சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

வாழ்க்கையை எழுதுதல்

மறுமொழி இடுக »

நாவல்களை நேரத்தைப் போக்கும் கருவியாக பார்த்திருந்த காலங்களில் மர்ம நாவல்களும் துப்பறியும் நாவல்களும் என் விருப்பத்துக்குரியவையாய் இருந்தன. துப்பறியும் நாவல்களே சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். பிறகு ‘AND THEN THERE WERE NONE’ மற்றும் ‘THE DA VINCI CODE’ ஆகிய நாவல்களைப் படித்த பின்னர் இவற்றைவிட சிறப்பான துப்பறியும் நாவல்களே இல்லை என்று முடிவு செய்தேன். பின்னர் இந்த எழுத்தாளர்கள் இன்னும் என்னத்தை தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது.

அந்த வியப்பைத் தீர்த்துக் கொள்ள துப்பறியும் களம் அல்லாத வேறு களத்தில் இயங்கும் நாவல்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது எனக்கு படிக்க வாய்த்தது JEFFREY ARCHERன் SONS OF FORTUNE. பாதி நாவலைப் படிக்கும் முன்னரே போதுமடா சாமி என்று ஆகிவிட்டது. அதன் பின்னர் இது போன்று நாவல்களைப் படிக்கவே கூடாது என்று எண்ணினேன். பிறகு ஒரு நண்பனின் பரிந்துரையின் பேரில் ஒரு கடைசி முயற்சியாக ARUNTHATI ROYன் THE GOD OF SMALL THINGS நாவலைப் படிக்கத் தொடங்கினேன். என் ஒட்டுமொத்த எண்ணத்தையும் மாற்றிவிட்டது அந்த முயற்சி.

1997ம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற நாவல் அது. இந்த நாவலுக்கு தராமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம்.

கடவுளின் மாநிலம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் நடைபெறுகிறது இந்த கதை. கொஞ்சம் கொஞ்சமாய் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு syrian கிறித்துவ குடும்பத்தின் கதை இது. அந்த குடும்பத்தில் பிறந்த இரட்டைக்குழந்தகளின் பார்வையில் பெரும்பாலான கதை சொல்லபடுகிறது. ரேஹல் மற்றும் எஸ்தா அந்த இரட்டையர்கள். அந்த குடும்பத்தில் அனைவரும் விசித்திரமான விதியினால் ஒவ்வொரு விதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒவ்வொருவரின் கதையும் நம்மை பாதிக்கும் அளவு உண்மையாக இருக்கிறது.

கடவுளின் மாநிலம் என்பதாலோ என்னவோ சமூகத்தின் சில தட்டு மக்கள் தங்கள் உயிரையும் உரிமையையும் பாதுகாக்க எப்போதும் கடவுளை வேண்டியபடி இருக்கிறார்கள். அவர்களை மேல்தட்டு மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை முகத்தில் அறைவது போல் சொல்கிறது நாவல்.

கதையின் மத்தியில் நிகழும் ஒரு மரணமும் அதை தொடர்ந்து நிகழும் ஒரு கொலையும் தான் கதையின் அடிநாதம். அந்த மரணங்களுக்குப் பிறகு கதையின் போக்கு என்ன? இது தான் நாவல். இதை ராய் சொன்ன விதம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். கதை பாதியில் துவங்கி பின்னோக்கியும் முன்னோக்கியும் ஒரே நேரத்தில் ஒரே சீராய் செல்கிறது. இவ்வாறு தெளிவாய் கதை சொல்ல அசாத்திய திறமை வேண்டும். அது ராயிடம் நிறையவே இருக்கிறது.

இந்த கதையில் யாரும் நல்லவர் என வெள்ளை நிறம் கொண்டவர்களும் கிடையாது தீயவர் என கறுப்பு நிறம் கொண்டவர்களும் கிடையாது. எல்லாரும் எல்லாம் கலந்த பழுப்பு நிறம் கொண்டவர்கள் தான்.அதுவும் சமூகத்தில் இருக்கும் பழுப்பு நிறம்.

இரட்டை குழந்தைகளின் தாய் அம்மு. பாட்டி மாமாச்சி. சின்ன பாட்டி கொச்சம்மா. பெரியப்பா சாக்கோ. பெரியம்மா மார்க்ரெட். மார்க்ரெட்-சாக்கோ மகள் சோஃபி. இரட்டையைர்களின் பிரியமான கீழ்ச்சாதியைச் சேர்ந்த வெலுதா. இவர்கள் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணத்திற்காக நெடுநாட்கள் உங்கள் நினைவில் இருப்பார்கள். ரேஹல் தாயை பிரிந்த பின்னர் அடங்காத பெண் ஆனதற்கோ, எஸ்தா தந்தையிடம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் மொத்தமாக பேசுவதை நிறுத்திவிட்டதற்கோ, சாக்கோ மார்க்ரெட்டை விவாகரத்து செய்துவிட்ட பின்னரும் கூட அவளின் இரண்டாம் கணவன் இறக்கும் போது அவளுக்கு ஆறுதலாய் இருப்பதற்கோ, கொச்சம்மா சாக்கோவின் உடல் இச்சையைத் தீர்க்கவேண்டி திருட்டுத்தனமாய் கீழ்ச்சாதிப் பெண்களை ஏற்பாடு செய்வதற்கோ, சோஃபி எப்போதும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதற்கோ, எதற்கோ இவர்கள் உங்கள் நினைவில் நிச்சயம் நிற்பார்கள்.

எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் அம்மு, வெலுதா, ரேஹல் மற்றும் எஸ்தா. அம்மு கணவனை இழந்த பின்னர் தாய்வீட்டில் எந்த விருப்புவெறுப்புகளும் இல்லாமல் குழந்தைகளுக்காக வாழ முற்படுகிறாள். அவளின் ஒரே காதல் பொய்யாகிப் போனதால் அவளுக்குள்ளே இருக்கும் காதல் யாருக்கும் தரப்படாமல் தேங்கிப்போகிறது. அந்த தேங்கிய காதலை பெறுகிறான் வெலுதா. அங்கே சாதியை விட காதல் முக்கியமாகிறது. எனோ அதை கள்ளக்காதல் என்று சொல்ல மனம் வரவில்லை. திருமணம் பொய்த்த பின்னர் வருகிற காதல் உண்மையாய் இருப்பின் என்ன தவறு. மனத்திற்கு சாதி உண்டா என்ன? வெலுதாவையும் இழந்து எஸ்தாவை கணவனிடம் இழ்ந்து பிழைப்புக்காக ரேஹலையும் பிரிந்து பின்னர் ஒரு மூன்றாம் தர விடுதியில் இறந்து போகிறாள். அவளின் GOD OF SMALL THINGS தந்த சிறு சந்தோஷங்களை தவிர வேறு எதுவும் அந்த வாழ்க்கையில் அவள் பெற்றதாகத் தெரியவில்லை.

வெலுதா தான் அந்த GOD OF SMALL THINGS. அம்முவும் அவள் குழந்தைகளும் அந்த ஏய்மனம் வீட்டில் சுமையாக பாவிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படும் போது அவர்களின் சிறு சிறு சந்தோஷங்களை நிறைவேற்றும் கடவுளாக அவர்களிக்கு சிறு சிறு வரங்களைத் தரும் கடவுளாகிப் போகிறான். தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவன் மேல்சாதியைச் சேர்ந்த அம்முவுக்கும் அவளின் குழந்தைகளுக்கும் கடவுளாதலே வாழ்க்கையின் ரகசியமும் அதிசயமும். இதுவே நாவலின் மையக்கரு. வெலுதா அம்முவுக்கு அறிவிக்கப்படாத காதலனாகவும் ரேஹல்-எஸ்தாவுக்கு அறிவிக்கப்படாத த்ந்தையாகவும் இருந்து நெகிழவைக்கிறான். அதனால் தானோ என்னவோ அவனின் இறப்பு என்னை என்னவோ செய்தது.

