Archive for மார்ச் 2007
நான் அவனில்லை!
எவன்யா கண்டுபிடிச்சான் இந்த மொபைல??
இந்த மார்ச் 13ம் தேதியோடு ஒரு வருஷம் ஆகிவிட்டது மொபைல் வாங்கி. அதற்குள் என்னை இப்படி புலம்பவைத்துவிட்டார்கள்.
சென்ற ஆண்டு மார்ச் 13ம் தேதி இரவு, மொபைலை கொண்டாட்டமாக வாங்கி, நண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் நம்பர் தந்து, அடுத்த நாள் என் முதல் மொபைல் அழைப்புக்காக காத்திருந்தேன். கல்லூரி வகுப்பு இடைவெளியில் வந்தது அந்த முதல் கால்.
“ஹலோ!” – கொஞ்சம் கெத்தாக நான்.
“ஹலோ! ரமேஷ் இருக்கானா?” – அந்த முனை.
“ரமேஷ்????” – கிலி, குழப்பம், மற்றும் ஏமாற்றமாக நான்.
“வேலைக்குப் போயிட்டானா?” – கொஞ்சம் கெத்தாக அந்த முனை.
“wrong number!” – கடுப்பாக நான்.
அவ்வளவு தான். அப்போது நினைத்துக்கொண்டேன். அட! என்னே நம் ராசி!!
இப்போது நான் மேலே புலம்புவதற்கு காரணம் மனோகர், அவரின் நண்பர்கள், எதிரிகள், கடன் கொடுத்தவர்கள், உற்றார் உறவினர் ஆகியோர். அது மட்டும் இல்லாமல் routine service என்று அழைக்கப்படும் ஒரு விசித்திரமானதொரு service.
என்ன? சுவாரசியமாக இருக்கிறதா?? இருக்கும் இருக்கும்!
என் பெயர் அரவிந்தன் மனோகரன். என் பெயரைத் தவிர எனக்கும் அந்த முகம் தெரியாத மனோகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சத்தியமாக!!
ஆனால் அந்த மகா புண்ணியவான் தன்னுடைய மொபைல் நம்பர் என, என் நம்பரை எல்லா இடத்திலும் தந்துவைத்திருக்கிறார். கவனக்குறைவாக என்று எனக்குத் தோணவில்லை!
அப்போது தொடங்கியது இந்த மனோகரின் நண்பர்கள் மற்றும் சொந்தங்களின் பாச மழை.
அவருக்கு ஒரு சித்தி இருக்கிறார். தமிழகத்தின் எதோ ஓர் மூலையில் உள்ள குக்கிராமத்தில் இருந்து பேசுகிறார் என்பது என் கணிப்பு. முதல் முறையே இவருக்கு தெள்ளத்தெளிவாக இது மனோகரின் நம்பர் அல்ல என்று புரியவைத்துவிட்டேன். இருந்தும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அழைத்து நலம் விசாரிக்கிறார். நான் மீண்டும் “நான் மனோகரில்லை” கதையை சொன்னவுடன் வைத்துவிடுவார். என்றாவது நம்முடைய மனோகர் பேசுவான் என்ற ஒரு விசித்திரமானதொரு நம்பிக்கையில் தொடர்ந்து பேசுகிறார். பாசக்கார சித்தி!
ஆனால் இந்த பாசப்போட்டியில் வெற்றி பெறுவது அவரின் நண்பர்கள் தான். நிறைய நண்பர்கள் அவருக்கு. மாற்றி மாற்றி அவர்கள் என்னை அழைக்கிறார்கள். நான் மனோகர் தான் என்றும், சும்மா அவர்களிடம் விளையாடுகிறேன் என்றும் பலர் நினைக்கிறார்கள். குறும்புக்காரர் போல அந்த மனோகர். விதி!!
