சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஏப்ரல் 2007

உன்னாலே உன்னாலே

4 மறுமொழிகளுடன்

Unnalae Unnalae

 

 

யாரோ ஒருவரை பார்க்கிறீர்கள். Love at first sight. காதல் பலிக்கிறது. ஆனால் பின்னால் தான் தெரிகிறது அவர் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர் என்று. என்ன செய்வீர்கள்?

ஜீவா இந்த knot எடுத்துக்கொண்டிருக்கிறார். Love at first sight கொண்டாடும் தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதுசு! Good!

கார்த்திக்(வினய்) happy go lucky ஆசாமி. காதலில் கூட சீரியஸ்னஸ் இல்லாதவர். extrovert. ஜான்சி(சதா) introvert. well focussed. இருவரும் காதலில் விழுகிறார்கள். ஜான்சி தனக்கேற்றார் போல கார்த்திக்கை மாற்ற முயற்சிக்கிறார். பிரச்சினை துவங்குகிறது. பிரிகிறார்கள். ஆஸ்த்ரேலியாவில் மீண்டும் சந்திக்கிறார்கள். இருவருக்கும் நடுவே கார்த்திக்கை எந்த மாற்றங்களும் இல்லாமல் அவர் இருக்கிற வண்ணம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் தீபிகா(தனிஷா). simple climax!

 

பிரமாதமான script கையில் எடுத்திருக்கிறார் ஜீவா. ஆனால் அதை காட்சிப்படுத்திய விதம் கொஞ்சம் ஏமாற்றமாயிருக்கிறது. முக்கிய காட்சிகளில் போதுமான அழுத்தமில்லை. முன்பாதியில் காதலர்களின் பிரச்சினையை விளக்க வைத்த காட்சிகளை விட காமெடி காட்சிகள் தான் மனசில் நிற்கின்றன. இதனாலேயே சதாவின் கதாபாத்திரம் எப்போதும் சண்டை போடுகிற லூசு போல தோன்றுவது துரதிர்ஷ்டம். என்னப்பா சண்டைப்போட்டுட்டே இருக்காங்க என்று சலிபாய் இருக்கிறது. ஜீவா கவனித்திருக்கலாம்.

காதலர்கள் பிரிவதில் படத்தை துவக்குவது பளிச் ஐடியா. Man vs Woman என்ற கண்ணோட்டத்தில் தான் எல்லா முன்பாதி காட்சிகளும்! கிட்டத்தட்ட தியேட்டரிலும் அதே தான். ஆண்களை காலும் வாரும் போது தியேட்டரில் பெண்கள் கை தட்டுவதும், பெண்களை கலாய்க்கும் போது தியேட்டரில் ஆண்கள் விசிலடிப்பதுமாக முன் பாதி ஜோர்!

ஆனால் படத்தின் முக்கிய குறையும் அதே தான். படம் நெடுக hasty generalisations! ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை படத்தில் யாராவது ஒருவர்எல்லா பொண்ணுங்களும்…” “எல்லா பையன்களும்…” என்று டையலாக் அடிக்கிறார்கள். Over dose!

முதல் பாதி முழுக்க கலாட்டாவுக்கு சதாவும் ராஜீ சுந்தரமும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அம்மாஞ்சி முகத்துடன் ராஜூ அசத்தியிருக்கிறார்.

வினய்க்கு இது முதல் படம். அதனால் டான்ஸ் தெரியாததை கூட மன்னித்துவிடலாம். ஆனால் dialogue delivery நிச்சயம் கவனிக்க வேண்டும். வாயை நேராக வைத்து டையலாக் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்!

தமிழுக்கு வந்திருக்கிறார் கஜோலின் தங்கை தனிஷா. இவர் அறிமுகமாகிற காட்சியே அட்டகாசம். முதல் காட்சியில் பேசத் தொடங்கி கடைசிவரை நிறுத்தவே இல்லை. தமிழ் தெரியாமலே சமாளித்திருக்கிறார். Good show! ஆனால் பாதி மார்க் டப்பிங் கொடுத்த பாடகி சின்மயிக்குத்தான்!

