சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

செல்லுலாய்ட் கவிதைகள் 1

ஒரு மறுமொழியுடன்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரு கண்கள் போல என்று சொல்வார்கள். ஆனால் இரு கண்களுமே பழுதடைந்த நிலையில் இருப்பது உண்மை. தமிழ் திரையுலகம் சற்று மாற்றம் கண்டிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் தொடர்ந்து வெளிவரும் மசாலா மற்றும் அபத்த காதல் கதைகளுக்கு நான் முதல் எதிரி. ஆங்கில திரைப்படத்தின் பிரம்மாண்டம் எனக்கு மிகவும் அன்னியமாகப் படும். அவ்வாறு எந்த திரைப்படத்தையும் காண முடியாமல் ஒரு மதிய வேளையிலே தொலைக்காட்சியை மேய்ந்து கொண்டிருந்த போது ZEE STUDIO தொலைக்காட்சியில் AMELIE என்ற ஃபிரென்ச் திரைப்படத்தைப் பார்த்தேன்.

அமீலி ஃப்ரான்ஸ் நாட்டில் தன் தந்தையோடு வசிக்கும் இளம்பெண். தான் உயிர் வாழ்வதை வெறும் உடல் அசைவுகளால் நிருபிப்பவள். தன் ஐம்புலன்களையும் ஆமை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல இவளும் தன்னை வெளிப்படுத்துவதே இல்லை. சிறு வயதில் நிகழ்ந்த அவள் தாயின் மரணம் அவளை இப்படி ஆக்கிவிடுகிறது. அந்த சம்பவம் அவளின் தந்தையின் மனநிலையையும் பாதித்துவிடுகிறது. அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருக்கிறது. எல்லாருடனும் பழக வேண்டும் என்ற ஆசையும் அவளுக்கு உண்டு. அவள் மிகவும் romantic ஆகவும் அவள் இருக்கிறாள். ஆனால் அவளின் கூச்சம் அவளை எதுவும் செய்ய அனுமதிப்பதில்லை. அவளின் introvert தன்மை அவளை
ஒரு ஆக்டோபஸ் போல சூழ்ந்து கொள்கிறது.

திரைப்படம் அவளின் இருபது வயதில் துவங்குகிறது. ஒரு காஃபி ஷாப்பில் வேலை செய்தபடி தன் மனநிலை சரியில்லாத தந்தையை கவனித்து கொண்டிருக்கிறாள். புதிதாக குடியேறும் ஒரு அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு மறைமுகமாக அவள் உதவி செய்வதை மெதுவாக படம் சொல்கிறது. துணையில்லாமல் இருக்கிற ஓவியம் வரையும் கிழவருக்கு ஆறுதலாக இருப்பது, கணவனை போரில் இழந்தபிறகும் அதை நம்பமறுக்கும் மனைவிக்கு கணவனைப் போல கடிதம் எழுதுவது (அதுவும் கணவனின் பழைய கடிதங்களை திருடி அதிலுள்ள வார்த்தைகளை வெட்டி ஒட்டி நகல் எடுத்து!), தன்னுடன் பணிபுரியும் பெண்ணின் காதலை அந்த ஜோடிக்கே தெரியாமல் சேர்த்து வைப்பது, வீட்டு வாசலில் உள்ள கடையில் எப்பொதும் திட்டுவாங்கும் வேலைக்காரப் பையனுக்கு உதவுதல்……. இன்னும் எத்தனை……… இவை அனைத்தும் ஒரு கடமை போல அவள் செய்கிறாள்….. ஒரு திருட்டை போல யாருக்கும் தெரியாமல் செய்கிறாள்….. அவளின் புத்திசாலித்தனம் நிச்சயம் உங்களை வியக்க வைக்கும்.

இவ்வளவு உதவிகள் செய்பவளுக்கு தனக்கு தானே உதவிகள் செய்து கொள்ளத் தெரியவில்லை. தன்னுடைய காதலைச் சொல்லதெரியாமல் போகிறது. அவள் காதல் ஜெயித்ததா இல்லையா என்பது இப்படத்தின் முடிவு.

இப்படத்தின் பெரும் பலமே அதன் கதாபாத்திரங்கள் தான். அமீலி மிக எளிமையாக சொல்லப் பட்ட ஒரு கடினமான கதாபாத்திரம். அவளின் காதலனாக வருகிற நினோ(nino) ஒரு விசித்திரமான பொழுதுபோக்கு உடையவன்.

ஃபிரான்ஸில் ரயில் நிலையம் , ம்யுசியம் போன்ற பொது இடங்களில் தானியங்கி photo shops இருக்கும். நாணயத்தை போட்டு தொலைபேசுவது போல அங்கே புகைப்படம் எடுத்து கொள்ளலாம். அப்படி எடுக்கும் போது சரியாக வராத நிழல்படங்கள் அங்குள்ள குப்பைத்தொட்டியில் போடப்படும் அல்லவா? அதில் வித்தியாசமான முகங்களை மட்டும் சேகரிக்கும் பழக்கம் உடையவன். அவ்வாறு சேகரிக்கும் போது ஒரு முகம் பெரும்பாலான் photo shopகளிலும் photoக்களிலும் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள் நாயகனும் அவனுடைய ஆல்பத்தை ரகசியமாக பார்க்கும் அமீலியும். அந்த முகத்துக்கு சொந்தக்காரனை கண்டுபிடிக்கும் ஆசை நினோவுக்கு இருப்பதை அறிந்து அதையும் அவனுக்கே தெரியாமல் உதவுகிறாள் அமீலி. அந்த முகம் யாருடையது என்பது மிகவும் ரசனையான கற்பனை.

முழுப்படமுமே ஒரு தெளிவான அழகியலுடன் அமைந்திருப்பது மிக ஆச்சர்யம். அமீலியின் புது வீட்டில் சுவற்றின் அடி ஓட்டையில் ஒரு pencil box இருப்பதும் அது அங்கு முன்னமே வசித்த ஒரு வயதானவரின் பால்யகால பொக்கிஷம் என்பதை கண்டுபிடித்து அதை அவரிடமே அவருக்கு தெரியாமல் கொண்டு சேர்க்கும் காட்சியில் அசாத்திய அழகும் அறிவும் வெளிப்படுகிறது. பின்னர் பார்வையற்றவருக்கு சாலையைக் கடக்க உதவும் காட்சி , ( இதைத்தான் கஜினி திரைப்படத்தில் அமெச்சூராக காப்பி அடித்திருந்தார்கள் ), நினோவை தன்னை தேடி அமீலி அலைய வைக்கும் காட்சி என பல காட்சிகள் visual treatஆக அமைந்திருந்தன. அமீலி சோகமாக இருக்கும் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் எதோ ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் எல்லொரும் அமீலிக்காக வருந்திப்பேசுவது போல அவளுக்கு தோன்றுவதும் அவள் உற்சாகமாக இருக்கும் தருணங்களில் தொலைக்காட்சியின் சாகச சண்டைக்காட்சியில் அவளே நடிப்பது போல உணர்வதும் ஒரு introvertன் மனநிலையை படம்பிடிக்கும் அசத்தலான காட்சிகள்.

சதா ஓவியம் வரைகிற அந்த தாத்தாவின் அனைத்து ஓவியங்களிலும் ஒரு பெண் தனிமையில் இருப்பது போன்று அவரே வரைந்து விட்டு பின்னர் அது யார், ஏன் இப்படி வரைந்தோம் என அமீலீயிடம் அவரே ஆச்சர்யப்படுகிறார். பின்னர் தான் வரையும் அந்த பெண் அமீலீ தான் என அவர் உணர்ந்து அமீலீயிடம் எதோ ரகசியம் இருக்கிறது என்று அவளை கண்காணிக்கிறார். பின் அவளைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிக்கிறார். அவள் காதலை சேர்த்துவைக்க அவர் என்ன செய்கிறார்
என்பது அழகான க்ளைமாக்ஸ்.

படத்திற்க்கு கூடுதல் பலம் இசையும் ஒளிப்பதிவும். கேமராவில் வண்ணங்களைத் தெளித்தது போல படம் colorfulஆக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் மனதில் அப்படியே பதிகிறது. ஒரு விதமான jazz இசை படம் நெடுக வழிந்துகொண்டேயிருக்கும். இப்பொது கூட நினைவு இருக்கிறது அந்த இசை.

அமீலீயாக நடித்திருப்பவர் audrey tautou ( தற்போது da vinci code திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ). கதாபாத்திரத்திக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரின் அமைதியான சிரிப்பு பெரிய plus. தொலைக்காட்சியைப் பார்த்து அவர் அழுவதும் அவரின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடையும் போது அவரின் கண்களில் தெரிகிற அந்த மின்னலும் என் நினைவில் இன்னும் இருக்கின்றன. நினோவாக நடித்திருப்பவர் mathiu. ஃபிரான்ஸின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் jean-pierre இப்படத்தை இயக்கயிருக்கிறார். 2001ல் வெளிவந்த இப்படம் 5 ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு – http://www.imdb.com/title/tt0211915/

படம் முடிந்த பின்னர் எனக்கு எதோ கனவு கண்டது போல இருந்தது. அந்த ஃபிரான்ஸ் சாலைகள், அந்த ஓவியத் தாத்தா, அமீலி, நினோ , காமிராவின் துல்லியம், அந்த jazz இசை.. எல்லாமும் அப்படியே நினைவில் இருக்கிறது. Le,Fabuleux destin d’Amélie Poulain என்ற இந்த படம் போன்று தமிழில் ஒரு படம் வராதா என்று ஏக்கமாக உள்ளது.

பிரம்மாண்டமான அரங்குகள் இல்லை, வில்லன் இல்லை, குத்துப்பாட்டு இல்லை, சண்டைக்காட்சிகள் இல்லை. திரைப்படம் போலவே தெரியவில்லை. யாரோ இயக்கி யாரோ நடித்து வெட்டி ஒட்டி செய்தது போன்று ஒரு உணர்வே இல்லை. ஒரு வாழ்க்கையை வாழ்பவர்க்கு தெரியாமல் படம் பிடித்தது போலே இருந்தது.

Written by aravind

மே 4, 2006 இல் 4:34 மு.பகல்

திரை இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. சொல்லப்படாத கதைகள் பல.. ஒரு படம் ஒருவரை எவ்வாறு பாதிக்கின்றது என்பதே அதன் வெற்றி.திரையில் எவ்வளவு நாட்கள் ஒடுவது அண்ணா பல்கலை மதிப்பெண் போல….–>

    Srikanth

    மே 6, 2006 இல் 2:46 மு.பகல்


மறுமொழி இடுக