இவர்களிடம் எனக்கு பிரச்சினையே, இவர்கள் அழைக்கிற நேரம் தான். அவரின் சித்தி, சேவல் கூவும் போதே எழுந்து விடுவார் போல. நான் சுகமாக கனவு காணும் போது அழைத்துத் தொலைக்கிறார். எடுத்த எடுப்பிலேயே உயிர் போகிற தொணியில், “ஏம்பா மனோகரே!!!” என்று ஒரு குரல் கொடுப்பார். தூக்கத்தின் பாதியில் எழுந்த எனக்கு தூக்கி வாரி போடும்.
அவரின் நண்பர்கள் பெரும்பாலும் மதிய நேரத்தில் அழைக்கிறார்கள். நான் பெரும்பாலும் தூங்கிவிடுவதால் என்னை பொறுப்பாக எழுப்பி விடுவார்கள். இல்லையென்றால் வாழ்க்கையே வெறுத்துப் போய் கணிணி முகப்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் பொன்னான தருணங்களில் என்னை அழைத்து இம்சித்து வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
இதெல்லாம் போதாது என்று அந்த மனோகர் என்கிற அன்பர் நுங்கம்பாக்கம் corporation ஆஃபிஸில் என் நம்பரை தன் நம்பர் என பெருமையாக கொடுத்துவிட்டார். தண்ணீர் வரி கட்டவில்லையோ வீட்டு வரி கட்டவில்லையோ என்னவோ, ஒரு மாதம் முழுக்க என்னை அழைத்து விசாரித்தார்கள். அந்த நற்பணியை தினமும் செய்த அந்த பெண்மணியிடம் நான் கதறிக் கதறி என் நிலைமையை சொல்ல, அவர் என் எண்ணை ஒரு சிகப்பு குறியிட்டு வைத்தார். அவரே சில நாட்களிலும், அவர் வராத நாட்களில் மற்றவர்களும் சிகப்பு குறியிட்டது ஏதோ முக்கியமான எண் போல என்று நினைத்து மீண்டும் மீண்டும் அழைத்தார்கள்.
இவர்களில் அடிக்கடி பேசுகிற ஒருவரிடம் (அநேகமாக மனோகரை ரொம்ப நாட்களாக பார்க்காத ஆருயிர் நண்பர் (அ) பல ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தவர்) (உபகுறிப்பு – குரல் எல்லாம் கண்டுபிடிக்கும் அளவுக்கு அவர்கள் எனக்கு நெருக்கமாக்கும்!!) முழுதாக இந்த கொடுமையாக சொன்னேன். அந்த மனோகரைப் பார்த்தால் இந்த முக்கியமான விஷயத்தை சொல்லுமாறும் ஏதேனும் அவசர நடவடிக்கை எடுத்து என்னை கரைசேர்க்குமாறும் வேண்டினேன். “அப்படியா sir?” “அப்படியா sir?” என்று கதைகேட்டுவிட்டு, தன் பணியைத்தொடர்ந்தார்.
அடுத்தாக இந்த routine service. மறுபடியும் சத்தியமாக எனக்கு அது என்னவென்று தெரியாது. routine என்றால் எவ்வளவு இடைவெளியில், என்ன service செய்கிறார்களோ யான் அறியேன். ஆனால் அவர்களுக்கு செல்ல வேண்டிய அழைப்புகள் என்னைத் தேடிவருகின்றன. இதற்கும் அந்த மனோகருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் பலமாக சந்தேகிக்கிறேன்.
எது எப்படியோ, இவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்.
“PLEASE! நான் அவனில்லை!!”.
நிறைவாக, அன்பிற்கும் பண்பிற்கும் மரியாதைக்கும் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய மனோகர் அவர்களே, எங்கிருந்தாலும் இதைப் படித்தால், என்னை காப்பாற்றவும். புண்ணியமாக போகும்!
காணாமல் போனவர்கள் 2
கவித்தூரிகை 7
காலத்தை மென்று தின்னும் துர்மரணம்
தினமும்
யாராவது யாருக்காவது
அடையாளம் காட்டியபடியிருக்கிறார்கள்
துர்மரணம் நிகழ்ந்த வீடுகளை.
அவர்கள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
அந்த மரணத்தின் கோரத்தைப்பற்றியும்
கடவுளின் கருணையின்மையைப்பற்றியும்.