சதா தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம். மனதை எப்போதும் பூட்டிவைத்துக்கொள்கிற, எல்லாவற்றிலும் perfectionயையும் உண்மையையும் எதிர்பார்க்கிற, சண்டைக்கோழி கதாபாத்திரம். இப்போதாவது ஒரு நல்ல ரோல் கொடுத்தார்களே என்ற சந்தோஷத்தில் கலக்கியிருக்கிறார். பின் பாதியில் subtle expressions அழகு. ஆளும் செம அழகாக இருக்கிறார். climaxல் அந்த கதாபாத்திரத்தின் தெளிவையும் practical முடிவையும் அழகாக முன்வைக்கிறார். வாழ்த்துக்கள்! cat walk நடையை மட்டும் கொஞ்சம் relax செய்துக்கொள்ளலாம்.

கோடை வெயிலுக்கு படம் குளு குளுவென இருக்கிறது. ஜீவாவின் காமிரா அத்தனை அழகு. படத்தில் காஸ்ட்யூமுக்கும் முக்கிய ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காஸ்ட்யூமை வைத்தே define செய்திருக்கிறார்கள். எழுத்தாளர் ராமக்கிருஷ்னனின் வசனங்கள் சில இடங்களில் பளிச்!

ராஜா ரஹ்மானுக்கு பிறகு ஹாரிஸ் தான் போல. Album of the year! பிண்ணணி இசையிலும் நல்ல ரசனையும் முன்னேற்றமும் தெரிகிறது. பாடல்களை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். வைகாசி நிலவே பாடலில் எதற்கு அத்தனை மெனக்கெடலும் Build-upம்??

தொடர்ந்து அழகான பெண் கதாபாத்திரங்களை பின்ன ஜீவா முயற்சிப்பது போல தெரிகிறது. 12B சிம்ரன் ,உள்ளம் கேட்குமே லைலாவை தொடர்ந்து இதில் சதா.

படம் ரொம்பவே இயல்பாகவும் இருக்கிறது. காதலில் விழுவதும், பிரிவதும் இவ்வளவு no-nense டைப்பாக இதுவரை யாரும் காட்டவேயில்லை. climaxல் இயக்குனர் குரல் ஒலிப்பதெல்லாம் இத்துப்போன technique!

அரிவாள் இல்லாமல் படம் எடுத்ததற்க்கே ஜீவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். kal ho na ho, dil chahtha hai டைப் feel good படம் எடுக்க முயன்றிருக்கிறார் ஜீவா. முழு திருப்தி இல்லையென்றாலும் பாராட்டலாம்!

 

Written by aravind

ஏப்ரல் 22, 2007 இல் 6:38 மு.பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

மழைக்குப்பின் வெயில் – சில குறிப்புகள்

5 மறுமொழிகளுடன்

Mazhaikkupin Veyil

 

கவித்தூரிகை 8

மழை சேர்த்த நீர் எதுவென
இன்றேனும் அறியும்பொருட்டு
அவசரமாக கடற்பரப்பில்
சிதறத்தொடங்கியது சூரியன்.

தெருவில் நடந்து சென்ற மழை
பள்ளங்களில் விட்டுச்சென்ற
ஈர கால்தடங்களை
அழிக்கத்துவங்கியது வெயில்.

ஜன்னல் கம்பிகளில் மழை
சிதறவிட்டிருந்த முத்துக்களை
கோர்க்க முயன்றது
வெயிலின் நூல்.

முற்றத்தின் தரையில் இருந்த
நடுக்கம் போன்ற
விரிசல்களை மழையிட்டு
தைத்தது வெயில்.

உலர்ந்தபின்னும் கருணையுடன்
பெற்றுக்கொண்ட மழையின் ரகசியங்களை
வெயிலுக்கு சொல்ல ஆரம்பித்தது
கொடியில் கிடந்த சட்டை.

Written by aravind

ஏப்ரல் 20, 2007 இல் 6:50 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

மேகம் பார்த்தல்

3 மறுமொழிகளுடன்

First

சொல்லிப்பார்க்கவே அத்தனை அழகாக இருக்கிறது. மேகம் பார்த்தல்.

மேகத்தை எனக்கு எப்படியுமே விவரிக்கத்தெரியவில்லை. நகர்ந்துகொண்டேயிருக்கிற ஆச்சரியம் போல இருக்கிறது அது.

“பூவானில் பொன்மேகமும் உன் போலே நாளெல்லாம் விளையாடும்…” …கண்ணதாசனின் இந்த வரி தான் முதன் முதலில் என்னை மேகத்தைப் பற்றி சிந்திக்க வைத்திருக்க வேண்டும்.

நாம் ஒரு நாளில் எத்தனை முறை வானத்தைப் பார்க்கிறோம்? பல நாட்கள் பார்ப்பதே இல்லை. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் மேகங்கள் விளையாடிக்கொண்டேயிருக்கின்றன. ரசிகர்கள் பார்க்காவிட்டாலும் நடக்கின்ற வானத்தின் நாடகம் போல.

மேகங்கள் சில சமயம் பூதாகரமாக இருக்கின்றன. பெரிய பெரியதாக வானத்தையே ஆக்கிரமிக்கன்றன. சில சமயம் ஒரு பெரிய மேகத்தை நறுக்கி தூவினாற் போல, மீன் கூட்டம் போல, வானம் முழுக்க சிறு சிறு மேகங்கள் மிதந்துக்கொண்டிருக்கும்.

பெரிய மேகங்கள் தான் நிறைய பேருக்கு பிடிக்கிறது. அது உருவம் மாறிக்கொண்டேயிருப்பதாலோ என்னவோ. மனதில் உள்ள எண்ணத்திற்கு ஏற்ப நமக்கு அதில் ஓர் உருவம் புலப்படும் என்று சொல்லுவார்கள். நான் இப்போதெல்லாம் அடிக்கடி பார்த்துக்கொள்கிறேன். பெரும்பாலும் மீன் தான் தெரிகிறது எனக்கு.

ஒரு இரவு, நல்ல காற்று வீசிக்கொண்டிருந்த போது நண்பர்களோடு சேர்ந்து நடந்துகொண்டிருந்தேன். அப்போது வானத்தில் ஓர் ஓவியம் போல அழகானதொரு மேகத்துண்டு இருந்தது. அதைக்காட்டி ஒவ்வொருவருக்கும் என்ன தோன்றுகிறது என்று கேட்டேன். முதலில் கேலி செய்தாலும், பின்னர் எல்லோரும் சொன்னார்கள். அன்று அவர்களின் மனநிலைக்கேற்றாற் போல மேகம் அவர்களுக்கு ஏதோ ஒன்றாய் தோன்றியது. அன்று காதலைப்பற்றியே காலை முதல் பேசிக்கொண்டிருந்தவனுக்கு மேகத்தில் ஒரு தேவதை தெரிந்தாள். எனக்கு அன்றைக்கும் ஏதோ ஒரு மீன் தான் தெரிந்தது.

அப்படி மேகத்தில் என்ன தான் சித்தாந்தம் உள்ளது? ஓவியங்களை வரைந்தவர் அதன் அருகில் அமர்ந்து அதைப்பற்றி விளக்கிக்கொண்டிருப்பதில்லை. நாம் அதைப் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது ஓவியத்தின் புரிதல். மேகமும் இயற்கை தீட்டுகிற ஓவியம் தானே? வானம் என்ற பெரிய பலகையில் காற்றும் நீரும் சேர்ந்து வரைந்துகொண்டும் அழித்துக்கொண்டும் இருக்கின்றன.

Second

மெல்லிய மேகங்கள் பார்த்ததுண்டா? அவை மிதக்காமல் அப்படியே வானத்தோடு பொருந்தியிருக்கும். அவை திட்டமாக இருக்காது. ஏதோ ஒரு பெரிய யானை போன்றதொரு மேகம் கொஞ்சம் அழுந்தி நடந்து சென்றபோது விட்டுச்சென்ற தடயம் போல இருக்கும். உருவமெல்லாம் இருக்காது. தூரிகையைப் பரிசோதிக்க வரைந்த கோடுகள் போல இருக்கும். அவையே எனக்கு மிகவும் பிடிக்கும்.

அந்தி மேகங்களும் எனக்கு பிடிக்கும். அந்தி மேகங்களுக்கு ரசனை ரொம்ப அதிகம் போல. இளஞ்சிவப்பிலிருந்து இளம் ஊதா வரை, தங்களுக்கு பிடித்த ஒரு உடையைத் தேர்தெடுப்பது போல, அவையாக ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ளும். அன்றைய பணி முடிந்து செல்லும் சூரியனுக்கு விடை கொடுக்க வரிசை கட்டி நிற்கும்.

Third

மீன்கூட்ட மேகங்களின் அழகே அவற்றின் அவற்றின் ஒழுங்கின்மை தான். சிதறிய சில்லறைகள் போல. மெதுவாக நீந்திக்கொண்டே இருக்கும். வானம் ஒரு வேளை நிஜமாகவே நீலக்கடல் தானோ.

