காணாமல் போனவர்கள்
எந்த திருவிழாவிலும் தொலைந்து போகாமலேயே என் குழந்தைப்பருவத்தைக் கடந்துவிட்டேன். ஆகையால் காணாமல் போதலின் விவரங்கள் எனக்கு தெரியாது. ஆனால் என் கண் முன்னாலே காணாமல் போனவர்களைப் பற்றி சொல்ல முடியும். சிலர் அறியாமல் தொலைந்து போகிறார்கள். பலர் தெரிந்தே காணாமல் போகிறார்கள். தெரிந்தே காணாமல் போதல் நிச்சயம் வலி தரக்கூடியதாக இருக்குமென எனக்கு தோன்றவில்லை. ஏதோ ஒரு வலியை மறைக்கவோ மறக்கவோ தான் தெரிந்தே சிலர் காணாமல் போகிறார்கள்.
என் மன அகராதியில் காணாமல் போதல் என்பதற்கு அர்த்தமும் பல விளக்கங்களும் கொடுத்தாள் ஒருவள். அவள் என் எதிர் வீட்டில் இருந்தாள். என் அக்காவின் தோழி அவள். மிக நன்றாகப் படிக்க கூடியவள். இருந்தும் அவள் பத்தாவது படிக்கும் போது படிப்பை பாதியில் நிறுத்தியதாக என் அம்மா சொல்லியிருக்கிறாள். அப்போதே அவள் ஒரு முறை தொலைந்துவிட்டாள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
அவள் என்னிடம் சினேகமாக பழகினாள். எனக்கு ஒரிருமுறை தமிழ் பேச்சுப்போட்டிகளுக்காக எழுதிக்கொடுத்ததாக நினைவு. சராசரி விசாரிப்புகளின் எல்லைக்குள் தான் அந்த சினேகம் இருந்தது. என் அக்கா விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் பொழுது மட்டும் அவள் என் வீட்டிற்கு வருவாள். என் அக்காவின் கல்லூரிக்கதைகளைக் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவாள்.
ஒரு முறை எங்கள் வீட்டில் புதிதாக ஒரு டேப் ரிகார்டர் வாங்கினார்கள். நான் அதை மாடியில் சத்தமாக வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். எல்லாருக்கும் அதை சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. நாம் எல்லாருமே குழந்தைகளாய் இருக்கிற சமயங்களிலாவது நல்லவர்களாக இருக்க ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். சிறு வயதில் புதிதாக கிடைத்த பொருளை கையில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் சொல்வதில் எந்த வஞ்சமும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் பெரியவர்கள், குழந்தைகள் அவ்வாறு செய்யாமல் இருக்க எப்போதும் கடிவாளம் போட்டபடி இருப்பார்கள். அதில் தான் நிறைய வஞ்சம் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி எனக்குப் போடப்பட்ட கடிவாளத்தை மீறி ஒரு மாலை வேளையில் கீழே நின்றுகொண்டிருந்த அவளை நான் பெருங்குரலெடுத்து அழைத்து புது டேப் ரிகார்டர் வாங்கியிருப்பதாக சொன்னேன். அதோடு நில்லாமல் அதைக் காண்பதற்காக அவளை மேலே அழைத்தேன். அவள் மெலிதாக சிரித்தபடி வருவதாக சொன்னாள். அருகிலிருந்த என் அக்கா என்னைத் திட்டத் தொடங்கினாள். இது வீண் ஜம்பம் என்று ஏதேதோ சொன்னாள். எனக்கு சரியாக புரியவில்லை என்றாலும் ஏதோ தவறு செய்ததாக தோன்றியது. டேப் ரிகார்டரரைப் பார்த்து விட்டு நன்றாக இருப்பதாகச் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
அன்று முதல் என் அக்காவின் தோழியிடம் சரியாக என்னால் பேச முடியவில்லை. ஏதோ ஒரு கூச்சம். அவள் எப்போதும் போல நன்றாகத் தான் பேசினாள். என்னால் தான் முடியவில்லை. ஒரு குறுகிய கால்வாயில் மௌனமும் கூச்சமும் எங்களுக்கிடையே ஓடத்தொடங்கியது.
இது நடந்து முடிந்த ஒரு சில மாதங்களில் அவள் காணாமல் போய்விட்டாள்.
அன்று காலை எதிர் வீட்டில் ஏதோ பரபரப்பு. பள்ளியிலிருந்து வந்த பின்பு நான் அறிந்து கொண்டேன் அவள் காணாமல் போய்விட்டாளென. இல்லை இல்லை எனக்கு அப்படி சொல்லப்பட்டது. அவள் உண்மையில் அவள் காதலனோடு வாழ வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் (ஓடிப்போனாள் என்று சொல்ல எனக்கு விருப்பமுமில்லை உடன்பாடுமில்லை). நான் ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில் படித்ததால் எனக்கு என் ஊரில் நண்பர்கள் குறைவு. அதனால் ஊர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை என் அம்மாவின் மூலம் தெரிந்து கொள்ளும்படி நான் சபிக்கப்பட்டிருந்தேன். அன்று மாலை என் அம்மா ஒரு பொது அறிவிப்பாக அந்த செய்தியை என்னிடம் சொன்னாள்.
இரண்டு நாட்களாகியும் எனக்கு மேற்கொண்டு எதுவும் செய்தி கிடைக்காததால் அம்மாவிடம் கேட்டேன். வேண்டுமென்றே காணாமல் போனவள் கிடைக்க மாட்டாள் என்று கொஞ்சம் சலிப்போடு சொன்னாள். இந்த கேள்வியை வளர்க்காதே என்ற ஒரு சங்கேதம் அதில் இருந்தது. இது காதல் விவகாரம் என்று எனக்கு பளிச்சென்று புரிந்தது. (கவனிக்க : எனக்கு அப்போது வயது பதிமூன்று இருக்கும்). மேற்கொண்டு எதுவும் கேள்வி கேட்காமலே நான் புரிந்துகொண்டது அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். தன் மகனுக்குள் இருந்த சிறுவன் காணாமல் போய்விட்டிருப்பதை அவள் அன்று உணர்ந்திருப்பாள்.
அவள் ஊரின் அந்த கோடியில் வாழ்ந்து வந்ததாக அறிகிறேன். எங்கள் வீட்டின் கீழே தான் ஊரின் கைராசி மருத்துவர் இருக்கிறார். ஆகையால் யாராயினும் எங்கள் தெருவுக்கு ஒரு முறையாவது வந்தாக வேண்டும். நோய் பீடிக்காத மனிதன் யாரேனும் உண்டா என்ன? அவளும் சில முறை அங்கு வந்து நான் பார்த்திருக்கிறேன். எப்போதும் எதிர் வீட்டு திண்ணை, தெருவுக்கு பல சத்தங்களையும் சச்சரவுகளையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கும். ஆனால் அவள் மருத்துவரிடம் வந்திருக்கும் கணங்களில் எதிர் வீட்டு திண்ணை ஆள் அரவமற்று இருக்கும். அப்போது அந்த எதிர் வீட்டு மனிதர்கள் மொத்தமாய் காணாமல் போய்விட்டதாக எனக்குத் தோன்றும்.
பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவளும் அவளின் பிறந்த வீட்டாரும் தங்களுக்கு கிடைத்த புதிய அடையாளங்களைக் கொண்டும் அவர்கள் இழந்த பல பழைய அடையாளங்களும் இல்லாமல் வாழ பழகிக்கொண்டிருக்க வேண்டும்.
நான் ஊர் சுற்றும் சொற்ப பொழுதுகளில் சில முறை அவள் துணி துவைக்க ஆற்றிற்க்கு செல்லும் போது என் எதிர்ப்பட்டிருக்கிறாள். ஆனால் அவள் என் முகத்தை ஒரு முறை கூடக் கண்டதில்லை. அவள் இருந்த பழைய தெருவைச் சேர்ந்த யார் எதிர்ப்பட்டாலும் இப்படி தலை குனிதல் அவளுக்கு பழக்கமாயிருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால் எனக்கு அது மிகவும் வருத்தமாயிருந்தது. அவள் வாழ்வில், அவள் எடுத்த முடிவுகள் குறித்து நான் எந்த பொழுதிலும் அவளை கேள்வி கேட்க முடியாது என்பதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நான் செய்த அற்பச் செயலாக கருதப்பட்ட் அந்த டேப் ரிகார்டர் நிகழ்ச்சிக்காக நான் இன்றும் வருத்தப்படுவதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்றும் எனக்குத் தெரியவில்லை.
அந்த வீட்டாரும் அவளும் அதன் பின்னர் மீண்டும் கூடவேயில்லை. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அல்லது இருப்பதாக காட்டிக்கொண்டனர். நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு குடும்பமே ஒருவரை அடியோடு மறக்க முடியும். அவர்களின் வலி அதை சாத்தியமாக்கியிருக்கிறது. அவளின் வலி அவளுக்கு வீட்டை இழக்கும் சக்தியைத் தந்திருக்கிறது. என் அம்மா அக்கா யாரும் அவளைப் பற்றி பிறகுப் பேசி நான் கேட்டதேயில்லை. அவ்வளவு சுலபமா ஒருவரைத் தொலைப்பது? காலம் உண்மையில் ஒரு அரக்கன். எதையும் சாத்தியமாக்க கூடிய குணம் படைத்தது போலும்.
கடைசியாக நான் அவளைப் பார்த்தபோது, அவள் என்னை கடந்து சென்ற சில நொடிகளில் எப்படியோ அவளைப் பார்த்து புன்னகைக்க முடிந்தது. என்றுமே அவள் நிமிர்ந்து பார்த்ததில்லையாதலால் அன்றுவரை அது முடிந்ததேயில்லை. அவளும் என் புன்ன்கையை அங்கீகரித்து பதிலுக்கு அவளின் வழக்கமான சினேகமான புன்னகையைத் தந்தாள். அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். அவள் தொலைந்த ஆயிரம் ஆயிரம் அடையாளங்களில் ஒரு சிறிய அடையாளத்தை அவள் அன்று மீட்டெடுத்திருப்பாள் என்று நினைக்கிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
அதன் பின்னர் அவளைப் பார்க்கவேயில்லை.

வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வித்தியாசமான ஒரு அணுகுமுறை….இதற்கு இந்த தலைப்பு கச்சிதமாக பொருந்தியுள்ளது… இதை படித்தவுடன் நானும் என் வாழ்வில் இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகளால் எத்தனை மனிதர்களை தொலைத்திருப்பேன் என்று தேடத் தொடங்கிவிட்டேன்…. இதை படித்தது ஒரு சுவாரசியமான அனுபவத்தை எனக்கு தந்தது……. நன்றி
nilaa
பெப்ரவரி 23, 2007 இல் 1:49 பிற்பகல்