அந்த வீடுகளை கடக்கையில்
எல்லோரும் அனிச்சையாக
அவசரப்படுகிறார்கள்.
அந்த வீடுகளின் சுவர்ப்பூச்சு
பெரும்பாலும்
மங்கிப்போய்த்தான் இருக்கின்றது.
விளக்குகள் இரவில்
தாமதமாகவே எரியவிடப்படுகின்றன.
அந்த வீடுகளின் முற்றம்
வாசல் திண்ணை அலமாரி
கிணறு அனைத்திலும்
தூசியோடு படிந்திருக்கிறது
அந்த துர்மரணம்.
காலை வெயில் கடப்பது போல
பண்டிகைகள் அவர்களின் வீடுகளை
சலனமில்லாமல் கடக்கின்றது.
அழையா விருந்தாளியாக
மௌனம் எப்போதும்
வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறது.
அந்த வீடுகளைச் சேர்ந்த இளவட்டங்கள்
தங்களின் காதல் கதைகளை
பரம ரகசியங்களாக பாதுகாக்கின்றனர்.
குழந்தைகளின் விளையாட்டு நேரம்
சுருக்கப்பட்டு உள்ளது.
பெண்களின் சமையல்
ருசியில் சேர்ந்திருக்கிறது
விருந்தினர் மட்டும் உணரும் கசப்பு.
ஆண்கள் பெண்கள் அனைவரும்
துர்மரண நினைவுலகின்
பின்வாசல் தெரியாமல்
மெதுமெதுவாக தினமும்
காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
காதலும் ரகசியங்களும்
சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை அப்படியே இங்கே தந்துள்ளேன்.
Today is “heart2heart talk” day. U can ask me any question that u wanted to ask for a long time and i will reply. REPLY MUST. Forward this to your friends and get interesting questions.
மிக சுவாரசியமாக இருக்கவே நானும் என் நண்பர் நண்பிகளுக்கு அனுப்பினேன். சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே விஷயத்தை பற்றியே கேட்டார்கள்.
காதல்!!
“நீ யாரையாவது காதலிக்கிறாயா?”, “உன்னுடைய முதல் கிரஷ் யார்?”…. இப்படி பல கேள்விகள்.
மத்த சமயங்களில் யாருமே இந்த கேள்வியை கேட்கவில்லை. கேட்டால் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
இதிலிருந்து எனக்கு ஒன்று நன்றாக புரிகிறது. நாம் காதலை மிக ரகசியமானதொரு விஷயமாக ஆக்கிவிட்டோம். இல்லையா?
நான் காதலை தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பாவத்தை போல அதை மறைக்க வேண்டிய அவசியம் ஏன் என்று தான் வியக்கிறேன்.
ஏன்??
இதற்கு விடை யோசிப்பதற்கு முன்னால் ஒரு சின்ன analysis. காதலைப் பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு இருக்கிறதா??
என் நண்பர் வட்டத்தை(வயது 19 முதல் 22) மூன்று விதமாக என்னால் பிரிக்க முடியும். முதல் பிரிவு, காதலுக்கு ஜே போடுபவர்கள்! இரண்டாம் பிரிவு காதலுக்கு NO சொல்பவர்கள். மூன்றாவது, காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். இவர்களைப் பற்றி நாம் இங்கே பேசப்போவதில்லை.
இரண்டாம் பிரிவில் இருக்கிற காதலுக்கு நோ சொல்கிறவர்களை இப்படி இன்னும் பிரிக்கலாம்.
1. காதலிக்காமல் இருப்பது பெற்றோருக்கு உண்மையாக இருப்பதின் அடையாளமாக கருதுபவர்கள் – தம் பிள்ளைகள் தங்களின் loyaltyஐ நிரூபிக்க காதலிக்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிற பெற்றோர் இருக்கிற வரை, இவர்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது.
2. காதல் வெற்றிக்கு தடை எண்ணுபவர்கள் – காதலை தொல்லையாக நினைப்பவர்கள் காதலித்து என்ன பயன்??
3. “சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!”,”எல்லா ஆண்களும் ஏமாற்றுக்காரர்கள்!” – இப்படியெல்லாம் பேசிக்கொண்டு திரிபவர்கள். Hasty Generalisations! இதில் பாதி பேர் காதலில் தோல்வியுற்றவர்கள்(ச்சீ! இந்த பழம் புளிக்கும்!
)
4. மேற்படி வசனங்கள் எல்லாம் பேசாமல் புதுவிதமாக, காதலிக்காமல் இருப்பது no nonsense business என்று நினைப்பவர்கள். காதலிக்காமல் இருப்பது fashion ஆக நினைப்பவர்கள். இதில் பாதிப்பேருக்கு “நமக்கெல்லாம் வாய்க்காது” என்ற ஆயாசத்தில் இருப்பவர்கள்.
இந்த மேற்கண்ட பிரிவினர், இப்படியே பேசிக்கொண்டு திரிந்து விட்டு, ஒரு நாள் திடீரென காதலில் விழுந்தால், நிச்சயம் அதை ரகசியமாக வைத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். இல்லையென்றால் சுற்றியிருப்பவர்கள் கட்டை எடுத்து அடிப்பார்கள்!
முதல் பிரிவில் இருக்கிற காதலுக்கு ஜே போடுகிறவர்கள் இப்படி இன்னும் பிரிக்கலாம்.
1. காதலித்து விட்டால் ஏதோ ஆகாயத்தையே பிடித்து விட்டதாக நினைப்பவர்கள். காதலிக்க தொடங்கியவுடன் அப்படியே அந்நியன் ரேஞ்சுக்கு ஆள் மாறி விடுவார்கள். காதலே வாழ்க்கை, காதலே ஜெயம் என்றெல்லாம் பிதற்றுகிற கும்பல். Love is a sweet poison என்பது இவர்களின் favourite dialogue. ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி எல்லா இடத்திலும் love exhibition நடத்துபவர்கள். ஒரு வேளை இவர்களின் காதல் கைகூடவில்லையென்றால் straight to இரண்டாம் பிரிவு (3)!!
2. சினிமாவில் வருகிற ஹீரோவின் நண்பர் கதாபாத்திரம் போன்றவர்கள். அவர்கள் காதலிக்கவே மாட்டார்கள். சுற்றி இருப்பவர்களை நன்றாக உசுப்பேற்றி விடுவார்கள். கடைசியில் எஸ்கேப்!
இவர்கள் காதலை ரகசியமாக வைத்துக்கொள்ளாதது தான் பிரச்சினையே.
இந்த அனைத்து பிரிவினரும் இப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கி கொள்ள அதி முக்கியமான காரணம், தமிழ் சினிமா! என்றுமே அதில் காதல் காதலாக காட்டப்படுவதில்லை(சில விதிவிலக்குகள் உண்டு!). நான் பார்த்து இதுவரை எந்த ரயில் நிலையத்திலும் காதலி, மெதுவாக கிளம்புகிற ரயிலில் பரிதாபமாக (இறங்காமல்!!) கையை நீட்டிக்கொண்டிருக்க, காதலன் தட்டு தடுமாறி ஓடுகிற காட்சி அரங்கேறவில்லை!
மற்ற காரணங்கள், அவர்களின் வீட்டு சூழல், இதுவரை பார்த்த கேட்ட காதல் கதைகள் இத்யாதி இத்யாதி…
எஞ்சியுள்ளவர்கள் இப்படி நிலவைப் பிடிப்பேன், காற்றை நிறுத்துவேன் என்றெல்லாம் வசனம் பேசாமல், காதல் என்றால் காதலிப்பது, என்ற தெளிவான சிந்தனை இருப்பவர்கள். (என் நண்பர் வட்டத்தில் ஒரு ஆறு ஏழு பேர் இப்படி என்று வைத்துக்கொள்வோம்.) இதில் இருக்கும் அனைவருமே காதலை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.
யாரிடமும் சொல்ல அவசியமில்லை என்பது உண்மை. ஆனால் இவர்கள் வெளியே தெரியக்கூடாது என்று பயப்படுவது தான் சங்கடமாக இருக்கிறது.
இது அவர்களின் தவறா, இல்லை சுற்றி இருப்பவர்களின் தவறா? எனக்கு புரியவில்லை.
“எல்லாம் சரிப்பா…. இவ்வளவு வாய் கிழிக்கிறியே…. நீ எந்த category….அந்த smsக்கு என்ன reply பண்ணே…”என்று தானே கேட்கிறீர்கள்??
ஹி ஹி… மழுப்பி விட்டேன்!!
சும்மாவா சொன்னார்கள், “ஊருக்கு தான் உபதேசம் என்று”!!
tagged!
தோழி மிலிண்டா எனக்கு tag செய்திருந்தார். அவரைப்போல என்னால் எழுத முடியாதென்றாலும் ஒரு சின்ன முயற்சி…..
எனக்கு பிடித்தவை சில….
நிறம் : இருளின் நிறம்!
உணவு :
ஹாஸ்டலுக்கு வரும் முன் கேட்டிருந்தால் – ம்ம்ம்ம்ம்ம்..
இப்போது கேட்பதனால் – மெஸ் சாப்பாடு தவிர எதுவானலும் ஓகே!!
மாதம் : குறிப்பாக எதையும் சொல்லமுடியவில்லை.
பாடல்: wordpress space பத்தாது!
படம்: மேலே சொன்னதை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.
விளையாட்டு: கற்றுக்கொள்ள(?) முயற்சி(??) செய்துகொண்டிருக்கும் டிடி.
பருவம்(சீசன்): மழைக்காலம்.
வார நாள்: ஞாயிறு! மற்ற நாட்களைப் போல உட்கார்ந்துகொண்டே தூங்குகிற தொல்லை இல்லை!
ஐஸ் க்ரீம் ஃப்ளேவர்: வெண்ணிலா.
பொழுது: இரவுப்பொழுது.
தற்போதைய….
மனநிலை: தமிழ் மன்றத்தை நினைத்துக் கொண்டிருக்கிறேன்!! இந்த வியாழனில் துவங்குகிறது, instincts 2k7. கடவுளின் மேல் திடீரென அக்கறை வருகிறது!!
சுவை: நான் காரமும் இனிப்பும் சரி விகிதத்தில் கலந்த ஒரு ஜந்து. விரும்பும் சுவையும் அப்படியே!
உடை: டீ ஷர்ட், நைட் பேன்ட்! (எதுக்குப்பா இதெல்லாம்??)
கணிணியின் முகப்பு: (desktop!): ரொம்ப நாட்களாக இளையராஜா!
கால் நகத்தின் நிறம்: பிறந்தபோது இருந்த நிறம், கொஞ்சம் பழுப்பேறி!
நேரம்: 9:49 IST
சூழல்: சில வாரங்களாக பெருக்காத அறை, கொஞ்சம் அலங்கோலமாய். பக்கத்தில் ஜோ படிப்பதாக பாவ்லா செய்துகொண்டிருக்கிறான். கண்ணில் இந்த சுவாரசியமான பதிவு. காதில் “ஜானி” படத்தில் வரும் அழகான ஒரு பிண்ணனி இசை.
எண்ணம்: ஆரம்பிக்கும் போது தெரியவில்லை, இது இவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்று!
ஐந்து “முதல்”கள்….
நெருங்கிய நண்பன்: பாலாஜி.(எல்.கே.ஜி.யில்!!)
ஸ்க்ரீன் பெயர்: அப்படியென்றால் என்னவென்று மிலிண்டாவைக் கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளேன். பொறுமை!
ஒட்டை போடுதல்!!??????(piercing!) : சாரி! காது குத்தவில்லை எனக்கு! மெய்யாலுமே!
செல்லப்பிராணி: முதலும் கடைசியுமாக கூட எதுவுமில்லை.
படம்: என் ஞானதிருஷ்டிக்கு எட்டவில்லை!