மேகம் பார்த்தலில் இன்னொரு சுவாரஸ்யம், மேகங்கள் காணாமல் போவது தான். உருவாவதும் அவை கலைவதும் கொஞ்சம் கூட ஆர்பாட்டமில்லாமல் நடக்கும். கலைவதும் தெரியாமல் உருவாதும் தெரியாமல் அவை அப்படி என்ன தான் மாயம் என்று தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென காணாமல் போய்விடும். அடுத்த காட்சிக்கான ஒப்பனைக்கு தயாராவது போல.

செஸ்டர்டனின் ஒரு quote ஒன்று உண்டு. There are no rules of architecture for a castle in the clouds. மேகங்கள் சுதந்திரத்தை மொத்தமாக குத்தகை எடுத்திருக்கின்றன. எந்த உருவத்தையும் எடுக்கலாம். தூங்காப் பறவைகள் போல எந்த திசையும் பறக்கலாம். எங்கு வேண்டுமானாலும் தேங்கலாம். உண்மையில் அவை எங்கோ போய்க்கொண்டிருக்கின்றன. மேகத்தை தூது விட்டவர்கள் தானே நம் காதலர்கள். காதலிக்கிறவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள். அழகானவைகளை சரியாக அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.சமீபத்தில் வெளிநாட்டில், ஒரு உயரமான கட்டிடத்திலிருந்தபடி மேகத்தை தொட்டுப்பார்த்தது ப்ற்றி எழுதியிருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதைப் படித்ததிலிருந்து என் யோசனை அடங்கவேயில்லை. அறுபத்தி மூன்றாவது மாடியில் நின்றபடி தொட்டுப்பார்த்தாராம். அருகிலிருந்து பார்த்தால் அவை எப்படியிருக்கும்?

மேகத்தை நாம் பார்க்கிறோம் என்பதை விட அவை நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது இன்னும் பொருத்தம். அவ்வளவு உயரத்தில், அவற்றின் கண்ணில் படாதது எதுவுமே இல்லை. கடவுளுக்கு எது எங்கு நடந்தாலும் உடனே தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஒரு வேளை மேகங்கள் தான் கடவுளின் உதவியாளரோ என்னவோ!

ஒவ்வொரு மேகமும் ஒரு கதை சொல்கிறது. பெரிய வெள்ளை மேகங்கள், உற்சாகமும் நம்பிக்கையும் தருவது போல தோன்றும். அந்தி மேகங்கள் நிச்சயம் உங்கள் காதலை விசாரிக்கும். எனக்கு அமைதியை தருவது மேலே நீங்கள் பார்த்த மெல்லிய மேகங்கள் தான். மேகங்களின் மொழி தெரிந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

சமீபத்தில் எங்கள் கல்லூரியில் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. ரொம்பவே உற்சாகமாக. ஆனால் அன்று ஒரு சின்ன பிரச்சினை காரணமாக அந்த விழாவை என்னாலும் என் நண்பர்களாலும் ரசிக்க முடியவில்லை. மொத்தக் கூட்டமும் ஆட்டம் பாட்டம் என குதூகலித்துக்கொண்டிருந்தது. எங்களால் அப்படி இருக்க முடியவில்லை. அந்த சப்தமும் ஆர்பரிப்பும் எரிச்சலூட்டுவதாக இருந்தது. எங்களுக்குள்ளும் பேசிக்கொள்ள சலிப்பாய் இருந்தது. மேடைக்கு அந்தப்பக்கம் இருந்த ஒரு காரின் மேல் ஏறி படுத்துக்கொண்டேன். இரவு நேர மேகங்கள் வானில் வந்து விட்டிருந்தது. எனக்கு பிடித்த மெல்லிய மேகங்கள். எனக்கு வேண்டிய அமைதி அங்கிருந்தது. சில நிமிடங்களிலேயே மனசு லேசாகி விட்டது.

ரொம்ப நேரமாக அதே மேகங்கள் தான் சூல் கொண்டிருந்தன. எனக்கு தேவையான அமைதி கிடைத்த விட்ட பின்னரும் கூட அவை அங்கேயே தான் இருந்தன. யாரோ இன்னும் அமைதியை வேண்டி எங்கோ அமர்ந்து பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.

Written by aravind

ஏப்ரல் 10, 2007 இல் 5:30 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது