சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

Archive for மார்ச் 2006

என்றும் இளைய(ராஜா) இசை – 1

6 மறுமொழிகளுடன்

இந்த வலைப்பூவில் (blog) நான் எழுத விரும்பும் விஷயங்கள் பல. அதில் முக்கியமானவை தமிழும் இளையராஜா அவர்களின் இசையும் தான். தலைமுறைகளைத் தாண்டும் இசையைத் தரக்கூடிய இசையமைப்பாளர்களில் இசைஞானி முதன்மையானவர். இசைக்கருவிகளை உயிர்ப்பித்தல் அவருக்கு மட்டுமே சாத்தியம். இந்த வலைப்பூவில் அவரின் இசையைப்பற்றியும் அதனால் எனக்குள் உண்டான பாதிப்புகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்பது என் ஆசை.

எனக்கு இளையராஜாவின் அறிமுகம் சிறு வயதிலேயே கிடைத்துவிட்டது. ஒரு பத்து வயது என்று வைத்துக்கொள்ளலாம்.(இப்பொது எனக்கு வயது 21). என் அக்கா இசைஞானியின் விசிறி. அவள் சதா முணுமுணுக்கும் பாடல்களும் வானொலியும் விரும்பிக் கேட்கும் பாடல்களும் அவரின் பாடல்களாக இருந்தன. அப்போது அவரின் இசை என்னைக் கவரவில்லை. அதில் எனக்கு வருத்தமே.இப்பொது நான் அவரின் மிகப்பெரிய விசிறி. இந்த மாற்றம் நடைபெற்ற விதத்தையும் இங்கே தொடர்ந்து பதிவு செய்யப் போகிறேன். நான் இசை பயிலவில்லை. அதனால் நிச்சயம் இசை அறியாத பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கலாம் என நினைக்கிறேன்.

என் பத்து வயதிலே அவரின் இசை என்னை கவராத போதிலும் அவரின் சில பாடல்களை நான் ரசித்தேன்.அவற்றில் முதன்மையானது மௌன ராகம் படத்தில் வரும் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடல். அந்த பாடலை ஆயிரம் முறை கேட்ட பின்பும் என்னை அது கிறங்கடிப்பது தான் ஆச்சரியமே. அந்த ஆச்சரியமே இளையராஜாவை எனக்கு அடையாளம் காட்டியது.

நடிகர் மோகனுக்கும் இளையராஜாவுக்கும் எதோ ஒரு ராசி…. எத்தனை பாடல்கள்…. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. அதே போல் மணிரத்னத்திற்கும் இசைஞானி அற்புதமான பாடல்களை தந்துள்ளார். அதில் என்னுடைய அபிமான பாடல் இது தான்.
இந்த பாடல் திரைப்படத்தில் பாதிப்பாதியாக முன்று முறை ஒலிக்கும். தம்பதிகள் விவகாரத்துக்கு விண்ணப்பம் செய்துவிட்டு திரும்பும் போது…. மனைவியின் அன்பு சிறிதாய் வெளிப்படும் போது…. பின்னர் இருவரும் நன்பர்களை போல தங்களை மறந்து வெளியே செல்லும் போது….. இம்மூன்று முறையும் இப்பாடல் மிகச்சரியாக அந்த உணர்வைத் தரும்.

இந்த பாடலின் தொடக்கத்தில் எஸ்.பி.பி தன்னையே மறந்து பாடுவார்…. முதல் முறை கணவனின் நெஞ்சமும் பின்னர் மனைவியின் நெஞ்சமும் புண்படும் போது அதை ராஜா இசையாக மொழிப்பெயர்த்த விதமும் அதை எஸ்.பி.பி தந்த விதமும் அபாரம்.

இந்த பாடலின் இடையில் ஒலிக்கும் இசையில்(BGM) ட்ரம்பெட்டும் (trumpet) புல்லாங்குழலும் சேர்ந்து விளையாடும். மேற்கத்திய இசையை நம் ரசனைக்கு எற்ற வண்ணம் தருவதில் ராஜா ராஜா தான் என்பதை நிருபிக்க இது ஒரு சிறந்த பாடல். இந்த பாடல் திரைப்படத்தில் மலரும் இடம் இருவருக்கும் இடையே உள்ள வெற்றிடம் மெதுவாய் நிரம்பும் நேரம். இந்த மெட்டும் அதற்க்கேற்றார் போல் சுகத்திற்கும் சோகத்திற்க்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியில் உலவும். ஒரு உறவை தொடங்க தேவைப்படும் ஒரு ஆர்வம் இந்த பாடல் முழுவதும் வெளிப்படும்.

இத்தனை அழகான மெட்டை கொஞ்சமும் சிதைக்காமல் வாலி வார்த்தைகளை செதுக்கியிருப்பார். ஆரம்ப வரியே அத்தனை கவித்துவம். திருமணம் ஆனபின்னும் வாழ்க்கையைத் துவக்க மறுக்கும் பெண்ணைப் பார்த்து —- ‘ பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்’ என்று கேட்பது வாலியால் மட்டுமே முடியும். மேலும் இந்த பாடலை அழகாய் திரையில் கொண்டு வந்து எளிமையான காட்சிகளால் நம் நினைவில் நிற்கும்படி செய்திருப்பார்கள்.

ஏதோ ஒரு அழகான நொடியில் அமர்ந்து தன் ஆர்மோனியத்தில் ஒரு கணவன் மனைவியின் உண்ர்வுகளை ராஜா இசைத்தது பதினைந்து வருடங்கள் கழித்து என்னை எழுத வைத்திருக்கிறது. இன்றும் ஒவ்வொரு முறை காதிகளில் வழியும் போதும் அதே இனிய உணர்வுகளைத் தருகிறது. காற்றலையில் ஒளிந்திருக்கிற இந்த இசை போல இந்த இசையினுள் எங்கும் ஒளிந்திருக்கிறார் ராஜா என்கிற அந்த மகாகலைஞன்.

Written by aravind

மார்ச் 23, 2006 இல் 8:52 பிற்பகல்

இசை இல் பதிவிடப்பட்டது

புரட்சி ஏற்படுத்திய கதை

without comments

சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயபாஸ்கரன் எங்கள் கல்லூரி விழா ஒன்றிற்கு தலைமையேற்க வந்திருந்தார். அப்போது எழுத்தின் வலிமையை விளக்க ஒரு கதை சொன்னார். அதை அப்படியே தந்திருக்கிறேன்.

அது ஒரு கொடுங்கோல் அதிகாரி ஆட்சி புரிந்து கொண்டிருந்த நாடு. ஹிட்லெர் போல என்று வைத்துக்கொள்ளலாம். அவன் ஒரு நாள் ஒரு நாடகம் பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கு சேவை செய்ய அவனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்தான் ஒரு சிப்பாய், நமது கதாநாயகன். திடீரென சிப்பாய்க்கு தும்மல் வந்துவிட சத்தமாய் தும்முகிறான். அதிகாரி அவனை திரும்பி முறைத்து பார்த்துவிட்டு தொடர்ந்து நாடகம் பார்க்கிறான். சிப்பாய்க்கோ கதி கலங்கிவிடுகிறது. நமக்கு சிரச்சேதமா தூக்கா என்று பயப்படுகிறான். உடனே அதிகாரியை தோள் தொட்டு அழைத்து “அய்யா! என்னை மன்னியுங்கள்! தெரியாமல் தும்மிவிட்டேன். அடக்க முடியவில்லை.” என்றான். மீண்டும் அந்த அதிகாரி அவனை அமைதியாய் முறைத்து பார்த்துவிட்டு நாடகத்தை கவனித்தான்.

சிப்பாய்க்கு பயம் மேலிட்டுவிட்டது. நாடகம் முடியும் வரை பயத்தில் நடுங்கினான். நாடகம் முடிந்து அந்த அதிகாரி காரில் ஏறும் போது அவருடைய காலில் பொத்தென விழுந்தான். மீண்டும் அதே போல் மன்னிப்பு கேட்டான். அதிகாரியோ இன்னும் சற்று கடுமையாய் முறைத்துவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.

உடனே சிப்பாய் வீட்டுக்கு ஒடினான். மனைவியிடம் அனைத்தையும் சொல்லி தனக்கு சாவு நிச்சயம் என்று புலம்பினான். எந்நேரமும் அரசு சார்பாக வீரர்கள் வந்து அவனுக்கான தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்று நடுங்கினான். மனைவியோ, “அதிகாரி நினைத்திருந்தால் உன்னை அங்கேயே சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லை. அவன் உன்னை மன்னித்துவிட்டான். வீணாய் பயந்து சாகதே!” என்றாள். இவனோ சமாதானமடையவில்லை. அடுத்து நாள் அந்த அதிகாரியின் வீட்டிற்கே சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தான். மனைவி சொல்ல சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அந்த அதிகாரியின் வீட்டிற்கு சென்றான்.

அந்த வீட்டின் காவாலாளி இவனை அந்த அதிகாலையில் விட மறுத்தான். இவனோ, “நான் தும்மியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றான். காவலாளி இது எதோ தனக்கு தெரியாத அதிகாரியின் ரகசியத்தின் புனைப்பெயர் என நினைத்தான். உடனே சிப்பாயை உள்ளே விட்டான்.
நமது கதாநாயகன் அதிகாரியின் படுக்கையறை எங்கே என்று விசாரித்து நேரே அந்த அறையின் கதவை சென்று தட்டினான். தூங்கிகொண்டிருந்த அதிகாரி பதறி எழுந்தான். நம் அறை இந்த நேரத்தில் தட்டப்படுகிறதெனில் ஏதோ உயர் அதிகாரியின் உத்தரவோ கலவரமோ போர் அபாயமோ என்று குழம்பி தன் அரசு சீருடையை அணிந்து துப்பாக்கியை எடுத்துகொண்டு கதவைத் திறந்தான்.

அங்கே சிப்பாய் நின்று கொண்டு,”அய்யா தெரியாமல் அன்று தும்மிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும்” என்றான். கடுப்பான அதிகாரி அவனிடம், “இன்னொரு முறை உன்னை எங்காவது பார்த்தேன் , அங்கேயே சுட்டு கொல்வேன்!” என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று சாத்திவிட்டான்.
சிப்பாய் அங்கெயே உறைந்து விட்டான். அதிகாரி தனக்கு சாவு மணி அடித்துவிட்டதாக நினைத்தான். வீட்டிற்கு சென்று அமைதியாய் படுத்துகொண்டான்.

மறுநாள் காலை அவன் மனைவி அவனை எழுப்பும்போது அவன் உடல் சில்லென்று இருந்தது. அவன் பயத்தில் உறைந்து தூக்கத்திலேயே இறந்து போனான்.

இக்கதை பெரும் எழுச்சியை கிளறிவிட்டதாம். அந்த சிப்பாய் மேல் எந்த தவறும் இல்லை. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை அவன் உயிரை குடித்துவிட்டது. இக்கதை அந்த அடக்குமுறைக்கெதிராக மக்களை திருப்பிவிட்டதாம். மக்கள் புரட்சி அந்த நாட்டில் அடக்குமுறையை ஆட்சியாளர்களை தூக்கியெரிந்த்தாம். அத்தகைய வலிமை எழுத்துக்கு உண்டு.

Written by aravind

மார்ச் 11, 2006 இல் 7:32 மு.பகல்

பொது இல் பதிவிடப்பட்டது

கவித்தூரிகை 2

3 மறுமொழிகளுடன்


காற்றில் கரையும் கானங்கள்

பார்வையற்றவர் ஒருவர்
பாடிக்கொண்டிருக்கிறார்
சில்லறைத்தட்டை நீட்டியபடி
யாருமில்லாத ரயில் பெட்டியில்!

-அரவிந்தன்

Written by aravind

மார்ச் 5, 2006 இல் 1:25 மு.பகல்

கவிதை இல் பதிவிடப்பட்டது