பார்ப்பதேயில்லை. நாம் கடக்க வேண்டிய ஒவ்வொரு தூரத்தோடும் நான் ஏதோ ஒரு பாவனையை தொடர்புப்படுத்திக்கொள்கிறோம். சில தூரங்கள் பயமுறுத்துபவையாக இருக்கும். சில தூரங்கள் வெறுப்பை நம் மேல் உமிழும். காதலியோடு நாம் கடக்கும் தூரங்கள் தானாக சுருங்கிக்கொள்கின்றன. வெயிலில் நாம் கடக்கும் சிறு தூரம் கூட பெரிய வேர்வை ஆறாக தோன்றும்.

அப்படித்தான் நானும் தூரங்களை பாவித்துக்கொண்டிருந்தேன்.

என் நினைவிலிருக்கும் முதல் தூரம் நான் நான்காவது வரை படித்த என் ஊர் பள்ளியை அடைய கடந்த தூரம். நான் தனியாக பள்ளிக்கு செல்ல தொடங்கிய போது என் அம்மா எனக்காக பள்ளிக்கு செல்லும் இரு பாதைகளை ஆராய்ந்தாள். ஒன்று கடைத்தெரு. அதை பாதுகாப்பற்றதாக நிராகரித்து விட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இன்னொரு வழியில் செல்ல என்னை பழக்கினாள். வழியெல்லாம் புங்க மரங்களின் நிழல்கள் சிதறிக் கிடக்கும் அந்த பாதையை ஒட்டி ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்க்க என்றுமே நான் என்றுமே முயன்றதில்லை. ஆனால் அந்த பாதையின் அமைதி ஆறு போல என்னுடன் வந்துபோகும். நாள் போகப் போக பள்ளி வகுப்பில் பூணும் அமைதியை நான் அந்த பாதையில் கால் வைத்ததுமே அணிந்துகொண்டேன்.

பின்னர் சுமார் முப்பது கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு பள்ளியில் என்னை சேர்த்தார்கள். முதலில் அந்த தூரம் பாகற்காயின் கசப்பைத் தந்தது. தூரம் முழுக்க வெறுப்பு நிரம்பியிருந்தது. ஆனால் நண்பர்கள் கிடைத்ததும் அந்த தூரம் வேறொரு அவதாரம் எடுத்தது. புழுதி பறக்கும் ஏதேதோ கிராமங்களின் சாலைகளில் சுற்றி சுற்றி செல்லும் அந்த தூரம் முழுக்க வேடிக்கையும் விளையாட்டுமாக மாறிப்போனது. வித விதமான விளையாட்டுக்கள் விளையாடினோம். பேருந்து கம்பிகளை பிடிக்காமல் அதே சமயம் விழாமல் நின்று விளையாடும் விளையாட்டின் போதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் அந்த தூரம் எங்கள் காலடியில் நழுவிக்கொண்டிருந்தது. பள்ளி செல்லும் முக்கிய காரணமாகவே அந்த தூரம் மாறிப்போனது. இப்போதும் ஊருக்கு செல்லும் போது அந்த தூரத்தை நான் கடக்கும் போதெல்லம் என் ஞாபகங்களை கூழாங்கற்களாக்கி கீழே இட்டபடி செல்கிறேன்.

நினைத்த மாத்திரத்தில் என்னை நோய்வாய்ப்படுத்தும் தூரம் ஒன்றும் இருந்தது. திருப்பதி மலையை சுற்றி சுற்றி ஏறிச் செல்லும் தூரம் அது. சிறு வயதில் அடிக்கடி அதை கடப்பேன். மலையின் ஒவ்வொரு சுற்றுக்கும் வண்டியை நிறுத்தி வயற்றில் இருப்பதை வாயில் எடுப்பேன். இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டு இன்னும் அத்தனை தூரம் நோயை நானே எனக்குள் தேக்கிக்கொண்டேன் என்று நினைக்கிறேன். வண்டியை ஓட்டுபவர் மலையை அடைந்து விட்டதாக சொன்ன அடுத்த நொடி எனக்கு எல்லாம் சரியாகி விடும். நான் கடந்த அந்த தூரத்தை பார்த்து சிரித்துக்கொள்வேன்.

அதே திருப்பதி மலையில் தான் நான் தூரத்தின் பிரம்மாண்டத்தை கண்டுகொண்டேன். ஒரு முறை என் அண்ணன் ஒருவர் ஏதோ வேண்டுதலுக்காக மலையை நடந்தே ஏற ஆயுத்தமாக, நானும் அவருடன் சேர்ந்துகொண்டேன். ஒரு மலையை நடந்தே கடக்க முடியும் என்ற நினைப்பே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தொடங்கியபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை படிகளாக இருந்தன. என் அண்ணன் மெதுவாக ஒவ்வொரு படியாக அதுவும்  அகலாமான அந்த படிகளில் இந்த ஓரம் தொடங்கி அந்த ஓரம் வரை குறுக்குவாக்காக நடந்து கொண்டிருந்தார். நானோ தாவி தாவி ஓடிக்கொண்டிருந்தேன், மலையின் உச்சியை துரத்துவது போல. ஒரு கட்டத்தில் மூச்சிரைக்க அமர்ந்துவிட அண்ணன் அதே பொறுமையுடன் நடந்து என்னை கடந்து சென்றார். பின்னர் ஒவ்வொரு முறையும் படிகள் முடியும் போது மலையை அடைந்து விட்டதாக நினைத்துக்கொள்வேன். ஆனால் அந்த தூரம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. தூரங்களை கடக்கத் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் நான் அங்கு கண்டுகொண்டேன்.

