சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for பெப்ரவரி 2007

ஓராண்டு நிறைவு

3 மறுமொழிகளுடன்

வணக்கம்!

“சிறுமழை” – இந்த வலைப்பதிவைத் தொடங்கி ஓராண்டு இன்றுடன் நிறைவுபெறுகிறது.

கொஞ்சம் ஆச்சரியமாகவே உள்ளது.

ஓராண்டு முடிவடையும் தருவாயில் நான் கடக்க வேண்டும் என்று எண்ணிய தொலைவை இன்னும் கடக்கவில்லை தான் என்றாலும்…. தொடர்ந்து எழுதியதே மகிழ்ச்சியாக உள்ளது.

தொடர்ந்து ஆதரவும் நம்பிக்கையும் தந்த அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும், தரமான கருத்துக்களையும் மறுமொழிகளையும் தந்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்!

தொடர்ந்து நல்ல பதிவுகளைத் தரவேண்டும் என்ற விருப்பத்துடன்,

என்றும் அன்புடன்,
அரவிந்தன்.

Written by aravind

பெப்ரவரி 27, 2007 இல் 3:49 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

மொழிதலும் புரிதலும்

3 மறுமொழிகளுடன்

Babel
பைபிளில் ஒரு சம்பவம் வரும். மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாகரீகம் பெறத் தொடங்கிய காலத்தில் அவர்கள் கடவுளை வெல்ல நினைத்தார்களாம். அதற்கு முதலில் கடவுளை அடைய வேண்டும் என்பதற்காக பூமியிலிருந்து வானத்தை தொடும் ஒரு கட்டிடம் கட்டினார்களாம், babylon என்ற இடத்தில் தூண்(tower) போல. அதன் பெயர் தான் பேபல். (BABEL). கோபமுற்ற கடவுள், அந்த கட்டிடப் பணியை செய்துக்கொண்டிருந்த பல்லாயிரம் மக்களும் வேறுவேறு பாஷைகள் பேசுமாறு சபித்தார். விளைவு மிகப்பெரிய குழப்பம் உண்டானது. ஒருவர் சொல்வது இன்னொருவருக்குப் புரியவில்லை. நம்பிக்கை, சந்தேகம், பயம் என எல்லாம் தோன்றியது. கட்டிட பணி நின்றது. கடவுள் ஜெயித்தார்.

நாம் தகவல்தொழில்நுட்பத்தில் பல அசாத்திய சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் இன்னும் அந்த babylon மக்கள் போல குழப்பத்தில் தான் இருக்கிறோம் என்பதை முகத்தில் அறைவது போல சொல்லியிருக்கிறது, சென்ற செப்டம்பரில் வெளிவந்து, 7 ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிற திரைப்படம் BABEL.

நீங்கள் இந்திய-பாகிஸ்தான் எல்லையை நல்ல மனதோடு கடந்தாலும், உங்களின் செயல்பாடுகளில் ஒரு சின்ன பதற்றம் தொத்திக்கொண்டாலும் உங்களை தீவிரவாதியென சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறது இல்லையா? தீவிரவாத பயம் நம்மளை அப்படி ஆக்கியிருக்கிறது. அங்கே உங்களின் மொழிதல் தோற்றுப்போகும். குறைந்தபட்சம் ஒரு நாளாவது உங்களை தீவிரவாதியென எண்ண வாய்ப்பிருக்கிறது.

இப்படி மொழிதலும் புரிதலும் தோற்றுப்போவதனால் ஏற்படும் பெரும் சங்கடங்களை சொல்லியிருக்கிறார், மெக்சிகன் இயக்குனர் Alejandro González Iñárritu. இவருக்கு பக்கபலமாக ஆழமான கதை திரைக்கதை வசனத்தை தந்திருக்கிறார், Guillermo Arriaga.