ஆறு “கடைசி”கள்:
சிகரெட்: ஆறாவதோ, ஏழாவதோ படிக்கும் போது!! பெரியப்பாவின் சிகரெட் பெட்டியிலிருந்து ஒன்றை எடுத்து பிடித்து பார்த்தேன். பத்தவைக்காமல்.
குடித்த திரவம்: தண்ணி தான். (அடப்போங்கப்பா!)
கார் பயணம்: ஐய்யையோ! ட்ரைவிங் க்ளாஸ் போய் ரெண்டு மாசமாக போகுது.
பார்த்த படம்: ஃப்ரெண்ட்ஸ். இன்று காலை சன் டீவியில். (புதுப்படம்னு சொல்லலியே!
தொலைபேசி உரையாடல்: ஆதிரையுடன். வியாக்கிழமை பொழப்பு எப்படி சிரிப்பா சிரிக்கப்போகுதுன்னு பேசிட்டிருந்தோம்.
புத்தகம்: nectar in a sieve… இன்னும் முடிக்கல. முடிக்க முடியலப்பா!
இனி…….
நீங்கள் எப்போதாவது சட்டத்தை மீறியிருக்கிறார்களா?
அதைப்பற்றித் தெரிந்தால் தானே எது மீறல் எது மீறலில்லை என்று தெரியும்?
நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா?
பனிரெண்டாவது படிக்கும் போது, இரவு பதினோரு மணிக்கு போலிஸ் ஜீப்பில் ஏறச் சொன்ன போது, நிச்சயம் கைது செய்வார்களென நினைத்தேன். ப்ச்! இல்லை. (கதையென்னவென தெரிந்து கொள்ள comment எழுதவும்!
)
நீங்கள் எப்போதாவது டீவியில் வந்ததுண்டா?
பலமுறை. உறவினர், நண்பர் வீட்டு திருமணங்களின் போது வீடியோக்காரரின் கைங்கரியத்தில் லைவாகவே நான் டீவியில் வந்துள்ளேன். என் வீட்டில் கூட, பலமுறை off செய்யப்பட்ட டீவியின் முன் சென்று நிற்கும் போதெல்லாம் அதில் வந்துள்ளேன்.
நீங்கள் எப்போதாவது பொய் சொன்னது உண்டா?
இல்லையென்று சொன்னால் கணக்கில் ஒன்று கூடும்.
நீங்கள் முன்பின் தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறீர்களா?
அப்படி யாரையும் இன்னும் பார்க்கவில்லை.
நான்கு பொருட்கள் அல்லது வஸ்துகள் அல்லது செயல்கள்(things க்கு தமிழில் இவ்ளோ அர்த்தமா??):
இன்று செய்தவை: தூங்கினேன்; சாப்பிட்டேன்; குளித்தேன்; பயணம் செய்தேன்; அரட்டை அடித்தேன்; கொஞ்சம் புலம்பினேன்.
இப்போது காதால் கேட்பவை: ஃபேன் ஓசை, “ஆண்பாவம்” தீம் ம்யூசிக், ஜோ கட்டிலில் அமரும் ஓசை.
நீங்கள் வாழதேவையான வஸ்து: என்ன கேள்வி இது?? யாராக இருந்தாலும் அது உணவும், காற்று தான்!
போரடிக்கும் போது செய்வது: போரடிக்காத எதாவது ஒன்று!
நீங்கள் இன்று சென்ற நான்கு இடங்கள்: எங்கள் ஊர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், கேளம்பாக்கம் ஐஸ் க்ரீம் பார்லர், என் விடுதி அறை.
நீங்கள் சொல்லத்தோன்றியதை தயங்காமல் எந்த மூவரிடம் சொல்வீர்கள்: மன்னிக்கவும்! நான் எதையும் யாரிடமும் சொல்லத் தயங்குவதில்லை! (எஸ்கேப்!)
இரண்டு விருப்பங்கள்:
கருப்பா? வெள்ளையா? – எனக்கு பிடித்த நிறம் என்னவென்று சொன்னேன்?
hot or cold?: cold!!
இறப்பதற்குள் செய்ய விரும்பும் ஒரே ஒரு காரியம்: நாவல் எழுத வேண்டும்!

