Archive for நவம்பர் 2006
கவித்தூரிகை 5

இருள் – சில குறிப்புகள்
இருள்
ஒரு கறுப்பு நதி
அதில்
மூழ்கிய பின்
நானே இருள்
இருளே நான்.
இருள்
கடவுளின் தன்மை.
அதற்கு நீ நான்
அவன் அவள் அது
என்றெதுவுமில்லை
எல்லாமே இருள் தான்.
இருள்
உணர்வுகளின் களம்.
இருளைக் கடக்கையில்
விரல் பற்றுதல் போல
ஆறுதல் தருவது
உலகில் வேறெதுவுமில்லை
இருளில் விடப்படும்
துளி கண்ணீர் போல
துயரம் தருவதும்
உலகில் வேறெதுவுமில்லை.
இருள்
அளக்கவியலாத
மாயம்.
குறைந்த இருளென்றோ
அதிகமான இருளென்றோ
எதுவுமில்லை.
இருள்
ஒரு வெளிச்சம்
அதில்
நான் அறிவது
எனக்குள் இருக்கும்
நிஜமான நான்.