மிதிவண்டி வாங்கியபின் நான் தூரங்களோடு விளையாடத் தொடங்கினேன். மிதிவண்டி ஓட்டும் சுகத்தை நீட்டித்துக்கொள்ள எந்த இடத்துக்கு செல்வதாயினும் மிகவும் தொலைவான பாதையையே தேர்ந்தெடுப்பேன். பின்னர் அந்த சுகம் வடிந்த பின் எல்லா தூரங்களும் சுருங்கிவிட்டது.

பத்தாவது படிக்கும் தருவாயில் முதன் முதலாக நான் பள்ளிக்கு செல்லாமல் வெளியே செல்ல முற்பட்டேன். நகரத்துக்கு சென்று கடலை காண புறப்பட்டுவிட்டேன். நாற்பது கிலோமிட்டரை விழுங்கும் தூரம். அந்த தூரத்தை கடக்கும் முழு நேரமும் நான் பின் திரும்பி பார்த்துக்கொண்டேயிருந்தேன். என் பின்னால் இருக்கும் நான் கடந்த தூரம் மலைப்பாம்பு போல அந்த பக்கமும் நீண்டுக்கொண்டே செல்வது போல ஒரு பிரம்மை. ஏதேதோ கேள்விகளும் சங்கடங்களும் அந்த தூரம் முழுக்க அணிவகுக்க அதற்குப்பின் நான் வீட்டில் சொல்லாமல் எங்கும் செல்வதேயில்லை.

ஒவ்வொருவரும் ஒரே தூரத்தை வேறு வேறாக பார்க்கிறோம். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் சாலையில் பார்வையற்ற ஒரு முதியவர் என்னை ஒரு இடத்துக்கு அழைத்து செல்லுமாறு கேட்டார். சினிமாவில் மட்டுமே நான் பார்வையற்றவர்களையும் அவர்களுக்கு உதவும் நல்லிதையங்களையும் பார்த்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கூச்சத்தோடு அவர் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்றேன். இப்போது யோசித்தால், அந்த தூரம் எனக்கு கூச்சத்தையும் அவருக்கு வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு பாதுகாப்புணர்வையும் தந்திருக்கிறது. இல்லையா?

இப்படி எண்ணற்ற தூரங்கள்…. என் அக்காவின் தோழியின் வீட்டுக்கு அவளை அழைத்து செல்லும் போதெல்லாம், விளக்குளற்ற அந்த சாலையில் விளக்கு இருக்கும் இடம் வரை நானும் அக்காவும் கண்ணை மூடிக்கொண்டு ஓடியிருக்கிறோம். அந்த தூரம் பயத்தின் ஒரு பரிமாணமாகத்தான் தோன்றுகிறது.

எத்தனையோ பரிமாணத்தை தூரங்கள் கொண்டிருந்தாலும், நமக்கு சவால் விடும் தொலைவுகள் தான் நம்மை வெற்றியின் பாதையில் சேர்க்கும். மிதிவண்டி வாங்கியவுடன், நான் முதலில் அப்பாவின் கல்லறைக்கு சென்றேன். வேகமாக. அந்த தூரத்தை என் மிதிவண்டியின் அடியில் போட்டு மிதிப்பது போல ஓட்டிச்சென்றேன். அன்று எதையோ வென்றுவிட்டதாக தோன்றியது.

இப்போது இருபது வயதை தாண்டியபின் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன் நான் வெகு தூரம் வந்திருக்கிறேன் என்று. இது மனதால் கடந்த தூரம். எல்லா தூரங்களுமே என்னை ஒரு ஞாபகச்சுழலில் தள்ளுகின்றன. இப்போது சிறு வயதில் நான் கடந்தவை எல்லாம் நினைவுகளாக எஞ்சிப்போயிருக்க, தினமும் புதிதாக தூரங்கள் பிறந்தபடி இருக்கின்றன. அவை எதுவுமே நான் நடந்தோ ஓடியோ கடக்க இயலாதவை. கண்ணால் பார்க்க இயலாதவை. நாளும் அதை கடக்கிறேன். வாழ்க்கையே பலவிதமான தூரங்கள் கொண்ட பயணம் தானே!

Written by aravind

மே 13, 2007 இல் 5:43 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது