சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for செப்டம்பர் 2006

கவித்தூரிகை 4

4 மறுமொழிகளுடன்

யாரது
எனக்குப்
பிடித்த வரிகள்
ஏற்கனவே
அடிக்கோடிடப்பட்டுள்ளது

எனக்குப்
பிடித்த பக்கங்களின் முனை
ஏற்கனவே
மடிக்கப்பட்டுள்ளது.

சிந்தனையில் என்னை
ஆழ்த்திய பக்கங்களில்
நான் செய்வது போலவே
ஏற்கனவே கிறுக்கப்பட்டுள்ளது.

யாரது
எனக்கு முன்னால்
இந்த நூலகத்துப் புத்தகத்தைப்
படித்தது.

Written by aravind

செப்டம்பர் 23, 2006 இல் 8:06 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

சில நேரங்களில் சில மனிதர்கள்

without comments

peopleஉலகிலேயே மனிதர்களைப் போல சுவாரசியமான நம்மை மகிழ்விக்கக்கூடிய ஆச்சர்யப்படுத்தக்கூடிய வெறுப்பேற்றக்கூடிய சலிப்பேற்றகூடிய விலங்கு, வஸ்து, பொருள்… என்று எதுவுமே இல்லை. எத்தனை விதம் எத்தனை ரகம்..அப்படி நான் கண்ட சில மனிதர்களைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். இவர்களை எப்படி சமாளிப்பது என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்!

டௌட் குருவிகள்: எப்போதெல்லாம் சந்தேகம் கேட்க வேண்டுமோ அப்போதெல்லாம் கேட்காமல் எக்ஸாம் ஹாலுக்கு வெளியே பாவமாய் பேந்த பேந்த முழித்தபடி இருக்கும் உங்களை குறிவைத்து தேடி வரும் இந்த குருவிகள்! ஒரே ஒரு கேள்வி! அதிலேயே நீங்கள் காலி! “நிஜமாகவே நாம் ஒழுங்காக படித்தோமா”, “எழுத ஆரம்பித்ததும் எல்லாம் நினைவுக்கு வருமா” என்றெல்லாம் நீங்கள் தவிப்பதைக் கூட காணக் காத்திருக்காமல் அடுத்த ஆளைத் தேடி அடுத்த டௌட்டைக் கேட்பார்கள். நீங்கள் பதிலை யோசித்து யோசித்து, தெரியாமல் பீதியில் நொந்து நூலாகி, வேர்த்து ஒழுகி, டென்ஷனில் வழக்கம் போல எக்ஸாமில் சொதப்பி “வாழ்வே மாயம்” பாடிக்கொண்டு வெளியே வரும்போது, அதே டௌட் குருவி உங்களிடம் எக்ஸாம் நன்றாக எழுதிய கதையை மூச்சு விடாமல் சொல்லி வயிற்றெரிச்செலை நன்றாக கொட்டிக்கொள்வார்கள். இவர்களை என்ன செய்யலாம்???

மாடர்ன் மந்திரவாதிகள்: ஏதாவது சமஸ்கிருத ஸ்லோகம் அல்லது மந்திரத்தை தேடிப்பிடித்து அதை எஸ்.எம்.எஸிலோ ஈ-மெயிலிலோ வேலை வெட்டி இல்லாமல் டைப் செய்து “இதைப் பத்து பேருக்கு அனுப்பு” பதினைந்து முறை சொல்லு என்று மிரட்டுவார்கள். இதை செய்யாததால் முனுசாமி ரத்த வாந்தி எடுத்து செத்தான், பத்து பேருக்கு அனுப்பிய மங்கம்மாவின் சபதம் நிறைவேறியது என்றெல்லாம் ப்ரூஃப் காட்டுவார்கள். இதில் காமெடி என்னவென்றால் இந்த “மந்திரவாதிகள்” பெரும்பாலும் கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுபவர்களாக இருப்பார்கள். எக்ஸாம் சமயத்தில் இந்த மந்திரவாதிகள் எக்ஸாமில் கப் வாங்க சாபம் வேறு கொடுப்பார்கள். இதில் சில சைக்கோக்கள் வேறு உண்டு. அம்மா நன்றாக இருக்கவேண்டுமென்றால் இதை உடனே அனுப்பு என்று கெடு விதித்து சோதிப்பார்கள். எப்படி “ஜீபூம்பா” சொல்லி இவர்களை நாயாகவோ பூனையாகவோ மாற்றுவது???

திகில் சைக்கியார்ட்ரிஸ்ட்கள்:
காலையிலே அதிசயமாக சீக்கிரமாக எழுந்து அதிசயமாக குளித்து தோய்த்த சட்டையெல்லாம் போட்டு எல்லாரிடமும் சிரித்து சிரித்து பேசி, “இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கோம்” என்று நினைக்கும்போது இந்த “சைக்கியார்ட்ரிஸ்ட்கள்” நம் எதிரே வந்து கேட்கிற முதல் கேள்வி, “ஏன் ஒரு மாதிரியா இருக்கே??”. நீங்கள் “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே” என்று சொன்னாலும் தொடர்ந்து தங்களுடைய இலவச “கன்ஸல்டேஷனை”த் தொடங்குவார்கள். “மனசு சரியாயில்லையா??”, “எதுவாயிருந்தாலும் சொல்லிடு! மனசு லேசாயிடும்”, “உள்ளுக்குள்ளேயே வெச்சுகிட்டா நோய் தான் வரும்!” என்றெல்லாம் லெக்ட்சர் அடிப்பார்கள். இவர்களது “அப்பாய்ன்மெண்ட்டை” எப்படி கேன்ஸல் செய்வது??? ப்ளீஸ் சொல்லுங்களேன்!

ஸ்ட்ரெய்ட் – ஃபார்வர்ட் சாப்பாட்டு ராமன்கள்: இந்த ஸ்ரெய்ட் ஃபார்வர்ட் பேர்வழிகளே கொஞ்சம் டேஞ்ஜர். நல்ல விஷயங்களை மட்டும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டாக சொல்லவே மாட்டார்கள். இந்த சாப்பாடு ராமன்கள் இப்படி ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டாக இருப்பது உங்கள் வீட்டுக்கு வரும்போது, உங்கள் அம்மா ஒரு பேச்சுக்கு, “என்ன சாப்பிடரே??” என்று கேட்கும்போது!! இவர்கள் யார் யார் வீட்டில் என்ன என்ன தீனி நன்றாக இருக்குமென ஒரு லிஸ்ட்டே வைத்திருப்பார்கள். அதன் படி உங்கள் அம்மாவின் தலையில் என்ன தீனி விழுகிறதோ அதை செய்து தரும்படி கேட்டுத் தொலைப்பார்கள். கூடவே “உங்கள மாதிரி அதை யாரு ஆண்ட்டி செய்ய முடியும்??” என்று அசிங்கமாக ஐஸ் வைப்பார்கள். அம்மா என்ன செய்ய முடியும்? அதை செய்து தந்து விட்டு , “இந்த வயசில் இப்பிடி தான் சாப்பிடனும்” என்று பாராட்டுவார்கள்! வேறு வழி? இந்த சாப்பாட்டு ராமன்களை எப்படி வறுத்து பொரித்து எடுப்பது???

“க்ளிண்ட்டன்” அங்கிள்ஸ்: க்ளிண்ட்டன் என்று சொன்னதும் ரொம்ப ஒவராக கற்பனை செய்ய வேண்டாம்! இவர்கள் 50ஐ தாண்டிய, நிறைய சொத்து சேர்த்து வைத்து, பெரிய பங்களா கட்டிய, மகன் மகள் பேரன் பேத்தி எல்லோரையும் பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த, இப்பொது இந்தியாவில் அமெரிக்க வாழ்க்கையை வாழ முயற்சித்துக் கொண்டு பெர்முடாஸ் போட்டுக்கொண்டு சுற்றுபவர்கள். ரிடையர் ஆனவர்கள். ஆனதிலிருந்து தெரு நாய், தெரு விளக்கு அஸ்ஸோஸியேஷன் மீட்டிங், அப்பார்ட்மெண்ட் பிரச்சினை போன்றவற்றில் எல்லாம் “திடீர்” ஆர்வமும் அக்கறையும் வரும். நாளெல்லாம் அமெரிக்கா கதையே பேசி அறுப்பார்கள். ஹிந்து பேப்பர் தான் இவர்களுக்கு கவச குண்டலம். ஆங்கிலத்தில் இவர்கள் பேசுவதைக் கேட்டால் தலை லேசாக சுற்றுவது போல இருக்கும். போதாத குறைக்கு நம்மை பார்க்கும்போதெல்லாம் “அப்பிடியே என்ன சின்ன வயசில பாத்தது மாதிரியே இருக்கு” என்று வேறு சொல்லுவார்கள். ஏன் அங்கிள்!! உங்க நிலைமை அவ்வளவு மோசமாவா இருந்துச்சு???

இடம் தெரியாத இம்சைகள்: இறங்கவேண்டிய இடத்தின் பெயரை மட்டும் கஷ்டப்பட்டு தெரிந்துக்கொண்டு பேருந்தில் ஏறுகிற இம்சை இவர்கள். டிக்கெட் வாங்கும்போதே கண்டக்டரிடம் இந்த ஸ்டாபிலிருந்து எத்தனாவது ஸ்டாப், ஆக்ஸிலேட்டரில் ஏறி நின்று ஓட்டினால் எவ்வளவு நேரத்தில் போகலாம் என்றெல்லாம் கேட்டு வைப்பார்கள். அதோடு நிறுத்தாமல் பக்கத்து ஸீட்டில் இருப்பவர், பக்கதிலே நிற்பவர், படிக்கட்டில் நிற்பவர் என அனைவரிடமும் சொல்லிவைப்பார்கள். அப்படியும் திருப்தியில்லாமல் ஜன்னல் வழியாக தலை கால் கை எல்லாவற்றையும் வெளியே விட்டு எல்லா கடைகளின் நேம் போர்டையும் படித்தபடி வருவார்கள். இறங்க வேண்டிய இடம் வந்ததும் சொன்னால், “இதுவா?? ஒரு பச்சை கலர் டீக்கடை இருக்கும்னு சொன்னாங்களே??”,”இவ்ளோ சீக்கிரம் வராதே??” என்றெல்லாம் கேட்பார்கள். இவர்களுக்கென்று தனி “இடம் தெரியாத இம்சைகள்” ஸ்பெஷல் விட்டால் தான் உண்டு!!

இன்னும் எத்தனையோ… எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருப்பவர்கள், எப்போதும் அட்வைஸ் செய்பவர்கள், பாட்டு பாடிகிறேன் பேர்வழி என்று கண்டபடி கத்துபவர்கள்… இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். என்னதான் நக்கலடித்தாலும் இவர்கள் எல்லாம் இல்லையென்றால் செம போர் அடிக்கும். அதான் சொன்னேனே, மனிதனைப் போல சுவாரசியமான விலங்கு,வஸ்து,பொருள் எதுவுமே இல்லை என்று. சரி தானே??

கொசுறு: நிச்சயம் ஜெயகாந்தன் இந்த பதிவை படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் அவருடைய தலைப்பை சுட்டுக் கொண்டேன்.

Written by aravind

செப்டம்பர் 11, 2006 இல் 1:34 பிற்பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது