சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for ஜூலை 2006

பொழுது கண்டு இரங்கல்

ஒரு மறுமொழியுடன்

கல்லூரி தொடங்கியதிலிருந்து நிறைய நேரம் கிடைக்கிறது. :-) அப்படி கிடைத்த நேரத்தில் இதை எழுதினேன்.

ஒரு கொலைகாரன் போல்
பதுங்கியபடி என் ஜன்னலில்
இந்த மாலை வருகிறது.
உன் நினைவின் பாரத்தை
பெருக்கியபடி பெரும் இன்னலில்
தள்ளி என்னைக் கொல்கிறது!

இக்குட்டி கவிதையை வேறு விதமாக எழுதினேன்….

நீயில்லாத போதும்
இந்த மாலை
வெட்கமில்லாமல் மின்னும்.
ஏற்கனவே வாடும்
என்னுயிரை
மிச்சமில்லாமல் தின்னும்!

நிற்க!! நிற்க!!

இதெல்லாம் என்ன என்கிறீர்களா??

அத்தியாயம் 123: பொழுது கண்டு இரங்கல்.
குறள் 1224:
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

இல்வழி – இல்லம் வழியாக; வீட்டு வழியாக
கொலைக்களம் – கொலை நடைபெறும் இடம்(scene of crime!!)
ஏதிலர் – கொலைகாரன்(executioner)

அதாவது கொலை நடைபெறும் இடத்திற்க்கு கொலைகாரன் வருவது போல காதலர் வீட்டிற்க்கு மாலை வருமாம்! என்ன கற்பனை!! இதை சுருக்கமாக எளிமையாக சொல்ல முயற்சித்தது தான் நீங்கள் முதலில் படித்தது!! என்ன இருந்தாலும் அந்த குறளின் அழகு வரவில்லை!! வள்ளுவர் the great!!

Written by aravind

ஜூலை 27, 2006 இல் 11:51 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

கவித்தூரிகை 3

3 மறுமொழிகளுடன்

கடவுளை சந்தித்த கதை

மல்லிகைப் பந்தலிலிருந்து ஒரு
மல்லிகை உதிர்வது போல
உலகில் எந்த சலனமும் ஏற்படுத்தாமல்
இறந்து போனாள்
எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தி.

அவள் இறப்பின் அநியாயம்
எங்கள் தூக்கத்தைக் கெடுத்ததால்
கடவுளிடம் முறையிட முடிவு செய்தோம்.
அவளின் பெற்றோரை அழைத்துச்சென்றோம்.

அவளின் தாய் கடவுளிடம் காட்ட
தன்னோடு நிறைய பொருட்களை அள்ளிக்கொண்டாள்.
இறந்துபோனவள் வென்ற பரிசுக்கோப்பைகள்
சான்றிதழ்கள் அவள் எழுதிய கவிதை
அவள் பாதி பின்னிய ரோஸ் நிற ஸ்வெட்டர் இன்னும் பல.

எங்களோடு பிடிவாதமாய் வந்தது
அவள் வளர்த்த நாய்.
நண்பர்கள் ஆசிரியர்கள் பக்கத்து வீட்டார்
என எல்லோரும் சென்றோம்.

கடவுளின் வீட்டை அடைவதற்குள்
பார்வை நேரம் முடிந்திருந்தது.
காவலாளிக்கு ஐந்து ரூபாய் தந்து
உள்ளே சென்றோம்.
கடவுள் உணவருந்திக்கொண்டிருந்தார்.

நிலைமையின் அவசரம் கருதி
நான் பேசத்தொடங்கினேன்.
நான் பேசப்பேச அந்தத் தாய் அழத்தொடங்கினாள்.
கடவுளின் மனைவி உச்சுக்கொட்டினாள்.

அவள் செய்த நல்லவை
அவளின் குணம் எல்லாம் சொன்னேன்.
திடீரென குரல் உயர்த்தி அவளை
சாகடித்தது என்ன நியாயம் என்று கேட்டேன்.

கடவுள் நிமிர்ந்து பார்த்தார்.
நடந்தவை நடந்தவையே என்றார்.
நியாயம் கேட்டல் தன் சபையில் இல்லை என்றார்.
அவளின் காலம் முடிந்தது என்றார்.
இது அவளின் பெற்றோர் செய்த பாவத்தின் பலன் என்றார்.
நீங்கள் போகலாம் என்றார்.

இறந்தவளின் காதலன் கதறத் தொடங்கினான்.
நண்பர்கள் எல்லோரும் விசும்பினர்.
அந்தப் பெற்றோருக்கு இதை விட
கொடிய தண்டனை ஏதும் இல்லை என்றேன்.
ஒரு உயிரை தண்டிக்க இன்னொரு
உயிரை எடுத்தல் நியாயமில்லை என்றேன்.
கடவுள் என்னை முறைத்தார்.
காவலாளியை அழைத்து எங்களை
வெளியேற்றச் சொன்னார்.

எதிர்த்து பேச எங்களுக்கு தைரியமில்லை.
எல்லோரும் செய்வதறியாது நின்றோம்.
கடவுள் உள்ளே செல்ல எத்தனித்தார்.
அப்போது குரைக்கத் தொடங்கியது
அவளின் நாய்.

அனைவரும் அதிர்ச்சியில் அதைப் பார்த்தோம்.
அது வெறிப்பிடித்தது போல குரைத்தது.
விடாமல் குரைத்தபடி
அங்கேயே செத்து விழுந்தது.

அடர்ந்த ஒரு மௌனம்
அங்கே படர்ந்தது.
சிறிது நேரம் நாயைப் பார்த்த
கடவுள் மெதுவாக உள்ளே சென்றார்.

விடைதெரியாத ஒரு புதிரோடு
நாயைத் தூக்கிக்கொண்டு
அனைவரும் வெளியேறினோம்
அங்கே இன்னொரு கும்பல்
அழுதபடி நின்றிருந்தது.
ஒருவன் காவலாளியிடம்
நான்கு ரூபாய்க்கு
பேரம் பேசிக்கொண்டிருந்தான்.

அன்றிரவும் நாங்கள்
தூங்கவில்லை.
கடவுளும் அன்று
தூங்கியிருக்கமாட்டார்.

Written by aravind

ஜூலை 14, 2006 இல் 9:54 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது

பேருந்தின் சுவாரசியங்கள்

2 மறுமொழிகளுடன்

பயணங்கள் எப்பொதுமே சுவையானவையாக சிலரால், மிகச் சிலரால் அறியப்படுகிறது. எனக்குப் பயணங்கள் பெரிதாக ருசிப்பதில்லை. அவற்றை வெறுப்பதும் இல்லை. வாழ்கையில் பல விஷயங்கள் எனக்கு அப்படித்தான். பயணங்கள் பலரின் ( கவனிக்க: பணமும் நேரமும் உள்ள பலரின்) பொழுதுபோக்காக இருக்கிறது. குறிப்பாக ரயில் பயணங்கள். ரயிலைப் பற்றியும் ரயில் பயணங்களைப் பற்றியும் பிறிதொரு முறை பேசலாம். இப்போது இன்று நான் கதையளக்கப் போவது பேருந்துப் பயணங்களைப் பற்றி….

பெருநகரங்களில் பேருந்து பயணங்கள் அவ்வளவு சுவாரசியமானதாக இருக்குமா என்று தெரியவில்லை… நான் சிறு வயதில் இருந்தது டவுனில். அங்கிருந்து என் பள்ளிக்கூடத்திற்கு தினமும் மூன்று மணி நேரம் வீதம் எட்டு வருடங்கள் பேருந்தில் பயணம் செய்திருக்கிறேன்! பேருந்தின் அதிர்வு அதன் இஞ்ஜின் சத்தம் அதன் திடீர் நிறுத்தஙள் எல்லாம் எனக்கு அத்துப்படி.

நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து செல்வதால் பள்ளி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் ஒரு extended வகுப்பு போல இருந்தன அந்த பயணங்கள். பேருந்து கூட்டமாக வந்தாலும் சலிப்பாக இருக்காது. உண்மையில் கூட்டம் அதிகம் இருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. கூட்டம் இல்லையேல் நிம்மதியாக தூங்கலாம். எப்படியிருந்தாலும் சந்தோஷமே.

பேருந்தின் முதல் சுவாரசியம் சீட் பிடித்தல். அது மிகப்பெரிய கலை. முதலில் உட்கார்ந்துகொண்டு வருபவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். இறங்கப் போகிறவர் யார் என்பதை பெரும்பாலும் அவர்களின் முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். சில முகங்கள் சலனமே காட்டாமல் தேமே என்று இருக்கும். பெரும்பாலான முகங்களில் ஒரு அவஸ்தை தெரியும். இந்த கூட்டத்தில் எப்படி இறங்குவது என்ற அவஸ்தை தான். பெரும்பாலான உலக மகா பொதுஜனங்கள் இறங்கும் இடத்திற்கு முன்னரே ஒரு மாதிரி நெளிய ஆரம்பிப்பார்கள். ஆண்கள் தலைவாரிக்கொள்வது பெல்ட் சரிசெய்வது போன்றவற்றை செய்வார்கள். பெண்களாயின் கொண்டுவந்த பைகளை சரிபார்த்தல் சீட்டுக்கு அடியில் இருக்கும் பைகளை பெரும் சாகசம் செய்து எடுத்தல் போன்றவற்றை செய்வர். இதை எல்லாம் கவனித்து நாங்கள் அந்த குறிப்பிட்ட சீட்டை ரவுண்டு கட்டுவோம். அதைப் பிடித்த பிறகு மற்ற பயணிகளின் கனல் பார்வை பரிசாய்க் கிடைக்கும். இன்னும் சிலர் இலவச இணைப்பாக அன்பாக “பாராட்டுவார்கள்”. எங்களை மட்டுமல்ல எங்கள் பள்ளியை எங்களுக்கு இலவச bus pass வழங்கிய government, எங்களை ஏற்றிய கண்டக்டர் எங்கள் “மாணவ சமுதாயம்” (“இந்த காலத்து பசங்களுக்கு sir…” என்று யாராவது ஆரம்பிப்பார்கள்) என சகலமானவருக்கும் இலவச அர்ச்சனை கிடைக்கும்.

அடுத்த சுவாரசியம் எங்கள் பொக்கிஷமான school bag. மெட்ரிகுலேஷனில் படித்ததால் அதிபுத்திசாலிகளாகிய எங்களுக்கு கொஞ்சம் நிறையவே புத்தகங்கள். அந்த பெரிய bag-ஒடு கூட்டமான பேருந்தில் நாங்கள் ஏறினாலே அனைவருக்கும் வயிறு கலங்கி விடும். அந்த மாபெரும் பையால் அனைவரையும் ஒரு இடி!. தொப்பை இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். பையும் அவர்களின் தொப்பையும் ஒரு மல்யுத்தமே நடத்தும். மல்யுத்ததின் வெற்றி தோல்வியைப் பொறுத்து மீண்டும் கண்டக்டர் government மாணவ சமுதாயம் என அர்ச்சனை தொடங்கும்.

அடுத்தது சீட் கேட்டு தொல்லை பண்ணுபவர்கள். வயதானவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அப்படி யாரவது ஏறினால் பெரும்பாலும் யாராவது volunteer-ஆக இடம் கொடுத்துவிடுவார்கள். இந்த சீட் கேட்டு தொல்லை பண்ணும் கேடகரியில் எனக்கு அலர்ஜியே நடுவயதைச் சேர்ந்த குண்டுப் பெண்மணிகள் தான். நாங்கள் எவ்வளவு “தெம்பானவர்கள்” “சுறுசுறுப்பானவர்கள்” என்பதையெல்லாம் சொல்லி அறுப்பார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள அதே வயது ஆண்களும் ஜால்ரா தட்டுவார்கள். வேறொன்றுமில்லை.அவர்களுக்கு சீட் கிடைக்கவில்லையே என்ற வயிற்றெரிச்சல். சில நேரங்களில் அவர்களின் அறுவையும் புலம்பலும் தாள மாட்டாமலே இடம் கொடுத்துவிடுவோம். பின்னர் கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களின் பிரச்சினை புரிந்து அவர்கள் கேட்காமலே இடம் கொடுத்துவிடுவொம். இருந்தும் ஒரு சலிப்பு இருந்து கொண்டேயிருக்கும். இவர்களை யார் இவ்வளவு குண்டாக சொன்னதென்று.

எத்தனை சுவாரசியஙள் இருந்தாலும் ultimate சுவாரசியம் பேருந்துக்கே உரித்தான அந்த அறுவை மன்னர்கள் தான். பெரும்பாலும் நடுவயதைத் தாண்டியிருப்பவராக இருப்பார்கள். simple-ஆக ஒரு வெள்ளை சட்டை ஒரு dark pant. Files, tiffin box, waterbottle முதற்கொண்டு வேலைக்கு தேவையான அனைத்தையும் வைத்துக்கொள்ள வசதியாய் ஒரு bag . இவர்களுக்கு அரசியல் பேச சமவயது ஆட்கள் கிடைத்தால் நாம் escape! அதுவும் எதிர்கட்சியை சேர்ந்தவர் கிடைக்கவேண்டும். இல்லையேல் நாம் தான் அவர்களின் அன்றைய போணி. நம்மிடம் பேச இவர்களுக்கு நிறைய விஷயம் இருக்கும். இங்கிலிஷ் மீடியம் மாணவன் என்பதால் சிலர் ஆங்கிலத்தில் பேசி கொல்வார்கள்(“in 1966 i was”). நான் பெரும்பாலும் “ஒரு-அப்படியா-சந்தோஷம்” சிரிப்பு சிரித்து சமாளிப்பேன். இதில் சிலர் மாணவிகளிடம் வெகு பாசத்தோடு பழகுவார்கள். (“பாப்பா” இவர்களுக்கு மிகவும் பிடித்த சொல்!!) அந்த அறுவை மன்னர் நம் பள்ளியில் படித்து “உருப்பட்டவராய்” இருந்தால் நாம் காலி. அவர்களின் அன்றைய aothograph show-க்கு நாம் தான் prime audience! இந்த category-யில வேலைக்குப் போகாத கிராமத்து தாத்தாக்களும் உண்டு. அவர்களின் நோக்கமெல்லாம் இந்த மெட்ரிகுலேஷன் கல்வி முறையின் complete summary-யை நம்மிடம் கறப்பது தான். அவர்களுக்கு புரியும்படியாக சொல்வது என்பது மகா கடினம். இந்த category-யில பெண்கள் அறவே இல்லை என்று தான் நினைக்கிறேன். May be மேற்சொன்னவர்கள் இப்படி வீட்டிற்க்கு வெளியே ரம்பமானதிற்கு காரணமே அந்தந்த வீட்டு பெண்கள்தானோ என்னவோ. :-)

அடுத்தது பேருந்தில் தூங்கிவழியும் கும்பக்கர்ணர்கள். நிஜமாகவே கொடுத்து வைத்த ஆன்மாக்கள். நம்மூர் பேருந்தில் கூட இவர்களுக்கு தூக்கம் வருகிறது அல்லவா அதனால் நிச்சயம் கொடுத்து வைத்த ஆன்மாக்கள் தான். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நம் தோளில் சாய்ந்தபடி கனவு காண்பார்கள். முதலில் எல்லாம் எனக்கு அப்படி தோளில் விழுந்தால் என்ன செய்வது என்றே தெரியாமல் முழிப்பேன். இப்பொதெல்லாம் செம தெனாவட்டாக நடந்து கொள்கிறேன். அவர்கள் நம் தோளில் விழுந்து நாம் அவர்களை எழுப்பினால் ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் பாருங்கள்…. ஆஹா!

இப்படி பல சுவாரசியஙள்…. பல வருடஙள் இதனை ரசித்திருக்கிறேன்…. ஆனால் கல்லூரிக்கு வந்த பிறகு அதெல்லாம் போச்சு…. இப்பொது விடுமுறைக்கு வீட்டுக்கு போகும் போதெல்லாம் அதே வழியில் பேருந்தில் செல்வேன்… சில சமயம் அதே driver conductor -களை கூட பார்ப்பதுண்டு! அதே போன்ற மனிதர்கள்… ஆனால் இந்த school மாணவர்கள் ஏறுகிறார்கள் பாருங்கள்… பெரிய bag-உம் lunch bag-உம்…. அப்படியே நம்மை இடித்து கொண்டு செல்வார்கள்… சே சே சே… சரியான இம்சை… என்ன சொல்கிறீர்கள்??!!!! ஹா ஹா ஹா!!!

Written by aravind

ஜூலை 8, 2006 இல் 6:40 மு.பகல்

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது