கவித்தூரிகை 3
கடவுளை சந்தித்த கதை
மல்லிகைப் பந்தலிலிருந்து ஒரு
மல்லிகை உதிர்வது போல
உலகில் எந்த சலனமும் ஏற்படுத்தாமல்
இறந்து போனாள்
எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தி.
அவள் இறப்பின் அநியாயம்
எங்கள் தூக்கத்தைக் கெடுத்ததால்
கடவுளிடம் முறையிட முடிவு செய்தோம்.
அவளின் பெற்றோரை அழைத்துச்சென்றோம்.
அவளின் தாய் கடவுளிடம் காட்ட
தன்னோடு நிறைய பொருட்களை அள்ளிக்கொண்டாள்.
இறந்துபோனவள் வென்ற பரிசுக்கோப்பைகள்
சான்றிதழ்கள் அவள் எழுதிய கவிதை
அவள் பாதி பின்னிய ரோஸ் நிற ஸ்வெட்டர் இன்னும் பல.
எங்களோடு பிடிவாதமாய் வந்தது
அவள் வளர்த்த நாய்.
நண்பர்கள் ஆசிரியர்கள் பக்கத்து வீட்டார்
என எல்லோரும் சென்றோம்.
கடவுளின் வீட்டை அடைவதற்குள்
பார்வை நேரம் முடிந்திருந்தது.
காவலாளிக்கு ஐந்து ரூபாய் தந்து
உள்ளே சென்றோம்.
கடவுள் உணவருந்திக்கொண்டிருந்தார்.
நிலைமையின் அவசரம் கருதி
நான் பேசத்தொடங்கினேன்.
நான் பேசப்பேச அந்தத் தாய் அழத்தொடங்கினாள்.
கடவுளின் மனைவி உச்சுக்கொட்டினாள்.
அவள் செய்த நல்லவை
அவளின் குணம் எல்லாம் சொன்னேன்.
திடீரென குரல் உயர்த்தி அவளை
சாகடித்தது என்ன நியாயம் என்று கேட்டேன்.
கடவுள் நிமிர்ந்து பார்த்தார்.
நடந்தவை நடந்தவையே என்றார்.
நியாயம் கேட்டல் தன் சபையில் இல்லை என்றார்.
அவளின் காலம் முடிந்தது என்றார்.
இது அவளின் பெற்றோர் செய்த பாவத்தின் பலன் என்றார்.
நீங்கள் போகலாம் என்றார்.
இறந்தவளின் காதலன் கதறத் தொடங்கினான்.
நண்பர்கள் எல்லோரும் விசும்பினர்.
அந்தப் பெற்றோருக்கு இதை விட
கொடிய தண்டனை ஏதும் இல்லை என்றேன்.
ஒரு உயிரை தண்டிக்க இன்னொரு
உயிரை எடுத்தல் நியாயமில்லை என்றேன்.
கடவுள் என்னை முறைத்தார்.
காவலாளியை அழைத்து எங்களை
வெளியேற்றச் சொன்னார்.
எதிர்த்து பேச எங்களுக்கு தைரியமில்லை.
எல்லோரும் செய்வதறியாது நின்றோம்.
கடவுள் உள்ளே செல்ல எத்தனித்தார்.
அப்போது குரைக்கத் தொடங்கியது
அவளின் நாய்.
அனைவரும் அதிர்ச்சியில் அதைப் பார்த்தோம்.
அது வெறிப்பிடித்தது போல குரைத்தது.
விடாமல் குரைத்தபடி
அங்கேயே செத்து விழுந்தது.
அடர்ந்த ஒரு மௌனம்
அங்கே படர்ந்தது.
சிறிது நேரம் நாயைப் பார்த்த
கடவுள் மெதுவாக உள்ளே சென்றார்.
விடைதெரியாத ஒரு புதிரோடு
நாயைத் தூக்கிக்கொண்டு
அனைவரும் வெளியேறினோம்
அங்கே இன்னொரு கும்பல்
அழுதபடி நின்றிருந்தது.
ஒருவன் காவலாளியிடம்
நான்கு ரூபாய்க்கு
பேரம் பேசிக்கொண்டிருந்தான்.
அன்றிரவும் நாங்கள்
தூங்கவில்லை.
கடவுளும் அன்று
தூங்கியிருக்கமாட்டார்.

Aravind,
kadavul is an imaginary character of all religions. I dont belive godness.
Ambikadevi
Ambikadevi
December 20, 2006 இல் 5:33 மு.பகல்
Ambika,
I too dont believe much in god… tats y i hav tried to portray him close to human.. having a home… with secutiry guards n all……. thanx for ur comments…. thanx for ur encouragement……….
Aravind.
Aravind
ஜனவரி 16, 2007 இல் 7:55 மு.பகல்
இன்னைக்குத் தான் முதன் முதல் உங்கள் பதிவைப் பார்க்கிறேன். ஒன்னு விடாமல் எல்லா ஆக்கங்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன்..நல்லா எழுதி இருக்கீங்க..சிறுமழைங்கிற பதிவுப் பேரே கவித்துவமா நல்லா இருக்கு. எல்லா கவிதைகளுக்கும் கவித்தூரிகைன்னு தலைப்பு வைக்காம அந்தந்த கவிதையின் தலைப்பை வைத்தா தேடிப்பிடித்துப் படிக்க வசதியா இருக்கும். வேண்டுமானால், அடைப்புக்குறிக்குள் கவித்தூரிகைன்னு எழுதிக்கலாம்.
ரவிசங்கர்
செப்டம்பர் 16, 2007 இல் 11:48 மு.பகல்