ரேஹல்-எஸ்தாவின் வாழ்க்கை இப்படி ஆகியிருக்க வேண்டாம் என தோன்றுகிறது. அருந்ததி ராயின் sarcastic humourக்கு அவர்கள் மிகவும் பயன்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை இளவரசன் இளவரசியாக நினைத்துக் கொள்வது , வெலுதாவிடம் மிகுந்த அன்பு கொள்வது , அம்முவின் கண்டிப்பையும் மீறி அவளின் அன்பை புரிந்துகொள்வது என இயல்பாக இருக்கிறார்கள். தங்களின் தாய் கணவனில்லாமல் கஷ்டப்படுவதை கண்டு அவர்கள் வருந்தி உச்சக்கட்டமாக படம் பார்க்கச் சென்ற திரையரங்கில் கடை வைத்திருப்பவனை தங்களின் தந்தையாக இருக்க இயலுமா என்று கேட்பது ஒரே நேரத்தில் அதிர்ச்சி கொள்ளவும் வருத்தம் கொள்ளவும் கோபம் கொள்ளவும் செய்கிறது. அம்மாவை விட்டு பிரிவது ரேஹலை முற்றும் சீரழிக்கிறது. எஸ்தாவோ பேசவே மறந்து போகிறான். அம்முவின் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் இருவரும் சந்திக்கும் போது அன்னியர்கள் போல உணர்வது விதி. வீட்டு பரணில் இருந்து பழைய நோட்புக்கை எடுத்து ரேஹல் புரட்டுகிற இடம் ஒரு கவிதை.

அருந்ததி ராயிடம் எனக்கு பிடித்தது அவரின் நேர்மை. வாழ்க்கையை எழுதுதல் அவ்வளவு சுலபமல்ல. அம்மு-வெலுதாவின் காதல் தெய்வீகமானது காமம் இல்லாதது என்றெல்லாம் ப்ரஸ்தாபிக்காமல் அவர்களின் காதலில் கலந்த காமத்தை மெலிதாக விவரிக்கிறார். அம்மு தன் இளமை வீணாய் போவதை குளியலறைக்கண்ணாடி முன் நின்று தன் உடல் அழகை பார்த்துக்கொள்கிற காட்சி அத்தனை நிஜமாய் இருக்கிறது. இதையெல்லாம் தமிழில் எழுதினால் தமிழகத்தில் போராட்டமே வெடிக்கும். நிஜம் ஏனோ நமக்கு கசக்கிறது.

அருந்ததி ராயின் மொழிநடையும் அபாரம். குழந்தைகளின் உலகத்தை உணர்ந்து எழுதியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியை விளக்கவதும் வானிலையை விளக்குவதும் கதை மாந்தரின் மனநிலையை விளக்குவதும் அத்தனை புதிது அத்தனை ரசனை.அதை விளக்குவதை விட நீங்களே படிப்பது உத்தமம்.

இந்த நாவலைப் படித்த பின்னர் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏதோ நோயில் விழுந்தது போல உண்ர்ந்தேன். சோஃபி இறக்காமல் இருந்திருக்கலாம், இல்லை வெலுதா இறக்காமல் இருந்திருக்கலாம், எஸ்தா திருப்பி அனுப்பபடாமல் இருந்திருக்கலாம், அம்முவுக்கு ஒரு வாழ்க்கை அமைந்திருக்கலாம்…….. இன்னும் என்னென்னவோ தோன்றியபடி இருந்தது.

கதையின் முடிவை முதலேயே சொல்லி விட்ட பிறகும் கடைசி அத்தியாயங்களில் தொண்டை அடைக்கிறது. கதையின் முடிவு அப்படியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. கடைசி அத்தியாயம் வெலுதா கொலை செய்யப்படுவதற்கு முன் நாள். ரகசியமாக சந்திக்கிறார்கள் அம்முவும் வெலுதாவும். அவர்கள் காதல் கொள்வதையும் கலப்பதையும் அத்தியாயம் விவரிக்கிறது. அம்மு கிளம்பும் போது வெலுதா அவளிடம் மீண்டும் எப்போது சந்திப்பது என்று கேட்கிறான். அம்மு திரும்பி பார்த்து “நாளை” என்கிறாள். அதோடு முடிகிறது நாவல். அங்கே முடிகிற நாவல் உங்கள் மனதில் தொடர்ந்தபடி இருக்கும். உங்களை மீண்டும் படிக்க வைக்கும். கலங்க வைக்கும்.

நாவலின் பின் அட்டையில் ஒரு எழுத்தாளர் இவ்வாறு ஒரு விமர்சனக்குறிப்பு எழுதியிருக்கிறார் —- “இது போன்று மீண்டும் ஒரு கதை மீண்டும் சொல்லப்படாது”. அது அத்தனை உண்மை.

Written by aravind

மே 4, 2006 இல் 12:25 பிற்பகல்

புத்தகம் இல் பதிவிடப்பட்டது

மறுமொழி இடுக