நான்கு கதைகள். ஒவ்வொரு கதையிலும், மொழிதலும் புரிதலும் இல்லாததால் பிரச்சினைகளுக்கு உள்ளாகிற கதைமாந்தர்கள். நான்கு கதைகளையும் வெவ்வேறு நாடுகளில்(அமெரிக்கா, மெக்சிகோ, மொரோக்கோ, ஜப்பான்) நடைபெறுவதாக கதை பின்னி ஒரு கலாச்சார விருந்து படைத்திருக்கிறார்கள்!
மொரோக்கோவின் புழுதிபறக்கும் பாலைவன கிராமத்தில் தொடங்குகிறது படம். ஆடு மேய்க்கும் தன் இரு மகன்களுக்கு (வயது முறையே பதினைந்து, பதிமூன்று இருக்கும்) ஆடுகளை வேட்டையாட வரும் ஓநாய்களை கொல்ல ஒரு துப்பாக்கி வாங்கித்தருகிறார் அப்பா. விளையாட்டாக அதை சுடும் போது, மொரோக்கோவிற்கு சுற்றுலா வருகிற அமெரிக்கப் பெண் குண்டடிப்படுகிறார். பற்றியெறிகிறது தீவிரவாத தாக்குதல் என்கிற சந்தேகம். தீவிரவாத பயம், புரிதல் இல்லாமல் செய்கிறது. மொழிதலை ஊமையாக்குகிறது.

Babel

மூன்றாவது மகனை சிறுவயதில் இழந்து தவிக்கிறது அமெரிக்க ஜோடியொன்று. சாவுக்கு காரணம் கணவன் என நினைக்கிற மனைவிக்கு புரியவைக்க தங்கள் குழந்தைகளை caretaker-யிடம் விட்டுவிட்டு மோரோக்கோவிற்கு அவளோடு பயணம் மேற்கொள்கொள்கிறான் கணவன். சில நாட்களின் தனிமை, புரிதலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை சிதைக்கிறது ஒரு தோட்டா.

பிறந்த நாடான மெக்சிகோவை விட்டு பிழைப்புக்காக, சட்டத்துக்கு புரம்பாக, அமெரிக்காவில் அன்பான கண்ணியமான caretakerஆக பணிபுரிகிற அமீலியா தன் மகனின் திருமணத்துக்காக மெக்சிகோ செல்ல விரும்புகிறார். அவர் பார்த்துக்கொள்கிற இரு அழகிய குழந்தைகளின் பெற்றோர் மொரோக்காவில் மாட்டிக்கொள்ள, திருமணத்தன்று குழந்தைகளோடு எல்லையை கடக்கிறார். ஒரு தாயின் நியாயமான ஆசை, புரிதலின்மை காரணமாக அவரின் கண்ணியத்துக்கு குந்தகம் விளைவிக்கிறது.

வாய்பேச முடிந்த இவர்களே புரிதலின்மையால் இவ்வளவு பாதிக்கப்படுகிற போது, வாய்பேச முடியாத, காது கேட்காத, தாயை இழந்த ஒரு இளம் ஜப்பானியப் பெண் என்ன செய்துவிட முடியும்? நான்கு கதைகளில் மிகவும் வலிமையான கதையிது. தனித்தீவாக சுற்றுகிற அந்த பெண் மனக்கசப்பிலிருந்து மீளமுடியாமல் போதை பழக்கத்திற்க்கு அடிமையாகிறாள். அவளின் காதல் முயற்சிகள் தோல்வியடைகின்றன. அது அவளை எப்படி மாற்றுகிறது என்பதை பொட்டில் அறைவது போல சொல்லியிருக்கிறது படம்.

இந்த நான்கு கதைகளையும் narrate செய்த விதம் அசாத்திய திறமையை வெளிப்படுத்துகிறது. திரைக்கதை, காலம் என்ற ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் ஆட்டம் போடுகிறது, நாடு விட்டு நாடு தாவுகிறது. எந்தெந்த கதை எப்போது நிகழ்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிய நுணுக்கம் அபாரம்! சிறந்த திரைக்கதைக்காகவும் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இயக்குனரின் முந்தைய படங்களான, உலகப்புகழ் பெற்ற Amores perros( ஆய்த எழுத்தின் original!) மற்றும் 21 grams-இலும் இதே யுக்தி கையாளப்பட்டிருக்கிறது.

இரண்டு மணி நேரம் ஓடுகிற இந்த படம், கொஞ்சம் கூட பிசகாமல், சொல்ல வந்ததை தெளிவாக அழுத்தமாக சொல்கிறது.

நான்கு விதமான கலாச்சரத்தின் அழுத்தமான பதிவு இந்தப் படத்தில் இருக்கிறது. ஊரே கூடியிருக்க மணமகனும் மணமகளும் slow motionஇல் அணைத்தபடி ஆடுகிற அந்த மெக்சிகன் திருமணம் so cute! ஜப்பானிய இளைஞர்களின் போதை மற்றும் பாலியல் கலாச்சாரம் கலங்கடிக்கிறது. பாலைவன குடும்பத்தில் நடக்கிற சம்பவங்கள் அத்தனையும் பகீர்! மெக்சிகன் திருமணத்திற்காக தலைவெட்டப்படுகிற அந்த கோழியைப் பார்த்து அமெரிக்க குழந்தைகள் அதிரும் காட்சி sharp!

Brad Pittஉம் Cate Blanchettஉம் மட்டுமே தெரிந்த முகங்கள். இருவரும் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார்கள்.

மிச்சமுள்ள நடிகர்களில் யாரைச்சொல்வது யாரைவிடுவது? அந்த மொரோக்கிய சிறுவர்கள் படப்பிடிப்பின் போது அங்கே திரிந்துகொண்டிருந்தவர்களாம். அப்படியே அவர்களை அள்ளி படமெடுத்திருக்கிறார்கள். படம் பார்த்தால் நிச்சயம் நம்ப மாட்டீர்கள்.

மெக்சிகன் பெண்ணாக வருகிற Adriana Barraza, வியப்பில் ஆழ்த்துகிறார். மெக்சிகன் embassyஇல் உடைந்து அழும்போதும் சரி, மெக்சிகன் எல்லையில் இரு குழந்தைகளோடு தவித்து அலையும் போதும் சரி, நடிப்பில் பின்னியெடுக்கிறார்.

ஜப்பானிய பெண்ணாக வருகிற Rinko Kikuchi, கடினமான கதாப்பாத்திரத்தை just like that பிரமாதப்படுத்துகிறார். கூர்மையான பார்வையும், தோன்றுவதையெல்லாம் வெடுக் வெடுக்கென ஒரு நோட்டில் எழுதி நீட்டுவதுமாக வாழ்ந்திருக்கிறார். பாலியல் சிக்கலில் மாட்டிக்கொண்டு குழம்பி அனுதாபத்தை அப்படியே அள்ளிக்கொள்கிறார்.

இருவரும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். விருது கிடைக்க வாழ்த்துக்கள்!

இசையையும் ஒளிப்பதிவையும் கதை சொல்ல பக்கபலமான கருவிகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லையில் மெக்சிகன் பெண் அலைகிற காட்சி ஒளிப்பதிவிற்கு ஒரு சோறு பதம்.

பல காட்சிகள் அசாத்தியமான அழகியலோடு அமைக்கப்பட்டிருக்கிறது. காது கேட்காதவள் இரவு டிஸ்கோவிற்கு செல்லும் போது அவளின் பார்வையில் clubஐ காண்பிக்கிற காட்சி அட்சர லட்சம் பெறும். சிறுவர்கள் இருவரும் மலை உச்சியில் பெரும்பலம் வாய்ந்த காற்றை எதிர்த்து நிற்கிற காட்சி, குண்டடிப்பட்ட மனையிவின் இறுக்கம் உடைகிற காட்சி, long shotஇல் திரையில் உறையும் climax என சொல்லிக்கொண்டே போகலாம்.

உண்மை தோற்றுப்போகிற காட்சிகள் அத்தனை அழுத்தமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மைகள் நம்ப மறுக்கப்படுகிற போது, கதாப்பாத்திரங்கள் ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகளும், செய்கிற காரியங்களும் புரிதலை மேலும் சிக்கலாக்கிறது. Simpleஆன உண்மைகளை புரிந்து கொள்ள இயலாமல் தடுக்கிற கடினமான பார்வையையும், தேவையற்ற சந்தேகங்களையும் அத்தனை இயல்பாகவும் வலிமையாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.

“If You Want to be Understood…Listen!” என்ற tagline-உடன் வெளியிடப்பட்டிருக்கிறது படம்.

கேட்க சாதரணமாகத் தான் இருக்கிறது.

ஆனால் படம் பார்க்கையில் புரிகிறது அதன் உண்மையும் முக்கியத்துவமும்.

Written by aravind

பெப்ரவரி 25, 2007 இல் 5:54 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

காணாமல் போனவர்கள்

ஒரு மறுமொழியுடன்

KaaNaamal PonavarkaL

எந்த திருவிழாவிலும் தொலைந்து போகாமலேயே என் குழந்தைப்பருவத்தைக் கடந்துவிட்டேன். ஆகையால் காணாமல் போதலின் விவரங்கள் எனக்கு தெரியாது. ஆனால் என் கண் முன்னாலே காணாமல் போனவர்களைப் பற்றி சொல்ல முடியும். சிலர் அறியாமல் தொலைந்து போகிறார்கள். பலர் தெரிந்தே காணாமல் போகிறார்கள். தெரிந்தே காணாமல் போதல் நிச்சயம் வலி தரக்கூடியதாக இருக்குமென எனக்கு தோன்றவில்லை. ஏதோ ஒரு வலியை மறைக்கவோ மறக்கவோ தான் தெரிந்தே சிலர் காணாமல் போகிறார்கள்.

என் மன அகராதியில் காணாமல் போதல் என்பதற்கு அர்த்தமும் பல விளக்கங்களும் கொடுத்தாள் ஒருவள். அவள் என் எதிர் வீட்டில் இருந்தாள். என் அக்காவின் தோழி அவள். மிக நன்றாகப் படிக்க கூடியவள். இருந்தும் அவள் பத்தாவது படிக்கும் போது படிப்பை பாதியில் நிறுத்தியதாக என் அம்மா சொல்லியிருக்கிறாள். அப்போதே அவள் ஒரு முறை தொலைந்துவிட்டாள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அவள் என்னிடம் சினேகமாக பழகினாள். எனக்கு ஒரிருமுறை தமிழ் பேச்சுப்போட்டிகளுக்காக எழுதிக்கொடுத்ததாக நினைவு. சராசரி விசாரிப்புகளின் எல்லைக்குள் தான் அந்த சினேகம் இருந்தது. என் அக்கா விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் பொழுது மட்டும் அவள் என் வீட்டிற்கு வருவாள். என் அக்காவின் கல்லூரிக்கதைகளைக் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவாள்.

ஒரு முறை எங்கள் வீட்டில் புதிதாக ஒரு டேப் ரிகார்டர் வாங்கினார்கள். நான் அதை மாடியில் சத்தமாக வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். எல்லாருக்கும் அதை சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. நாம் எல்லாருமே குழந்தைகளாய் இருக்கிற சமயங்களிலாவது நல்லவர்களாக இருக்க ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். சிறு வயதில் புதிதாக கிடைத்த பொருளை கையில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் சொல்வதில் எந்த வஞ்சமும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் பெரியவர்கள், குழந்தைகள் அவ்வாறு செய்யாமல் இருக்க எப்போதும் கடிவாளம் போட்டபடி இருப்பார்கள். அதில் தான் நிறைய வஞ்சம் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி எனக்குப் போடப்பட்ட கடிவாளத்தை மீறி ஒரு மாலை வேளையில் கீழே நின்றுகொண்டிருந்த அவளை நான் பெருங்குரலெடுத்து அழைத்து புது டேப் ரிகார்டர் வாங்கியிருப்பதாக சொன்னேன். அதோடு நில்லாமல் அதைக் காண்பதற்காக அவளை மேலே அழைத்தேன். அவள் மெலிதாக சிரித்தபடி வருவதாக சொன்னாள். அருகிலிருந்த என் அக்கா என்னைத் திட்டத் தொடங்கினாள். இது வீண் ஜம்பம் என்று ஏதேதோ சொன்னாள். எனக்கு சரியாக புரியவில்லை என்றாலும் ஏதோ தவறு செய்ததாக தோன்றியது. டேப் ரிகார்டரரைப் பார்த்து விட்டு நன்றாக இருப்பதாகச் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

அன்று முதல் என் அக்காவின் தோழியிடம் சரியாக என்னால் பேச முடியவில்லை. ஏதோ ஒரு கூச்சம். அவள் எப்போதும் போல நன்றாகத் தான் பேசினாள். என்னால் தான் முடியவில்லை. ஒரு குறுகிய கால்வாயில் மௌனமும் கூச்சமும் எங்களுக்கிடையே ஓடத்தொடங்கியது.

இது நடந்து முடிந்த ஒரு சில மாதங்களில் அவள் காணாமல் போய்விட்டாள்.

அன்று காலை எதிர் வீட்டில் ஏதோ பரபரப்பு. பள்ளியிலிருந்து வந்த பின்பு நான் அறிந்து கொண்டேன் அவள் காணாமல் போய்விட்டாளென. இல்லை இல்லை எனக்கு அப்படி சொல்லப்பட்டது. அவள் உண்மையில் அவள் காதலனோடு வாழ வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் (ஓடிப்போனாள் என்று சொல்ல எனக்கு விருப்பமுமில்லை உடன்பாடுமில்லை). நான் ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில் படித்ததால் எனக்கு என் ஊரில் நண்பர்கள் குறைவு. அதனால் ஊர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை என் அம்மாவின் மூலம் தெரிந்து கொள்ளும்படி நான் சபிக்கப்பட்டிருந்தேன். அன்று மாலை என் அம்மா ஒரு பொது அறிவிப்பாக அந்த செய்தியை என்னிடம் சொன்னாள்.

இரண்டு நாட்களாகியும் எனக்கு மேற்கொண்டு எதுவும் செய்தி கிடைக்காததால் அம்மாவிடம் கேட்டேன். வேண்டுமென்றே காணாமல் போனவள் கிடைக்க மாட்டாள் என்று கொஞ்சம் சலிப்போடு சொன்னாள். இந்த கேள்வியை வளர்க்காதே என்ற ஒரு சங்கேதம் அதில் இருந்தது. இது காதல் விவகாரம் என்று எனக்கு பளிச்சென்று புரிந்தது. (கவனிக்க : எனக்கு அப்போது வயது பதிமூன்று இருக்கும்). மேற்கொண்டு எதுவும் கேள்வி கேட்காமலே நான் புரிந்துகொண்டது அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். தன் மகனுக்குள் இருந்த சிறுவன் காணாமல் போய்விட்டிருப்பதை அவள் அன்று உணர்ந்திருப்பாள்.

அவள் ஊரின் அந்த கோடியில் வாழ்ந்து வந்ததாக அறிகிறேன். எங்கள் வீட்டின் கீழே தான் ஊரின் கைராசி மருத்துவர் இருக்கிறார். ஆகையால் யாராயினும் எங்கள் தெருவுக்கு ஒரு முறையாவது வந்தாக வேண்டும். நோய் பீடிக்காத மனிதன் யாரேனும் உண்டா என்ன? அவளும் சில முறை அங்கு வந்து நான் பார்த்திருக்கிறேன். எப்போதும் எதிர் வீட்டு திண்ணை, தெருவுக்கு பல சத்தங்களையும் சச்சரவுகளையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கும். ஆனால் அவள் மருத்துவரிடம் வந்திருக்கும் கணங்களில் எதிர் வீட்டு திண்ணை ஆள் அரவமற்று இருக்கும். அப்போது அந்த எதிர் வீட்டு மனிதர்கள் மொத்தமாய் காணாமல் போய்விட்டதாக எனக்குத் தோன்றும்.

பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவளும் அவளின் பிறந்த வீட்டாரும் தங்களுக்கு கிடைத்த புதிய அடையாளங்களைக் கொண்டும் அவர்கள் இழந்த பல பழைய அடையாளங்களும் இல்லாமல் வாழ பழகிக்கொண்டிருக்க வேண்டும்.

நான் ஊர் சுற்றும் சொற்ப பொழுதுகளில் சில முறை அவள் துணி துவைக்க ஆற்றிற்க்கு செல்லும் போது என் எதிர்ப்பட்டிருக்கிறாள். ஆனால் அவள் என் முகத்தை ஒரு முறை கூடக் கண்டதில்லை. அவள் இருந்த பழைய தெருவைச் சேர்ந்த யார் எதிர்ப்பட்டாலும் இப்படி தலை குனிதல் அவளுக்கு பழக்கமாயிருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு அது மிகவும் வருத்தமாயிருந்தது. அவள் வாழ்வில், அவள் எடுத்த முடிவுகள் குறித்து நான் எந்த பொழுதிலும் அவளை கேள்வி கேட்க முடியாது என்பதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நான் செய்த அற்பச் செயலாக கருதப்பட்ட் அந்த டேப் ரிகார்டர் நிகழ்ச்சிக்காக நான் இன்றும் வருத்தப்படுவதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்றும் எனக்குத் தெரியவில்லை.

அந்த வீட்டாரும் அவளும் அதன் பின்னர் மீண்டும் கூடவேயில்லை. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அல்லது இருப்பதாக காட்டிக்கொண்டனர். நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு குடும்பமே ஒருவரை அடியோடு மறக்க முடியும். அவர்களின் வலி அதை சாத்தியமாக்கியிருக்கிறது. அவளின் வலி அவளுக்கு வீட்டை இழக்கும் சக்தியைத் தந்திருக்கிறது. என் அம்மா அக்கா யாரும் அவளைப் பற்றி பிறகுப் பேசி நான் கேட்டதேயில்லை. அவ்வளவு சுலபமா ஒருவரைத் தொலைப்பது? காலம் உண்மையில் ஒரு அரக்கன். எதையும் சாத்தியமாக்க கூடிய குணம் படைத்தது போலும்.

கடைசியாக நான் அவளைப் பார்த்தபோது, அவள் என்னை கடந்து சென்ற சில நொடிகளில் எப்படியோ அவளைப் பார்த்து புன்னகைக்க முடிந்தது. என்றுமே அவள் நிமிர்ந்து பார்த்ததில்லையாதலால் அன்றுவரை அது முடிந்ததேயில்லை. அவளும் என் புன்ன்கையை அங்கீகரித்து பதிலுக்கு அவளின் வழக்கமான சினேகமான புன்னகையைத் தந்தாள். அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். அவள் தொலைந்த ஆயிரம் ஆயிரம் அடையாளங்களில் ஒரு சிறிய அடையாளத்தை அவள் அன்று மீட்டெடுத்திருப்பாள் என்று நினைக்கிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
அதன் பின்னர் அவளைப் பார்க்கவேயில்லை.

Written by aravind

பெப்ரவரி 22, 2007 இல் 12:53 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

பச்சைக்கிளி முத்துச்சரம்

3 மறுமொழிகளுடன்

pachakil150207_31.jpg
வெங்கி என்கிற வெங்கடேஷ்(சரத்) நிறைவான சம்பளத்தில் மகிழ்ச்சியோடு வாழ்கிறார். மனைவி கல்யாணி(ஆண்ட்ரீயா). ப்ரமோஷனுக்காக அலையாமல் போதுமென்ற மனதோடு இருக்கிறவரின் வாழ்வில் திடீர் சோகமாக அவருடைய பத்து வயது மகனுக்கு ஒரு விதமான டையாபடீஸ். மனைவி உடைந்து போகிறார். வெங்கி எதையும் பாசிடிவாக பார்க்க முற்படுகிறார். ஆனால் கல்யாணி வாழ்க்கையே அஸ்தமித்தாக பாவித்து, இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் தொலைக்கிறார். தம்பதிக்குள்ளாக முதல் விரிசல் விழுகிறது. அடுத்த குழந்தை பெறுவது தொடர்பாக மேலும் கருத்துவேறுபாடு ஏற்பட குடும்பத்தில் குழப்பம், கலக்கம்.

அந்த சந்தர்ப்பத்தில் ரயிலில் வெங்கிக்கு அழகான கீதாவின்(ஜோ) அறிமுகம் கிடைக்கிறது. நிம்மதியை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிற இருவரும் நண்பர்களாகிறார்கள். அதை காதலாக மாற்ற கீதா முயன்று வெற்றியும் பெறுகிறார். ஒரு நாளாவது அவரின் மனைவியாக இருக்க வேண்டும் என்ற கீதாவின் விபரீத ஆசை, திடுக்கிட வைக்கிற திருப்பங்களை அமைதியான வெங்கியின் வாழ்வில் தடதடக்க வைக்கிறது.

கதைக்காக கௌதம் ரொம்ப மண்டையை உடைத்துக்கொள்ளாமல் ஆங்கில படமான derailed-ஐ தமிழ்ப்படுத்த முயன்றிருக்கிறார்.

நிஜமாகவே இது ஒரு சோதனைமுயற்சி. தமிழ் சினிமாவுக்கே உரிய சில அபத்தங்கள் உண்டு. நாயக நாயகிகள் சுத்த தங்கம். கெட்டவர்கள் முகத்தில் தழும்போடு கோரமாக இருப்பார்கள். நாயகன் ஒன்று மனைவியை இழந்திருக்க வேண்டும். இல்லை bachelor ஆக இருக்க வேண்டும். இப்படி பல. அதையெல்லாம் உடைக்க முயன்றிருக்கிறார் கௌதம். salute!

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாயகன் மணமான middle age ஆசாமி. (ஆனால் அவர் மனைவி படு இளமையாக இருப்பது கமர்ஷியல் கட்டாயம்.) மகனுக்கு ஒரு விநாத மெடிக்கல் சிக்கல். திடீரென ஒரு விபரீத காதல் என அசத்தலான கதைக்களம்.

ஆனால் charecterisationஇல் செமயாக கோட்டைவிட்டிருக்கிறார்கள். அன்புசெல்வன் IPSஉம் மாயாவும் மனதில் நிற்க காரணம் அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாக சொல்லப்பட்டது. ஆனால் வெங்கியைப்ப்ற்றியோ கீதாவைப்பற்றியோ தெளிவாக எதுவுமே சொல்லப்படவில்லை. மகனும் மனைவியும் நொந்துபோயிருக்கிற சமயத்தில் பொறுப்பில்லாமல் ECRல் ரூம் போடுகிறார் வெங்கி. அவர் பொறுப்பற்றவரா சபலம் உள்ளவரா உண்மையான காதலுக்கு ஏங்குகிறாரா? கீதாவின் “தொடர்” முயற்சியில் இவர் confuse ஆகிறாரா? ஒன்றுமே தெளிவாய் சொல்லவில்லை. கீதாவின் charecterisation அதை விட மோசம். அவரைப்பற்றி முழுசாக சொன்னால் பின்பாதி suspense காலியாகி விடும். பாவம் கௌதம்! இதெல்லாம் புரியாமல் போவதால் முதல் பாதி முழுக்க சரத்தும் ஜோவும் வழியோ வழியென்று வழிவது கடுப்படிக்கிறது. முதல் பாதி முழுக்க தியேட்டரில் பின் சீட்டில் comment திருவிழா தான்.

முதல் பாதி படம், சரத்தும் ஜோவும் செல்கிற passenger ரயில் போல மெதுவாய் செல்கிறது. நடுநடுவே signal போல பாடல்கள் வேறு.

மிலிந்த் சோமன் வருகிற அந்த அரைமணி நேரம் பிரமாதம்! சரத் உண்மையைக் கண்டுபிடிக்கிற காட்சிகளில் direction அசத்தல்!
தொடர்ந்து அந்த எதிர்பாராத action sequenceல் டெம்போ அதிகமாகி, மிலிந்த் சாகும்போது கூடவே சாகிறது. அப்புறம் படம் ஒரேடியாக படுத்து விடுகிறது.

சரத்தின் மகனுக்கு நோயென்று சீரியசாக ஆரம்பிக்கிறவர்கள் அதை அப்படியே மறந்துபோகிறார்கள். கடைசியில் மட்டும் சரத் ஒரு ஊசி போட்டு நமக்கும் சேர்த்து ஞாபகமூட்டுகிறார். அந்த sentiment episode தேவையற்றுவதும் கூட! தம்பதிக்குள்ளாக மனவருத்தம் வர வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.

கடைசி அரைமணி நேரம் ஆனாலும் ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது. தேவையில்லாமல் ஹைதரபாத்திற்கு எல்லோரையும் (நம்மையும்) இழுத்து சென்று, ஒரு பாட்டு பாடி, என்னமோ நடக்க போகிறது என்று பார்த்தால் செம காமெடியாக ஒரு கிளைமாக்ஸ்!

நாலே நாலு கதாபாத்திரங்கள், வித்தியாசமான ஆனால் சிக்கலான கதைக்களம் என நிறைய புதுமைகள் இருந்தாலும் logic ஒட்டைகள், குழப்பமான திரைக்கதை, waste ஆக்கப்பட்ட ஹிட் பாடல்கள் என படம் தள்ளாடுகிறது!

கௌதமின் வசனங்கள் கொஞ்சம் புதுமையாக இருக்கும். ஆனால் ஏனோ இந்த படத்தில் அது கொஞ்சம் missing. ஜோ இனிமேல் ஷாருக்கான் படமே பார்க்க மாட்டேன் என்று சொல்லுகிற காட்சியில் தியேட்டரே சிரிக்கிறது.

சரத் அப்படியே வெங்கியின் கதாப்பாத்திரத்தோடு பொருந்துகிறார். urban look Mr.Madrasக்கு ஜோராக இருக்கிறது. குழப்பமான கதாப்பாத்திரத்துக்கு தன்னால முடிந்த நியாயம் பண்ணியிருக்கிறார். அவரின் நூற்றுச் சொச்ச படங்களில் இதில் தான் police க்ளைமாக்சில் கூட வரவில்லை!

ஜோதிகா முதல் பாதியில் திடுக்கிட வைக்கிறார். என்னாங்கடா இது என்று பார்த்துகொண்டிருக்கையில் அந்த பீச் ரிசார்ட் காட்சியில் அசத்துகிறார். சரத்தை நம்பவைக்க முயல்வதும் அது நடக்காமல் போகிற திக் திக் கணங்களில் பிரமாதமாக score பண்ணுகிறார். அதற்கு பிறகு ஜோவின் இன்னொரு பக்கத்தை பிரமாதமாக காட்டப்போகிறார்கள், ஜோவும் பட்டையைக்கிளப்பப் போகிறார் என்று நினைத்தால்… உப்புசப்பில்லாமல் போகிறது படம். சொத்தை climaxல் ஜோ வேறு சேர்ந்து காமடி
பண்ணுகிறார்.

ஆண்ட்ரியா முதலில் ஒட்டாதது போல இருந்தாலும் உண்மை தெரிந்து கணவரிடம் வெடிக்கிற காட்சியில் ஜொலிக்கிறார். அவர் வீட்டை விட்டு காணாமல் போவது தான் கொஞ்சம் நெருடுகிறது. மிலிந்த் சோமனும் அசத்துகிறார். கௌதமின் டப்பிங் அவருக்கு பலம்.

கௌதமின் படங்களில் டெக்னீச்ஷியன்களின் ‘the best’ கண்டிப்பாக உண்டு. அர்விந்தின் காமிரா, கழுவி விட்ட கண்ணாடி போல அத்தனை துல்லியம்.

உண்மையில் இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை. இருந்தும் நான்கு நல்ல பாடல்கள். பாடல்களை படமாக்கிய விதம் யதார்த்தமாயிருந்தாலும் மெதுவாக செல்லும் படத்தை மேலும் puncture ஆக்குகிறது. பாம்பே ஜெயஸ்ரீ உருகும் அந்த பாடலை காண என்னென்ன கற்பனையோடு எல்லாரும் வந்தார்களோ? அவர்களின் உறவில் ஏதோ மர்மம் உண்டு என்பதை விளக்க co-dancers அன்னியன் ஸ்டைல் costume, முகமூடி எல்லாம் போட்டு ஆடுவது அமெச்சூர் ஐடியா. என்னாச்சு கௌதமுக்கு?

முதல் பாதியில் ஹாரிஸும் கடுப்பாகிவிட்டார் போல. மிலிந்த் வந்த பிறகே ரீ-ரெகார்டிங் களை கட்டுகிறது.

சோதனை முயற்சியும் வேண்டும் commercial வெற்றியும் வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார் கௌதம். சோதனை முயற்சிக்கு மட்டும் தாரளமாய் பாராட்டுக்கள்.

Written by aravind

பெப்ரவரி 18, 2007 இல் 2:45 பிற்பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

கவித்தூரிகை 6

3 மறுமொழிகளுடன்

Guitarist

மௌனத்தின் இசை

 

தினமும் இரவு முழுக்க
மனதை மயக்கும்
ரம்மிய ஒளிவெள்ளத்தில்
அந்த விடுதியில் இசைக்கும்
கிட்டார் கலைஞனாய்
நான் இருந்திருக்கலாம்.
பேசும் திறனற்ற நான்
என்னை வெளிப்படுத்த இயலாது
என்று நினைப்பவர்களிடம்
இல்லையென்று
இசைத்துச் சொல்லியிருப்பேன்.

தினமும் இரவை
இசையோடு வரவேற்றிருந்திருப்பேன்.
கிட்டாரின் தந்திகளுக்கு மட்டும்
என் காதலை அறிமுகப்படுத்தியிருப்பேன்.

என் மௌனங்களை
இசைத்துப் பார்த்திருப்பேன்.
சில கேள்விகளுக்கு
பதிலாய் இசைத்திருப்பேன்.

தனிமை நதியை
இசைப் படகில்
கடந்திருப்பேன்.
மழையோடு சேர்ந்து
வாசித்திருப்பேன்.

என் ரகசியங்களை
இசையாக ஒலிபரப்பியிருப்பேன்.
என்னையே இசையாக
மொழிபெயர்த்திருப்பேன்.

ஏதும் ஆகாததால்
இன்றைய பொழுதையும்
எப்போதும் போல
கழிக்கிறேன்.

Written by aravind

பெப்ரவரி 13, 2007 இல் 5:19 பிற்பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது