சிறுமழை

வானம் எனக்கொரு போதி மரம்…..

பயணிகளின் கவனத்திற்கு

2 மறுமொழிகளுடன்

முன்னறிவிப்புகள் ஏதுமின்றி திடீரென்று வரிசையாக வெள்ளிக்கிழமைகளின் மாலைகளில் விமானப் பயணங்கள் அமைந்து விட்டிருந்தன. காலையில் கண் விழித்துக் குளித்து முடித்து அவசரமாக அலமாரியில் முன்னும் பின்னுமாக தேடும் கையில் கிடைக்கும் சட்டை போல ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு நிறம், விதம். அழுத்தமான சிறுகதையை ஒவ்வொரு வாரமும் தனியே தேடிச் செல்வதைப் போல. மிகச்சிறிய வட்டத்தினுள் இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் தொடர்ச்சியாக சந்திக்க நேர்ந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை இலக்கில்லாத உரையாடல்களினால் எங்களது வார இறுதியின் நேரங்களை ஒன்றாக நிரப்பிக்கொண்டிருந்தோம். ஒரு திருமணமோ, பிரிவோ, தோல்வியோ, மரணமோ, மாற்றமோ – வரிசையான நிகழ்வுகளின் மூலம் எல்லோருமாக அடுத்த கட்டத்திற்கு ஒரே சமயத்தில் நகர்கிறோம் – ஒரு இருக்கை காலியானதும் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அனைவரும் எழுந்து மற்றொரு இருக்கை நகர்ந்து அமர்ந்து காத்திருப்பதைப் போல. வெள்ளிக்கிழமைகளில் ததும்பும் உற்சாகத்தை பத்திரமாகவும் அவசரமாகவும் உள்ளங்கைகளில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு என்ன செய்வது என்று விழிப்பதே எனக்குப் பழகியிருந்தது. இந்த மாற்றத்தினுள் அடங்காத என் வெள்ளிக்கிழமைகளை வியாழன் இரவுகளிலேயே பெட்டியினுள் பெரும் பிரயத்தனத்துடன் திணிக்கத் துவங்கியிருந்தேன். புதன்கிழமைகளிலேயே சலவை. கழுவாமல் மாலை அவசரமாக எறியப்படும் மதிவு உணவுப் பாத்திரத்தை திங்கட்கிழமை காலை திறக்க பயந்து வெள்ளிக்கிழமை மதிய உணவு உணவகங்களில். எந்த தாமதத்தையும் அனுமதிக்கக் கூடாதென சீக்கிரமே எழுந்து வீட்டைவிட்டு வெளியேறி வெட்ட வெட்ட எழத்துடிக்கும் அலுவலை எதிர்கொள்ளுதல். பொதுவாக மூன்று மணியிலிருந்தே இருப்பு கொள்ளாமல் தவிப்பது. தவறியும் ஏதும் அலுவலக சந்திப்பிற்கு வார்த்தையையும் தலையையும் தராமல் இருப்பது. வார்த்தைகளை எடுத்து கொடுத்தும் முடிக்க உதவியும் விரைவாக உரையாடல்களை கடக்க நினைப்பது. விமானம் புறப்படும் நேரம், நிலையம் சென்று அடையும் பயண நேரம், அதற்கு டாக்ஸி, அதற்கு முன்பாக அத்தனை அலுவலக சந்திப்புகளையும் மாற்றுதல், போகும் வழியில் மழை, அல்லது பனி, சில நாட்களில் எதற்கெனத் தெரியாமல் வெயில்.

இத்தனை பரபரப்புடன் நிலையத்தை அடைந்து இன்னும் இன்னும் ஏராளமானோருடன் கூட்டத்தில் சேர்கையில் என்னுடைய அவசரம் மட்டும் லேசாக துருத்திக்கொண்டிருக்கிறது. நீல நிறச் சுவரில் ஓரிடத்தில் மட்டும் இரண்டு முறை இழுத்ததால் சற்றே அடர்ந்த நீலம் போல. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில் பயணித்து பழகிய மக்களின் இடையே என்னுடைய பெட்டியின் கால் சக்கரங்களின் அவசரம், காலணிகளை பாதுகாப்புச் சோதைனைகளுக்குக் கழற்றி பின் மாற்றும் தீவிரம், விமான அறிவிப்புகளை எதிர்நோக்குதல், தாமதத்தை எதிர்கொள்ளுதல் என அனைத்தும் தனித்து தெரிகிறது. நேரே நிமிர்ந்து அனைவரும் விமானத்தில் ஏற வரிசையாக நிற்கையில் நான் மட்டும் தலையை சாய்த்து முன்னே பார்ப்பது போல. தாமதங்கள், வானிலை, பயணத்தின் மறுமுனையில் காத்திருக்கும் காதல், வரவிருக்கும் திங்கட்கிழமை என்பதைச் சுற்றிய சம்பிரதாய உரையாடல்களின் ஊடே மிதமான அவசரத்துடன் அனைவரும் கடந்து செல்கின்றனர். நான் மட்டும் கொஞ்சம் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கிறேன் – நிச்சயமாக அந்தப் பக்கம் எனக்காக காத்திருப்பது காதலியே என்று சில முதியவர்கள் அடிக்கோடிடுவதோ, சிறிய குடும்பத்தினர் ஒன்றாக என்னைப் பார்த்து பளீரென்று புன்னகைப்பதோ. விடுமுறை பயணங்களுக்கென எப்போதேனும் விமானத்தில் பிரமிப்புடனும் கவனத்துடனும் பயணம் செய்து பழகியிருந்த எனக்கு அந்த மூன்று மாதங்களில் வரிசையாக பயணங்கள் மேற்கொள்ளத் துவங்கி மெல்ல மெல்ல ஊஞ்சலின் வேகத்தை மற்றவர்களின் வேகத்திற்கு இணையாக குறைப்பதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சம் முன்சென்றும் பின்தங்கியும் அலைகிறேன். பயணத்திற்கான காரணம் மட்டும் ஒரு ரகசியம் போல மனதில் படபடவென துடிக்க சரியான இடத்தில் சரியான அளவில் பாவனைகள் புன்னகைகள் உரையாடல்கள் என பயில்கிறேன். கூட்டங்களில் தனித்திருப்பதை எப்போதும் நாடிக்கொண்டிருப்பவனுக்கு மற்றுமொரு அபாரமான வழி.

ஒரு நாள் விமானம் தாமதமானதாக அறிவிப்பு. அலைபேசி இன்னும் சில நிமிடங்களில் அணைந்துவிடக்கூடும். மின் இணைப்புடன் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. எல்லோரும் கன்னத்தில் ஒரு கையும் அலைபேசியில் ஒரு கையும் கவிழ்ந்த தலையுமாக அமர்ந்திருக்கிறார்கள். சிலர் தலை குப்புற தூங்குகிறார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பப் போகும் விமானங்களின் தளங்கள் வரிசையாக இருக்க, எங்கும் மக்கள் மக்கள். அவர்களை விட்டு விலகி நடக்க நடக்க பின்னரவில் கிளம்பும் விமானங்களின் தளங்கள் மிகச் சொற்ப மக்களுடன் இன்னும் பரபரப்பு தொற்றிக்கொள்ளாமல் திறந்திருக்கின்றன. மின் இணைப்புடன் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கை ஒன்றில் ஓரமாக ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கிறாள். அதனுடனான மேஜையில் கவிழ்த்து வைக்கப்பட்ட அவளின் அலைபேசி. என்னுடைய அலைபேசியையும் இணைத்து விட்டு மேஜையில் அதை தலைகுப்புற கிடத்தி விட்டு இருக்கையின் இந்தக் கோடியில் அமர்கிறேன். இருவருக்கும் இருக்கும் அலுப்பு எந்த வார்தையினாலும் தாண்டி விடமுடியாதபடி எங்களுக்கிடையே இருக்கும் இருக்கையில் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை தூரம் பொது பாவனைகளை கடந்து அந்த அலுப்பில் அவளுடன் இணைந்ததைப் போல உணர்கிறேன். அவ்வப்போது ஒரு யோசனை மங்கிவிடாமல் தூண்ட வேண்டி ஒரு மிடறு தேநீரை அருந்துகிறாள். எங்களுக்கு எதிரே விமான ஓடுதளம் மெல்ல ஊர்ந்து அரை வட்டம் இட்டுத் திரும்பி வேகம் பிடித்து ஓடுகிறது. வரிசையாக ஒன்றன்பின் விமானங்கள் காத்திருக்கின்றன. பலமாக மழை. அலைபேசி அமைதியாக அதிர்ந்து திரும்பும் ஒலி கேட்டு குனிந்து என்னுடைய அலைபேசியை பார்த்தவன், என்னுடையதல்ல என்பதை உணர்ந்து சட்டென திரும்பி அவளுடைய அலைபேசியை பார்க்கிறேன். பார்த்திருக்கக் கூடாதென்று உணர்ந்து அதை சரிபடுத்தி விடலாம் என்பதைப் போல எதிர்பக்கம் முழுதாக தலையை திருப்பிக்கொள்கிறேன். விடாமல் சொட்டும் மழைத்துளி போல அவளுடைய அலைபேசி சரியான இடைவேளைகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. அவள் அதை திருப்பி எடுத்து பார்ப்பதாகத் தெரியவில்லை. பள்ளி மாணவர்கள் வரிசையில் காத்திருந்து நீளம் தாண்டுவது போல எதிரே விமானங்கள் சத்தமின்றி ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்து எழுந்து பறக்கின்றன. ஒவ்வொன்றின் சிறிய ஜன்னல்களிலும் யாரோ. அவர்களின் வெள்ளிக்கிழமை மாலைகள். திரும்பும் திங்கட்கிழமையின் காலைகள். அவ்வப்போது என்னுடைய அலைபேசியும் மேஜையில் அதிர்கிறது. அதிரும் பொழுது அதைச் சுற்றி மெல்லிய செவ்வகமாக ஒளி. அவளைப் போல நானும் அதை புறக்கணிக்கிறேன். சில நேரத்திற்கு தகவல்களும் மழையும் தரையிறங்க விமானங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நீண்ட பயணங்களில் முதல் விமானம் எப்போதும் கொஞ்சம் அலுப்பிலும் களைப்பிலுமே கழிந்துவிடுகிறது. மீண்டும் காத்திருந்து இரண்டாவது விமானத்தில் புறப்பட்ட பின்னரே உண்மையில் அந்த வாரத்திற்கும் வார இறுதிக்கும் இடையேயான காலத்திலும் வெளியிலும் பயணிக்க முடிகிறது. விமானம் தரையை விட்டெழும் நொடியில் உண்மையில் உடலும் மனதும் லேசாவதை உணர முடிகிறது. அதற்கு ஏதுவாக விமானத்தின் உள்ளே மட்டுப்படுத்தப்பட்ட ஒளி. இன்னும் கனிவான புன்னகைகள். ரகசியமாக புத்தகங்கள். முழுமையான தூக்கம். வழக்கம் போல நான் ஜன்னலுக்கு அருகே அமர்ந்து அரை நிலவின் வெளிச்சத்தில் நதிகளையும் ஏரிகளையும் வெறும் காடுகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உடனே எழுத வேண்டும் போலத் தோன்றுகிறது. அத்தனை உயரத்தில் அத்தனை ஆழத்தில் எந்தக் காட்சியையும் எந்த நினைவையும் அதற்கு வெளியே இருந்து கவனித்து எழுதி விட முடியும் என்பதைப் போல. எனக்குப் பக்கத்திலிருப்பவர் கொஞ்சம் வைன் அருந்துகிறார். அவருக்கே முன்னே அமர்ந்திருக்கும் அவரின் துணை அவ்வப்போது ஏதேனும் திரும்பி சன்னமாக கேட்கிறாள். ஒரு கட்டத்தில் ஏதும் சொல்லாமல் திடீரென அவளின் வலது கை தலைக்கு மேலே இருக்கையை தாண்டி நீள, ஒரு நொடி தாமதிக்காமல் இவர் அதை தன் கையில் எடுத்து அலுப்புக்கு இதமாக அழுத்தத் துவங்குகிறார். பின் கையை இறுகப் பற்றுகிறார். கைகளை விலகிக் கொள்ளும் போது சில நொடிகளுக்கு முத்தத்தை விட மிக மெல்லிய ஸ்பரிசம். அவர்களின் காதலை தனித்து விடுவது போல ஏனோ என் தலைக்கு மேல் இருக்கும் விளக்கை அணைத்து விடுகிறேன். விமானம் எங்கோ ஒரு இடத்தில் மழைக்கு அருகே நெருங்குகிறது. தொலைவில் தொடர்ச்சியாக மின்னல்கள். கிளை போல் பிரிந்து படராமல் மேகங்களுக்கு மேலே வானில் வெறும் வெளிச்சமாக ஒரு குறைந்த ஒளி தரும் விளக்கைப் போல எரிந்து அணைகிறது. பளீரென வெள்ளையாக இல்லாமல் லேசாக செந்நிறம். ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்குமாக, எதற்குப் பின்னோ மறைந்துகொண்டு பூடகமாக. அடுத்து எப்பொழுது எங்கே ஒளிரும் என்று தெரியாமல் பார்த்தபடி இருக்கையில் அவரும் ஜன்னலின் வழியே பார்க்கத் துவங்குவதை உணர்கிறேன். நான் கொஞ்சம் பின்னகர்ந்து அவரின் பார்வைக்கு வழி விடுகிறேன். விசித்திரமான திரைக் காட்சி போல விடாமல் ஒன்றன் பின் ஒன்றாக மின்னல்கள். ஒரே ஒரு இடத்தில் அவர் அதை ரசித்து ஒற்றை வார்த்தையில் ஏதோ சொல்ல அவரைப் பார்த்து புன்னகைக்கிறேன். என்ன வார்தையை சொன்னார் என்பது தேவைப்படவில்லை. தரையிறங்கும் வரை பேசிக்கொள்ளாமல் இருவரும் மின்னல்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சில மாதங்களுக்குப் பிறகு அனைத்து வெள்ளிக்கிழமை பயணங்களும் பனிக்காலமும் முடிந்த பிறகு அடர்ந்த மரம் ஒன்றின் கீழே கண்ணுக்குத் தெரியாத விழுதுகளின் அடியில் ஒரு துளி தீப்பிடித்தது போல அங்குமிங்குமாக மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம். தரையிலிருந்து ஒரே உயரத்தில் ஏராளமாக சிதறியிருந்தன. மாடியிலிருந்து பார்க்கும் தூரத்தில் என்னவென்று புலப்படவில்லை. மாலை மங்க மங்க வெளிச்சம் பிரகாசமாகத் துவங்கியிருந்தது. இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று அறை நண்பனிடம் சொல்லிவிட்டு கீழே சென்று மரத்திற்கு அடியில் கொஞ்சம் யோசனையுடன் நடக்கிறேன். எதையேனும் அறுத்து மின்மினிப் பூச்சிகள் கொட்டிவிடுமோ என்பதைப் போல. நெருங்கிப் பார்த்ததும் தரையில் வளர்ந்திருக்கும் புற்களின் நுனியில் வீற்றிருக்கின்றன பூச்சிகள் என்றறிகிறேன். ரகசியம் அறிந்த நிம்மதியுடன் வீடு திரும்பி மாடியிருலிருந்து இன்னும் ஒரே ஒரு முறை மின்மினிப்பூச்சிகளை கூர்ந்து கவனிக்க அவை மேஜையில் ஒளிர்ந்து அதிர்ந்த தகவல்களையும் தூரத்தில் கண்ட மின்னல்களையும் நினைவிலிருந்து எடுத்து கண்ணுக்கு தெரியாத இணைப்பில் ஒரு நொடியில் இணைக்கிறது.

[..]

தோன்றிய எண்ணத்தை தோன்றிய கணத்தில் ஏதேனுமொரு குளத்தில் எறிந்து சலனத்தை ஏற்படுத்த விழையும் பழக்கத்தை விட முயற்சிக்கிறேன். சில சமயங்களில் அலைபேசியை எடுத்த பின்பு ஒரு கணம் யோசித்து அதை மீண்டும் கீழே வைக்கிறேன். சில சமயங்களில் சமூக தளங்களில் அல்லது அரட்டைப் பெட்டியில் எழுதிய பின் அழிக்கிறேன். எறியாத கற்கள் ஒவ்வொன்றும் எனக்குள்ளே உள்ளே மெதுவாக எரிகல்லைப் போல விழுவதை பார்க்கவும் உணரவும் மிகப்பிடிக்கிறது. நால்வர் இருக்கும் அரட்டைக் குழுவில் அன்று கை மீறி கோபத்தில் சில கற்கள் விழுந்து விட்டன. எறிந்த கையுடன் அலைபேசியை அணைக்குமாறு விமானத்தின் அறிவிப்பைக் கேட்டு அலைபேசியை அணைத்தும் ஆயிற்று. அடுத்த நொடியில் ஜன்னலில் முழு மாலை நிலா உதிப்பதை காண்கிறேன். அத்தனை தொடர்புகளையும் உலகோடு கீழே விட்டு விமானம் மேகங்களுக்கு அப்பால் விரைகிறது. அசையாத கடலுக்கடியே கிடக்கும் உலகினுள் முழுக முடியாமல் திடுமென ததும்பி மேலேறியது போல நிலா. வெவ்வேறு வானங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கியது போல அடர் நீலம் அதற்கு மேல் இளஞ்சிவப்பு அதற்கு மேல் வெளிர் நீலமுமாய் வானமும் அதனூடே நகரும் நிலவும். ஒன்றிரண்டு புகைப்படங்கள் எடுப்பதுடன் அதை புறக்கணிக்க முயல்கிறேன். இன்னமும் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாதது, கோபம் வெளிக்கொண்டு வந்துவிடுகிற நெருக்கமும் அதன் இருப்பை உணர்ந்து ஏதோ அச்சமும் எல்லாமுமாக குழப்பமும். எதிர்புறத்தில் எல்லோரும் ஜன்னலை இழுத்து மூடியிருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரமும் விடாமல் உடன் வரப்போகிற நிலா கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை ஈர்க்கிறது. எதனுடனும் தொடர்பில்லாமல் கையில் அலைபேசி லேசாக இருக்கிறது. கண்கள் அதுவரை அறிந்த அளவுகளில் பொருந்தாமல் கீழே கட்டிடங்கள், வயல்கள், ஏரிகள். ஒரு கல்லை எறிந்தால் கீழே சென்றடைய வெகு நேரமாகும். தொடர்ச்சியான பயணங்களில் ஒவ்வொரு முறை அந்த உயரத்தை அடைந்ததும் உணர்கிற ஆழத்தை மற்ற நாட்களிலும் அடைய முயன்று கொண்டிருக்கிறேன் – இணையமில்லாமல் இரு வாரங்கள், அலைபேசியில்லாமல் ஒரு நடை, புத்தகங்களுடன் மட்டுமே ஒரு வார இறுதி. அந்த கணங்களின் துல்லியத்தை இந்த விமானப் பயணங்களிலேயே கண்டறிந்து பெற்றதை உணர்கிறேன். அதற்குப் பின் நிலவு மிக எளிதாக என்னை ஆட்கொள்கிறது.

இருபது நிமிடங்களில் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு. எல்லோரும் அசைய முடியுமா என்று பரிசோதிப்பது போல ஒரு முறை அசைந்து அடங்குகிறார்கள். விமானம் அது வரை பயணித்த திசைக்கு நேரெதிரே மெல்லத் திரும்பியபடி கீழிறங்குகிறது. ஜன்னலை விட்டு கரை ஒதுங்கும் நிலவை தலை திருப்பி பார்த்திருக்கையில் ஒரு நொடி வெறுமைக்குப் பின் மிகப் பிரகாசமாக சூரிய அஸ்தமனம். சில நொடிகளுக்கு ஏதும் புரியவில்லை. விமானம் நேராகி கீழிறங்க இறங்க காட்சி தெளிவாகிறது. வீட்டிலே மாடியிலிருந்து கட்டிடங்களுக்கு அப்பால் காண முயன்ற சூரிய அஸ்தமனத்திற்கும் முழு நிலவிற்கும் இடையே அது வரையில் ஒரு நேர்க்கோட்டில் பயணித்திருக்கிறேன் என்பது அடங்காத ஆச்சரியமாக விழிகளில் விரிகிறது. அத்தனை உயரம், அந்த திசைகள், அந்த உதயமும் அஸ்தமனமும் அதன் பின்னான எளிய உண்மையும் தரையிறங்கும் வரை மூச்சை கொஞ்சம் நிறுத்தியே வைக்கிறது. அலைபேசியை மீண்டும் உயிர்பித்து அந்த பிரமிப்பை கல்லெறிய நினைத்து உடனே கைவிடுகிறேன். அரட்டைக் குழுவில் ஏராளமான குறுந்தகவல்கள் – அங்கும் வானிலை சட்டென மாறியிருக்கிறது. அங்கும் இந்த பிரமிப்பை கல்லெறியாமல் ஒரு வருடத்திற்குப் பின்னர் இங்கே இந்த குளத்தில் எறிகிறேன்.

[..]

மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பணி நிமித்தமாக குடி புகுந்த பொழுது நினைத்தால் இரண்டு மணி நேரத்தில் காரிலோ பேருந்திலோ நியுயார்க்கை வார இறுதிகளில் அடைய முடிந்தது. அடைந்ததும் ஒவ்வொரு முறையும் கால்கள் கொள்ளும் உற்சாகத்தை உணர வேண்டியே மீண்டும் மீண்டும் பயணித்திருக்கிறேன். தனியே ஊர்சுற்றுதல், நண்பர்களை சந்தித்தல், அந்நியர்களை சந்தித்தல் என நியுயார்க்குடன் நெருங்கிப் பழகியிருந்தும் கணங்களையும் காலத்தையும் உற்று கவனிப்பவனுக்கு மூன்று வருடங்களில் மூன்று சந்திப்புகள் மட்டும் அழுத்தந்திருத்தமாக மனதில் பதிந்திருக்கிறது. மூன்று சந்திப்புகளிலும் நீண்ட இரவுகள், நடந்தே கடந்த சாலைகள், இசையும் புகையும் கசியும் விடுதிகள், அதிகாலையைத் தொடத் தொட உரையாடல்களில் ஏற்படும் நீண்ட மௌனங்கள், மழுங்கும் வார்தைகளின் முனைகள், கண்களில் ஏராளமான தூக்கம் என கழிந்தன. முதல் சந்திப்பில் நாங்கள் மூவரும் அறிமுகமாகி அதன் பின்னர் வெறும் மின்னஞ்சல்களில் குறுந்தகவல்களில் மின்னரட்டைகளில் மிகவும் நெருங்கியிருந்தோம். நேரில் சந்திக்காமலே இரவெல்லாம் நீளும் அரட்டையில் பயங்கள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் என மிக எளிதாக ஒவ்வொருவரின் அந்தரங்கத்தினுள் நிழல்களாக அனுமதிக்கப்பட்டோம். விருப்பம் போல நடந்து செல்லும் மலைப்பாதைகளில் சில சமயங்களில் பாதி தூரம் வந்தபிறகு வந்த பாதையை கவனிப்பது போல மூவரும் அவ்விடத்தை அடைந்து விட்டிருந்தோம். வெகு அரிதாக தொலைபேசியில் உரையாடி விரல்களில் விரைவாக வளரும் வார்த்தைகளால் மட்டுமே கொண்டு நட்பு பலமாகியிருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நியுயார்க்கில் சந்தித்த பொழுது இரண்டாம் முறை நேரில் சந்திக்கும் நண்பர்களும் ஒன்றரை வருடத்தில் அடைந்த நெருக்கமும் ஒன்றில் ஒன்று அடங்காமலும் ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொள்ளாமல் வேடிக்கையாக சங்கோஜப்பட்டோம். மிகத் துல்லியமாக உணர்ந்த கணம் அது – மூவரும் அத்தனை நேரம் நீருக்குள்ளே அமிழ்ந்தபடி மங்கலான ஒளியிலும் அலையிலும் வினோதமாகக் கலையும் ஒவ்வொருவரின் பிம்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென நீருக்கு மேலே தலையை தூக்கிச் சிலுப்பிக்கொண்டு பிடித்திருந்த மூச்சை பலமாக விட்டு ஒருவரை ஒருவர் பார்ப்பது போல. சம்பிரதாயமான உரையாடல்களின் ஊடே கண்களைப் பார்த்தோ குரல்களை செருமிக்கொண்டோ ஒரு கேலியாகக் கூடவோ அந்த நெருக்கத்தை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு கொண்டாட்டத்திற்காக சேர்ந்திருந்தால் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கலாம் – இன்னமும் குழப்பங்களுடனும் கவலைகளுடனுமே இருக்கிற மூவரும் நெருக்கத்தை வெளிப்படுத்திக்கொள்வது இன்னும் அவசியமாகவும் இன்னும் கடினமாகவும் இருந்தது. நியுயார்க் நகரின் பிரமாண்ட இருப்பே எங்களின் கவனங்களை கொஞ்சம் கலைத்தது. அதன் பெரும் கட்டிடங்களை ஆயிரமாயிரம் விளக்குகளை அண்ணாந்து பார்த்தபடி நீரில் விழுந்து அசையும் அதன் பிம்பங்களை அவ்வப்போது கவனிப்பது போல அந்த நெருக்கத்தை அவ்வப்போது கவனிப்பதோடு விட்டுவைத்தோம். மீண்டும் ஒரு நீண்ட இரவுக்குப் பின் அதிகாலை தூங்கச் சென்று மதியம் எழுந்து நியுயார்க்கை விட்டு ஒவ்வொருவராகக் கிளம்பத் துவங்கினோம்.

மூன்றாவது சந்திப்பு எனக்கும் நகரத்திற்கும் மட்டுமானது. பணி நிமித்தமாக இடம் மாறுவதால் அதுவே நியுயார்க்குடன் கடைசி சந்திப்பாக இருக்கலாம். அதிகாலையில் இந்தியாவிலிருந்து வரும் விமானத்திற்காக காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் வார நாளில் ஆள் அரவமில்லாத நியுயார்க்கில் தனியாக சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன். அந்த இரண்டு சந்திப்புகளில் சென்ற இடங்களை தனியே நடந்து கடக்கும் பொழுது அந்த சந்திப்புகளின் நினைவுகளை ஆழமாக பதித்துக்கொள்ளவே வந்தது போல நின்றும் அமர்ந்தும் நடந்தும் நேரத்தை கடந்தேன். ஒரே ஒரு புத்தகம் எழுத நேர்ந்தால், ஒரே ஒன்று மட்டும் எனில், அது நிச்சயம் இதைப் பற்றி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால் ஒரு முறை விமானத்தில் நியுயார்க்கை கடந்து செல்லுதல் மிக மிக அவசியம்.

[..]

பின்குறிப்பு #1 – பதிவின் இடையே படத்தை வைக்க ஏனோ விருப்பமில்லை. விமானத்திலிருந்து எடுத்த படம் இங்கே.

பின்குறிப்பு #2 – இந்தப் பதிவு லாஹிரியின் இந்தப் புத்தகத்திற்கும், ராஜாவின் இந்தப் பாடலுக்கும்.

Written by Aravindan

ஏப்ரல் 13, 2014 இல் 10:55 பிப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

என்னமோ ஏதோ

6 மறுமொழிகளுடன்

ஓராயிரம் பிரச்சினைகள் விடாமல் அலாரமடிக்க கண் விழித்து அவசர அவசரமாக ஆர்வமேயில்லாமல் தயாராகி கூச்சமேயில்லாமல் கொட்டோ கொட்டென கொட்டிக்கிடக்கும் இலைகளுக்குள்ளே கால்கள் புதைய புதைய நடந்தோ ஓடியோ டாக்ஸி பிடித்தோ கார் ஓட்டிச்சென்றோ மெட்ரோ ஸ்டேஷனை அடைந்து ரயிலேறும் எங்களை (ரயில் கொஞ்சம் பெருமூச்சு விடுகிறது) தீவிர யோசனைகளுடன் இழுத்துச் சென்று கடைசி ரயில் நிலையத்தில் தினசரி தள்ளி விடுகிறது ரயில். தத்தமது விதிகளை நொந்தபடி தத்தமது மொழியறிவுக்கு எட்டிய வசவுகளை குறிப்பிட்ட ஒருவரின் மீதோ பொதுவாக சமூகத்தின் மீதோ அல்லது சற்று முன்னமே ரயிலில் கண்ட யாரோ ஒருவரின் மீதோ வீசியபடி படிகளில் இறங்கி ரயில் நிலையத்தின் வாசலை அடைந்து அடுத்த பேருந்துக்கோ டாக்ஸிக்கோ நண்பரின் காருக்கோ ஆஃபீஸ் வேனுக்கோ காத்திருக்கையில் “அடுத்தது என்ன?” என்ற அருட்பெரும் கேள்வி எல்லோர் மனதையும் அறைவது மிகவும் சாதாரண விஷயமே. (இங்கே நீங்கள் கொஞ்சம் மூச்சு விடலாம்). இருந்தும் எங்களில் சிலர் மட்டும் தங்களின் சஞ்சலத்தை ஊரறிய உலகறிய பளிச்செனத் தெரியப்படுத்துகிறார்கள். எதிர் வரும் பிசாசிடம் தங்களது குழந்தையை வழங்கும் மூர்க்கத்துடன் strollerஐ தள்ளிச் செல்லும் சில இளம் தாய்மார்களோ, காப்பி கலர் கோட்டின் காலரில் பூத்திருக்கும் தலை மட்டும் வாடித் தொங்கியபடி வதங்கி நிற்கும் வயசாளிகளோ, இம்மி விலகினாலும் விம்மத் துவங்கும் சாத்தியங்கள் தெரியும் காதல் ஜோடியினரோ இல்லை வளர்ந்ததும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அத்தனை சாத்தியங்களும் கொண்ட சில சிறுவர் சிறுமியரோ – என்ன காரணத்தாலோ சூட்சுமத்தாலோ  விறுவிறுவென நடந்து வந்து ரயில் நிலைய வாயிலைத் தாண்டி தானியங்கி கதவுகளின் சென்சார் கண்கள் எட்டும் எல்லையில் மிகச்சரியாக நின்றுகொள்கிறார்கள்.  இரண்டாகப் பிரிந்திருக்கும் வாயிலை மூடி மூடி விளையாடி மகிழ்ந்த ஜோடிக் கதவுகளில் ஒன்று மட்டும் கதவை முழுதாக மூட இத்தனை தூரமே இருக்கும் நொடியில் அதிர்ந்து யாரென்றும் என்னதென்றும் அறியாமல் உறுமியபடி பின் விலகினாலும் மூளையின்றி மீண்டும் மீண்டும் முயலத் துவங்கும்.  குளிரினால் வாயிலுக்குள்ளேயே தங்கியபடி காத்திருப்போரும்  வெயில் வேண்டி வாயிலுக்கு வெளியே உலவியபடி காத்திருப்போரும் அவ்வப்போது திரும்பிப் பார்த்து பார்வையாலே  சுட்டெரித்தாலும் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வெறித்துப் பார்த்தபடி அசையாது நின்று சுற்றுவட்டாரத்தின் சூழ்நிலையில் ஒரு வினோத சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது வாரம் ஒரு முறையாவது நிகழ்ந்துவிடுகிறது. உள்ளே நின்றபடி எனக்கு முன்னே நொடிக்கு ஒரு முறை துடிக்கும் கதவையும் அதற்கு அப்பால் நிற்பவரையும் பார்த்தபடி நின்றுகொண்டேயிருப்பது ஒரு பறவையின் வியூகக் காட்சியாக யோசித்து பார்ப்பதனாலோ என்னவோ எனக்கு வித்தியாசமான ஆனால் ஆழமான காட்சியாக இருக்கிறது. அமரர் வாலி கூட ஒரு வாசலை மூட விட்டால் தானே மறுவாசல் வைப்பான் இறைவன் என்றார்? யாரேனும் அவர்களை நெருங்கி நிலைமையை விளக்கிச் சொல்லி அவர்களை கொஞ்சம் நகர்த்தி இருவருமாக சிரித்து ஓ எத்தனை பிரகாசமான சூரிய ஒளி வீசுகிறது இன்று என எல்லோரும் புன்னகைக்கும் தருணமோ மலிந்த வன்முறையை தங்களின் கோட்டு பாக்கெட்டிலும் கைப்பையிலும் மறைத்து வைத்து திரியும் இந்த மாநகரிலே யாரேனும் அவர்களை இழுத்துச் சென்று அடிவயிற்றில் குத்தும் தருணமோ வரும் வருமென நான் காத்திருந்தும் ஏதும் நிகழ்வதேயில்லை. காதில் இயர்ஃபோன்களுடன் லேசாக கைகால்களை உதறியபடி பாடிக்கொண்டிருப்பவராக இருந்தாலும் (நிற்க – இவர்களுக்கு பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் பொருத்தமாக இருக்கும் என்பது என் மேன்மையான அபிப்ராயம்) எந்த திசையிலும் எந்த வண்டியின் ஒலி கேட்டாலும் தம்முடைய பேருந்தா என்று உடம்பே காதாக திருகி பார்ப்பவராக இருந்தாலும் தமக்கு பின்னால் கதறிக்கொண்டிருக்கும் ஒற்றைக் கதவை ஏனோ சட்டை செய்வதேயில்லை. நாங்களும் எங்களின் கவலைகளை தற்காலிகமாக மறந்து வியப்பும் அலுப்பும் ஆழ்ந்த சிந்தனையும் அதற்கும் விசித்திர பிண்ணனி இசையாக அந்தக் கதவின் அதிர்வுகளைச் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து நின்று கொண்டிருந்தோம். வீறுகொண்டு முயன்றுகொண்டேயிருந்த கதவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வேகமிழுந்து மேடையிலே நடித்துக்கொண்டேயிருக்கும் போதே உயிரை விட நினைக்கும் நடிகர்களைப் போல ஒரு நாள் பாதியிலேயே திடீரென நின்றுவிட்டது. அடுத்த சில நாட்களில் அந்தப் பாதிக் கதவை பார்க்கையிலெல்லாம் மாநகராட்சியைப் பற்றியும் அது வசூலிக்கும் வரியைப் பற்றியும் முணுமுணுக்கத் துவங்கியிருந்தோம்.

[..]

தலைவலியும் திருகுவலியும் நமக்கு வந்தாலே தெரிந்துவிடுகிற தன்னிறைவு கொண்ட பிரச்சினைகள் என்றாலும் குறட்டை ஒலி என்பது நமது அறை நண்பருக்கு வந்தால் தான் நமக்குத் தெரியும். ஏதோ நமது குடும்ப உறுப்பினர்களுக்கு வந்தால் கூட நாம் ஆடவில்லையென்றாலும் நம் தசையாடி ஒரு விதமாக பொறுத்துக்கொள்ளலாம். உங்களின் அறையில் படுத்துத் தூங்கியோ அடுத்த அறையில் படுத்துத் தூங்கியோ பலத்த குறட்டை ஒலியால்  உங்களுக்கு அவர் ஏற்படுத்தும் உபத்திரங்களை பதற்றப்படாமல் மிக எளிமையாகவே கையாளலாம். முதலில் குறட்டை வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருளும் உருவமில்லாத ஒரு உருளை என்பதையறிக. சில கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்து உருவாக்கும் பிரச்சினைகளைப் போல தூங்கும் போது வயிறும் வாயும் மூக்கும் ஒரு பொருத்தமான அமைப்பில் அமைய நேர்ந்தாலே குறட்டை சாத்தியம் என்பதையுமறிக. சிலருக்கு இந்த அமைப்பு தலை குப்புற படுத்து உறங்குகையில் ஏற்படலாம், சிலருக்கு விண் பார்த்து உறங்குகையில், சிலருக்கு உட்கார்ந்து தூங்கும் போது. நமது முதல் கவனம் அந்த அமைப்பை கலைப்பதில் இருக்க வேண்டும். எப்படி? உங்களில் சிலர் விளக்கை போட்டோ ஐஃபோன்/லேப்டாப்பை ஒளிர விட்டு அதை அவரின் முகம் நோக்கி திருப்பியோ என்று எண்ணலாம். தவறு. ஒளி ஒலியை விட வேகமானது என்றாலும் கூட, ஒலியை ஒலியால் தான் வெல்ல முடியும், அது தான் தர்மமும் கூட. இருட்டிலே கூர்ந்து கவனித்தபடி இருந்து அந்த உருளை மெல்ல உருளத் துவங்கி மூக்கும் வாயும் பிரியத் துவங்கும் தொண்டையின் சிக்கலான பிரதேசத்தை அடையும் பொழுது குறுகிய ஆனால் கூர்மையான ஒலியை எழுப்புங்கள் – பலமான உச்சுக்கொட்டுதலோ, கைதட்டலோ, புத்தகத்தை சுவற்றை நோக்கி எறிவதோ, அஹோய் என்ற சொல்லோ எதுவோ.  (அவர் அடுத்த அறையில் இருந்தால் உங்களால் அவரை கவனிக்க முடியாதென்றால் அறை வாசலில் நின்று குத்துமதிப்பாக அவ்வப்போது ஒலி எழுப்பலாம்). எதுவோ சரியில்லை என்ற மெல்லிய அதிர்ச்சியில் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவர் திரும்பிப் படுக்கையில் வயிறு-தொண்டை-மூக்கு-வாய் அமைப்பு கலைந்து விடும். (அப்படி திரும்பிப் படுக்கையில் அதிருப்தியில் அவர் உச்சுக்கொட்டினால் உங்கள் காதில் அது தேனாக ஒலிக்கும்). சரியான பலன் கிடைக்க கண்களை இருட்டிற்கு நன்கு பழக்கி குறட்டை ஜனிக்கிற சரியான நொடியில் சிறப்பான ஒலி ஏற்படுத்தி அதை அடித்து வீழ்த்துங்கள். அப்படி வீழ்த்திய மகிழ்ச்சியிலும் பெருமையிலும் உங்களுக்கு தூக்கமே வராது.

[..]

நானும் அம்மாவும் மூத்த சகோதரியும் காரில் நள்ளிரவைத் தாண்டி எங்கோ சென்றுகொண்டிருந்தோம்.  திசை, வழி எதுவும் புரியவில்லை. வண்டியின் விளக்கொலியின் எல்லை வரையே எதுவும் புலப்படுகிறது. எங்கெங்கோ திரும்பித் திரும்பி 2007ல் விட்டு வெளியேறிய சொந்த ஊரை அடைகிறோம் அல்லது சொந்த ஊரைப் போலத் தோன்றும் இடத்தை அடைகிறோம். நினைவில் எப்படியோ எங்கேயோ தங்கிவிட்ட ஒரு தெருவைப் போலிருக்கும் தெருவினுள் திரும்புகிறோம். நாய்கள் கூட எங்கும் தென்படவில்லை. எங்கும் மின்சாரம் இருப்பதாகத் தெரியவில்லை. குறுகிய தெருவின் பாதித் தொலைவில் ஒரே ஒரு கார். அதுனுள்ளே கொஞ்சம் மங்கலான ஒளி.  இரைச்சலை குறைக்க வேண்டியும் அந்தக் காரை கடக்க வேண்டியும் வேகத்தை குறைத்து மெல்ல மெல்ல அதை நெருங்கி கடக்கையில் ஆர்வத்துடன் அந்த காரினுள் பார்க்கிறோம் – கூகிள் தேடல்களில் தென்படுவதை தவிர்க்கவும் முகங்களைப் பார்க்காததாலும் பெயர்கள் வேண்டாம் – பச்சை ராணுவ உடையில் கம்பீரமாக முன்னே ஆளில்லாத ஓட்டுனர் இருக்கைக்கு அருகே ஒருவரும், பின்னால் பளிச்சென்ற மேலங்கியுடன் தமிழக அரசியல் புள்ளி ஒருவரும் – ஏனோ எனக்கு உடல் சில்லிடுகிறது. காலையில் விழித்ததும் என்னவென்று புரியாமல் மீண்டும் மீண்டும் காரை ஓட்டிச்சென்று கனவை அடைந்து அந்தக் காரை கடக்கையிலெல்லாம் உடல் சில்லிடுகிறது, கனவும் அதற்கு மேலே நினைவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு பல முறை நினைத்து நினைத்து அதே உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்தாலும் என்னவென்று சுற்றி இருப்பவர்களுக்கு விளக்குவது என்று புரியவேயில்லை. ஒரு புத்தகமோ திரைப்படமோ பாடலோ நினைவைச் சுற்றிக்கொண்டிருந்தால் கூட அதைக் காட்டியோ அதைப் பற்றிச் சொல்லியோ அதைக் கொடுத்தோ கொஞ்சம் விளக்கிச் சொல்லி வியப்பைத் தீர்த்துக்கொள்ளலாம். முற்றிலும் தொடர்பில்லாமல் எங்கிருந்தோ முளைத்திருக்கும் காட்சியை ரகசியமாக வைத்துக்கொண்டு வெறும் வியப்பில் ஆழ்ந்தபடி அழுத்தமான புன்னகையுடன் பேருந்திலோ ரயிலோ மதிய உணவு மேஜையிலோ அமர்ந்துகொண்டிருந்தேன். தொடர்ந்து கொண்டேயிருக்கிற இத்தகைய வியப்புகள் கனவுகளாகத் தொடர்ந்து கொண்டே இருப்பதால், அமெரிக்கர்களே, நாளெல்லாம் உங்களின் பைசா பெறாத பிரச்சினைகளை கேட்டுக்கொண்டிருப்பதில் எனக்கு இன்னும் அலுப்பு ஏற்படவில்லை.

[..]

பேருந்துகளில் ரயில்களில் என்னைச் சுற்றி இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு சுவாரசிய சம்பாஷணையை வழங்க வேண்டிய கட்டாயம் எனக்கிருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன். இருந்தும் – ஒரு சுவாரசிய சம்பாஷணைக்கு இரண்டு வாய்கள் வேண்டும் அல்லவா? குறைந்தபட்சம் இரண்டு உபயோகமான தகவல்களை – ஒரு salesஓ dealஓ அவர்களின் செயலுக்கு நல்லதொரு மாற்றோ எதுவோ – தராத பட்சத்தில் பெரும்பாலான இந்தியர்கள் ஒரே நிமிடத்தில் என்னை நிராகரித்து நகர்கிறார்கள். அப்போதே அறிமுகமான ஒருவர் பேசிப் பழக எத்தனிக்கையிலே ரயில் நிலையத்தில் ஐம்பது காசிற்கு ஆறு நிமிடம் பேசும் பொதுத் தொலைபேசி இருப்பதை கண்டுபிடித்து நான் அதை அறிந்திராததால் அந்த நகரில் என்னுடைய ஆறு மாத இருப்பை சுக்கு நூறாக கிழித்துப் போட்டுவிடுகிறார். பல சமயங்களில் என் கையில் புத்தகம் இருப்பதால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறேன். (அதை மீறி வருபவர்கள் அது சீஸ் அல்லது சிக்கன் சூப் அல்லது ஃபெர்ராரி கார் கொண்டு வாழ்கையை மாற்றும் புத்தமில்லாதது கண்டு புறக்கணித்து விடுகிறார்கள்). இது தவிர எஞ்சிய சிலர் கூச்சத்தின் எல்லையிலே நின்று வெறும் புன்னகைக் கொடி காட்டுகிறார்கள். அல்லது கடைசி ரயில் நிலையத்திற்குள்ளே நுழைந்து எங்களை ஏற்றிக்கொண்டு எதிர் திசையில் புறப்பட வேண்டிய ரயிலை உற்றுப் பார்த்தபடி இருந்து விட்டு ‘இது எப்படி இப்போ யு-டர்ன் போடும்?” என்று கேட்டு அதிர வைக்கிறார்கள்.  முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டு ஆட்டு மந்தையில் கடைசி ஆடாக சுவாரசியமற்று அலுவலகம் நோக்கி நடக்கும் நான் அன்று காலையில் அலுவலக வாசலில் ஒரு சிறிய கூட்டத்தைக் கண்டு சுவாரசியமடைந்தேன். பதற்றமும் குழப்பமும் பெரும்பாலும் தெலுங்கிலும் கொஞ்சம் மற்ற இந்திய மொழிகளிலும் வெளிப்பட்டிக்கொண்டிருந்தது – காரணம், இந்திய காண்டாராக்டர்களின் access cardகள் திடீரென வேலை செய்வதை நிறுத்திவிட்டது. மற்ற அனைவரும் சல்லென நுழைந்து தலை திருப்பி ஒரு சிறிய ஆச்சர்யப் பார்வையாகத் தேய்ந்து போனார்கள். எங்களின் கூட்டம் விடாமல் ஒவ்வொருவாராக முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். நானும் முன்னே சென்று முயல்கையில் சிகப்பு ஒளி கீச் கீச் என்றது. அங்கே ஒரு குதிரை வால் பெண்ணுடன் நின்றுகொண்டிருந்த ஆஜானுபாகுவான ஒரு செக்யூரிட்டி இறுக்கமான முகத்துடன் எங்கோ பார்த்தபடி எந்திரத்தனமாக “Your time has expired” என்று அறிவித்தார். எனக்குப் பின்னால் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கும் அதே அறிவிப்பு. பளீரென புன்னகைத்து நான் கூட்டத்தை நோக்கி திரும்பினால் அனைவரும் தங்களது மானேஜரையும் நண்பர்களையும் அழைக்கத் துவங்கியிருந்தார்கள். எதற்கு? ஏன் இந்த பதற்றமும் குழப்பமும்? Your time has expired என்பதை விட தெளிவான சுருக்கமான காரணம் வேறேதேனும் வேறெதற்கும் இருக்குமா? அடக்க முடியாத புன்னகையுடன் அந்தக் கூட்டத்தை நான் சுற்றிச் சுற்றி வருகிறேன் – மக்களே, மக்களே, ஒரு கணம் இந்தக் காட்சியின் வினோதத்தை உணர்ந்து இதில் சிறப்பாக பங்கு பெறுங்களேன், ப்ளீஸ்? கூட்டத்தை இரண்டு முறை சுற்றி வந்து விட்டு சோர்வாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். அவசர அழைப்புகள், தகவல் பறிமாற்றங்கள், அனுமதிகளுக்குப் பிறகு எல்லோருக்கும் வாயில் திறந்தது. கட்டக் கடைசியாக உள்ளே நுழைந்த நான் திரும்பி அந்த ஆஜானுபாகுவிடமும் குதிரைவாலிடமும் ஒரு சோதனை புன்னகையை வழங்க அவர்கள் கச்சிதமாக அதே இறுக்கத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

[..]

ஆறாவதோ ஏழாவதோ படித்துக்கொண்டிருக்கையில் சன் டீவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த டாப் டென் பாடல்கள் நிகழ்ச்சியில் ஒரு காமெடி கோஷ்டி நீள நீள காமெடி வசனங்களை உயிரைக் கொடுத்து பேசிக்கொண்டிருந்தபடி இருந்துவிட்டு பாடல் போடும் நேரம் வந்ததும் எப்படியாவது பாடலின் வரியையோ படத்தின் பெயரையோ வசனத்தில் புகுத்திவிடுவார்கள். தனியாக உங்களுக்கு விளக்கத் தேவையில்லை – ஏனோ என்னை அது வெகுவாக ஈர்த்துவிட்டது. வீட்டில் விருந்தாளிகள் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு சமயம் யாரோ தற்செயலாக எதையோ சொல்லப் போல அக்காவின் காதில் நான் ‘இப்போ அந்தப் பாட்ட போடலாம்’ என்று சொல்லி அதிர வைத்தாலும் முதலில் சிரிக்கவே வைத்தேன். பின் அது தொடர்ந்து கொண்டே இருந்ததால் அம்மா சங்கடமடைந்தார். ஆறு வயதில் ஒரு திருமணத்திலிருந்து நடு ராத்திரில் ஒரு மினி வேனில் திரும்பிக்கொண்டிருந்த கும்பலுக்கிடையே நான் அமர்ந்து கொண்டு வரிசையாக கடி ஜோக் சொல்லிக்கொண்டிருந்த அன்று முதன் முதலாக என்னை சான்றோன் எனக் கேட்ட அம்மா அதன் பிறகு கேட்டதெல்லாம் அத்தனை சுவையானதாக கேட்கவில்லை. செய்தித்தாளை எடுத்துக்கொண்டு சிலோன் வானொலி அல்லது சென்னை வானொலி நியூஸ் வாசிப்பது, துப்பறியும் கதைகளுக்கான ட்விஸ்ட்டுகளை  யோசித்து சொல்வது, டிவி நிகழ்ச்சிகளுக்கு ஐடியா வழங்குவது என தொடர்ந்து கொண்டிருந்த விசித்திரங்களில் புதிதாக இது – அம்மாவுடன் பணிபுரிந்து கொண்டிருந்த மிகவும் மதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்த பொழுது அவர் பேசிக்கொண்டிருந்த பொழுது இடை மறித்து ‘இப்போ நேருக்கு நேர் படத்திலேர்ந்து பாட்டு போடலாம்’ என்று சொல்லப் போக வீட்டின் ஒட்டு மொத்த கண்டனத்திற்கு ஆளானேன். அதன் பிறகு சில வாரங்களுக்கு உரையாடல்களில் சிற்சில கணங்களில் திடீரென ஒரு உற்சாகத்துடன் நான் நிமிர்ந்து அம்மாவையோ அக்காக்களையோ திரும்பிப் பார்ப்பதும் அவர்கள் என்னை முறைப்பதுமாக ஒரு முளை கிள்ளி எரியப்பட்டது. அப்போது உள்ளே விழுந்த விதை ஒன்றே வளர்ந்து இன்று பாடல் வரிகளில் மீது தீராத ஆர்வத்தை – சதா ட்வீட்டிக்கொண்டே இருக்கிற பழக்கம், தொடர்பில்லாத சம்பவங்களோடு வரிகளை தொடர்புபடுத்திக் கொள்ளும், வர்ணனைகளிலும் தலைப்புகளிலும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்படக் காரணம் என்பது என் யூகம். சரி – இது வரை இந்தப் பதிவில் எத்தனை பாடல் வரிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன? – மேலே ஸ்க்ராலாமல் சொல்பவர்கள் இன்று இந்த தளத்தில் பழைய பதிவுகளை படித்து மகிழலாம்.

[..]

சமீபத்தில் இந்தப் பக்கங்களை படிக்கத் துவங்கியிருக்கும் சிலரின் பொறாமையைக் கிளறும் விதமாக தொடர்ந்து இந்தப் பக்கங்களை படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு – சென்ற மே மாதம் நண்பர்களுடன் சென்ற ஒரு மலைப்பிரதேச பயணத்தில் ஒரு வழியாக புதருக்குப் பின்னால் சலசலத்துக்கொண்டிருந்த கரடி வெளியே வந்துவிட்டது; மேலும் ஒரு மணல் கடிகையைத் திருப்பி வைத்தாயிற்று.

[..]

சில சனிக்கிழமை இரவுகளில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளின் அதிகாலையில் தூங்கி வழியும் அல்லது போதையில் துவண்டிருக்கும் மூன்று அல்லது நான்கு தலைகளுடன்  தொன்னூறில் காரில் ஆளில்லாத சாலைகளில் பறக்கையில் துணைக்கு விழித்திருப்பவருடன் பேசும் உடைந்த உரையாடல்களின் போதோ அதிர அதிர ஒலிக்கும் பாடல்களின் போதோ அவற்றின் இடையே உறுத்தும் அமைதியின் போதோ விழியோரமாக உரசிக்கொண்டே தொடரும் நிலவைக் காணும் போதோ, காலடியில் கட்டுப்பட்டிருக்கும் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் துவங்குதாக ஒரு பிரமை ஏற்படும் போதோ, குறைந்த வெளிச்சத்தில் அவசர நிழலென குறுக்கே ஓடி வந்து ஒரு சின்னஞ்சிறு உயிரினம் அடிபட்டு மறையும் போதோ – இன்னும் பல #foreverAlone தருணங்களின் பொழுது சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உங்களிடம் அதைச் சொல்வேன் என்பதை அந்தக் கணத்தில் இருக்கும் பொழுதே நன்கு உணர்கிறேன். ஆகவே, காரை ஓட்டிக் கொண்டு நான் வந்து சேரும் வரை நல்ல விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டு எனக்காக காத்திருப்பீர்களாக.

Written by Aravindan

நவம்பர் 11, 2013 இல் 2:11 முப

தொடர் இல் பதிவிடப்பட்டது

Tagged with

ஒரு துளி பரிச்சயம்

18 மறுமொழிகளுடன்

ஒரு தேர்விற்கு தயாராவதற்கு கையெழுத்தை மட்டும் கொஞ்சம் சரிபார்த்து தயாரானால் போதுமென்பது விசித்திரமாக இருந்தது. காலை எழுந்தவுடன் சில காகிதங்களில் வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழில் கொஞ்சம் எழுதிப் பார்த்துவிட்டு தேர்வு துவங்க பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர் அவசர அவசரமாக கிளம்பி வீட்டிலிருந்து இரண்டு நிமிட நடையில் இருக்கும் கல்லூரிக்குள் நுழைகிறேன். அது பெண்கள் கல்லூரியென்று அப்போதே உறைக்கிறது – கிளம்பும் முன் சவரம் செய்திருக்கலாம் என்ன உடை அணிகிறோம் என்று யோசித்திருக்கலாம் என்று இன்னமும் தோன்றுகிற வயது – ஒரு நொடி யோசித்து அதைத் தாண்டி எங்களுக்கென தனியே ஒதுக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு செல்கிறேன். தேர்வு அறை கிட்டதட்ட முழுக்க நிரம்பியிருந்தது – சுமார் இருபது மேஜைகள், ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு நாற்காலிகள், ஒரு கண்காணிப்பாளர், எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த ஒரு மின்விசிறி. கண்காணிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவர் என்னை ஒரு மேஜைக்கு அழைத்துச் செல்கிறார். முன்னமே வந்து தயாராக அங்கு அமர்ந்திருந்த அவள் தன்னுடைய கையங்கியால் முக வியர்வையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் நாற்காலியை நகர்த்தி அமர்கிற ஒலி கேட்டு அவள் நானிருந்த திசையில் நிமிர்ந்தாள் – அவளால் பார்க்க முடியாது. தேர்வு துவங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அவள் சொல்லச் சொல்ல நான் அந்த விடைகளை சரியாக எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையை அவளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கூடவே என்னைப் பற்றி சுருக்கமாக சொல்லவும் எத்தனித்தவன் தேர்வு அறையில் அத்தனை விடைகளையும் ஒரே நொடியில் மறந்தவன் போல அதிர்கிறேன். அவளால் என்னை பார்க்க முடியாது என்பதை புதிதாக உணர்ந்தவன் போல என் குரலை என்னுடைய மொத்த அடையாளமாக மாற்ற முயல்கையில் ஏனோ தடுமாறுகிறேன். பரிதாபமோ ஆர்பாட்டமோ அலட்சியமோ சலிப்போ அவசரமோ தெரியாத ஒரு குரலை என்னுள் இருந்து எடுக்க முயற்சிக்கிறேன். எளிய மளிகைக்கடையில் இருக்கும் எடைகாட்டியின் மேல் காணாத பாரத்தை வைத்தால் அதன் முள் தடதடவென அதிர்வது போல தன் எடை தெரியாமல் திணறுகிறது குரல்.

பாதியில் துவங்குபவன் போல என்னுடைய பெயரை மட்டும் சொல்லி வைக்கிறேன். அவள் தன்னுடைய பெயரைச் சொல்லிவிட்டு தேர்வெழுத உதவி செய்வதற்கு நன்றி செல்கிறாள். அதிக கவனத்துடன் தேர்தெடுக்காமல் மிகவும் சாதாரண வார்தைகளையே சொல்கிறாள். பதிலுக்கு எதையும் சொல்லத் தெரியாத தவிப்பை கூட அவளிடம் கொண்டு சேர்க்கத் தெரியாமல் கேள்வித்தாளுக்கு காத்திருக்கிறேன். தேர்வு துவங்கியதும் ஒரு முறை கேள்வித்தாளை சுருக்கமாக படித்துக்காட்டுகிறேன். முதல் கேள்வியைச் சொன்னதும் சிறிது யோசித்து விடை தெரியுமென்று சொல்கிறாள். இரண்டு நிமிடங்கள் விடையை மனதிற்குள் தயாரித்துவிட்டு சொல்லத் துவங்குகிறாள். நிறைய யோசனை இடைவெளிகள் கொண்ட வார்த்தைகளை அவள் மனதிலும் நான் காகிதத்திலும் சேகரிக்க சேகரிக்க எங்கோ சட்டென வார்த்தைச் சரம் அறுந்து அனைத்தும் கொட்டுகிறது. தயங்கித்தயங்கி எழுதியதை ஒரு முறை படித்துக்காட்டச் சொல்கிறாள். சில வாக்கியங்கள் எங்கோ துவக்கி எங்கோ முடிகின்றன. இலக்கண பிழைகள். விடையை யோசிக்க நிறைய தாமதம். ஒவ்வொன்றையும் உறுத்தாமல் சுட்டிக்காட்டும் சரியான குரல் தெரியாமல் முதல் பத்து நிமிடங்களிலேயே துவண்டு போகிறேன். வெப்பமும் குழப்பமுமாக கவனம் சிதறுகிறது. வீணடிப்பதற்கு இது என்னுடைய தேர்வல்ல என்பதை எனக்கே ஒரு முறை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன். அவள் நினைப்பதை எழுதுவது தான் சரி – பிழைகள் இருந்தாலும் இல்லையென்றாலும். முதல் முறை இந்தப் பணியை செய்ய முயன்ற என் மேல் எனக்கே கோபம் வருகிறது. அவள் சொல்வதில் இருக்கும் பிழைகளை புறக்கணித்து வெறும் சொற்களை மட்டும் கேட்டு கேட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் நிறையும் வரை எதையும் யோசிக்க மறுக்கிறேன். அடுத்த பக்கம் தொடங்குகிற சமயத்தில் அவள் வார்தைகளின் கயிறை எப்படியோ தேடி இறுக்கப் பிடித்துவிடுகிறாள். சன்னமான குரல் வழியே அவள் விடுவிக்கிற ஒவ்வொரு சொல்லையும் நான் காகிதத்தில் எழுதும் முன் அதை எனக்கு நானே சொல்லிக்கொள்கிற என் குரல் நீருக்குள்ளிருந்து மேலெழும்பி ஒலிப்பதைப் போல ஒரு கட்டத்தில் எனக்கு கேட்கிறது. மின்விசிறியின் சத்தத்தையும அவளின் குரலையும் மீறி ஆழ்ந்து அதை கவனிக்கிறேன் – எந்த பாவங்களும் அற்ற அந்த வார்தையின் குரலாக மட்டும் அது இருக்கிறது. இருளில் பின் தொடர்பவன் போல கவனித்து தொடர்ந்து ஒரு கட்டத்தில் அமைதியை அடைகிறேன். சொற்கள் அவளின் குரலில் என்னுடைய குரலில் என்னுடைய எழுத்தில் என நெருக்கமாக பயணிக்கத் துவங்குகின்றன. இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு ஒரு முறை இன்னும் மறக்காத அவளின் முகத்தையும் அவளின் விழிகளையும் பார்க்கிறேன். அடுத்த வார்தையை யோசித்துக்கொண்டிருக்கும் அவளை கொஞ்சம் துரிதப்படுத்தவோ, சொல்வதில் பிழைகள் இருக்கக்கூடிய சாத்தியங்களை சுட்டிக்காட்டவோ, உறுத்தாமல் உபத்திரமில்லாமல் ஒரு திருத்தமோ உதவியோ இனி செய்ய முடியும் என்று தோன்றுகிறது. அவளை பார்த்தபடி காத்திருந்து விட்டு அவள் உச்சரிப்பு பிழையுடன் சொன்ன ஒரு சொல்லை எழுதும் பொழுது உச்சரிப்பு பிழைகளில்லாத என்னுடைய குரல் அதன் கீழே ஒரு புன்னகையை அடிகோடிடுகிறது.

[..]

எத்தனை நீண்ட பயணமாக இருந்தாலும் இரவு உறங்குவதற்கு வீட்டிற்கு திரும்பிவிட அம்மா எப்போதுமே முயல்வார். அது இயலாத நாட்களில் உறவினர்களின் வீட்டிலோ நண்பர்களின் இல்லத்திலோ விடுதியிலோ உண்டும் தங்கவும் நேரிடும் இரவுகளில் அவர் உடல் மொழியில் ஏற்படும் கூச்சமும் தயக்கமும் பதினான்கு வயதில் எனக்கு சலிப்பைத் தந்தது. என்ன ஏதென்று தெரியாமல் நம்மையும் மீறி நிகழ்ந்துவிடக்கூடிய புரிதல் ஒன்றினால் அந்த சலிப்பு ஒரு கட்டத்தில் ஒரு துளி அதிக கவனமாக மாறியது. அவருக்கு சரியான உணவு, பேச்சுத் துணை, தலையனை கிடைக்கிறதாவென சரிபார்க்கிற கவனம். சரிபார்த்துவிட்டு உறங்கச் சென்று இருவரும் அரைகுறையாகத் தூங்கி எழுந்து வீட்டை நோக்கி புறப்படுவோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்கு நாள் பயணமாக ஒரு மலைப்பிரதேசத்திற்கு நானும் அவருமாக செல்லத் திட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு காணப்போகும் இடங்கள், கோவில்களைப் பற்றிய உரையாடல்களில் நாங்கள் தங்கப் போகும் இடத்தைப் பற்றிய குறிப்புகளை கவனமாக நழுவவிட்டுக்கொண்டிருந்தேன். மலையின் மேலே ஆங்காங்கே இருக்கும் பங்களாக்களை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்களுடன் தங்கி விருந்தோம்பல் பெற்று காசு கொடுத்து திரும்புவதே உசிதமும் திட்டமும். அதை முழுதும் புரிந்துகொண்ட பின்னர் சரியென அவர் சம்மதித்தாலும் ஓய்வு பெற்ற பிறகிலிருந்து எனக்கு எப்போதும் எதற்கும் கிடைக்கும் சம்மதங்களுக்கு இடையே அது கொஞ்சம் சந்தேகத்தையே தந்தது. நாள் முழுக்க பயணித்து இரவில் வெகு தாமதமாக அங்கு சென்று சேர்ந்ததால் முதல் நாள் அந்த வீட்டிலிருந்தவர்களின் அறிமுகம் சரியாக கிடைக்கவில்லை. ஒரு நடுத்தர வயது பெண்மணி கீழே தனியே தங்கியிருந்து மேலே மூன்று அறைகளை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அடுத்த இரண்டு நாட்கள் அதிகாலையிலேயே கிளம்பி தாமதமாக வந்து சேர்ந்ததால் சில காபிகள் மட்டும் மேலே அறைக்கு வந்தன. மூன்றாம் நாள் மாலையே நாங்கள் வீடு திரும்பியதால் இரவு உண்பதற்கு கீழே வருமாறு கட்டாய அழைப்பு. எங்கள் மொத்த பயணத்தின் வரைபடத்தில் ஒரு முக்கிய புள்ளியை குறிப்பவன் போல உணர்கிறேன். பளிச்சென தயாராகி அம்மா புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார், தண்ணீரில் ஒரு துளி எண்ணெய் விழுந்து கலங்குவதைப் போல ஒரு தயக்கத்துடன்.

அழைப்பு வந்ததும் இருவரும் ஹாலின் வெளிச்சமும் நிசப்தமும் ஒரு துண்டென விழுந்து கிடக்கும் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்கிறோம். முழுக்க முழுக்க பூச்சிகளின் சத்தங்கள் நிறைகிற இரவு. உள்ளே நுழைந்ததும் முதன் முறையாக அந்த வீட்டில் தங்கியிருக்கும் இன்னொரு விருந்தினரை பார்க்கிறோம் – நடுவயது ஆண் – தோற்றம் முழுக்க பணத்தின் பொலிவு, உடன் ஒரு இளம் அமெரிக்கப் பெண் – இருவரும் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். காட்சியின் விசித்திரம் அழுத்தமாக என் மனதில் பதிகிறது. அடுத்த நகரில் தங்கி வங்கியில் பணிபுரியும் வீட்டின் மருமகள் வந்திருந்து பரபரவென இயங்கிக்கொண்டிருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை கவனிக்குமாறு சொல்லிவிட்டு நானும் அம்மாவும் அங்கிருந்த பிரம்பு நாற்காலிகளில் அமர்கிறோம். வீட்டின் உரிமையாளர் உடைந்த ஆங்கிலத்தில் வரவேற்று தாமதத்திற்கு வருந்தி சூழ்நிலையின் சங்கடத்தை கூட்டியும் குறைத்தும் கலைக்கிறார். பத்து நிமிடங்களில் உண்டு முடித்தவர்கள் எழு நாங்களும் அவர்களும் இடம் மாறுகிறோம். அவர் எதையோ சொன்னதும் ஹாலின் வேறொரு விளக்கு ஏற்றப்பட்டு அறையின் வெளிச்சம் மாறி மங்குகிறது. அவர் அந்த அமெரிக்கப் பெண்ணை பார்த்தபடி சன்னமான குரலில் ஏதோ ஒரு கதையை சொல்லத் துவங்குகிறார். எனக்கு நேராக அமர்ந்திருக்கும் அம்மாவையும் அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் அவர்களையும் பார்த்தும் பார்க்காமலுமாக பிரமாதமான உணவை உண்ணத் துவங்குகிறேன். வார்தைகள் புரியாமல் ஒரு துளி பரிச்சயமும் ஒரு துளி காதலும் ஒரு துளி மோகமும் கொண்ட குரல் மட்டும் ரகசியம் போல கேட்கிறது. பாத்திரங்களின் ஒலிகள், ஆள் நடமாடும் சத்தங்கள், சாப்பிடுவதால் ஏற்படும் சின்னஞ்சிறு ஓசைகள் எல்லாம் மெல்ல அந்த குரலுக்குப் பின்னால் பதுங்கி ஒளிகின்றன. அந்தக் குரலில் தெரியும் நெருக்கத்தினால் அவர்கள் இருவரும் கைகோர்த்துக்கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருளில் திரையரங்கில் பார்க்கிற காட்சியைப் போல இருக்கிறது. அம்மா எதற்கோ பிரகாசமாக என்னைப் பார்த்து புன்னகைக்கிறார். அது அந்தக் குரலுக்கும் காட்சிக்குமாக இருக்கும் என்று அனுமானம். அம்மா மெல்லிய குரலில் அந்த மருமகளிடம் உணவு பிரமாதமாக இருப்பதாகச் சொன்னதும் எனக்கு ஏனோ கொஞ்சம் பெருமையாக இருக்கிறது. உள்ளிருந்து இன்னொரு பீங்கான் பாத்திரம் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அதிலிருந்து எழும் மணம் தூண்ட அதன் மூடியை திறந்து ஒரு சிறிய தேக்கரண்டியினால் அதைக் கொஞ்சம் கிளறுகிறேன். உள்ளே அந்தக் காட்சியின் நிறத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் ஒரு சிறிய கரப்பான்பூச்சியைக் கண்டு அதிர்கிறேன்.

அறையின் அமைதி பேரிரைச்சலைப் போல கேட்க அதன் ஒற்றைக் கயிற்றின் மேலேறி நடப்பவன் போல ஒன்றும் புரியாமல் திகைக்கிறேன். கை தானாக அந்த பாத்திரத்தை மூடி கொண்டு அப்படியே மூடிவைக்கிறது. அந்த இரு பெண்களும் அடுப்படி வாசலில் நின்று சம்பிரதாய கேள்விகளை கேட்க முயற்சிக்க அம்மா உற்சாகமாக பதில்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். எனக்கு அந்த உரையாடலில் இருக்கும் சிற்சில மௌனங்கள் ஓவெனக் கேட்கிறது. நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதை கவனித்து அம்மா என்னவென்று கேட்கிறார். அந்த வீட்டின் மருமகள் அவசரமாக வந்து என்னவென்று கவனிக்கிறார். முகத்தில் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கிறேன் என்று உணர்ந்தவனாய் சுதாரித்து ஏதுமில்லை என்று சொல்லி நம்பவைக்கிறேன். கொஞ்சம் பிசகினால் எல்லாம் உடைந்து தூள் தூளாகி விடும் என்கிற பயம் உணர்ந்து மெல்ல மெல்ல அமைதியடைகிறேன். கொஞ்சமும் மாறாமல் அவரின் குரல் மீண்டும் கேட்கத் துவங்குகிறது – அது வரை அவர் பேச்சை நிறுத்தியிருந்தாரா இல்லை எனக்கு கேட்கவில்லையா என்று தெரியவில்லை. முடியாத கதை போல நீண்டுக்கொண்டே இருக்கிற பேச்சின் பிண்ணனியில் எல்லோரும் தத்தமது பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தப் பெண்ணை அழைத்து உருளைக்கிழங்கு வேண்டாம் என்றும் அம்மாவிற்கு ஒத்துக்கொள்ளாது என்றும் சொல்ல அவள் உடனே பதற்றமும் கலக்கமும் கொண்டு குழும்புகிறாள். மீண்டும் அதைச் சொல்லி அம்மாவும் கொஞ்சம் வியப்புடன் ஆமோதிக்க அவள் சந்தேகத்துடனே சரியென தலையசைத்து அதை உள்ளே எடுத்துச் செல்கிறாள். எனக்கு போதுமென மிச்ச உணவை அப்படியே வைக்கிறேன். என்னையும் தட்டையும் ஒரு முறை பார்த்துவிட்டு அம்மா ஏதும் சொல்லாமல் சில நொடிகளுக்குப் பின்னர் தயிர் மட்டும் சாப்பிடறேன் என்று ஏனோ என்னிடம் சொல்கிறார். விளையாட்டாக யோசிப்பதைப் போல கொஞ்சம் யோசித்து விட்டு சரி என்று மெல்ல தலை அசைக்கிறேன்.

[..]

துணைக்கும் அறிமுகத்திற்கும் யாருமில்லாத நகரில் துவங்கிய முதல் மாலைப்பொழுதில் என்னுடைய கோப்புகள், உடைகள் மற்றும் புத்தகங்கள் இருந்த விடுதி அறையை இழுத்துப் பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன். விடுதியின் வரவேற்பறையில் இருந்தவளுக்கும் வீதியில் எதிர்பட்டவர்களும் வழங்கிய புன்னகை ஒன்று மட்டுமே அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த நகரில் என்னுடைய அடையாளம். நாட்டின் எல்லையை தாண்டி வந்தமையால் அலைபேசியால் எந்த இடையூறும் இல்லை. . இங்கிங்கு செல்ல வேண்டுமென்றோ அதை புகைப்படம் எடுக்கவென ஒரு நல்ல இடம் தேடவேண்டுமென்றோ அதன் பெயர்களை நினைவில் வைக்கவோ அவசியமில்லை. கைவசம் அலைபேசி இல்லாததால் திசை காட்ட யாருமில்லை திசை தவறவும் வாய்ப்பில்லை. என்னை எனக்கே நினைவுபடுத்தும் விருப்பமான பாடல்கள் என் காதுகளுக்கு மட்டும் ஒலிக்க அதன் மெல்லிய திரைக்கு அப்பால் நிகந்துகொண்டிருந்த நகரத்தின் இரைச்சலின் ஊடே நடக்கத் துவங்குகிறேன். என்ன செய்யலாம் – ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு தீவிர வாசக அடையாளத்தைப் பெற்று அவ்வப்போது தலை நிமிர்ந்து உலகை ஒரு பார்வையில் அளக்கலாம். ஒரு குறிப்பேட்டில் (இதை) எழுத வேண்டி ஒரு தேநீர் கோப்பையுடன் சாலையோர ஜன்னல் இருக்கையில் அமர்ந்து யோசிக்கலாம். வெறும் காற்றை வேண்டுபவனாக பூங்காவில் அமரலாம். நேரம் பார்க்க வேண்டாம். பேருந்து டாக்ஸி வேண்டாம். சில சமயங்களில் வெறும் சாத்தியங்கள் மட்டுமே போதும், செயல்கள் தேவை அல்ல. ஒரு விரல் கொண்டு தொட்டுப் பார்க்கிற, ஒரு துளி மட்டும் சுவைத்துப் பார்க்கிற சாத்தியங்கள். அவற்றை அசை போட்டபடி பாடல்களுக்கு ஏற்ப நின்று நடந்து திரும்பி இசையே திசையாகிறது. பழங்கட்டிடங்கள், நினைவிடங்கள், சிலைகள் என திரும்பிய பக்கமெங்கும் காண்பவைகளை என்ன ஏதென்று வினவாமல் என்னைப் போலவே பெயரற்றவைகளாக இருக்க விட்டு கடந்து செல்கிறேன். ஒரு கட்டத்தில் ஒரு நீண்ட சாலையும் உடனோடும் ஆறும் அதற்கு அப்பால் சரிந்து கொண்டிருக்கும் சூரியனும் என்பதாக முடியும் நகரின் மேற்கு எல்லையை அடைகிறேன். அதன் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நகரின் மீது விழும் பிரம்மாண்ட மாலைப்பொழுது நீள நீள நிழல்களாக விழுந்து ஊர்ந்துத் தேய்ந்து மறையும் வரை நடக்கிறேன். காட்சிகள், காட்சிகள், காட்சிகள் – ஏதும் அற்ற வெற்றுக் காட்சிகள் – இசையும் எண்ணங்களும் நிறைந்ததும் வடிவம் பெறும் காட்சிகளை குறித்துக்கொண்டு உடனுக்குடன் மறக்கிறேன். மிக மிகத் தாமதமாக சூரியன் மறைந்து மாலைக் காட்சி நிறைவடைந்ததும் விடுதியை நோக்கிச் செல்லும் வழியை கண்டறியத் தொடங்குகிறேன். மதிய உணவிற்கு அடங்கிய பசி இன்னும் எழுவில்லை என்பதால் உண்ண வேண்டிய கட்டாயமில்லை. அறைக்குச் சென்று அப்படியே படுக்கையில் விழுந்து தூங்கி வேறு யாரோவாகக் கூட எழுந்து விடலாம்.

நடக்கத் துவங்கியவன் ஏனோ தென்படும் முதல் இந்திய உணவகத்தினுள்ளே நுழைந்து விடுகிறேன். மிகவும் சோம்பலாகவும் எளிமையாகவும் இருந்தது அந்த உணவு விடுதி. என்னைத் தவிர யாருமில்லை. கிட்டத்தட்ட இணைந்தேவிட்ட இரு புருவங்களால் என்னை வரவேற்ற இளம்பெண்ணிடம் ஏதோ ஒரு உணவை தேர்ந்தெடுத்து சொல்கிறேன். . எனக்கென ஒரே ஒரு மேஜையினருகே ஒரு விளக்கு எரியவிடப்படுகிறது. பசியில்லாமல் எதற்கு இங்கு வந்தேன் என்பதைப் பற்றி யோசிக்காமல் அங்கிருந்த அறிவிப்புகளை பார்க்கிறேன். அந்த நகரில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக முஸ்லிம்களை இணைக்கிற தொழுகைகள், நிகழ்ச்சிகள் ஆகியற்றின் அறிவிப்புகள். சுவற்றில் ஆங்காங்கே சில அவசர ஓவியங்கள். வேறெங்கும் பார்த்திராத வகையில் வெளியே எல்லார் பார்வைக்குமாய் அணைத்துவைக்கப்பட்டிருக்கும் அகண்ட அடுப்பு. ஐந்தே நிமிடங்களில் தயாராகிவிடுமென மன்னிப்பைக் கோருபவள் போல சொல்கிறாள். இருக்கைக்கு வந்து அமர்ந்த பின் கவனத்தை கொஞ்சம் கலைக்க முற்பட்டு தோற்று பெருமூச்சுடன் உணர்கிறேன் – எதுவாக இருந்தாலும் இரவு உணவை உண்பது கைவிட முடியாத பழக்கம். எங்கிருந்தாலும் தேடித் தேடி கேட்டு உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்துகிற அம்மாவினால் வந்த பழக்கம். விசித்திரமாக, வந்தும் மறைந்தும் போன நெருக்கமான பலரும் அதையே செய்திருக்கிறார்கள். பல சமயங்களில் அந்த கட்டாயத்திற்காகவே உள்ளுக்குள் ரகசியமாக காத்திருந்திருக்கிறேன் என்பதை முதல் முறை கொஞ்சம் சந்தேகத்துடனே உணர்கிறேன். தொடர்பேயின்றி பலப்பல காட்சிகள் நினைவிற்கு வருகின்றன. எனக்குள் இல்லாத பசி மிகச்சுலபமாக என்னுடைய அடையாளத்தை உருவி எடுத்ததை தோற்றவன் போல ஒப்புக்கொள்வதில் சலிப்பேற்பட்டு அவ்வளவு நேரம் நடந்ததின் அலுப்பு தெரிகிறது.

ஆறேழு நிமிடங்களில் விடுதிக்குள் சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் வருகிறான். அந்தப் பெண்ணும் அவனும் சலாம் சொல்லிக்கொண்ட விதத்தில் முன்பே பரிச்சயமானவர்கள் என்று தோன்றுகிறது. விடுவிடுவென நடந்து எனக்கு குறுக்காக இருக்கும் மேஜையில் அவன் மூச்சை இழுத்துப் பிடித்தவன் போல மிக நேராக தன்னுடைய முதுகைக் காட்டியபடி அமர்கிறான். சில நொடிகளை மனதில் எண்ணிக் காத்திருந்தது போல சட்டென கணீரென்ற குரலில் தன்னுடைய தொழுகையை சொல்லத் துவங்குகிறான். என் விழிகள் தானாக சற்று சாய்ந்து வானோக்கிய அவனுடைய கைகளை பார்க்கிறது. அவன் சொல்லாமலே அந்தப் பெண் ஒரு சிறிய தட்டில் சில பழத்துண்டுகளை கொண்டு வந்து அவனுடைய மேஜையில் வைக்கிறாள். விடுதியின் அத்தனை விளக்குகளையும் எரிய விடுகிறாள். சன்னமாக முனகிக்கொண்டிருந்த இசையை நிறுத்துகிறாள். உள்ளிருந்து இன்னும் சிலர் விடுதியின் முகப்பிற்கு வந்து அடுப்பை மூட்டுகிறார்கள். சரசரவென சமையலறை சத்தங்கள். சூரியனின் நீண்ட அஸ்தமனம் முடியும் வரை பசியுடன் காத்திருந்த விரதத்தை முடிக்கிற பேரமைதி அவனுடைய குரலில் கூர்மையாக அங்கு அமர்ந்திருக்கும் எனக்கு மட்டுமாக எல்லா சத்தங்களையும் மீறி கேட்கிறது. அந்தப் பெண் என் உணவை என் மேஜையில் வைத்து விட்டு நகர்கிறாள். துளியும் பசியின்றி அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உண்டபடி கடவுளுக்கு அவன் சொல்லும் நீண்ட நன்றியை உன்னிப்பாக கேட்கிறேன். எங்கோ ஒரு கணத்தில் எதற்கோ என் கையெங்கும் சிலிர்க்கிறது. அதை மறைக்க வேண்டி அரைக்கை சட்டையை அனிச்சையாக கொஞ்சம் கீழிழுத்துக் கொள்கிறேன். அதற்கு மேல் உண்ண முடியாமல் உணவை வைத்து விட்டு அவனுடைய குரலை கேட்டபடி அமர்ந்திருக்கிறேன். வெளியே இருந்து இன்னும் மூவர் உள்ளே வந்து சலாம் வைத்துவிட்டு அந்தக் காட்சியில் அந்நியமாகத் தெரியும் எனக்கு ஒரு அழுத்தந்திருத்தமான புன்னகையைத் தருகிறார்கள். இன்னும் பலர் விரதத்தை முடிக்க உள்ளே வரத் துவங்குகிறார்கள். அவர்களுக்கு இடம் விட வேண்டி என்னுடைய உணவை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்று அதை வீட்டுக்கு எடுத்தச் செல்ல ஏதுவாகத் பெட்டியிலிட்டு தரச் சொல்கிறேன். முன்னதை விட பிரகாசமான புன்னகையுடன் அவசரமாகச் செய்து தருகிறாள். அதை கையில் எடுத்துக்கொண்டு வெளியேறும் முன் தற்செயலாக திரும்பி அங்கு அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரின் விழிகளைச் சந்திக்க அவர் எனக்கு மெல்ல தலையசைத்து விடை தருகிறார்.

[..]

இது – வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தளங்களில் சந்தித்து வெவ்வேறு வகைகளில் எனக்கு நெருக்கமான அவர்கள், வெவ்வேறு கணங்களில் ஏதோ நினைத்து காரணங்கள் இருந்தும் இல்லாமலும் தங்களின் குரலில் ஒவ்வொரு பாடலை பாடிப் பதிவு செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். ஒவ்வொரு முறை அதை கேட்கையிலும் ஏற்படுகிற வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும், அவர்களுக்கும் அவர்களின் குரல்களுக்கும்.

Written by Aravindan

ஓகஸ்ட் 6, 2013 இல் 4:58 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

[சிறுகதை] விஸ்கி

17 மறுமொழிகளுடன்

அபார்ட்மெண்ட் வளாகத்தையும் ரயில்நிலைய வளாகத்தையும் பிரிக்கிற இரண்டு ஆள் உயர வலைதடுப்பில் சாய்ந்தபடி தூரத்தில் அகி ஒரு தீக்குச்சி உயரத்தில் தெரிந்தாள். ஈரமும் உறுதியுமான பனி நிரம்பிய நடைபாதையில் என் கால்கள் கவனமும் வேகமும் கொண்டன. அகியை நெருங்க நெருங்க அவளின் கைகள் வலைத்தடுப்பை பற்றியிருக்கிற அழுத்தம் புலப்பட்டது. ஒரு காலை வணக்க புன்னகையை வழங்க சரியான சந்தர்ப்பத்தை கணித்தபடி நடந்து கொண்டே வலைதடுப்பின் கதவை அடைந்தேன். அகி என்னை பார்த்தபடி தீவிரமாக என்னைத் தாண்டி எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள். சாவி பூட்டில் பொருந்தாமல் குளிரில் நடுங்கியது. கதவை திறந்து அவளின் முன்னால் நின்றபடி ‘ஹாய்’ என்றேன். அகி புன்னகைத்துவிட்டு கைகள் இரண்டையும் முழங்கால் வரை நீள்கிற சாம்பல் நிற கம்பளி கோட்டின் பெரிய பாக்கெட்டுகளுக்குள் நுழைத்துக்கொண்டாள். ‘என்னாச்சு? ஏன் வெயிட் பண்றேன்னு சொன்னே’ என்றேன். ஏதுமில்லை என்று தலையசைத்த அகி சுற்றும் சுற்றும் பார்த்து காட்சியை உள்வாங்கியபடி தனக்குள்ளே ஏதோ வார்தைகளை தேடிக்கொண்டிருந்து விட்டு சட்டென ‘நான் ஷிவாவ லவ் பண்றேன்’ என்றாள். விழிகளை விரித்து பார்வையை கூராக்கி அவளை புதிதாக பார்த்தேன். ’ஐயாம் ஷ்யூர்’ என்று தொடர்ந்தவளின் அடுத்த சில வார்த்தைகள் வெறும் பனிப்புகையாக வெளியேறியது. அவ்வளவு தான் என்பது போல பார்த்தவளிடம் ஏதும் சொல்லாமல் ‘குட்’ என்று சொல்லி புன்னகைத்தேன். ‘வா’ என்பது போல ரயில் நிலையத்தை நோக்கி கை காட்ட, விடுபட்டவள் போல நடக்கத் துவங்கினாள். தினசரி அதே பெஞ்ச்சில் அதே ஆர்வத்துடனும் அதே புன்னகையுடன் என்னையும் அகியையும் பார்க்கிற அதே அமெரிக்கர் புன்னகையுடன் நிமிர்ந்து சட்டென புன்னகை வடிந்து என்ன என்பதைப் போல பார்த்தார். இருவரும் வேகமாக நடந்து மெல்ல மெல்ல ஊர்ந்து மேலேறும் நடைபாதையில் கூட்டத்தை திறமையாக கிழித்திக்கொண்டு முன்னேறினோம். உள்ளே குறுகிய எஸ்கலேட்டரில் மக்கள் நடந்தும் நின்றும் இறங்கிக்கொண்டிருந்தார்கள். நான் முன்னே சென்று கொஞ்சம் வழியை ஏற்படுத்த அகி என்னைத் தொடர்ந்து எஸ்கலேட்டரில் நின்று கொண்டு பாதி இறங்கியதும், ‘நீ எப்படி ப்ரப்போஸ் பண்ணே?’ என்றாள். ஆச்சரியத்தில் அவள் பக்கமாக திரும்பி மேலே பார்த்தேன். ‘சாரி’ என்று ஒரு வெற்றுப்புன்னகையை உதிர்த்தாள். ரயில் மேடையில் இரண்டு ரயில்கள் காத்திருந்தன. நான் அகியுடன் அவளுடைய ரயிலை நோக்கி நடக்கத் துவங்கியதும் ‘நீ போ’ என்றாள். என் ரயிலை ஒரு முறை திரும்பிப்பார்த்துக்கொண்டு ‘சரி’ என்று நகரத் துவங்கினேன். ‘ஒரு நிமிஷம்’ என்று பையிலிருந்து ஹாருகி முராகாமியின் நார்வீஜியன் வுட் புத்தகத்தை எடுத்து நீட்டி ‘படிக்கப் போறதில்ல’ என்றாள்.  ‘எய்ட்டீந்த் எங்க ஆஃபீஸ் லீவ் இல்லையாம்’ என்று சொல்லியபடி புத்தகத்தை வாங்கிக்கொண்டு ’ரொம்ப யோசிக்காத, எதுவும் ஆகாது’ என்று சொல்லிவிட்டு நடைமேடையை கடந்து என்னுடைய ரயிலில் ஏறிக்கொண்டேன். ஏதேதோ அறிவிப்புகள்,  அவசரமாக ஏறி இறங்கும் யார்யாரோக்கள். ஒலியழைப்புகளுடன் ரயிலின் கதவுகள் மூடிக்கொண்டன. குனிந்து கண்ணாடி வழியே எதிர் ரயிலில் தேடித் தேடி அகியின் குழம்பிய விழிகளை கண்டடைந்தும் ஒரு சிலிர்ப்பில் தத்தமது திசைகளை அறிந்தது போல ரயில்கள் எதிரெதிர் திசையில் புறப்பட்டன.

1

இன்பா

நாளெல்லாம் புத்தகம் என் அலுவலக மேஜை யின்மீது கிடந்தது. என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், அதை மற்றுமொரு புத்தகம் எனக் கண்டுகொள்ளவில்லை. என்னை அறிய முற்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் புத்தகத்தைப் பற்றியும் பல முறை தொடங்கியும் அந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தைத் தாண்டி இது வரை படித்ததில்லை என்பதைப் பற்றியும் விளக்கிச் சொல்லி பல அமெரிக்க பொய் ஆச்சரியங்களையும் சில குறுகிய கண் சீன ஆச்சரியங்களையும் புன்னகையுடன் எதிர்கொண்டேன். அகி நாளெல்லாம் வாட்ஸாப்பிலும் ஜிமெயிலும் அதிசயமான அமைதியைக் கொண்டிருந்தாலும் அதை கலைக்க ஏனோ தோன்றவில்லை. மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே அலுவலகத்திலிருந்து கிளம்பி ரயிலை பிடித்தேன். ரயில் நிலையத்திலிருந்து இறங்கியதும் அங்கேயே அமர்ந்து புத்தகத்தை மீண்டும் படிக்கத் தொடங்கலாம் என்றும் அகி வரும் வரை காத்திருக்கலாம் என்றும் தோன்றியது. ஷிவாவைப் பற்றி கேட்க வேண்டும், பேச வேண்டும். இருந்தும் அகி யோசிக்க இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படலாம் என்று தோன்றியது. எதற்காக எல்லோரும் காதலித்துத் தொலைக்கிறார்கள்? அகி இந்தக் காதலை பொறுத்தவரை என்ன செய்யக்கூடும் என்பதில் எந்த தெளிவும் எனக்கில்லை. நாலரை மணிக்கே இருட்டத் தொடங்கும் பனிக்கால வெறுமை மனதையும் இருட்டத் துவங்கியது. இலக்கில்லா யோசனைகளில் தட்டுத் தடுமாறி வீடு வந்து சேர்ந்தேன். இன்பா இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. ஹால் இருண்டு கிடந்தது. அதன் ஒரு மூலையில் அரை மனதுடன் எரியும் ஒரு சுவர் விளக்கை திருப்பினேன். சோஃபா டீப்பாய் அதன் மேல் அடுக்கை வைக்கப்பட்ட சில கடிதங்கள் என அறை துல்லிய ஒழுங்குடனும் ஏராளமான வெற்றிடமுமாக இருந்தது. டிவியோ லேப்டாப்போ சுவர்க்கடிகாரங்களோ ஏதுமின்றி சப்த கால பெருவெளிகளில் சேராமல் எப்போதும் மிதக்கிற அறை. ‘உங்க வீட்டு ஹால் சும்மாத்தானே இருக்கு?’ என்று ஒவ்வொரு முறை ஒரு டின்னரையோ பர்த்ட்டே பார்ட்டியையோ திட்டமிடுகையில் நண்பர்கள் கேட்கவே செய்வார்கள். (ஆனால் டிவி இல்லாதது தடையாக இருந்தது). நானும் இன்பாவும் தத்தமது தனிமைகளை மிகத் தீவிரமாக பாதுகாப்பவர்கள். சரியான அளவில் சரியான பொழுதில் சங்கடப்பட வைக்காத அக்கறையை காட்டிக்கொண்டாலும் எங்களின் அறைகளே எங்களின் உலகம், அதிலிருந்து எந்தத் தடயமும் இந்த ஹாலிற்கு தவறியும் வந்ததில்லை. துவக்கத்தில் எனக்கு இது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. இன்பா குடி வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு சனிக்கிழமை இரவுப் பொழுதில் ஹாலில் அவன் அமர்ந்திருந்ததைப் பார்த்து நானும் மரியாதைக்காக பேச்சு கொடுக்கத் துவங்கி சினிமா அரசியல் விளையாட்டு என இதழ்கள் உதிர்ந்து உதிர்ந்து பெயர்களும் இடங்களும் காலமும் குறிக்கத் தேவையற்ற ஒரு பேச்சை இன்பா துவக்கினான். ஒரு பூனை ரகசியமாக மதில் ஏறுவதைப் போல காதலா மோகமா அப்பாவைப் பற்றியா நண்பனைப் பற்றியா என்றெல்லாம் அடைமொழி இடாத ஒரு பேச்சுக்கு அவன் தாவியிருந்தான். இருந்தும் அவன் சொல்பவை முழுமையாக இருந்தன. மிகத் துல்லியமான தகவல்களுடன் நிரம்பிய பெயரற்ற கதாபாத்திரங்களின் கதை போல அதை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அதிகாலை வரை பேசிக்கொண்டிருந்து விட்டு கலைந்தோம். பின்னர் நானோ அவனோ ஹாலில் அமர்ந்திருப்பது அப்படி ஒரு பேச்சுக்கான வார்த்தைகளில்லாத அழைப்பாக ஆகிப் போனது.

நண்பர்கள் நண்பர்களின் நண்பர்கள் அவர்களின் நண்பர்கள் என நீளும் இணைப்புச்சங்கிலியின் முனைகளில் நானும் இன்பாவும் சேர்ந்த நாள் அவனது பிறந்தநாள். அவன் யாரென்று அறியாமலே நானும் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். மிகத் தாமதமாக நான் கிளம்பியிருந்ததாலும் அதற்குள் பரிசு கொடுக்கப்பட்டு கேக்கும் வெட்டப்பட்டிருந்ததாலும் வெறுங்கையுடன் போக விருப்பமின்றி சில நண்பர்களை அழைத்து என்ன வாங்கி வரலாம் என்று கேட்டிருந்தேன். பர்த்ட்டே பார்ட்டி கூச்சலில் யாரோ ‘பேசாம ஒரு விஸ்கி பாட்டில் வாங்கிக் கொடு பெஸ்ட்டு’ என்று கத்தினார்கள். முன் தகவல்கள் ஏதுமின்றி நானே ஆறு வருடங்கள் வயதான ஒரு விஸ்கி பாட்டிலை வாங்கிக்கொண்டு சென்று அவனிடம் கொடுத்தேன். ‘இவனும் ராஜா ஃபேன்’ என்று யாரோ என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். விஸ்கி பாட்டிலை வாங்கிப் பார்த்து விட்டு இன்பா ‘என்ன மறந்தாலும்னு ஒரு பாட்டு கேட்டிருக்கீங்களா? காதல் சாதி. ரீலீஸ் ஆகல’ என்றான். ‘ஐயோ அவ்ளோலாம் தெரியாது’ என்று சிரித்தேன். அதன் பின்னர் ஆறு மாதங்களாக எந்தப் பொதுச்சந்திப்பில் சந்தித்தாலும் ‘விஸ்கி பாட்டிலை இன்னும் ஓப்பனே பண்ணல’ என்பதும் ‘இன்னும் அந்தப் பாட்ட கேக்கல’ என்பதும் எங்கள் இருவரின் நலம் விசாரிப்பானது. எல்லா விவாதங்களிலும் கூட்டத்திலும் அமைதியாகவே இருக்கும் இன்பா எப்போதேனும் அளவான கருத்தை பகிர்வான். பெரும்பாலான நேரங்களில் மொட்டைத் தலையும் கீழிறிங்கி தாடையில் நிரம்பும் மீசையும் அதற்குள் சிரிப்புமாக ஒரு மூலையில் இருப்பான். இந்த வீட்டை நான் வாடகைக்கு எடுத்த நாளில் நான் ரூம்மேட் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று யார் மூலமோ அறிந்ததும் இன்பா என்னை அழைத்து வீடு தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்ல எதுவும் யோசிக்காமல் அடுத்த நாளே வருமாறு சொன்னேன். உடனே நினைவு வந்தவனாக புதிதாக வாங்கிய ஸ்பீக்கரை பிரித்து இன்னும் பொருட்கள் நிரப்பாத ஹாலில் பொருத்தி ‘என்ன மறந்தாலும்’ பாடலைத் தேடி ஓடவிட்டு நகர்ந்தவன் பாடல் தொடங்கியதும் ஒரு கணம் நின்று விட்டேன். பிறந்த நாளன்று எதேச்சையாக எனக்குச் சொன்ன பாடல் அது என்று நம்பமுடியவில்லை. ஏதோ ஒரு தனிச் செய்தி போல அதில் பொதிந்திருந்த வெறுமையும் சோகமும் இன்பா வருவதற்கு முன்னரே வீட்டில் நிரம்பி விட்டது.

இருந்தும் நான் எதிர்பார்த்ததை விட இன்பா மகிழ்ச்சியாக இருந்தான். நல்ல சமையல்.  எப்போதும் மெல்லிசையில் மிதக்கிற அறை. சனிக்கிழமை இரவுகளில் பால்கனியில் கொஞ்சம் விஸ்கி அல்லது ரம். (குடி வந்த அன்று அடையாளத்திற்காக என நான் கொடுத்த விஸ்கி பாட்டிலைத் திறந்து ஒரு மிடறு அருந்தினான்) . சில சமயங்களில் சிரிக்க சிரிக்க பேச்சு. (காரில் எங்கேனும் போகையில்). பல சமயங்களில் தனிமை. யாரும் எதுவும் இன்பாவைப் பற்றி அதிகமாகச் சொல்லிக் கேட்டதில்லை. ‘நல்லா பேசுவான்’ என்று சொல்லிவிட்டு மேலே சொல்ல இல்லை என்பதைப் போல நிறுத்திவிடுவார்கள். அந்தப் பேச்சினுள்ளே கலைக்க முடியாத ஒரு மௌனம் இருப்பது எனக்கு மட்டும் தெரிந்திருந்தது.

கதவைத் திறக்கிற சத்தம் கேட்டதும் சோஃபாவிலிருந்து எழு முற்பட்டேன். அதற்குள் இன்பா ஹாலிற்குள் வந்து ‘ஹாய்’ என்று சொல்லிவிட்டு கடிதங்களைப் பார்க்க முற்பட்டு பின்னர் நிமிர்ந்து என் முகத்தில் தெரிந்த யோசனைகளையும் ஹாலில் அமர்ந்திருப்பதையும் கவனித்து ‘என்னாச்சு?’ என்றான். ‘ஒண்ணுமில்ல’ என்றேன். ‘கீழ உங்க ஃப்ரெண்ட் அகி இருக்காங்க’ என்றான். (முன்பெல்லாம் ‘உங்க ஃப்ரெண்ட்’ என்று சொல்லிவிட்டு ஒரு வேளை இது காதலோ என்று ஒரு சந்தேக இடைவெளி விட்டு ‘அகி’ என்று முடிப்பான். ஏதோ ஒரு தருணத்தில் அவனுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது). ‘ஓ’ என்று சொல்லிவிட்டு கீழிறங்கி சென்றேன். அகியின் விழிகள் குழம்பிய குட்டைகளின் மீன்கள் போலிருந்தன. ‘எதுக்கு குளிர்ல வந்த? ஃபோன் பண்ணிருக்கலாம்ல’ என்றேன். ‘ப்ச். மூட் இல்ல. கார் எடுக்கிறியா? நான் ஓட்ட பழகுறேன்’ என்றாள்.

காரை கிளப்பிக்கொண்டு நாலு மைல் தொலைவில் இருக்கும் யாரும் உபயோகப்படுத்தாத அலுவலக வளாகத்திற்குச் சென்றோம். காரை அகியிடம் தந்துவிட்டு பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டேன். அகி யோசித்து யோசித்து கியர் போட்டு ஆளரவம் அற்ற பார்க்கிங் லாட்டில் அக்கம் பக்கம் பார்த்து பார்த்து மெதுவாக கிளம்பும் வரை ஷிவாவை பற்றி கேட்க நினைத்து கடைசியில் ‘காலையில எதுக்கு சாரின்னு சொன்னே?’ என்றேன். ‘எப்போ?’ ‘நீ எப்படி ப்ரப்போஸ் பண்ணேன்னு என்ன கேட்டே. நான் திரும்பி உன்ன பாத்ததும் சாரின்னு சொன்னே’ ‘திடீர்னு அப்படி கேட்டிருக்கக் கூடாதுன்னு தோணுச்சு’ ‘ம்ம்ம்’. முழுதும் வலதாக திருப்பியிருந்த ஸ்டியரிங்கை விட்டதும் அது சல்லென சுற்றி நேரானதும் பிடித்துகொண்டாள்.  ‘சரி, சொல்லு இப்பவாச்சும்’ ‘ப்ச், இப்ப எதுக்கு?’ ‘ரொம்ப வருஷமாச்சுல்ல?’ ‘ம்ம்’ அவசரமாக மனதிற்கு வருடங்களை கூட்டத்துவங்கி ‘ஆறேழு வருஷமாச்சு’ என்றேன். ’அவங்க மொதல்ல நோ சொல்லிட்டு அப்புறமா  அவங்களே யெஸ் சொன்னாங்க தானே?’ ‘ஆமா’ ‘சொல்லிருக்க ஒரு தடவ, ப்ரேக்கப் ஆனது வர கொஞ்சம் கொஞ்சம், சரி எதானா சொல்லு’. ‘யோசிக்கணும்’ என்று இழுத்தவன் என்னையறியாமலே அவள் பக்கமாக திரும்பி வேகமாக சொல்ல ஆரம்பித்தேன். ’அது ஏதோ ரிஷப்ஷன். ஃப்ரெண்டோட அக்கா ரிஷப்ஷனோ அண்ணா ரிஷப்ஷனோ. நாங்க ஒரு இருபது பேர் போயிருந்தோம். காலேஜ் முடிஞ்சு ஒரு வருஷம் ஆயிருக்கும். சோ நான் ப்ரப்போஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு. ஒரே ஆஃபீஸ்ல சேந்ததால தினம் பாத்து பேசி ஃப்ரெண்ட்ஸா இருக்கிறதா வேணாமானு ஒரே சங்கடம். அவ மனசும் கொஞ்சம் கொஞ்சமா மாறுதுன்னு எனக்கு நல்லா தெரியுது. ஆனா அவசரப்படுத்தவும் முடியாது. விட்டும் போக முடியாது. ரிஷப்ஷன் முடிஞ்சு எல்லாரும் வட்டமா சேர் எல்லாம் போட்டு உக்காந்து அரட்டை அடிச்சிட்டிருக்கோம். என் பக்கத்துல அவ உக்காந்திருக்கா. ‘இவ்ளொ செலவு பண்ணி கல்யாணம் பண்ணனுமா’னு ஏதோ பேச்சு. எல்லாரும் ஏதோ ஏதோ சொல்றாங்க. திடீர்னு நானும் சேந்துகிட்டு ‘இவ்ளோ செலவு எல்லாம் வேஸ்ட்டு. பொண்ண புடிச்சிருந்தா’னு சொல்லிட்டு எனக்கே தெரியாம அவளோட கைய பிடிச்சு எடுத்து ‘கைய பிடிச்சு நேருக்கு நேரா என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா போதாதா? அவ சரின்னு சொன்னா முடிஞ்சது’னு சொன்னேன். சொன்னப்புறம் தான் நான் அவ கைய பிடிச்சிட்டு இருக்கேன்னு தெரியும். எல்லாரும் அமைதியாகிட்டாங்க’.

‘ஓ, ஒனக்கு தெரியாமலே நடந்திருச்சு’ ‘சத்தியமா’ ‘சரி சரி’ என்று சிரித்தபடி தலையசத்தாள். ‘அவங்க என்ன சொன்னாங்க?’ ‘எதுவும் சொல்லல’ ‘எப்படி பாத்தாங்க?’ ‘எப்படி… பாத்தாங்கவா.. நினவில்ல. எதுவும் சொல்லல, சிரிச்சான்னு நினைக்கிறேன்’ ‘யோசிச்சு சொல்லு’ யோசிக்க வெளியே பார்க்க திரும்பியவன் மீண்டும் பனி பெய்ய ஆரம்பித்திருப்பதை கவனித்தேன்.  வெள்ளையாக விரிந்திருந்த பார்க்கிங்க லாட்டினில் காரின் தடயங்கள் மட்டும் பதிந்து அதில் பனி மீண்டும் நிரம்பிக்கொண்டிருந்தது. ‘வீட்டுக்கு போலாமா?’ ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என்று சொல்லிவிட்டு அகி காரை  எதிரே இருந்த நான்கடுக்கு பார்க்கிங் லாட்டிற்குள் செலுத்தினாள். இருட்டாக குகை போல அடுத்து எங்கே திரும்பும் என்று புரியாமல் எங்களை உள்வாங்கிக்கொண்டது அந்தக் கட்டிடம். ‘உள்ளயே சுத்தறேன். நீ மேல யோசிச்சு சொல்லு’ என்றாள். அந்த ரிஷப்ஷன் ஃபிப்ரவரியில் நடந்திருந்தால் அப்போதும் இதே போல இங்கு பனிபெய்து கொண்டிருந்திருக்கும். சென்னையில் அன்று மழை பெய்து கொண்டிருந்ததா? வெளியே இருந்து சில சோடியம் வேப்பர் விளக்குகளின் வெளிச்சம் சில நிழல் ஒளி செவ்வகங்களாக காரின் மேல் விழுந்து நழுவியது. சுற்றிச் சுற்றி ஏறி பின்னர் அதே போல இறங்கி வெளியே வந்து மீண்டும் ஏறி இறங்கி கார் சென்றுகொண்டே இருந்தது. பனிப்பொழிவு காற்றுமண்டலத்திற்கும் ஒளிக்கும் ஒரு விதமான வெண்மையை சேர்த்திருந்தது. சன்னமாக ஏதோ பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ‘நான் அப்படியே லேசா தூங்கறேன், நீ ஓட்டு’ என்று சொல்லி விட்டு பதிலுக்கு காத்திராமல் தலையை சாய்த்தேன். தூக்கம் வராது என்று தெரிந்தாலும் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.

2

அகி

அகியை அவளுடைய வீட்டில் இறக்கி விடும் பொழுது தயங்கித் தயங்கி ’ஒரு விஷயம்’ என்றாள். ’என்ன?’ ‘இன்பா அடுத்த வாரம் ப்ரதீபா வீட்டுக்கு டின்னருக்கு போறானா?’  தெரியுமா?’ ‘தெரியாது. நீ சொல்லி தான் டின்னர் ப்ளான் இருக்குன்னே தெரியுது. ஏன்?’ ‘என்னயும் கூப்டிருக்கா. அவன் போறான்னா என்ன பிக் பண்ண சொல்றியா?’ ‘சரி’ பேச்சு முடியவில்லை என அகியின் முகத்தில் தெரிந்தது. காரை கிளப்பாமல் காத்திருந்தேன். ‘அவன் என்னைக்காச்சும் ப்ரதீபா பத்தி எதானா சொல்லிருக்கானா?’ யோசித்தேன். ‘நோ. மே பி ராண்டம்லி. ஏன் கேக்குறே?’ அகி யோசனையுடன் இல்லையென்று தலையசைத்து விட்டு முடிவை மாற்றிக்கொண்டு ‘ஐ திங்க் ஷீ லைக்ஸ் ஹிம்’ என்றாள். புருவத்தை உயர்த்தி ‘ஓ’ என்றேன். ‘அவ என்கிட்ட நேரா சொன்னதில்ல, நானா கெஸ் பண்ணது. இந்த டின்னரே அவனுக்காக தான் ப்ளான் பண்றானு நினைக்கிறேன். ரொம்ப எக்ஸைட் ஆறா’ ‘ஹ்ம்ம்’ அன்று ரயில் நிலையத்தில் குழம்பிய அகியின் முகத்தில் இன்னும் தெளிவில்லை. ‘ரொம்ப எதுவும் யோசிக்காத அகி’ என்றேன். ‘ச்சேச்சே, அவங்கள பத்தியில்ல’ என்றாள். ஷிவாப் பற்றி இருக்கும். என்ன கேட்பது? ‘சரி நான் போறேன்’ என்றாள். ‘ஒரு நிமிஷம்’ என்று அவளை நிறுத்தினேன். ‘பேசாம ஒழங்கா கார பார்க் பண்றியா? பேசிட்டு போலாம்’ என்றாள். சிரித்தேன். ‘இல்ல இல்ல, சும்மா, நீ போ’ என்றேன்.

அகி இதுவரை யாரைப் பற்றியும் இத்தனை பேசியதில்லை என்று தோன்றியது. கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. தமிழ்த் திரை நகைச்சுவை வசனங்களை பொருந்தாத இடங்களில் சொல்வதே பிரதான பொழுதுபோக்காக இருந்த ஒரு டின்னரில் தான் அகியை முதன் முதலில் சந்தித்தேன். என்னைப் போலவே ஒரு கட்டத்திற்கு மேல் செயற்கையாக சிரிக்க முடியாமல் அமைதியான புன்னகையில் அமிழ்ந்திருந்தாள். கூட்டத்திலிருந்து தனித்து தெரிந்த அவளிடம் நான் எதிர்பார்த்த போல – போலியான பேச்சு / உற்சாகம் / தொனி, தேவையில்லாத ஈகோ, புறம் பேசுதல், தன்னைப் பற்றியே பேசிக்கொள்ளுதல் – என எதுவும் இல்லை. ஆனால் அன்று அந்த டின்னரில் அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள எந்த வழியுமில்லை. இருந்தும் ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ளத் தோன்றியது. பின்னர் இந்த ஒரு வருடத்தில் வியப்பாக நெருங்கத் துவங்கிய பின் நான் எதிர்பார்த்த ஒவ்வொரு குணமும் அகியிடம் இருந்தது. கூடவே, புத்தங்களின் மீது ஏராளமான காதலும். அகியும் நானும் சந்திக்கையிலெல்லாம் ஒரு உரையாடலை துவக்க எந்த சிரமும் இருந்ததில்லை.

நண்பர்களுக்குள்ளான டாலர் சண்டைகள், நண்பர்களின் பெற்றோர்களை / குழந்தைகளை சந்தித்தல், ஒரு காதலன் / காதலி அறிமுகம், நிறைய வேலை, விடுமுறை , எதற்கோ ஒரு சோகம், பின் அது தானாய் விலகுதல், விவாதங்கள், பசி, சோம்பல் என எல்லாவற்றையும் அகி எப்படி எதிர்கொள்வாள் என இந்த ஒரு வருடத்தில் தினசரி கவனித்து அறிந்து புரிந்திருக்கிறேன். ஆனால் ஒரு காதலை அகி எப்படி எதிர்கொள்வாள் என்பதில் எனக்கு தெளிவில்லை. இயல்பாகவே எல்லா இடங்களிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாகிப் போனதால் துவக்கத்தில் எல்லோரும் எங்களை காதலர்கள் என்று நினைத்தார்கள். சிலர் நாங்கள் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதாக நினைத்துக்கொண்டு எங்களை டின்னருக்கோ தொலைதூர பயணத்திற்கோ அழைத்துச் சென்று எங்களை தனிமையில் விட்டு பாக்கெட்டுகளில் கையை விட்டுக்கொண்டு நடந்து சென்றும் ஆற்றில் தூரமாக கல்லெறிந்தும் பார்த்தார்கள். அகி அறிமுகமான மூன்றாவது மாதத்திலேயே இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் இதைப் பற்றி அகியிடம் வாய்விட்டு பேசியதில்லை. இருந்தும் மற்றவர்களின் செலுத்தும் இந்தத் தனி கவனத்தை கையாண்டதே காதலைப் பற்றி நானும் அகியும் கொண்ட நீண்ட உரையாடலாக இருந்திருக்கிறது.  மற்றவர்கள் மிகச் சாதாராண விஷயங்களை காதலாக அர்த்தப்படுத்திக்கொள்வதை வியப்பாக இருவரும் வேடிக்கை பார்த்திருக்கிறோம். இது கொஞ்சம் அதிகமாக இருந்த ஒரே ஒரு கட்டத்தில் மட்டும் ஒரு முறை அதைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறோம். (அப்போது அவளுக்கு நான் பழைய கதையை சுருக்கமாக சொல்லியிருந்தேன்). இருபத்தி இரண்டு வயதில் சந்தித்திருந்தால் ஒரு வேளை நிறைய காதலைப் பற்றி பேசியிருந்திருக்கலாம். முப்பது வயதில் சந்தித்திருந்தால் திருமணத்தை பற்றி பேசியிருந்திருப்போம். இருபத்தி ஏழு வயதில் காதலுக்குப் பின்பாக திருமணத்திற்கு முன்பாக வருகிற மௌனம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அதையும் மீறி முதன் முறையாக அவளுடைய காதல் என்னுடைய காதல் இன்பா பிரதீபா என எல்லாவற்றையும் தொட்டும் தொடாமல் பேச வேண்டிய சூழல் திடீரென உருவாகி இருட்டியிருந்தது.

எனக்கு ஷிவாவையும் தெரியாது, இன்பாவின் பழைய காதலையும் தெரியாது, பிரதீபாவையும் தெரியாது. இருந்தும் என்னைச் சுற்றி எப்போது ஒரு காதல் கதை நிகழ்ந்தாலும் எங்கிருந்தோ பெரும் பயம் சூழ்ந்துகொள்கிறது.  இன்பா இன்னமும் எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறான்? ப்ரதீபாவை அவனுக்குப் பிடிக்குமா? ஷிவாவிடம் அகியை பேசச் சொல்லி சொல்ல வேண்டும். தினசரி சலிப்பின்றி பெய்கிற பனியைப் போல ஆனது இந்த யோசனைகள். இரண்டு மூன்று நாட்களாக வழக்கத்திற்கு வேறான நேரங்களில் ரயிலை பிடிக்கத் துவங்கியிருந்தேன். அகிக்கு என்ன புரிந்ததோ, இருந்தும் அவள் ரயில் நிலையத்திற்கு தினமும் கிளம்பும்பொழுது எங்கிருக்கிறேன் என என்னைக் கேட்பாள். அறையிலும் இன்பாவின் கண்களில் அதிகம் படாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். நெரிசல் நேரங்களைத் தாண்டி ஒரு நொடி கடந்ததும் கூட்டத்தைத் தொலைத்து ரயில் மொத்தமே பத்து பதினைந்து பேருடன் சென்று வந்துகொண்டிருந்தது. இன்பாவுடனோ அகியுடனோ ஒரு உரையாடல் முடிந்த பின்னர் தோன்றும் தனிமையைப் போல திடீரென ரயிலில் நான் மட்டும் சென்று வந்துகொண்டிருந்தேன். கம்பார்ட்மெண்ட்டில் நானும் தூரத்தில் கண்ணாடி ஜன்னலில் தலைசாய்த்த யாரோவும் மட்டும் இருப்போம். அகியும் இன்பாவும் என்னைப் பற்றி என்ன யோசித்துக்கொண்டிருப்பார்கள்? நான் எப்படி ஷிவாவைப் பற்றியோ ப்ரதீபா வீட்டு டின்னரைப் பற்றியோ பேச எத்தனித்துக்கொண்டிருக்கிறேனோ அதைப் போல அவர்களும் என்னிடம் எதைப் பற்றி பேச நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? அப்படி பேச அவர்களும் ஏதேனும் இருக்கிறதா, இருக்க விட்டிருக்கிறேனா? மற்றவர்களிடம் ஒரு சிறிய சலசலப்பையாவது  நானோ எனது பிரச்சினைகளோ ஏற்படுத்துகிறேனா?

இன்பா அந்த வாரம் இருக்கும் டின்னர் ப்ளானை பற்றி எந்த யோசனையும் இல்லாதவன் போல இருந்தான். ஒரு வேளை ப்ரதீபாவை மிகச்சாதாரணமான தோழியாக நினைத்திருக்கலாம். ப்ரதீபாவிற்கு அவன் மேல் இருக்கும் ஈர்ப்பு தெரியாமல் இருந்திருக்கலாம். தெரிந்தும் புறக்கணித்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் டின்னரைப் பற்றி கேட்க சில கேள்விகளை ஒத்திகை பார்ப்பதோடு சரி. அகி தினசரி இரவு உறங்கப் போகும் முன் ‘இன்பாகிட்ட கேட்டியா?’ என்று கேட்பாள். ஒவ்வொரு நாளும் ஏதேனும் காரணம் சொல்லிச் சொல்லி டின்னருக்கு முந்தைய நாள் மாலை அகி அழைத்தே கேட்டுவிட்டாள். ஒரு வாரமாக பார்க்கவில்லையென்றாலும் அவளின் முகத்தில் தெரிந்த குழப்பம் குரலிலும் இருந்தது. ‘ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்கே?’ ’இட்ஸ் ஹர். அவ ரொம்ப எக்ஸைட் ஆறா’ ‘நீ கேட்டு நான் கேட்டு என்ன ஆகப்போகுது?’ ‘இல்ல, சப்போஸ் அவன் போறத பத்தி யோசிக்கலனா?’ ‘யோசிக்கலனா? ‘மே பி  நீ சொல்லலாம்?’ ‘போன்னா?’ ‘டைரக்டா இல்ல. பட், யா’ ‘விளையாடறியா?’ ‘ரொம்ப யோசிக்காத. எனக்கு எதுனா சொல்ல மாட்டியா? அந்த மாதிரி தானே இன்பாவும்?’ சுருக்கென்றது. ‘ஐ வில் ட்ரை’. ‘ரொம்பல்லாம் இல்லடா. ஜஸ்ட் கேளு’ ‘சரி’.

வீட்டிற்கு வந்து அவசரமாக சமைத்து வைத்தேன். அழுக்குத் துணிகளை அள்ளிக்கொண்டு சென்ற போது இன்பாவின் துணிகள் இன்னும் ட்ரையரில் இருந்தது. அப்படி இருந்தால் இதுவரை எப்படி அங்கேயே விட்டுவிட்டு காத்திருப்பேனோ அதைப் போலவே இன்றும் விட்டுவிட்டேன். இருந்தும் துணிகள் இன்னும் கொஞ்சம் ஈரமாக இருந்ததைப் போல இருந்தது. ட்ரையரை மீண்டும் ஓட விட்டு சாப்பிட்டேன். இன்பா வரும் அறிகுறியே இல்லை. ஹாலிலும் பால்கனியிலும் கொஞ்சம் உலவிக்கொண்டிருந்தேன். ஒரே இடத்தில் கொஞ்சம் நேரம் நின்றால் அடி பாதத்தில் குளிர் மெல்லிய ஐஸ் தகடாக மாறி விடும் போலிருந்தது. ஒன்பதரை மணியளவில் அறைக்குச் சென்று கண்களை வெறுமனே மூடிக்கொண்டு கிடந்தும் எப்படியோ ஒரு தூக்கத்தை தொட்டுவிட்டேன். திடீரென முழிப்பு வந்து எழுந்த போது இன்பா என்னுடைய அறை வாசலில் நின்றுகொண்டிருந்தான். ‘எழுப்பிட்டனா?’ என்ற படி அறைக்குள் வந்து ஆச்சரியம் தந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் ‘இல்லல்ல’ என்றேன். ‘ஆஃபீஸ்ல இஷ்யூ’ என்றான். ‘ம்ம்’ ‘நாளைக்கு என்ன டின்னர் ப்ளான்?’ என்றான். எனக்குள் நானே சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தேன். ‘நத்திங் ஸ்பெஷல். சாப்டாச்சா?’ நீங்க வாங்க போங்க என்று சொல்ல விருப்பமில்லாமல் மழை நாள் சாலையில் நடப்பது போல அவற்றைத் தாண்டி தாண்டிச் சென்றுகொண்டிருந்தோம். ‘பசிக்கல. படம் போலாமா?’ ‘இப்பவா?’ ‘யா’. யோசித்தேன். சரி என்றதும் அவன் சென்று கிளம்பத் தயாரானேன். அபார்ட்மெண்ட்டிற்கு எதிரேயே ஒரு மல்ட்டிப்ளெக்ஸ் இருந்தது. வெளியே காற்று மெல்ல மெல்ல சுழன்று எழ முயன்று பனித்துகள்களை மேலெழுப்பி நழுவிக்கொண்டிருந்தது. காரை எடுக்காமல் வேகமாக நடக்கத்துவங்கினோம்.  திரையரங்கில் கவுண்ட்டரில் என்னையும் இன்பாவையும் கொட்டாவி விட்டபடி வினோதமாக பார்த்தார்கள். இந்தியாவிலிருந்து எனக்கு செல்பேசி அழைப்பு வந்து நான் ஓரமாக ஒதுங்க இன்பா ஏதோ ஒரு படத்தை தேர்ந்தெடுத்துவிட்டு டிக்கெட் வாங்கி என்னிடம் ஒன்றை தந்து விட்டு உள்ளே போனான்.

நான் உள்ளே செல்லும் பொழுது படம் துவங்கி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. தியேட்டரில் இன்பாவைத் தவிர யாருமில்லை. என்னைப் பார்த்ததும் இன்பா தியேட்டரில் இல்லாத கூட்டத்தை காண்பித்து சிரிப்பது போல சிரித்தான். நான் இன்பாவின் இருக்கைக்கு பின் வரிசையில் அமர்ந்துகொண்டேன். அது ஏற்கனவே வெளியாகி ஓடி முடித்த திரைப்படம் என்றும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்கள் இந்த வாரம் மட்டும் சில திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படுவதாகச் சொன்னான். ‘ரீ எடிட் பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன்’ என்றான். முதல் காட்சியே வேறு போல இருந்ததாம். எனக்கு அந்த திரைப்படம் நினைவிலில்லை. இப்போதும் கவனம் பதியவில்லை. இன்பாவின் நிழலுருவையும் திரைப்படத்தையும் இலக்கின்றி பார்த்துக்கொண்டிருந்தேன். படம் நெடுக இன்பா அவ்வப்போது திரும்பி இந்தக் காட்சியில் என்ன வெட்டியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தான். சில சமயங்களில் எனக்கே அந்தக் காட்சியில் ஏதோ மாறி இருப்பதாகத் தோன்றி அவன் என்னை திரும்பிப் சொல்லப் போகிறானா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நடுவில் எழுந்து வெளியே சென்று இரண்டு கோக் வாங்கி வந்தவன் என் இருக்கைக்கு ஒரு இருக்கை தள்ளி அமர்ந்தான். நான் திரையை புதிய கவனத்துடன் பார்க்கத் துவங்கினேன். ‘அகி எப்படி இருக்காங்க?’ என்றான். ’யா, ஃபைன்’. ‘நேத்து வால்மார்ட்ல பாத்தேன். ஃப்ரெண்டோட வந்திருந்தாங்க. பயங்கர ப்ரீ ஆக்யுபைடா இருந்தாங்க’ ‘ஓ’ புன்னகைத்தேன். என் பக்கம் திரும்பாமல் ‘ஈவன் யு’ என்றான். ’நத்திங் ரியலி’. ’உங்க ரெண்டு பேரையும் நான் மொதல் மொதல்ல ரயில்வே ஸ்டேஷன்ல தான் பாத்தேன். அவங்க அமெரிக்காவுக்கு வந்த புதுசு. காலைல அவசரம். ரெண்டு பேரும் வெண்டிங் மெஷின் கிட்ட நிக்கறீங்க’. இன்பா ஹாலில் அமர்ந்து நள்ளிரவைத் தாண்டி பேசும் பொழுது வருகிற தொனி. ‘ரிஸிப்ட் வர ஸ்லாட், கார்ட் ஸ்வைப் பண்ற எடம், காசு போட எடம்னு மாறி மாறி பரபரப்பா பாக்குறீங்க. யாராச்சும் ஹெல்ப்க்கு வருவாங்களான்னு தேடறீங்க. அப்போ யு வில் காரி தட் அம்ப்ரெல்லா, எங்க போனாலும் எதுக்கோ’ சிரித்தேன். ‘அவங்க காதுல ஐபாட். இருந்தும் அப்படியே பேசறாங்க சொல்றத கேக்குறாங்க. மே பி பாஸ் பண்ணிருப்பாங்க. உங்கள பாக்க சிரிப்பா இருந்தது’ என்றான். ‘ஹா ஹா ஹா’. ‘நேத்து அவங்க முகத்துல அதே மாதிரி ஒரு லுக். என்ன வெண்டிங் மெஷின் தான் இல்ல’ என்றான். புன்னகைத்தேன், ‘சொல்றேன்’. ‘ஹா ஹா ஹா’. திரையில் யாரோ ஜன்னலைத் திறந்து வெறித்துப் பார்த்தார்கள். ‘ஆர் திங்க்ஸ் ஃபைன்?’ என்றான். அகியையா என்னையா என்று தெரியவில்லை. ‘யா’ என்று சொல்லிவிட்டு ஒரு இடைவெளி விட்டு கேட்க நினைத்தவன் அவசரமாக கேட்டு வைத்தேன் ‘நாளைக்கு என்ன ப்ளான் டின்னர்?’. இன்பா என்னை திரும்பிப் பார்க்காமல் மிகச்சாதாரணமாக ‘ப்ரதீபா தெரியும்ல? அவங்க வீட்டுல கொஞ்சம் பேருக்கு டின்னர்’ என்றான். ‘ஓ குட். அகி சொல்லிட்டிருந்தா. ஜஸ்ட் கோ. அப்போ எதும் சமைக்க வேணாம். நான் வெளில சாப்டுக்கிறேன்’ என்றேன். இன்பா கொஞ்ச நேரம் யோசித்து விட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான். இருட்டில் பாதி புன்னகை தெரிந்தது.

3

விஸ்கி

இன்பா சரியாக ஆறரை மணிக்கு கிளம்பினான். வழக்கத்தை விட இன்று தோற்றத்திற்கு அதிக கவனம் எடுத்துக்கொண்டது போலிருந்தது. என்னுடைய ஆர்வம் துருத்திக்கொண்டு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதில் பெரிதும் கவனம் கொண்டிருந்தேன். அவனுடைய கார் புறப்பட்டுச் சென்றதும் அகிக்கு மெஸேஜ் அனுப்பினேன். அவள் அதி உற்சாகமாக பதிலனுப்பினாள். இன்னும் பதினைந்து நிமிடத்தில் கிளம்பலாம் என்று சொன்னாள். சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்து சேர்ந்தாள். ‘என்ன இப்படி அழுமூஞ்சி மாதிரி வந்திருக்கே? டின்னருக்கு போறா மாதிரியா இருக்கே?’ ‘அஹ்’ என்றவள் ‘சரி விடு, சீக்கிரம் கிளம்பு, ஆல்ரெடி லேட்’ ‘ஏன் இன்பாவோட போகல?’ ‘லேட் ஆகும்னு தான்’ என்றவள் ஜிபிஎஸ்ஸை எடுத்து முகவரியை அதில் ஏற்றினாள். காரில் பாட்டு எதுவும் ஓடாமல் அமைதியாக இருந்தது. பனிப்பொழிவு கொஞ்சம் நின்றிருந்ததால் மக்கள் எல்லாரும் கார்களைக் கிளப்பி எங்கோ போய்க்கொண்டிருந்தார்கள். ப்ரதீபாவின் வீடு அரை மணி நேரத் தொலைவில் ஒரு பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கிறதென நினைவு. பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அகி ‘இன்பா ரீச் ஆயிருப்பானா?’ என்றாள். சிரித்தேன், ‘ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்கே?’ ‘சும்மா தான். மெஸேஜ் அனுப்பி கேளேன்?’ ‘அங்க தானே போறே? போய் பாத்துக்கோ’ ‘நீ எங்க சாப்பிடப் போறே?’ ‘தெரியல, உன்ன எறக்கி விட்டுட்டு தான் யோசிக்கணும்’. ஜிபிஎஸ் அடுத்த எக்ஸிட்டை எடுத்து திரும்பிப் போகச் சொன்னது. ‘ஏன் 278 வெஸ்ட் எடுக்க சொல்லுது அகி? ஈஸ்ட் தானே?’ அகி ஜிபிஎஸ்ஸை எடுத்து சரிபார்த்தாள். ‘கரெக்டான அட்ரெஸ் தான்’ என்றாள். ‘நான் உன் மொபைல் எடுத்து இன்பாவுக்கு மெஸேஜ் பண்ணிக் கேக்கவா?’ ‘என்ன? டின்னர் மெனு என்னன்னா?’ ‘இல்ல ஆரம்பிச்சாச்சான்னு’ ‘பொறுமை பொறுமை. எதானா பாட்டு போடேன்’ என்றேன். ‘வேண்டாம்’ என மறுத்தவள் சட்டென ‘உனக்கு என்னாச்சு? ஏன் ஒரு வாரமா ஒரு மாதிரி இருக்கே?’ ‘வாட்? ஒண்ணுமில்ல?’ ‘சொல்லு ப்ளீஸ்’ ‘என்ன சொல்ல சொல்ற? ஐயாம் ஃபைன்’ ’நோ. அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு அவசரமா கூப்பிட்டதுலேர்ந்து சரியில்ல’ ‘ஒண்ணுமேயில்ல சீரியஸா’ ‘நான் தேவையில்லாத பெர்சனல் விஷயமெல்லாம் கேக்குறனா?’ ‘சீரியஸா அப்படி நினைக்கிறியா?’ ‘இனி வேணும்னா ஷிவாவ பத்தி எதுவும் சொலல்ல’ அவளைத் திரும்பி பார்த்து முறைத்தேன்.

எங்களுக்குப் பின்னால் வந்த கார்கள் ஒவ்வொன்றாக எங்களைத் தாண்டி வேகம் பிடிக்கத் துவங்கின. ‘நீ போய் நல்லா டின்னர் சாப்டுட்டு வா, இன்னொரு நாள் பேசலாம்’ என்றேன். ‘இன்னைக்கே சொல்லு. அதுக்கு தான் உன் பிக் பண்ண சொன்னேன்’ ‘சரி. போறப்போ ஏன்? நாளைக்கு பேசலாம்’ ‘நான் டின்னருக்குப் போகல. உங்கிட்ட பேச தான் கூப்டேன்’ ‘வாட்?’ ‘ஆமா’. காரை அடுத்த லேனுக்கு செலுத்தி வருகிற எக்ஸிட்டை எடுக்க முயன்றேன். ‘ப்ளீஸ், போகலாம். நிறுத்தாத’ ‘என்ன அட்ரெஸ் போடிருக்கே?’ ஏதோ புக் ஷாப்’ ‘பைத்தியமா ஒனக்கு? மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல?’ ‘சொன்னா நீ வருவியான்னு தெரியல’ அமைதியானேன். ‘ப்ரதீபா இன்னொரு ஃப்ரெண்டையும் கூப்பிட்டிருந்தா. அவன் ஒடம்பு முடியலன்னு வரலயாம். அதான் நானும் போகல’ ‘ஓ, இன்பா மட்டும் போயிருக்கானா?’ ‘ம்ம்’ ‘ஏன் இப்படி பண்றே? நீ இப்படி பண்றதுனால மட்டும் என்ன ஆகப்போகுது?இன்பா என்ன நினைக்கிறானா அதத்தான் செய்வான்.’ ‘ஒண்ணும் ஆகாதுன்னு தான் போகல. ப்ரதீபா என்கிட்ட இத தான் எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பான்னு நினைக்கிறேன். ஜஸ்ட் ஆன் ஆப்பர்ட்யுனிட்டி ஃபார் தெம் டு டாக். எனக்கு எப்படியும் டின்னர் போற மூட் இல்ல’ ‘ஏன்?’ ‘அதான் கேக்குறனே? ஏன் இப்படி இருக்கேன்னு? என்னாச்சுன்னு சொல்லு. இல்லனா எப்படி சாதாரணமா இருக்க முடியும் என்னால?’

எனக்கு பெருமூச்சு வந்தது. ‘அகி, அகி’. சங்கடமான மௌனம் நான்கு மைல்களுக்கு நீண்டது. ‘என்னயும் இன்பாவையும் விடு அகி. இன்பா இன்னும் எதோ பழசையே நினச்சிட்டிருக்கான். அப்படித் தான் நினைக்கிறேன். ப்ரதீபா பத்தி நினைக்கிறான்னான்னு தெரியாது. ஏதோ ஒரு முடிவு தானா வரும்’ ‘இன்னைக்கு வந்துரும்னு நினைக்கிறேன்’ ‘ரைட். ஐயாம் ஜஸ்ட் டிஸ்டர்ப்ட். தட்ஸ் ஆல். நீ ஷிவாவ பத்தி சொல்லு. பேசினியா அவன்கிட்ட?’ ‘வொய் ஆர் யு டிஸ்டர்ப்ட்’ தெரியல, ஜஸ்ட் ஆங்ஷியஸ்’ ‘அபௌவுட்?’ ஒன்றுமில்லை என்று தலையசைத்தவன் ‘வீட்டுக்கு போகலாம்’ என்றேன். அகி அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டாள். ‘அகி, நெஜம்மா என்ன சொல்லணும்னே தெரியல. நான் ஏன் டிஸ்டர்ப்ட்-ஆ இருக்கேன்னு எனக்கே தெரியல. அன்னைக்கு உன் கிட்ட ரிஷப்ஷன்ல நடந்ததெல்லாம் சொன்னேன்ல. அதுக்கப்புறம் மூணு நாலு நாளா ஒரு மாதிரி இருக்கு. அது யாரோட ரிஷப்ஷன்னு நினவில்ல. அவ காதுல ஏதோ பிரகாசமா போட்டிருந்தா, அது என்னன்னு நினவில்ல. நான் அவ கைய தொட்டதும் அவ என்ன சொன்னா எப்படி பாத்தானு கேட்டியே, சத்தியமா ஞாபகமில்ல. மறந்துட்டேன்னு என்னாலயே நம்ப முடியல. ஐ ஜஸ்ட் ஹேட் இட்’

‘ப்ச், ப்ளீஸ்’

’நோ, ரியல்லி. தெனம் உங்கிட்ட ஷிவாவ பத்தி பேசணும்னு நினைக்கிறேன். ஆனா என்ன பேசறதுன்னே தெரியல. ஐ ஜஸ்ட் ஃபீல் ப்ளாங்க். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காத. உனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஷிவாகிட்ட இப்படி கேட்டுப் பாரு இந்த மாதிரி பேச்ச ஆரம்பி ஃபோன் பண்ணு இல்ல மெயில் பண்ணுனு சொல்லத் தோணுது அப்புறம் அவ்ளோ தான் ஏதோ யோசிக்க ஆரம்பிச்சடறேன். நான் என்ன பண்ணேன்னு திடீர்னு ஒண்ணுமே ஞாபகமில்லாத மாதிரி. ஐ ஃபீல் சோ அஷேம்ட்’

‘ஏன் எப்படியெல்லாம்? இட்ஸ் ஓக்கே. யு ஹாவ் மூவ்ட் ஆன். இது நார்மல்’

‘நோ, இட்ஸ் நாட். ஐ ஹாவண்ட் மூவ்ட் ஆன். இன்னும் ஒவ்வொரு நாளும் கஷ்டமா இருக்கு. ஆனா எதுக்குன்னு தெரியலன்னா அது எவ்ளோ முட்டாள்த்தனம். உன்கிட்ட பேசுற வரைக்கும் அது எனக்கு உரைக்கல. அப்புறம் எவ்ளோ யோசிச்சேன். பின்ன எதுக்கு தெனம் கஷ்டமா இருக்கு? ஐ ஃபீல் லைக் எ லூஸர். இன்பாவப் பாரு. ஹீ ஹாஸ் சம்திங் இன் ஹிஸ் மைண்ட். எனக்கு நல்லா தெரியும். ஆனா என்னன்னு தெரியாது. பாத்தா தெரியல, ஆனா அவன பிடிச்சு உலுக்கினா கூட அவன் விட்டு விழாத ஏதோ கஷ்டம் அவன் கிட்ட எப்பவும் இருக்கு. மே பி அவனுக்கு எல்லாம் நினைவிருக்கு. ஐ திங்க் சோ. அட்லீஸ்ட் அதுல எதாச்சும் அர்த்தமிருக்கு. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல’

‘நான் கேட்டிருக்க கூடாதுன்னு நினக்கிறியா? இல்லல்ல’

‘இல்ல. இட்ஸ் குட் இன் எ வே. லீவ் மீ அண்ட் இன்பா. என்னவோ எப்படியோ போக வேண்டிய எடத்துக்கு போயிடுவோம். ஷிவாவ பத்தி யோசி. டிலே பண்ணாத. சீக்கிரம் சொல்லு. பட் ரிமம்பர் எவ்ரிதிங். ஒவ்வொரு விஷயமும். எங்க சொன்னே எப்போ சொன்னே அவன் என்ன சொன்னான் எல்லாம். ஜஸ்ட். ரிமம்பர். எவ்ரிதிங்.’

‘ஒளற்றேன்ல? சாரி’

‘விடு’

’இத ஒன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம ஒரு வாரமா ஒளிஞ்சிட்டிருக்கேன்’

‘விடு, எனக்கு புரியுது. ஐ கெஸ்ட்’

‘இப்போ எங்க போறோம்? லெட்ஸ் ஜஸ்ட் கோ ஹோம்’

அகி எதுவும் சொல்லவில்லை. திரும்பிப் பார்த்த பொழுது ‘வேண்டாம்’னு தலையாட்னேன்’ என்றாள். ‘ஏன்?’ ‘ஷிவாகிட்ட பேசிட்டேன்’

‘எப்போ?’

‘உன்கிட்ட சொன்ன அன்னைக்கே’

‘ம்ம்’  தொண்டையிலிருந்து ஏதோ ஒன்று மூண்டு நெஞ்சுக்கு சென்றது. ‘ஃபோன் பண்ணியா?’ ‘மெயில் அனுப்சேன்’ ‘ம்’. காரின் வேகத்தை கால்கள் தானாக குறைத்தன. அகியை திரும்பிப் பார்த்தேன். ‘ஹீ செட் நோ’ ரோட்டைப் பார்த்தேன். ‘ஹீ லைக்ஸ் சம் ஒன். சீக்கிரம் கல்யாணம்.’ எதுவும் சொல்லாமல் இருந்தேன். ‘ரொம்ப அப்ஸெட் ஆயிட்டான்’. ‘சாரி’ ‘விடு, ஐயாம் ஃபைன்’ அவளை திரும்பிப் பார்த்தேன். ‘ரியலி’ என்றாள். ‘இப்ப சொல்லு. எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்கவா இல்ல மறந்திடவா?’

புத்தகக்கடை மிகப் பழசாக இருந்தது. நான் உள்ளே போகாமல் கவுண்ட்டர் அருகே நின்று கொண்டேன். அகியை விட இரண்டு மடங்கு உயரத்திற்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அகி உன்னிப்பாக ஒவ்வொரு புத்தகத்தையும் பார்ப்பதையும் எடுத்து நோட்டம் விடுவதையும் சில சமயங்களில் வாசம் பார்ப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் மொபைலில் புத்தகத்தைப் பற்றி எதாவது தேடினாள். கடையில் உலவிக்கொண்டிருந்தவர்களிடம் புன்னகை செய்தாள். என்னை ஓரிரு முறை திரும்பிப் பார்த்தாள். எனக்கு ஏனோ அகி இந்தக் காதலை எப்படி எதிர்கொள்வாள் என்று முன்பெழுந்த கேள்வி நினைவிற்கு வந்தது. நான் கடைக்கு வெளியே குளிரில் வந்து கொஞ்சம் நேரம் நின்று கொண்டேன். அவசரமாக வெளியே வந்த அகி, ‘இன்பா அங்க போகவே இல்ல’ என்றாள். ‘ப்ரதீபா மெஸேஜ் அனுப்ச்சா’ என்றாள்.

இன்பா எத்தனை முறை அழைத்தாலும் ஃபோனை எடுக்கவில்லை. ‘சரி வீட்டுக்குப் போகலாம்’ என்றாள். இருவரும் காரைக் கிளப்பிக் கொண்டு புத்தகக் கடை இருந்த சாலையைக் கடந்து அடுத்த சாலைக்குள் நுழைந்தோம். இன்னும் பனியை அப்புறப்படுத்திருக்கவில்லை. கார்கள் மெதுவாக நகர்ந்தன. ஒரு கட்டத்தில் காரை அப்படியே ரோட்டில் நிறுத்திவிட்டேன். ‘என்னாச்சு’ என்று அகி நான் பார்க்கிற இடத்தில் எட்டிப் பார்த்தாள். இன்பாவின் கார் சாலையோரமாக பார்க் செய்யப்பட்டிருந்தது. காரை நானும் பார்க் செய்துவிட்டு குளிரில் இறங்கினேன். அகியும் இறங்கி ‘அவனோட கார் தானா’ என்றாள். ‘ம்ம்’ என்றேன். நீண்ட சாலை முழுக்க கார்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான ஒரு அடுக்கு கட்டிடங்கள் வரிசையாக. ‘எங்க இருப்பான்’ என்று அகி கேட்டபடி சாலையை கடந்தபடி கடைகளை நோட்டம் விட்டாள். நான் இன்பாவை அழைத்தபடி நடக்கத்துவங்கினேன். தூரத்தில் வெளியே விளக்கொளிகளுடன் பிரகாசமாக ஒரு கட்டிடம் தெரிந்தது. அதை நோக்கி வேகமாக நடக்கத்துவங்கினேன். ‘விஸ்கி டேஸ்டிங்’ என்று ஒரு பெரிய போர்டும் ‘ஃப்ரீ விஸ்கி சாம்பிள்ஸ்’ என்று இன்னொரு சிறிய பலகையும் வைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட கட்டிடம். உள்ளே கால் வைத்ததும் கரக் கரக் என்றது. ஏராளமான பொன் விளக்குகள் ரகசியம் போல எரிந்தன. கிட்டாருடன் ஒருவன் ட்ரம்ஸுடன் ஒருவன் மைக்குடன் ஒருவன் என ஒரு குழு ஒரு மூலையில் நின்று பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே ஒரு கூட்டம் கலைந்த கோலத்தில் நின்றுகொண்டிருந்தது. சிலர் புன்னகையுடன் சிலர் யோசனையுடன் சிலர் கை கோர்த்த வண்ணம் சிலர் முத்தமிட்டுக்கொண்டிருந்தனர். சிலர் பேசிக்கொண்டிருந்தது சன்னமான சிகரெட் புகையாக வெளியேறிக்கொண்டிருந்தது. ’ஒனக்கு ஓகேவா உள்ள வர’ என்றேன் அகியிடம். ‘வொய் நாட்?’ என்று என்னை பின் தொடர்ந்தாள். பாட்டுக் குழுவும் மக்களில் சிலரும் எங்களைப் பார்த்து ஒரு மிதமான தலையசைப்பைத் தந்து விட்டு மீண்டும் தொடர்ந்தார்கள். ஒரு மூலை மூழுக்க பெரிய பெரிய மர பேரல்களில் பார்லி இருந்தது. விஸ்கி செய்முறை விளக்கமும் செய்முறையும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு தடுப்பைத் தாண்டி உள்ளே இன்னும் நிறைய விஸ்கி நிறைய மக்கள். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த விஸ்கி பாட்டில்களை கடந்து நடக்க நடக்க விஸ்கி பாட்டில்களின் வயது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. நான் இன்பாவிற்கு பரிசாகக் கொடுத்த விஸ்கி பாட்டில் நினைவுக்கு வர நேராக ஆறு வருடங்கள் பழைய விஸ்கி பாட்டில்கள் இருந்த இடத்திற்கு விரைந்தேன். அங்கே கவுண்டருக்கு அருகே நிறைய மர நாற்காலிகள் வரிசையாக இருந்தன. எல்லோரும் உற்சாகமாக உறக்க பேசியபடி விஸ்கியை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தை மீண்டும் மீண்டும் நோட்டம் விட்டு ஒரு இடத்தில் இன்பாவைக் கண்டு பிடித்தேன்.

இன்பாவின் முன்னே மேஜையில் ஒரே ஒரு க்ளாஸில் விஸ்கி குடிக்கப்படாமல் இருந்தது. அவனுடைய தோளைத் தொட்டதும் நிமிர்ந்து என்னையும் அகியையும் பார்த்தான். பார்வை எங்களைக் கிரகிக்காமல் நழுவி விழுந்தது. ‘இன்பா, போலாம், எழுந்திரு’ என்றேன். மீண்டும் நிமிர்ந்தவன் என்னையும் அகியையும் இரண்டு மூன்று முறை பார்த்தான். ‘சாரி’ என்றான். ‘சரி விடு, பாத்துக்கலாம், இப்ப எழுந்திரு’ இன்பா அகியிடம் சாரி என்றான். அகி ‘பராவாயில்ல, உங்களுக்கு இஷ்டமில்லன்னா நீங்க போக வேண்டாம். சிம்பிள். அவ்ளோ தான்’ என்றாள். இன்பா மெதுவாக ஆமோதித்தான். எனக்கு அந்த உரையாடல் புரியாதவனான இருவரையும் பார்த்தேன். ‘நீ மொதல்ல எழுந்திரு’ அகி ‘பசிக்குதான்னு கேளேன். ரொம்ப குடிச்சா எதாச்சும் சாப்பிடணும்னு சொல்லி கேட்டிருக்கேன்’. ‘குடிக்கல’ என்று இன்பா மெதுவாக எழுந்து நின்று கொஞ்சம் தடுமாறினான். ‘சத்தியமா இல்ல’ என்றான். என்னை தோளில் பிடித்துக்கொண்டான். ‘எப்போ வந்தே?’ என்றேன். ‘ஒரு மணி நேரம் இருக்கும்’ என்றான். நிறைய தூக்கத்திலோ நிறைய அலுப்பிலோ இருந்தவன் போல இருந்தான். ‘ஐயாம் சாரி’ என்றான் மறுபடி. ‘எவ்ளோ குடிச்சே?’ என்றேன். ‘கொஞ்சம் கூட இல்ல’ என்றவன் விஸ்கி க்ளாஸை எடுத்து ‘இப்போ ஒனக்காக ஒரு சிப்’ என்று ஒரு சிறு மிடறு அருந்திவிட்டு ‘அகி உங்களுக்காக ஒண்ணு’ என்று இன்னொரு சிறு மிடறு அருந்தினான். அகி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். ‘சரி வாங்க போகலாம்’ என்று இருவரையும் அழைத்தாள். மூவருமாக மீண்டும் ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒரு வருடம் என பழைய விஸ்கிக்களை கடந்து நடந்து பாட்டுக் குழுவினரை தாண்டி வெளியே வந்தோம். இன்பா என்னைப் பிடித்துக்கொண்டே நடந்தான். வெளியே வந்ததும் அகி ‘இவன் கார் ஓட்டுவானா?’ என்று குளிரில் நடுங்கியபடி கேட்டாள். நான் இன்பாவைப் பார்த்தேன். இன்பா ஏதும் புரியாதவன் போல பார்த்தான். ‘இவன் குடிச்சிருக்கானா இல்லையான்னு தெரியல’ என்று அவனிடம் விஸ்கி வாசனை இருக்கிறதா என்று பார்த்தேன். ‘அவன் குடிக்கலன்னு தான் சொல்றான் பாத்தா அப்படி தெரியல’ என்றாள். ‘வாசன வருது’ என்றேன். ‘உள்ள இருந்தான்ல’ என்றவள், ‘சரி நீயும் அவனும் உன் கார்ல போங்க. நான் அவனோட கார ஓட்டிட்டு வரேன்’ என்றாள். ‘விளையாடறியா? ஒண்ணும் வேணாம். அவன் கார் இங்கயே இருக்கட்டும். காலைல வந்து எடுத்துக்கலாம்’ என்றேன்.

மூவருமாக என்னுடைய காரை நோக்கி நடந்தோம். இன்பா அமைதியாக என்னைப் உறுதியாக பற்றியபடி நடந்தபடி வந்தான். காரின் அருகே வந்ததும் அகி என்னிடம் ‘நீ அவன பாத்துக்கோ. நான் ஓட்டறேன்’ என்றாள். ‘ஐ திங்க் ஹீ ஈஸ் ஃபைன். குடிக்கல’ என்றேன். ‘மே பி. பட் ஹீஸ் ட்ரங்க்’ என்றாள். ’எல்லாரும் சாப்பிடலாம் போலாம்’ என்றான் இன்பா. ‘ஷுயூர்’ என்று புன்னகைத்த அகி காரில் அமர்ந்ததும்  நான் இன்பாவை உள்ளே அமர வைத்தேன். ’உன் கிட்ட இன்ஷூரன்ஸ் இல்ல லைசன்ஸ் இல்ல’ சுலபமாக உள்ளே அமர்ந்தவன் நகர்ந்து இடம் தந்தான். நான் அமர்ந்ததும் காரின் சீட்டில் இன்பா தலையை சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். ’விடு, சீக்கிரமா போயிடலாம்’ என்றாள். ‘ஒனக்கு ஓட்ட வேற ரொம்ப தெரியாது’ என்றேன். ‘கத்துக்குறேன்’ என்ற அகி இண்டிகேட்டரை போட்டுவிட்டு காரை கிளப்பி சாலையில் சேர சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். ரியர் வியு மிரரில் அகியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்பா தூங்கியவன் போல தலை சரிந்து என் தோளில் சேர்ந்தான். எல்லோருக்கும் பொதுவாக ‘சாரி’ என்றான். அகி சட்டென ரியர் வ்யு மிரரில் என்னைப் பார்த்ததும் நான் திரும்பி சாலையை ஒரு முறை பார்த்துக் கணித்து மீண்டும் அவளின் கண்களைப் பார்த்து கண்ணசைத்தேன். கார் சாலையில் சேர்ந்து பனிப்பொழிவிற்கு இடையே ஒரு நேர்கோட்டில் போகத்துவங்கியது.

Written by Aravindan

ஜூன் 10, 2013 இல் 11:13 பிப

கதை இல் பதிவிடப்பட்டது

மற்றுமொரு வீடு

9 மறுமொழிகளுடன்

எப்போதும் போல ஒரு சனிக்கிழமை காலைப்பொழுதில் சலூனுக்கு செல்வதாக அம்மாவிற்கும் பொதுவாக வீட்டிற்கும் உரக்க அறிவித்துவிட்டு கிளம்பிய பதினான்கு வயதுச் சிறுவனான நான், முதல் முறை சவரம் செய்த பதினான்கு வயது இளைஞனாக வீட்டிற்கு திரும்பி வந்தேன். அப்பா இருந்த வரை களப்பணியாற்றிய அரசியல் கட்சியின் எதிரிக் கட்சியில் இருந்த சலூன்காரர் எனக்கு பத்து வயது இருக்கும் பொழுதிலிருந்தே நான் கடைக்கு வந்தால் சத்தமாக அரசியல் பேசுவார்; பின்னங்கழுத்தில் கத்தியை வைக்கிற சில சமயங்களில் நான் எந்த கட்சியில் சேரப்போகிறேன் என்று கேட்டு என்னையும் கத்தியையும் ஆழம் பார்ப்பார். அவருக்கு எந்தப் பதிலையும் தராமல் சங்கோஜமான புன்னகையையும் மட்டுமே தந்த என் தாடையில் இருந்து தாடிக்கு பதிலாக ஒரே ஒரு முடி விரலில் மூன்று பங்கு அளவிற்கு மாதா மாதம் வளர்வதும் அதை அவர் கத்திரித்து விடுவதும் அவருக்கு ஏனோ அதிருப்தியை தந்தது. அந்த சனிக்கிழமை சவரம் செய்துக்கொள்ளும்படி அவர் என்னைக் கேட்க, கடையில் திடீரென நிலவிய நிசப்தமும் என் மேல் குவிந்த அத்தனை பேரின் கவனமும் முடிவெடுக்க வேறாரும் துணைக்கு இல்லாததும் என்னை உந்த சரியென தலையசைத்து விட்டேன். வெந்நீர் தயாரா என்று கேட்டபடி வாசலில் நின்ற என்னைத் தேடி வந்த அம்மாவிடம் சவரம் செய்ததை சாதாரண தகவல் சொல்வதைப் போல கவனமாக சொல்லிவிட்டு உள்ளே நகர அதுவரை அம்மா வாசலுக்கு வெளியே நிற்க வைத்திருந்த பதின்ம வயதும் என்னுடன் உள்ளே வர, அம்மா அதிர்ச்சியும் கவலையும் கொண்டார். வீடு அதற்குப் பின் இரண்டானது. சலூன்காரர் அமர்க்களமாக எங்கள் வீட்டு அரசியலைத் துவக்கி வைக்கிறார்.

எனக்கென கிடைத்த திடீர் அடையாளத்தை பேரார்வத்துடன் அணிந்துகொண்டேன். வீட்டிலேயே சவரம் செய்ய பொருட்கள் வாங்குவது துவங்கி, தனி சோப்பு தனி பவுடர் வாங்கத் துவங்கியது மட்டுமல்லாது செயல்களுக்கும் பொருட்களுக்கும் முன்னே ‘பெண்கள்’ அல்லது ‘ஆண்கள்’ என்று அடைமொழியை சேர்த்து வீட்டில் அனைவரையும் சங்கடப்படுத்தினேன். சகோதரிகள் முதலில் வியப்பாகப் பார்த்தாலும் பின்னர் என்னை என் வழியில் விட்டு விட அம்மாவிற்கு மட்டும் சில வருடங்களுக்கு இந்த மாறுதல் பிடிக்கவில்லை. வாக்குவாதங்கள் சண்டைகள் கோபங்கள் என பிரச்சினை நீண்டு ஒரு நாள் ஒரு தீர்மானத்திற்கு வந்து சேர்ந்தோம். இனி எனக்கு என்ன வேண்டுமோ அதை நானே வாங்கிக்கொள்ளலாம். பணம் மட்டுமே தரப்படும். தேவையென்றால் சில சமயங்களில் ஆலோசனையும்.

முதலிரண்டு வருடங்கள் ஆலோசனைகள் தேவையில்லாத சமயங்களில் அவை வழங்கப்பட்டால் உடனடியாக அவற்றை நிராகரித்து மீண்டும் வாக்குவாதங்களை துவக்கினேன். கடைகளில் தனியே நான் பொருட்களை தேர்ந்தெடுப்பதும் அவை சரியில்லையென அம்மா எங்களுடன் வந்தவர்களுடனோ கடைக்கு வந்திருக்கும் மற்ற பதின்ம வயதினரின் தாய்மார்களிடமோ சொல்லிக்கொண்டிருப்பதும் வாடிக்கை ஆனது. மழையடித்து மழையடித்து ஒரு நாள் திடீரென வானம் வெளுப்பது போல ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமலேயே நானும் அம்மாவும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பிரமாதமான புரிதைலை அடைந்தோம். எனக்கான அடையாளம் பத்திரமாக இருப்பதாக எனக்கும் அவருக்கான இடம் பத்திரமாக இருப்பதாக அவரும் அறிந்துகொண்டதால் அது வரையிலான வாக்குவாதங்களை கேலியாகக் குறிப்பிட்டுச் சொல்வதும் நானே அவரை சில சமயங்களில் எனக்கான சட்டைகளை வாங்கச் சொல்வதும் அவர் என்னிடம் சில ஆலோசனைகள் கேட்பதாகவும் காட்சிகள் மாறியிருந்தன.

அமெரிக்காவிற்கு வந்த இரண்டாவது வருடம் தனியே ஒரு வீட்டை எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக பொருட்கள் வாங்கி நிரப்பத் துவங்கிய பொழுதில் ஒவ்வொரு பொருட்களுக்கும் எனக்கு ஆயிரம் கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. இந்தியாவில் விடிந்ததும் அம்மாவை அழைத்தும் அனைத்தையும் கேட்பதும் அவர் முடிவை என்னிடமே விட்டுவிடுவதாக இரண்டு வாரங்கள் கழிகின்றன. கடைசியில் அம்மாவிற்கான சோப்பு எண்ணை ஷாம்பூக்களை மட்டும் அவரை வாங்கி வரச் சொல்லிவிட்டு முழு வீட்டையும் உருவாக்கி வைத்து காத்திருந்தேன்.

அம்மா அமெரிக்கா வந்தடைந்ததும் அவருக்கு வீடும் வீட்டில் உள்ள பொருட்களும் அதன் அமைப்பும் ஊரும் வானிலையும் பிடிபடவில்லை. தூக்கமும் கேள்விகளும் ஏனோ கலக்கமுமாக வீட்டின் ஒரே அறைக்குள் முடங்கிவிடுகிறார். அலுவலகத்தில் இருந்தாலும் நாளெல்லாம் கவனம் வீட்டின் மீதே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பேருந்திலிருந்து இறங்கியதும் வீட்டின் ஜன்னலையும் அதில் தெரிகிற முகத்தையும் தாண்டி ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என பார்த்துக்கொண்டே நடக்கிறேன். எதையும் வற்புறுத்தாமல் வலியுறுத்தாமல் அம்மா தானாக வீட்டை பழக்கிக்கொள்வார் என மிகுந்த கவனத்துடன் நாட்களை கடத்துகிறேன். மெல்ல மெல்ல வீட்டில் அம்மா புழங்குகிற இடங்களும் வீட்டைச் சுற்றி நடந்து சென்று வருகிற பாதைகளும் விரிகின்றன. ஒவ்வொரு அறையும் வெள்ளையடித்தது போல கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. ஒவ்வொரு பொருளும் அவருக்கு கை வருகிறது. அதன் பயன்பாட்டை தனக்கேற்ற வகையில் மாற்றிக்கொண்டு அதில் தன்னுடைய ஏதோ ஒரு அடையாளத்தை விட்டு வைக்கிறார். ஒரு நாள் மாலை பேருந்திலிருந்து இறங்கும் பொழுது வீட்டிற்கு வெளியே இருக்கும் பெரிய நீரூற்றிற்கு அருகே நிறைய இந்தியப் பெற்றோர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபடி பேச்சு சுவாரசியத்திலும் அனிச்சையாக என்னைப் பார்த்து கையசைக்கிறார். பின்னர் ஒரு நாள் இந்தியா திரும்பிவிட்டார். வீட்டை யாருடனும் பகிர விருப்பமில்லாமல் இரண்டு மாதங்கள் நான் மட்டும் தனியே சுற்றித் திரிகிறேன். பின்னர் சில நண்பர்களும் வந்து சேர்ந்துகொண்டனர். மூன்று மாதங்களில் நானும் ஊரையும் வீட்டையும் விட்டு வேறு ஊருக்குச் சென்று விட்டென்.

எதிர்பார்த்ததை விட அந்த வீடு மனதில் தங்கிவிட்டது. இந்தியாவில் இல்லாததும் இந்திய வீட்டில் இல்லாததுமே பெரிய குறையாக இருந்த பொழுது இது மற்றுமொரு வீடாகச் சேர்ந்துவிட்டது. அந்த வீடு வீட்டில் என்னுடைய அறை ஜன்னல் ஜன்னல் வழியே தெரியும் நண்பர்களின் வீடுகள் நண்பர்கள் என அத்தனையையும் விட்டு விலகி இரண்டு மாதங்கள் கழிந்த பின், ஒரு வார இறுதியில் மீண்டும் வீட்டைப் பார்க்க கிளம்பி விட்டேன். ஒரு மாத காலத்தில் வீடு நிச்சயம் மாறி இருக்கும். அதை ஒரு முறை பார்த்துவிட்டால் மிகச்சுலபமாக அதன் நினைவுகளிலிருந்து மீண்டு விடலாம் என்று எண்ணம்.

இடம் மாறிய பொருட்களும் புதிய பொருட்களுமாய் மறுபடி வீட்டில் என்னை பொருத்திக்கொள்ள முடியவே இல்லை. நண்பர்களுடனான அரட்டையில் அவ்வப்போது அமைதி ஏற்படுகிறது. என் அறை முற்றிலும் வேறாக மாறியிருந்தது. இன்னும் கடிதங்களுக்கு முகவரியாக இந்த வீட்டையே அடையாளமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தும் அது எந்த விதமான அடையாளமுமாக இல்லாமல் இருக்கிறது. இருந்தும் பெரிய அதிர்ச்சிகளோ வருத்தங்களோ இல்லை. வீட்டில் கழித்த மூன்று மாதங்களும் வெளியே கழித்த இரண்டு மாதங்களுமாக காலம் இரண்டிற்கும் என்னைப் பழக்கி வைத்து லேசான சஞ்சலத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. காலம் எப்போதுமே ஏற்படுத்தும் சஞ்சலம். ஒரு சோஃபாவில் இரவெல்லாம் பாதி உறக்கமும் பாதி விழிப்புமாக புரள்கிறேன். அவசரமாகச் சேர்த்த பயணப் பையில் தலைக்கும் சேர்த்து குளிக்கத் தேடித் தேடி ஒரே ஒரு சோப்புக்கட்டியை மட்டும் கண்டுபிடித்து குளியலறைக்குள் நுழைந்ததும் அம்மாவின் ஷாம்பூ பாக்கெட்டுகள், “பெண்கள்” என்று அடைமொழியை மனம் எப்போதோ உருவகித்த சேர்த்த ஷாம்பூ பாக்கெட்டுகள், இடம் மாறாமல் உபயோகப்படுத்தப்படாமல் அங்கேயே கிடந்து ஒரு நொடி என்னை நின்று கவனிக்க வைக்கின்றன. ஆறு மணி நேரப் பயணம் மேற்கொண்டது அதை இங்கே இப்படி கண்டெடுக்கவே என்று தோன்றுகிறது. அதையுடன் எடுத்துக்கொண்டு ஒரு நீண்ட குளியலுக்குள் நுழைகிறேன்.

[**]

நண்பர்கள் எல்லாருமாக யாரேனும் ஒருவரின் வீட்டில் சனிக்கிழமை மாலைகளில் ஒவ்வொரு முறை கூடும் போதும் யார் யார் கூடியிருக்கிறார்கள் – பிரம்மச்சாரிகள், அலுவலக நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் குழந்தைகள் – என்பதை கவனித்து அதற்கு ஏற்றது போல ஒரு மணல் கடிகாரத்தை மனதிற்குள் திருப்பி வைக்கிறேன். திரைப்படங்கள், அரசியல், விளையாட்டு எனத் துவங்கி பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குறைந்து மணல் முற்றிலும் தீர்ந்தபின் அனைவரும் அமைதியாகின்றனர். பின்னர் சிறு குழுக்களாக பிரிவது, பிரத்யேக ரசனைகளைப் பற்றி விவாதிப்பது என மற்றொரு சுற்று முடிந்து மறுபடி அமைதி. உணவை எடுத்து பத்திரிக்கைத் தாள்கள் விரித்து நடுக்கூடத்தில் வைக்க அது நல்ல சமயம். பின்னர் உணவைச் சுற்றி சில உரையாடல்கள், அதுவரை பேசியவை மீண்டும் ஒரு அவசரக் கொறிப்பு என இன்னொரு சுற்றும் முடிந்து விடும். உண்ட மயக்கத்துடன் அமர்ந்தபடி ஏதேதோ பேச முயன்று தோற்ற பின் தோன்றுகிற கடைசி அமைதியின் போது இந்தக் கூட்டத்தில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற கேள்வி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு விகிதத்தில் தோன்றிவிடும். இருபத்தி ஏழு வயதில் புதிதாக ஒரு நண்பனை கண்டறிவது அத்தனை சுலபமில்லை. வேலை நேரங்களுக்குப் அப்பால் ஒரு நொடி கடந்தாலே சிலருடன் மணல் கடிகாரம் தீர்ந்துவிடுகிறது. ரசனைப் புள்ளிகளில் இணைபவர்களுடன் ரசனை வட்டத்திற்கு வெளியே பேசுவதில் தயக்கங்கள் உண்டு. சிலர் பேருந்திலிருந்து இறங்கிய பிறகு மாயமாகி விடுகிறார்கள். சிலர் மாலைத் தேநீர் சமயங்களுக்கு மட்டும். ஒருவரின் இருப்பு இன்னொருவருக்கு துருத்திக்கொண்டு தெரிகிற சமயஙகளில் சட்டென விடைபெற்றுக்கொள்வது நலம். அப்படியாக அன்று நள்ளிரவைத் தொடுகிற சமயத்தில் கூட்டம் அவசரமாக விடைபெறுகிறது. ஒவ்வொருவரும் ஒரு காரை கிளப்பிக்கொண்டு வந்திருக்கிறார்கள். யார் யார் யாருடன் செல்கிறார்கள் என்று விவாதிக்கப்படுகிறது. நான் தனியே ஒரு காரில் வந்திருக்கிறேன். வாசலை அடைந்து விடைபெறுகிற சமயத்தில் தூக்கத்தில் மிதக்கிற என் கண்களைக் கண்டு சிலர் ஆலோசனை சொல்கிறார்கள் – இங்கேயே படுத்து உறங்கி விட்டு காலையில் செல்லலாம். தம்பதியினர் இருக்கிற வீடென்று தயக்கமெனில் பக்கத்தில் இன்னொரு நண்பனின் வீடிருக்கிறது. இல்லையெனில் யாருடனாவது காரில் சென்று விட்டு காலை வந்து என்னுடைய காரை எடுத்துச் செல்லலாம். இனி ஒரு நொடி இருப்பதென்பது அதீதமாகி விடும் என்று தோன்றுகிறது. அதிலும் இன்னொருவரின் வீட்டில் இன்று இதற்கு மேல் வேண்டாம் என்று தோன்றுகிறது. அடுத்த நாள் அதிகாலை இருக்கும் பணியை, அதற்கு காரின் தேவையைச் சொல்லி விடைபெறுகிறேன். தூக்கத்தை ஒரு நொடியில் சோப்புக்குமிழியைத் தொட்டு உடைப்பது போல உடைக்கலாம் என்றாலும் ஏதோ அலட்சியம், ஏதோ சோம்பேறித்தனம். நண்பன் ஒருவன் காரில் ஏறிவிட்டு பின் தொடர்ந்து மெதுவாக வரச் சொல்கிறான், வீடு வரை கொண்டு விடுவதாக.

சுமார் அரை வருடமாக ஏதேதோ மனக்குழப்பங்களில் தனித்தனியே சிக்கிக்கொண்டிருக்கிற நானும் அவனும் கார்களை கிளப்பிக்கொண்டு சாலையை அடைகிறோம். என்ன பிரச்சினை என்று வாய் விட்டு கேட்டுக்கொள்ளாமல் சரியான சமயங்களில் கவனமாக துணை இருப்பதின் மூலமாக மட்டுமே வியப்பாக நெருங்கிக்கொண்டிருந்தோம். வேலை நேரங்களுக்குப் பிறகு சில மணி நேரங்கள் என்று துவங்கி, வார இறுதியில் ஒரு நாள், இரண்டு நாட்கள், பின்னர் வாரத்திலும் பல நாட்கள் அந்த எட்டு மாதங்களுக்குப் பிறகும் ஏதேனும் ஒரு நொடியில் யாரேனும் ஒருவரின் இருப்பு அதீதமாகி விடலாம் என்ற எச்சரிக்கையுடனே எட்டு மாதங்களாக திரிந்துக்கொண்டிருக்கிறோம். அந்தச் சாலைகளில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. போகிற வழியை நண்பனின் கவனித்திற்கு விட்டுவிட்டு நான் காரை செலுத்துவதில் மட்டுமே மிச்சமிருக்கும் கவனத்தை செலுத்துகிறேன். வலது பக்கம் திரும்ப அவனுடைய காரின் விளக்கு எரிந்தால் நானும் என்னுடைய காரின் விளக்கை எரியவிடுகிறேன். இரண்டு விளக்குகளும் அரை வினாடி இடைவெளியில் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்துக்கொண்டே இருக்க கார்கள் சாலை சந்திப்பில் பச்சை விளக்கிற்காக முழுதாக ஐந்து நிமிடங்கள் காத்திருக்கின்றன. தூக்கத்தில் எங்கேனும் வழி தவறி விடுவேன் என்கிற சந்தேகத்தில் நண்பனின் கண்கள் அவ்வப்போது ரியர் வியு கண்ணாடியில் அவ்வப்போது சரி பார்க்கின்றன. வீட்டிற்கு சரியாக சென்று சேர்ந்துவிட்டேனா என யாரோ குறுஞ்செய்தில் கேட்கிறார்கள். மிகுந்த எச்சிரிக்கையும் நிதானத்துடனும் இருவரும் காரில் ஏதோவொரு பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. கார்கள் மெல்ல ஊர்ந்தபடி என்னையறியாமல் என்னுடைய வீட்டைக் கடந்து போகின்றன. ஆறு மைல்களுக்குப் பிறகு, கடந்து எட்டு மாதங்களாக காரணங்கள் இருந்தும் இல்லாமலும் நினைத்தபொழுதில் புறப்பட்டு வந்து அடைந்த நண்பனின் வீட்டை கார்கள் அடைகின்றன. என் வீட்டிற்கு போகாமல் நேரே இங்கே வந்திருக்கிறோம் என்று உணர்ந்தும் தூக்கம் கலையவில்லை. வீட்டைத் திறந்து உள்ளே சென்று வழக்கமாக கைக்கடிகாரத்தை வைக்கிற இடத்தில் வைத்து மெத்தை மீது சிதறிக் கிடக்கிற என்னுடைய பொருட்களையெல்லாம் அவசரமாக தள்ளி வைத்து அடுத்த நாள் காலையின் பணிகளை அவசரங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று மறந்து இந்த மணல் கடிகாரம் நிற்க இன்னும் பல நாட்கள் ஆகும் என்று மட்டும் நினைத்துக்கொண்டு தூங்கிப் போகிறேன்.

[**]

ஜனவரியில் இடம் பெயர்ந்த ஊரில் தங்குவதற்கு வீடு தேட துவங்கிய போது ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்க அலுவலகத்திற்கு போய் வர ஏதுவாக இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணம் மட்டுமே இருந்தது. அதுவே பெரிய ஏமாற்றமாகவும் அலுப்பாகவும் இருந்தது. நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள் யாருமில்லை. பெரு நகரமோ அதிக இந்தியர்கள் இருக்கிற இடமோ கவன ஈர்ப்பு விஷயங்களோ எதுவுமில்லை. அலுவலகத்தில் இருந்தவர்கள் அதற்கு மிக அருகிலேயே ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தபடி ஜன்னல்கள் வழியே பகலில் வீட்டையும் இரவில் அலுவலகத்தையும் பார்த்தபடி இருந்தார்கள். நானோ அலுவலகத்திற்கு தினசரி வந்து செல்லும் ரயில் பாதை வழியே தேடிச் சென்று ஒரு வீட்டை கண்டறிந்தேன். பெரிய ஹாலும், பால்கனியும் இரண்டுக்கும் இடையே பிரெஞ்ச் கதவுகளுமாக இருந்தது எனக்கான அறை. ’பிரஞ்ச் கதவுகள்’ என்பதை முதன் முறை அறிகிறேன். மூன்று ஆளுயர கண்ணாடி சட்டங்களும் அதில் நடுவிலிருப்பது மட்டும் கதவாக வெளியே திறக்கிற அமைப்பு. ரயிலையும் ப்ரெஞ்ச் கதவுகளையும் பால்கனியையும் காரணங்களாக உருவகித்துக்கொண்டு வீட்டைத் தேர்ந்தெடுத்து விட்டேன்.

ஒரு மூலையில் யாரும் பார்க்காத தொலைகாட்சி. இன்னொரு மூலையில் என்னுடைய கட்டிலும் மெத்தையும். அறையின் நடுவே ப்ரெஞ்ச் கதவுகள் அதற்கு எதிரே நீண்ட சோஃபா. இவைகளுக்கிடையே என்னுடைய பொருட்களை இடம் மாற்றி மாற்றி வைத்தாயிற்று. சிறிய ஒலிபெருக்கிகளை மூன்று முறை இடம் மாற்றிப் பார்த்துவிட்டேன். அதனுடையே நகர்கிறது எழுத பயன்படுத்தும் மேஜை. பால்கனி தனியொரு குளிர் மண்டலத்தில் இருப்பதால் அங்கே போவதில்லை. காலை எழுகை, ரயில், அலுவலகம், ரயில், வீடு. இது வரை இருந்த வீடுகளை வைத்துப் பார்க்கையில் இது வீடாக மனதில் நிற்கப் போவதேயில்லை என்பது ஏனோ முன் தீர்மானமாக இருக்கிறது. அதிகபட்சம் இந்த வீட்டில் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கப் போவதால் எதையும் கவனித்தில் பதிக்கவோ எதற்காக கவனத்தைக் கலைக்கவோ விருப்பமில்லை. துளியும் கலையாமல் பிரமாதமாக உறக்கம் வருகிற அறையில் முதல் மாதம் கழிந்து ஒரு நாள் அதிகாலை மூன்று மணி அளவில் தண்ணீர் தாகமும் திடீரென விழிப்பும். மெத்தையிலிருந்து எழுந்து நின்று பார்த்ததும் அறை விசித்திரமாக இருக்கிறது. பகலின் வெளிச்சத்திலும் இரவின் ஒளியிலும் பார்த்தது போலல்லாமல் ஏதோ வெள்ளத்தில் மிதப்பது போல பிரகாசிக்கிறது. ஏதும் புரியாமல் நடந்து ப்ரெஞ்ச் கதவுகளைக் கடக்கையில் கண்ணாடி வழியே அசையாமல் முழு நிலவு. கனவாக இருக்கலாம் என்று எண்ணக்கூடிய அளவிற்கு துல்லியம். தாகம் தூக்கமெல்லாம் அபத்தமாகத் தோன்றி அப்படியே தரையில் அமர ஒரு நொடி யோசிக்கிறது மனம். அறையினில் இருக்கிற ஒவ்வொரு பொருளும் இந்த வெளிச்சத்தில் வித்தியாசமாக காட்சி தருகின்றன. என்னையும் மீறி வீடும் வீட்டைப் பற்றிய ஒரு நினைவும் காட்சியும் அழுத்தமாகப் பதிகிறது. இதே காட்சியை இந்த வீட்டிலோ வேறு வீட்டிலோ மறுபடி காணக் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் கவனத்தில் அதை பதித்துக்கொள்கிறேன். தண்ணீரை அவசரமாகக் குடித்துத் தீர்த்து நிலவுக்கு நேரெதிரே இருக்கிற சோஃபாவில் கிடந்ததும் உறக்கம் வர நெடு நேரம் பிடிக்கிறது.

Written by Aravindan

ஏப்ரல் 15, 2013 இல் 5:19 முப

எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது

Tagged with

என்னமோ ஏதோ

5 மறுமொழிகளுடன்

தலை குப்புற கவிழ்ந்து வெறும் தலையை மட்டும் மறைக்கிற தொப்பியல்ல அது. தலையை முழுதும் மறைத்த பின்னர் கூட முன் யோசனைகள் ஏதுமின்றி சரசரவென இரு மருங்கிலும் இறங்கியபடி காதுகளையும் குளிரிலிருந்து காத்தபடி இரண்டு கன்னங்களை தொட்டு உறவாடும் கம்பளிப் பாரம்பரிய தொப்பி அது. அதன் நிறமும் தோற்றமும் அதை அணிந்தவரின் முகத்தை செம்மறியாட்டின் முகத்தை போல ஆக்கி வைக்கக்கூடிய தன்மையை கொண்டது. அதை அணிந்து கொண்டும் வலது அல்லது இடது கக்கத்தில் ஒரு பையுடனும் ஒருவர் தினசரி என்னைக் கடந்து ஓடுவதை காண நேரிடுகிறது. யோசனைகளின்றி திறந்து வைக்கப்பட்டிருக்கும் கவனக்கலைப்பின் பலப்பல வாசல்கள் வழியே அவர் பல நாட்களாக நுழைந்து ஓடி மறைந்து கொண்டிருந்தாலும் பதிவெழுதி வெகு நாட்கள் ஆனது உறைத்த ஒரு நன்னாளில் அவரை கண்டு நான் அப்படியே வியந்து நின்றுவிட்டேன்.

தண்டவாளங்கள் ஒதுங்கும் ஊர்ப்பக்கங்களில் ‘எக்ஸ்ப்ரெஸ் வண்டி தெனம் காத்தால ஒம்பது லேர்ந்து ஒம்பது பத்துக்குள்ள இந்தப்பக்கமா போவும்’ என்று குத்துமதிப்பாக சொல்வதைப் போல திங்கள் முதல் வெள்ளி வரை அவரை 8:50 துவங்கி 9:10க்குள்ளாக காண நேரிடுகிறது. ‘ஓ! யாரவர்? எதற்காக இப்படி ஓடுகிறார்? யாருக்குத்தான் ரயிலை பிடிக்க அவசரம் இல்லை? ஒரு ரயிலை தவற விட்டால் இன்னொன்று வரத்தானே செய்யும்?’. அவர் என்னை அப்படி கடந்து ஓடுவது நான் ரயிலை விட்டு இறங்குகிற நிலையத்தில். (இந்தப் பக்கங்களுக்கு புதிதாக வரத் துவங்கியிருப்பவர்கள் முந்தைய விரைவு ரயில் உவமையை விளையாட்டாக கருதியிருக்கலாம். அடுத்த முறை இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவும்). அவரின் முகத்தில் நாடகத்தனமான பதற்றம். வாய் எப்பொழுதும் ஓசையில்லாத ‘ஓ’வை சொல்லிக்கொண்டிருக்கிறது. சிறப்பாக ஆட்களைக் கடந்து திறமையாக ஓடுகிறார். ஒரே சமயத்தில் சுமார் அறுபது பேர் கூடும் ரயில் நிலையம் என்றாலும் எந்த கூச்சமும் இல்லாமல் தெளிவாக ஓடுகிறார். தலையே லேசாக இப்படியும் அப்படியும் ஆட்டுவதால் அவரின் காதுகளை மறைத்த தொப்பியின் காது மடல்கள் இப்படி அப்படியும் அசைய அந்த ரிதத்தில் பிசகாமல் ஓடுகிறார். பதற்றமும் சூச்சமின்மையும் ஓ-என்கிற-வாயும் அவருக்கு ஓடுவதற்கான ப்ரத்யேக முகபாவத்தை தருகிறது. ”நான் ரயிலை விட்டு இறங்கி நடைமேடையில் நடந்து எஸ்கலேட்டரை அடைந்து அதில் நின்றபடி இறங்கி தானியங்கியின் வாயில் டிக்கெட்டை திணித்து தடுப்பைத் திறந்து வெளியேறுகிறேன்” என்பதான தினசரி நடவடிக்கைகளின் கால-இட வரைபடத்தில் தானியங்கி துவங்கி எஸ்கலேட்டர் வரையிலான பகுதியில் மினுக் மினுக்கென ஒரு சிறு புள்ளியென அவர் விரைந்து நகர்கிறார். எங்களுக்குள்ளான ஒரு-ரயில்-இடைவெளி ஒரு நாள் எங்கோ கொஞ்சம் குறைந்து விட ரயில் நிலையத்தின் வாசலில் நான் நிற்கையில் அவர் கார் பார்க்கிங்கை தாண்டி எங்கிருந்தோ ரயில் நிலையத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தபடி அதிர்ச்சியை அளித்தார். அதற்கு முன்னும் பின்னரும் அவர் எங்கிருந்து வருகிறார்/செல்கிறார்? (ராஜா ரசிகனின் இடைச்செருகல் – ‘பூந்தோட்டம்’ படத்திலிருந்து ‘வானத்தில் இருந்து குதிச்சு வந்தனா’ பாடல்). அவர் எங்களுக்கு சொல்ல முயல்கிற செய்தி என்ன? என்னைத் தவிர வேறு யாராவது அவரை கவனிக்கிறார்களா? மிகவும் சோம்பலான ரயில் நிலையத்தில் அவர் இல்லாத கணங்களில் மிகவும் சாதாரணமாக நடந்து வருகிற சிலர் திடீரென ஒரு உத்வேகத்துடன் ரயிலை நோக்கி ஓடத் துவங்குவதை அவர் கடும் உழைப்பினால் சமூகத்தில் கொண்டு வந்த மாற்றமாக கருதலாமா? இதையெல்லாம் உங்களைத் தவிர வேறு யாரிடம் நான் கேட்கமுடியும்?

பலப்பல இடங்களில் அவர் என்னைக் கடந்து ஓடுவதும் நான் வியந்து திரும்பிப் பார்ப்பதுமான காட்சித்துண்டுகளை திறமையான தொகுப்பாளர் வெட்டி ஒட்டி ஓடுவிடும் ஒரு காட்சியுடன் இப்போதைக்கு இதை விடுகிறேன். நிச்சயம் அந்த எஸ்கலேட்டருக்குப் பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதை விரைவில் கண்டறிந்து விடுவேன். அ) நல்ல உலக குறும்படம் அல்லது சிறுகதையைப் போல அவர் ரயிலுக்குள் நுழைந்து அந்தப்பக்கமாக வெளியேறி ஓடிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஆ) ரயிலை அடைந்ததும் ’I just finished 2.2 mi run with Nike+ Running #nikeplus” என்று டிவிட்டரில் எழுதுகிறார்.

[**]

கூட்டமான எலிவேட்டர் ஒரு தளத்தில் நின்று ஒருவர் வெளியேறி கதவுகள் மூடியவுடன் உள்ளிருக்கும் இந்தியர்களுக்கு தங்களின் இடத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏனோ ஏற்படுகிறது. இந்திய ஆணும் இந்திய பெண்ணும் மிக நெருக்கமாக நிற்க வேண்டிய அசந்தப்பர்ப்பமான (ஜொள்ளர்களின் sentimentகளை hurt செய்ய வி்ருப்பமில்லாததால் ‘அல்லது சந்தப்பர்ப்பமான’) தருணங்களில் கண்ணுக்குத் தெரியாத கலாச்சார கோட்டினை மிதிக்கால் அழிக்காமல் ஒன்று அல்லது ஒன்றரை கால்களில் நின்றுகொண்டிருப்பவர்கள் சட்டென இடம் மாறி ஆசுவாசப்படுவது அத்யாசமாகிறது. இந்திய ஆணும் இந்திய ஆணும் அப்படி அசந்தப்பர்ப்பமான (முன் சொல்லப்பட்ட அதே காரணத்திற்காக ‘அல்லது சந்தப்பர்ப்பமான’) தருணங்களில் சிக்கிக்கொண்டால் இந்த இடம் மாறுதல் இன்னும் அதிவேகமாக நிகழ்ந்து அடைந்து ஒரு சாதாரண சம்பாஷனையாக தொடர்கிறது. (பெரும்பாலும் ‘ஏண்ட்ட்றா மாமா?’). இப்படிப்பட்ட கலாச்சார கட்டாயங்கள் இல்லாத சமயங்களிலும் எலிவேட்டரில் ஒரு கை கு்றைந்தால் இந்தியர்கள் பின்னிருந்து நகர்ந்து நேரே கதவை நோக்கி நகர்ந்து நிற்பதோ பின்னால் யாருமில்லாததை அறிந்து திரும்பிப் பார்க்காமல் பின்னால் நகர்வதோ பக்கவாட்டாக எலிவேட்டர் சுவற்றை தேய்த்தபடி நகர்வதோ கு்றுக்காக நடந்து எலிவேட்டர் பட்டன்களை வெறித்து பார்ப்பதோ நிகழ்கிறது. சில குறிஞ்சிப்பூ பூக்கிற தருணங்களில் எலிவேட்டரில் இருக்கிற பலரும் ஜோடி நம்பர் ஒன் துணை நடனக் கலைஞர்கள் போல ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவரை இடித்துக்கொள்ளாமல் இடம் மாறி புது இடத்தை அடைந்து என்னை பேரதிசயத்தில் ஆழ்த்துகிறார்கள்.

எலிவேட்டரில் எனக்கு பெரும்பாலான அமெரிக்கர்களை மிகவும் பிடிக்கிறது. ’எலிவேட்டர் என்பது மேலும் கீழுமாய் இயங்குகிற ரயில்’ என்று எந்த அறிஞரும் சொல்லவில்லையென்றாலும் எலிவேட்டர் சினேகங்களும் ரயில் சினேகங்களைப் ஒன்று போல என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதன் குறுகிய கால ஆயுசை நன்கு உணர்ந்த அமெரிக்கர்கள் பல தளங்களில் சிறப்பாக இயங்குகிறார்கள். (தமிழில் ‘pun intended’ற்கு இணையான சொலவடை என்ன?). சுவையான நறுக்கென்ற கேள்விகள், பதில்கள், கேலிகள், பாவனைகள் எனப் பிரமாதப்படுத்துகிறார்கள். அத்தனை குறுகிய காலத்தில் இன்னொருவரை impress செய்கிற சவாலை அவர்கள் ரசிக்கிறார்கள், ரசித்து எதிர்கொள்கிறார்கள், நம்மையும் ரசிக்க வைக்கிறார்கள்.  உடன் யாருமில்லாத எலிவேட்டர் தருணமொன்றில் கதவு திறந்து எதிர்புறத்தில் அந்த மூலையில் இன்னொரு எலிவேட்டரில் இன்னொரு தனியனான முன் பின் தெரியாத அமெரிக்கர் ஒருவர் மூன்று நொடிக்களுக்காக யோசித்து அரசியல்வாதியைப் போல என்னை நோக்கி கை நீட்டி அசைக்க, நானும் அவருக்கான இந்திய பிரதிநிதியாக பதிலுக்கு கையசைக்க எலிவேட்டர்கள் மகிழ்ச்சியுடன் கதவுகளை அடைத்தன. சுமார் மூவாயிரம் பேரை தினசரி போரடிப்பதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக கட்டியிருக்கும் அலுவலகத்தில் இவர்களே என்னை காக்கிறார்கள். (அல்லது ‘A street car named desire’இல் சொல்வதைப் போல ‘I have always depended on the kindness of the (elevator) strangers’ என்பதாக இந்தப் பத்தி முடிகிறது).

[**]

இந்த இரண்டு மணிரத்ன ஷாட்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை நீங்கள் இப்போது ஆராயலாம். நான் அடுத்த பத்தியில் காத்திருக்கிறேன்.

Anjali

Geetanjali

[**]

கனுக்கால் வலிக்கு மாத்திரைகள் தைலங்கள் உபயோகித்த பிறகும் சிறந்த நிவாரணம் கிடைப்பதில்லை. (கிடைக்குமென்றாலும் இந்தப் பத்தியின் சுவாரசியத்திற்காக இல்லை என்று வைத்துக்கொள்ளவும்). அதற்கு செய்யக் கூடிய ஒரு வலி நிவாரண செய்முறையை இப்போது சொல்லப் போகிறேன். இதை செய்வதற்கு இன்னொருவரின் உதவியோ மற்ற வேலைகளை தள்ளிப்போடுவதோ தேவையேயில்லை.

இதை நீங்கள் தூங்கும் போதும் செய்தால் போதுமானது. இரவு படுக்கும் பொழுது பக்கவாட்டாக படுத்துக்கொள்ளவும். வலது கனுக்காலில் வலியென்றால் இடது புறமாக படுக்கவும். இடது கனுக்காலில் வலியென்றால் என்ன? என்பது எளிதாக ஊகிக்கக் கூடியதே. கால்களை நேராக நீட்டி படுக்கவும். (பார்க்க படம்)

legs-one

இப்போது வலி இருக்கும் காலை முழுதாக நன்றாக மடக்கிக் கொள்ளவும். பின்னர் அதை வலி இல்லாத காலுக்கு அடியில் வைத்துக்கொண்டால் வலிக்கும் கனுக்கால் வலி இல்லாத முட்டியின் கீழ் வந்து விடும். (உங்கள் கால்களின் நீளத்திற்கு ஏற்ப இது மாறலாம். காலை சில டிகிரி மாற்றி மடக்கிப் பார்க்கவும்) (பார்க்க படம்).

legs-two

வலிக்காத முட்டியினால் லேசாக அழுத்தம் தந்தாலே வலிக்கு நல்ல இதமும் நிவாரணமும் கிடைக்கும். தினமும் இரவில் செய்து வரவும். இப்போதைக்கு ஏதேனும் ஒரு கனுக்காலில் மட்டும் வலியை வரவழைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும்.

[**]

மொழி இன மத பேதம் கடந்த, தங்க வளையல்கள் மோதிரங்கள் கடிகாரங்கள் மற்றும் நிறைய நகங்கள் கொண்ட ஏராளமான இந்தியக் கைகளுடன் நான் வாரா வாரம் பெரும் சமூக சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் பேருந்துகளில் அடித்து பிடித்து இடம் பிடிக்கவோ நீண்ட நெடிய வரிசைகளில் இடத்தை தக்கவைத்துக்கொள்ளவோ செலவிடும் சக்தியை அமெரிக்காவில் வீணடிக்காமல் மரப்பெட்டிகளில் கொட்டிவைக்கப்பட்டிருக்கிற வெண்டைக்காய் குவியல் வாவாவென அழைக்கிற காய்கறிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் செலவிடுகிறேன். வாரா வாரம் வெண்டைக்காய் தின்கிற இந்த சமூகம் உங்கள் திறனுக்கு வைக்கிற போட்டி நாளெல்லாம் நடந்து கொண்டிருக்கும். நல்ல இந்தியராக நீங்களாக நல்ல சமயம் பார்த்து கூட்டத்தினுள் நுழைந்து கொண்டு சரசரவென வெண்டைக்காய்களின் நுனியை உடைக்கத் துவங்க வேண்டியது தான். விறுவிறுவென எல்லோரும் தங்களுக்கான காய்களை தேடித் தேடி உடைக்கும் பொழுது வார்த்தை பறிமாற்றங்களோ துளி வன்முறையோ இல்லாமல்  survival of the fittestக்கு இணையானதொரு நுட்பமான போட்டி ஏற்படும். நீங்கள், உங்களுடைய வீடு, உங்களின் அடுப்பு, அதன் மேல் மணக்கப் போகிற வெண்டைக்காய் சாம்பார் ஆகியவற்றை மட்டும் நினைத்துக்கொண்டு இரக்கமின்றி காரியத்தில் இறங்க வேண்டும். பிள்ளைகளை பெற்றிருப்போர் அவர்களின் எதிர்காலத்தையும் அதற்கான சேமிப்பையும் கூடவே நல்லதொரு வங்கி விளம்பரத்தையும் நினைத்துக்கொள்வது களத்தினில் அவர்களது மூர்க்கத்தனத்தை அதிகரிக்கும். நல்ல வியூகம் அமைத்து எட்டு திசைகளிருந்தும் வெண்டைக்காய்களை பலப்பல கைகளுக்கிடையே பொறுக்கி சோதிக்க வேண்டும். உங்களுக்கான வெண்டைக்காயில் உங்களின் பெயரிருக்காது. ஆனால் நுனியை உடைக்கையில் அபத்தமாக வளைந்து கொடுக்கிற காய்களை நீங்கள் திரும்ப வீசி எரியும் பொழுது அதில் யாரோ ஒரு அவசரக்காரர் அல்லது அப்பாவியின் பெயரை எழுதி வீசுவதாக அலட்சியமும் பெருமிதமும் கொள்ளுதல் வேண்டும். அப்படி நிராகரிக்கப்பட்ட காய்களை யாரேனும் பொறுக்க நேரிட்டால் அத்தனை கைகளும் நிற்காமல் தங்களின் காரியத்தை தொடர்ந்தபடி அந்தக் கைகளிலிருந்து நீண்டு மேலே வளர்ந்திருக்கும் முகங்கள் மட்டும் திரும்பி தோற்றுப்போனவரை நன்கு அடையாளம் பார்த்துவிட்டு மீண்டும் பாலித்தீன் பைகளில் சமூகத்திடமிருந்து தட்டிப்பறிக்கிற வெற்றி வெண்டைக்காய்களை சேகரித்து எடை பார்த்து காசு கொடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து எண்ணையில் வதக்கித் தின்றால் இன்னொரு திங்கட்கிழமை எதிர்கொள்கிற வேகம் நிச்சயம் கிடைக்கும்.

[**]

அறையின் கதவுகளைத் திறந்தால் வரவேற்கும் பால்கனிக்கும் நல்ல மழையுடன் வந்திருக்கும் வசந்த காலத்திற்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Written by Aravindan

ஏப்ரல் 1, 2013 இல் 4:18 முப

எண்ணங்கள், தொடர், பொது இல் பதிவிடப்பட்டது

Tagged with

உன் வாழ்வில் சில நொடிகள்

39 மறுமொழிகளுடன்

கொஞ்சம் ராஜா புராணம். ‘ராஜா’ என்று சொன்னதும் இசை நினைவுக்கு வராமல் ‘அகந்தை’, ’கண்டிப்பு’, ‘கசப்பு’, ‘விருது’, ‘ஈகோ’ போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருமானால், (இந்த blogகிற்கு எதிர் திசையை காட்டி பாடுகிறேன்) ‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக?

———–

நவம்பரிலேயே ராஜா கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் வருகிறார் என்ற தகவல் முதலில் வெளியிடப்பட்டது. கனடாவிற்கு போக விசா இல்லாத காரணத்தாலும், கலிஃபோர்னியாவிற்கான பயண சிரமங்கள் காரணமாகவும் இன்னொரு கான்ஸர்ட் வரும் என அத்தனை நினைப்பையும் கைவிட்டாயிற்று. ஜனவரி மாதக்கடைசியில் பெப்ரவரி 23ம் தேதி ராஜா நியுஜெர்ஸிக்கு வருகிறார் என்று சொன்னதும் திடீர் டிக்கெட் படபடப்பும் பயண பரபரப்பும். இது ஐந்து மணி நேர கான்சர்ட் கதை. (டிக்கெட் வாங்கித் தந்தும் நானூறு மைல்களையும் ஒரு மயிலாக தானே ஓட்டியும் சென்ற திரு மயில் செந்தில் (@mayilSK) அவர்களுக்கு நன்றிகள்).

அறுபது டாலர் டிக்கெட்டில் போயிருந்தோம். அந்த ஏரியாவும் இன்னும் மேலே ஐம்பது டாலர் டிக்கெட் ஏரியாவும் பிரமாதமாக விற்றுத் தீர்ந்திருந்தன. நிஜ கான்ஸர்ட் தரிசன டிக்கெட்களான நூற்றி இருபது டாலர் ஏரியாவும் கூட தீர்ந்திருந்தன. நடுவில் இந்த எண்பது டாலரில் தான் கொஞ்சம் காற்று வாங்கல். இரண்டு வாரங்களில் சேர்த்த கூட்டம் என்பதை வைத்து தாராளமாக மன்னித்து பாராட்டலாம். நியுஜெர்ஸி என்பதால் தமிழ்-தெலுங்கு என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அதனால் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு – தமிழ் மட்டும் எனில் என்னென்ன பாடல்கள் வரும் என்று பெரும்பாலும் யூகிக்க முடியும் என்பதால்.

ஒரு மணி நேரத் தாமதம். அது வரை random உள்ளூர் RJ VJ DJயினர் மேடையில் மைக் இரைச்சலோடு என்னமோ செய்துகொண்டிருந்தார்கள்.  மக்கள் கூட்டத்திலிருந்து சிலரை ஆங்காங்கே பிடித்து பாட வைத்தனர். பாடியவர்களில் பெரும்பாலோனோர் சங்கீதமே எங்கள் மூச்சென மூச்சை பிரதானமாக ஒலிக்கவிட்டார்கள். கூட்டத்தை ஒவ்வொரு முறை பார்க்கையிலும் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் விலக விலக பாடினாலும், எல்லாவற்றையும் மீறி ராஜாவின் மீதான பாசம் பளிச்சென தெரிந்தது. பொதுவாகவே, தெலுங்கு மக்கள் கொஞ்சம் கூடுதல் காரம் சாப்பிடுவதைப் போலவே கொஞ்சம் கூடுதல் பாசம் ராஜா மீது வைத்திருக்கின்றனர்.

மொத்தம் நாற்பது-ஐம்பது வாத்தியக்கலைஞர்கள். அதில் இருபது வயலின்கள் மட்டும். ஒரு சிதார் அம்மணி. நாலு தபலா. ஒரு டபுள் பாஸ். நாலைந்து ட்ரம் பேட்ஸ், கீபோர்ட்ஸ். நெப்போலியன் (பாடகர் அருண்மொழி) புல்லாங்குழல். பாலேஷ் ஷெனாய். எல்லோரையும் சேர்த்திசைக்க வைக்க பிரபாகர். (மனிதருக்கு ஒரே குறி இசை தான். வேறெதையும் கவனிப்பது போலத் தெரியவில்லை). நட்ட நடுவில் வெள்ளைத் துணி போர்த்தி மூடிய மேஜையொன்றின் மேல் அந்த அதிசய ஆர்மோனியப் பெட்டி. ராஜா வருகிறார் என்றதும் அரங்கத்தின் இரைச்சலெல்லாம் வாக்யூம் போட்டு இழுக்கிற வேகத்தில் போயே போச். அத்தனை விளக்குகளையும் அணைத்து விட்டு ஆர்மோனிய பெட்டிக்கு மட்டும் நல்ல ரம்மியமான நீல ஒளி. ஆள் வந்து நின்றால் போதும் புல்லரிக்கும் என்பதான அமைப்பு. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை டிக்காஷன் குறைவான காபி கலர் துண்டு என ஒரு ஓரத்தில் ராஜா உள்நுழையும் போதே அரங்கத்தின் அமைதி உடைந்து பொடியாகிறது. (மொத்த அரங்கத்திலேயே நான் தான் முதலில் அவரைப் பார்த்தேன். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்). வெள்ளை ஒளி எங்கோ மேலே மேலேயிருந்து ராஜாவை மட்டும் வட்டமெனத் தொடர்ந்து மேடையில் ஆர்மோனிய நீல ஒளிவட்டத்தில் கொண்டு வந்து சேர்த்ததும் அவர் தலைக்கு மேல் வணக்கம் வைக்கிறார். நானெல்லாம் எழுந்து நின்று ஆவெனக் கத்திக்கொண்டிருக்கிறேன். கை கால் வாயெல்லாம் தானே தன் பாட்டுக்கு முடிந்ததை செய்கிறது. (ரொம்ப அபாயகரமான இருக்கை வரிசை வடிவமைப்பு. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்றால் நடந்தால் இசை வெள்ளத்தில் தொபுக்கடீரில்லாமல் கீழே மக்கள் வெள்ளத்தில் நடுவே தொபுக்கடீராகி தினந்தந்தி பெட்டி செய்தியில் காலேஜில் எடுத்த பாஸ்போர்ட் புகைப்படம். ஆனால் பிற்பாடு சுடிதார் அம்மணிகளெல்லாம் சர்வசாதாரணமாக் சீட் மீதேறியே முன் வரிசைக்குத் தாவிச் சென்று கலவரமூட்டினார்கள்). ’ஹலோ’ ‘கிலோ’ அபத்தமாக ‘வாங்க’ என்றெல்லாம் சொல்லாமல் நேரடியாக ஷிவ சக்த்யாயுக்தோ யதி பவதி. சில கான்சர்ட்களில் தென்படுகிற துவக்கத் தயக்கங்களோ குரல் நடுக்கங்களோ இல்லாமல் ’வானம் இன்று மேகங்களின்றி பளிச்சென’ இருக்கிற குரல். இன்னும் அதே ஏதோ-ஒன்று அந்தக் குரலில். ‘பரி பூரணி’ என்பது அந்தக் குரலாகவும் இருக்கலாம். நிற்க, சில வருடங்களாகவே ஜனரஞ்சக மக்கள் கூட்டம் கூடும் மாபெரும் நிகழ்ச்சிகளில் எடுத்த எடுப்பில் ஒற்றை ஆர்மானியத்துடன் பக்திப் பாடல் பாடி கூட்டத்தை கட்டுக்குள் வைக்கிறார் ராஜா. இதை கொஞ்சம் ஆராய்ந்தால் பலப்பல வடிவங்களில் உலவிக்கொண்டிருக்கிற ராஜா ப்ராண்ட் ஃபிலாசபியில் ‘concert philosophy’ கிளை துவக்கலாம். ’ஜனனி ஜனனி’ முடிந்ததும் இரண்டே நொடிகளில் உடுக்கைகள் அடிக்கத்துவங்க கோட் சூட் டையுடன் கார்த்திக்கின் ‘ஓம் சிவோஹம்’. விஜய் பிரகாஷின் ஷூக்களில் கார்த்திக்கா (கார்த்திக்கா கார்த்திக்கா – கூட்டத்தின் சந்தேக echo) என்று குழம்பினால் கார்த்திக் பக்திப்பாடலாய் இருந்தாலும் ஷூக்களை மாட்டிக்கொண்டு கம்பீரமாக ரெண்டடி நடந்தே காட்டுகிறார். Surprise, surprise என்று விளம்பர மங்கை சிரிப்பது போல. பக்கபல குரல்கள் இன்னும் பிரமாதம். மந்திரங்கள் சொல்வதும் சொல்லி முடிந்ததும் மேளங்கள் உருள்வதுமென ஒரிஜினலைப் போல. பாடல் முடிந்ததும் அதே இரண்டு நொடி அவகாசத்தில் ‘ஜகதானந்த காரகா’ தெலுங்கில். (ஸ்ரீராமராஜ்யம்). எஸ்.பி.பியும் கீதா மாதுரி என்ற தெலுங்குப் பாடகியும். (பாடல் தேர்வுக்காக கேட்ட சந்தோஷக் கூச்சல் என்னுடையது). ஷ்ரேயா கோஷல் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். கான்ஸர்ட் முழுதுமே குரல்களின் ஒளியளவு கொஞ்சம் தூக்கல் என்றாலும், எஸ்.பி.பி எப்போது குரலை முழுக்க திறந்து உயரே ஏறினாலும் காவிரி நீர் திறந்து விட்டது போல அரங்கத்தை ஒரு மைக்ரோ நொடியில் நிறைக்கிறது அவரின் குரல். ஒவ்வொரு முறை அது நிகழ்கையிலும் நானும் செந்திலும் உச்சுக்கொட்டி உணர்ச்சிவசப்பட்டோம். மூன்று இறை வணக்கங்கள் முடிந்ததும் ராஜா முதல் முறையாக பேசி வரவேற்று நிறைய பாடல்கள் இருப்பதாகவும் நிறைய உழைத்திருப்பதாகவும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு தொடர்கிறார். (இந்த இடத்தில், அறிவித்தபடி சுஹாசினி மணிரத்னம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவில்லை என்பது அறிந்தும் புரிந்தும் மலர்ந்து சிரிக்கும் என் முகம் ஒரு க்ளோசப்).

அடுத்த பாடல் தேர்விலேயே என்னுடைய முதல் விக்கெட் காலி. ‘என்னைத் தாலாட்ட வருவாளோ’க்கு எல்லோரும் ஓட்டு போடும் பொழுதே நானும் ‘இது சங்கீதத் திருநாளோ’ பாடலும் மட்டும் தனியாகக் காற்று வாங்கிக்கொண்டிருப்போம். குறிப்பாக, பியானோவும் பவதாவின் குரலுமான (!) அதன் துவக்க இசை, Synthலே ஒரு குறையிருந்தாலும் சிலிரிப்பினில் குறைவதுண்டோ வகையறா. அதை எல்லோருமாகச் சேர்ந்து மேடையில் தொடங்குகிறார்கள். (அதற்கு முன் ராஜா ‘கடல் கடந்து வாழும் உங்களுக்கு இது ஒரு சங்கீதத் திருநாள்’ என்று சொல்கிறார். ‘என்ன ஒரு ஆணவம்’ என்று பொங்கும் மக்களே, இன்னும் இந்தப் பதிவில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்?) பியானோ (அதாவது கீபோர்டு) மற்றும் பவதா குரலுடன் கூடவே ஒரு வயலினும் (ஒரிஜினலில் இல்லையா கேட்கவில்லையா?). படிபடிப்படியாகத் தாண்டி ஏறிப்போகிற இசையிலே கூடவே விட்டு விட்டு படிப்படியாக ஸ்ருதியேறி வரும் வயலின் இழுப்புகள். (இந்த ‘என்னவென்று சொல்வதம்மா’ பாடலில் ’அந்தி மஞ்சள் நிறத்தவளை / என் நெஞ்சில் நிலைத்தவளை’ வரிகளுடன் வரும் வயலின் இழுப்புகள் போல – அந்தப் பாட்டில் வயலின் இழுப்பை ராட்டினமேற்றி விட்டாற் போலிருக்கும்). வயலின் மட்டும் ஒரு மைக்ரோ நொடி தப்பாகத் துவங்க, ராஜாவிற்கு ஏமாற்றம். ஒரு உக்கிரமான கையசைப்பில் அனைவரும் நிறுத்தி விடுகிறார்கள். (சிலர் வாத்தியத்தையே கீழே வைத்திருப்பார்கள் என்று என் dramatic யூகம்). என்னவோ பேசுகிறார் சொல்கிறார் விளக்குகிறார். அவர்களை பார்த்து திரும்பி நின்று ‘என்னைப் பார்’ என்பது போல கையசைத்து வழி நடத்த கச்சிதமாக வாசித்து எல்லோரும் கரையேறி வருகிறார்கள். வயலினோடு சேர்ந்து பவதாவும் பலப்பல ஸ்ருதிகளில் பாடத் துவங்கி விட, அவர் மட்டும் கரை வராமல் தத்தளிக்கிறார்.

அடுத்து மேடைக்கு மனோ வந்து காம்பியர் பண்ண எத்தனித்தபடி பேசி பாட்டுக்குத் தயாராகிறார். ஷெண்பகமே ஷெண்பகமே. ‘பட்டு பட்டுபூச்சி போல’ என தொகையறாவைப் பாடி முடிந்ததும், மக்களே, அருண்மொழியின் ஒரே ஒரு புல்லாங்குழல் மற்ற எல்லா கருவிகளையும் விஞ்சி நிறைகிறது. முதல் இடையிசையில் ஷெனாயும் அபாரமான துல்லியம். (இந்த இருவரும் கான்ஸர்ட் முழுக்க அமர்க்களம்). பொதுவாகவே மனோ பாடுவதில் அதிகம் ஈர்ப்பில்லையென்றாலும் ஜோராகவே பாடினார், கொஞ்சம் கலக்கமான முகமும் குரலும். எஸ்.பி.பியும் சித்ராவும் மேடையேறியதுமே எக்கசக்கமான எதிர்பார்ப்பு. ஆர்கெஸ்ட்ரா அங்கங்கே சிதறலாக வரப்போகிற இசையை வாசித்துப் பார்க்க நாங்கள் அந்தப் பாட்டா இந்தப் பாட்டா என குதித்துக்கொண்டே இருக்கிறோம். (கான்ஸர்ட் முழுக்க இதே விளையாட்டு தான்). வந்த பாடல், மௌனமேலநோயி. (தமிழில் சலங்கை ஒலி ‘மௌனமான நேரம்’). சமீபகாலமாக சித்ராவின் குரலில் வயது லேசாக அடி தங்கி குரல் தடித்தது போன்ற உணர்வும் எனக்கும் அதனால் கொஞ்சம் பயமும். அதையெல்லாம் அடித்து நொறுக்கி துவங்குகிற ஹம்மிங்குடன் எஸ்.பி.பியும் சித்ராவும் அன்றைய மாலைப் பொழுதின் முதல் சிக்ஸர். Studio level. ’தெலுங்கு பாட்டும் பாடுவாங்க’ என்பது ஊர்ஜிதமானதால் தெலுங்கு மக்கள் ஏகோபித்த கரகோஷத்தை பொழிந்தார்கள். (’அதெப்படி கரகோஷத்துல பிரிச்சு சொல்வீங்க’ என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது).

‘நின்னுக்கோரி வர்ணம்’ துவக்க இசை வந்ததே சர்ப்ரைஸ். இத்தனை சின்ன ஆர்கெஸ்ட்ராவில் இது முடியுமா என்ற சந்தேகம் போகப் போக நிஜமாகிறது.  ட்ரம்ஸ் முதல் முறையா(கவும் அன்று முழுவதுமாக) இடிஇடியென இடிக்கிறது. ’அழகிய ரகுவரனே அனுதினமும்’ என்றெல்லாம் விரைகிற இடங்களில் தடுமாற இன்னும் சித்ராவிற்கு நிறையவே வயதிருக்கிறது – மகிழ்ச்சி. அங்கே திரையில் க்ளோசப்பில் தெரிகிற சித்ரா ஒரு கடினமான சங்கதியை கண்களைச் சுருக்கி குரலின் உள்ளேத் தேடித் தேடி பிடித்து அடைந்து நிம்மதியடைந்து அடுத்த வரியில் ஒரு நிம்மதி புன்னகை உதிர்க்க, ரசிகாஸ் அந்த புன்னகைக்கு ஒஹோவென ஆர்பரித்த பொழுது – பாரதிராஜா மொழியில் – ஐ லவ் திஸ் ஆடியன்ஸ். (நிற்க, இயக்குனர் பாலா தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக சித்ராவின் புன்னகையை சொன்னதற்குப் பிறகே நானும் கவனிக்கிறேன்) ராஜா இந்தப்பாடலுக்கு 1/4/87ல் எழுதிய ஸ்கோர்ஷீட்டை எடுத்து வந்திருந்தார். (’சுஜாதா ஃபிலிம்ஸ்’ ‘நின்னுக்கோரி வர்ணம்’,’சித்ரா’ என்று அதில் குறிப்புகள் இருந்ததைப் படித்தார். நின்னுக்கோரி வர்ணத்தை popஆக மாற்ற நினைத்து செய்த பாடல். வாலி ‘நின்னுக்கோரி வர்ணம் இசைத்திட (ராஜாவைத்) தேடி வரணும்’ என்று எழுதியதாகச் சொன்னார்)

பிரியதர்ஷிணி என்றொரு பாடகி. அடிக்கடி ராஜா நிகழ்ச்சிகளில் தென்படுகிறார். என்ன பாடல்கள் பாடியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘இதயம் ஒரு கோவில்’ பாடலில் ஜானகியின் ஹம்மிங் பாடுவது அவருக்கான பணி, சிறப்பாக செய்தார். ஏதோ தீவிர யோசனையிலேயே பாடினாலும் பிசகாமல் பாடிக் கடந்த ராஜா தானே எழுதிய அந்த என்-ரசிகனே-கேள் வகையறா வரிகளை பாடிய விதம் எல்லாம் சிக்ஸர். ‘எனது ஜீவன் நீ தான்’ ’நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது’ என்றெல்லாம் கை நீட்டி அடித்த பஞ்ச்சுக்கெல்லாம் என்ன பதிலுக்குச் சொல்வதென்று புரியாமல் ஓவெனக் கத்தித் தீர்த்தோம். ‘என்றும் வாழ்கவே’ வரிகளுக்கு வாழ்த்தினார். ‘லலித பிரிய கமலம்’ (தமிழில் ‘இதழில் கதை எழுதும் நேரம்’) பாடலில் எஸ்.பி.பி நிறைய சறுக்கினார். சித்ராவிற்கு அப்படியெல்லாம் தவற விடுவது என்னவென்றே தெரியாது என்பதால் பாடலை தனியாளாகக் கட்டி இழுத்தார். (தெலுங்கில் ஜேசுதாஸ் பாடிய பாடலென்பதால் வரிகள் பழக்கமில்லை என்று எஸ்.பி.பி மனு கொடுத்தார்). ஹிந்தியில் நௌஷாத் மிஸ்ரலலிதா ராகத்தில் போட்ட (கிட்டதட்ட) இதே மெட்டுடைய பாடலை எஸ்.பி.பி பாடிக்காட்டி கேள்விகள் கேட்டார். ராஜா அதிகம் ரசித்ததாக தெரியவில்லை. அது வேற ராகம், இது வேற என்றார். பாலசந்தர் என்ன ராகத்தில் பாட்டு அமைத்தாலும் நாயகிக்கு அந்தப் பேரை வைப்பதாகச் சொன்னதாகவும் ராஜா லலிதப்ரியா ராகத்தை தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்). எஸ்.பி.பி மேடையிலேயே தொடர்ந்து நின்று ‘தோகை இளமயில்’ பாடி முடித்தார்.

அடுத்து பேருந்து ஹார்ன் கேட்டதும் கூட்டம் கத்தித் தீர்க்க அதே கோட் டையுடன் கார்த்திக் ‘என்னோடு வா வா’. ஏகக் குஷியாகத் தென்பட்ட கார்த்திக்கின் உடல்மொழி முழுக்க மகிழ்ச்சி கொப்பளித்தாலும் குரலில் எப்போதும் ஏனோ ஒரு மென்சோகம். (இந்த போக்கிரி படத்தில் லிஃப்ட் சரிசெய்கிற பாண்டு போல). பாடலின் இரண்டாவது இடையிசையில் ராஜாவிடம் ஓடிச்சென்று என்னவோ கிசுகிசுத்துவிட்டு எங்களிடம் கை தட்டி சத்தமாக உடன் பாடும்படியும் ராஜாவின் அனுமதி உண்டு என்றும் சொன்னார். (ராஜாவுக்கு ஏகச் சிரிப்பு) இரண்டாவது சரணம் முழுக்க இது தொடர ’அதை கட்டி வெச்சு உதைக்கணுமே’ என்று பாடுகையில் ராஜா சிரித்தபடி கார்த்திக்கைப் பார்த்து அதைப் பாடினார். (சிரித்தபடி என்பதை அழுத்திப் படிக்கவும், நாளை பத்திரிக்கைகளில் வேறு போல கதை வரும். நாங்கள் உட்கார்ந்து டிவிட்டரில் மறுப்பு சொல்ல வேண்டியிருக்கும்) ராஜாவே கடைசி பல்லவியை மைக்கில் ரசிகர்களைப் பார்த்து ‘எங்கேயும் போக மாட்டேன்’ என்றார். (டிக்கெட் காசெல்லாம் ஏற்கனவே தீர்ந்தது). (கார்த்திக் ராஜா தன் தாயாரின் மரணத்திற்குப் பிறகு முதன் முதலில் ‘அரேஞ்’ செய்த பாடல் இதுவென்றும், இந்த முதல் வரியை கேட்டு அம்மாவை நினைந்து நெகிழ்ந்ததாகவும் சொன்னார்)  ’பச்சரிசி மாவு இடிச்சு’ என்று கோரஸ் தொடங்கி (நிற்க – கோரஸ் நாள் முழுக்க அபாரம்) -. மறுபடி அருண்மொழியின் துல்லிய புல்லாங்குழல் என ‘மதுர மரிக்கொழுந்து’ பேரானந்தம். மனோ இரண்டு முறையும் சரணத்தை முடிக்கையில் கைத்தட்டல்கள்! தொடர்ந்து சிறிய medley. ’அழகு மலராட’ (சத்யன் – பிரியதர்ஷினி) இத்தாலி கான்ஸர்ட்டில் பாடிய வடிவில். முதல் வரியை தனியே பாஸ் மற்றும் வயலினில் வாசித்த பொழுது அதிர்ந்தது. அதற்கே இன்னொரு அறுபது டாலர் டிக்கெட் எடுக்கலாம் போல. (இந்த வீடியோவில் 37வது வினாடி – வீடியோ உபயம் @mayilSK). என்ன பாடல் என்று தெரியாததால் கூடுதல் திரில். (இரவு முழுக்க இப்படி என்ன பாடல் எனத் தெரியாமல் திடீரென இசை துவங்க என தாக்குதல்கள்). ’நானாக நானில்லை தாயே’ (எஸ்.பி.பி) முதல் இடையிசை மற்றும் சரணம் பல்லவி மட்டும். மலேசியா வாசுதேவன் நினைவாக ’ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே’ (செந்தில் தாஸ் – என்னா குரல்!).

இந்த MC, compere தொல்லையெல்லாம் இல்லையென்பதாலோ என்னவோ ராஜா விட்டால் போதும் என அடுத்தடுத்த பாடல்களுக்குத் தாவிக்கொண்டே இருந்தார். Medley முடிந்தது மறு கணமே திரும்புகிறார், என்னவோ சொல்கிறார், மைக்கிடம் செல்கிறார் ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது’ ஆலாப் ஆரம்பிக்கிறார். ஆலாப் முடிந்ததும் ஆர்கஸ்ட்ராவைப் பார்த்து வெட்டும் கை அசைவுகளில் அந்த prelude rushஐ கட்டி இழுக்கிறார். பார்க்க அப்படியொரு பரவசம். சித்ரா இன்னும் மேடையே ஏறவில்லை. மனிதர் பல்லவியைப் பிடித்து அடித்து நொறுக்க, அவசர அவசரமாக வந்து லிர்க் ஸ்டாண்ட் வைத்து மைக் எடுத்து சித்ரா சேரும் பொழுது ஏதோ அங்கேயே ஒரு மணி நேரம் ஆசுவாசமாக நின்று காத்திருந்து பாடுவது போலக் கச்சிதம்.

தெலுங்கு தேசத்தில் மிகப்பிரபலமான ‘பலப்பம் பட்டி’ (பொப்பிலி ராஜா) பாடல் வரும் என்ன பந்தயமே கட்டியிருந்ததால், மத்தளங்களும் ஷெனாயுமாய் தூள் பறந்த துவக்க இசை வந்ததும் அடியேன் ஏகோபித்த கரகோஷம். வேறெந்த பாடலுக்கு அரங்கம் இத்தனை அதிர்ந்ததாக நினைவிலில்லை. மனோ (எஸ்.பி.பி இடத்தில்) மற்றும் அசராமல் அடித்த சித்ரா. அடுத்த நாள் காலை வரை மண்டையில் அடித்துக்கொண்டிருந்தது ட்ரம்ஸ். இந்தப் பாடலை இதுவரை கேட்டதில்லையெனில் உடனே கேட்டுவிடவும். Gult pleasure மட்டுமல்ல guilty pleasure! (நிற்க, இப்படி எத்தனை மசாலா-படத்துல-ஒரு-ஹிட்-பாட்டு. அதற்கென ஒரு ஃபார்மட், ஒரு எனர்ஜி, ஒரு மெலடி). கமல் இடத்தில் யுவன் பாட முயல்வது பெரும்பாலும் ஜோக் போலத் தான் தெரிகிறது. இருந்தும் யுவன் முடிந்தவரை ‘நினைவோ ஒரு பறவை’ பாடலில் err முயன்றார். (கூட NSK ரம்யா). முதல் இடைஇசையில் சாரியட் வண்டி – மணியோசை இசையெல்லாம் பிரமாதமான depthஉடன் கேட்டது. கிட்டத்தட்ட unreal. சித்ராவும் ‘செங்க சூளக்காரா’ அனிதாவும் புதிய இண்டர்லூட்களுடன் ‘தம்தன தம்தன தாளம் வரும்’ பாடலைப் பாடினார்கள். இண்டர்லூடுகள் எனக்கு மிகப்பழக்கமானவையாகப் பட்டது. அதாவது – பொதுவான ‘சிம்பனி’ இசை மற்றும் Nothing but wind தாக்கம். ’ஒளியிலே தெரிவது தேவதையா’ பாடல் எனக்கு எத்தனை பிடிக்கும் என நேரில் அங்கே கச்சிதமான ஆர்கெஸ்ட்ரா மற்றும் கார்த்திக்குடன் கேட்கையில் தெரிந்தது. (முதலில் கார்த்திக் பாடியபின் இசை துவங்கி ஒளியென பெருகும் என்று @meenaks ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்து அந்த momentஐ எதிர்பார்த்தேன், சரியே நிகழவில்லை) பவதா அதிகம் சொதப்பாமல் பாடினார். எல்லோருக்கும் அவர் மேல் soft corner இருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக் அதிகம் துணை நின்று பாடியது போல இருந்தது. (கவனிக்க, அவர் இசையில் ஒரு பாடல் தந்திருக்கிறார்). ராஜா மாற்றியெழுதிய கடல்-கடந்து-வாழறீங்களே-பாவம் வரிகளுடன் ‘சொர்க்கமே என்றாலும்’ (உடன் சித்ரா). அங்கங்கே இசையை நிறுத்தி வரிகளை விளக்குதல். பின் தொடர்ந்து பாடுதல்.

கான்ஸர்ட்டின் ஆகச்சிறந்த தருணமென நான் நினைப்பது – கீதாஞ்சலி (தமிழ் இதயத்தை திருடாதே) படத்தின் ‘ஓ ப்ரியா ப்ரியா’. சமீபமாக என்னவோ ஒரு மயக்கம் இந்தப் பாடலின் மேல், இந்தப் பாடலினால், இந்தப் பாடலுக்காக. மரணத்தின் வலியும் அதை எதிர்க்கிற நம்பிக்கையும் விசித்திரமாக ஒன்றாகச் சிக்கிக்கொண்டிருக்கிறது அதில். தெலுங்குப் பாடல்கள் என்று விளம்பரப்படுத்தியதிலிருந்தே இந்தப் பாடலுக்காக மனசு டமடமவென அடித்துக்கொண்டது. எஸ்.பி.பியும் சித்ராவும் அன்று பாடியது இது வரை பார்த்த மேடைப் பாடல்களிலே சிறந்தது என்றே சொல்லலாம். அவர்களையும் ஒரு படி மிஞ்சி ஆர்கெஸ்ட்ரா சிறப்பாக ஒத்திசைத்தார்கள். எங்கிருந்து எந்த இசை துவங்கி எங்கே கலக்கிறது என்று புரியாமல் பிரமிப்பில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி மங்க மங்க நான் ஒப்புக்கொள்ள விரும்புவதை விட அதிகமாகவே கண்களில் நீர் கோர்த்துக்கொண்டிருக்கலாம் ;) தப்பித்தவறி யாரேனும் அழுதிருந்தால் அரங்கத்திற்கே கேட்டிருக்கக் கூடிய நிசப்தம் பாடல் முழுக்க.

’மாயாபஜா’ரிலிருந்து ‘நான் பொறந்து வந்தது’ (அபாரம்), பின்னர் தெலுங்கில் ‘பிரயதமா’ (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி’) இரண்டிலும் தனித்து தெரிந்தது ப்ரியா ஹிமேஷ். ஜானகியின் பாடலைப் பாடியும் எந்தக் குறையும் தெரியாமல் பாடினார். பிரயதமா பாடலின் துவக்க இசை மிகவும் பிடிக்குமெனில் வலது கையை தூக்கவும். (பாடலும் பிடிக்குமெனில் இரண்டு கைகளையும்). உங்கள் சார்பாக நான் அங்கே கை தூக்கி ஆர்பரித்தாயிற்ற்று. சரணங்களை எஸ்.பி.பியும் ப்ரியாவும் துல்லியமாக பாடினார்கள். ராஜா அந்த முதலிரண்டு சரண வரிகளை பாடிக்காட்டி (யாய்!) அதற்கு எந்த வார்த்தைகளை எழுதும் போது இனிமை கொஞ்சம் குறைந்து விடுவதாகச் சொன்னார். இருந்தும் தெலுங்கு பாடலாசிரியர் மிகவும் உழைத்து எழுதினார் என்று சொன்னார். (ஆத்ரேயா?) ‘சாய்ந்து சாய்ந்து’ யுவன் பிரமாதமாகப் பாடினார். (ரம்யா சொல்ல வேண்டியதில்லை). சமீபத்திய பாடல் மட்டுமில்லாமல் முழுக்க ஆர்கெஸ்ட்ராவுக்காக சமீபத்தில் தான் எழுதியது என்பதால் துல்லியமாக இருந்தது. (இதே காரணம் ஜகதானந்த காரகாவிற்கும்). மிகவும் எதிர்பார்த்த இரண்டாவது இடையிசையை யுவன் உடன் பாடாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கான்ஸர்ட்டின் மற்றொமொரு monsterous performance – சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சித்ரா, எஸ்.பி.பி. வாத்தியக்கலைஞர்களுக்கும் அது முக்கியமான தருணமாக இருந்திருக்கும். ஓரிரு சிறிய தவறுகள் தவிர்த்து ஸ்டூடியோவில் என்ன நிகழ்ந்ததோ அதை இங்கே அரங்கேற்றினார்கள். பார்க்கிற எங்களின் கூர்ந்த கவனமும் வாசிக்கிறவர்களின் கூர்ந்த கவனமும் பிரமாதமான அமைதியில் கலக்கிற பொழுது, சத்தம் போடாமல் கேளுங்கள் என்று ராஜா சொல்வதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எஸ்.பி.பியின் குரல் ஏற்ற இறக்கங்களில் முன்பு எப்போதோ சறுக்கு மரம் விளையாடி பரவசமானது போல இப்பொழுதும் சாத்தியமாகிறது. மக்களே, எஸ்.பி.பியின் புகழ் இன்னும் இன்னும் பாடுக. ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ தெலுங்கில் எஸ்.பி.பியும் (மறுபடி அமர்க்களம்) அனிதாவும் கடைசி சரணம் தமிழில் ராஜாவும். (அவர் பாடியதாயிற்றே விடுவாரா?) கோரஸ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள், ரசித்து பாடுகிறார்கள். பெரும் நடுக்கத்துடன் பவதாரிணி ‘காற்றில் வரும் கீதமே’ துவங்க, ப்ரியா ஹிமேஷ் கொஞ்சம் சேர்ந்து சரி செய்ய, பின்னர் மனோ வந்து மீண்டும் குழப்ப, கடைசியில் ராஜாவே பாடி முடித்தார். ’ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ பாடல் அடைந்த பொழுது ஆர்கெஸ்ட்ரா அன்றைக்கு அட்டகாச ஃபார்மில் இருப்பது தெளிவாக புரிந்துவிட்டதால் கொஞ்சம் ஆசுவாசமாகிக் கேட்க முடிந்தது. பாடகி ப்ரியதர்ஷினி பவ்யமாகப் பாடுகிறார், நன்றாகவும் பாடுகிறார். ’மாசி மாசம் ஆளான பொண்ணு’ தெலுங்கில் எஸ்.பி.பியும்(மறுபடி மறுபடி அமர்க்களம்) ப்ரியா ஹிமேஷும். ஹிமேஷ் விரைவில் ஸ்டாராகி விடுவார். இது ஸ்வர்ணலதாவிற்கு அஞ்சலி என்று சொல்லியிருந்தால் என்னைப் போன்ற ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம். (தெலுங்கில் படத்தில் பாடியது சித்ரா) தெலுங்கில் தன் பாடல்களுக்கு எழுதப்பட்ட வரிகளில் இதன் பல்லவியை பெஸ்ட் என்றார் ராஜா. நல்ல thought, fits and sounds nice என்பது அவரின் அளவுகோல்.

அடுத்த பெரிய சர்ப்ரைஸ் – ‘கண்ணே தொட்டுக்கவா ஒட்டிக்கவா’ என்று சத்யன் கமல் குரலில் துவக்கியது. எஸ்.பி.பி (சொல்லி சொல்லி போரடிக்குது, அமர்க்களம்), பிரியதர்ஷினி (ஆர்கெஸ்ட்ரா மற்றும் எஸ்பிபி அதிரடியில் இவரின் குரலைல் காணவே காணோம்). ’வனிதாமணி யவன மோகினி’ என்று அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என எல்லா பக்கங்களிலும் அதிரடி. ராஜாவின் பாடல்களுக்கான திரைவடிவங்களில் எனக்குப் மிகப்பிடித்த தருணங்களின் ஒன்று இந்தப் பாடலில் இரண்டாவது இடையிசையின் முதல் பத்து நொடிகளில் வருகிறது. ஒளிந்திருக்கும் வில்லன்கள், திரையின் ஒரு புறத்தில் இன்னொரு புறத்திற்கும் விரையும் குதிரைகள், எதிர்ப்புறமாக ஓடி வருகிற கமல் – அம்பிகா என மொத்தமும் ஸ்லோமோவில் நிகழ (அந்த ஸ்லோமோ ஐடியாவை கொடுத்தவர் வாழ்க) அந்த இசையை திரையில் அழகாக உள்வாங்கியிருப்பார்கள். அந்த நொடியை ஒரு கான்சர்ட் ஹாலில் அமர்ந்து தரமான வாசிப்பிற்குக் கற்பனை செய்வேனென நினைத்ததேயில்லை. Majestic!

NSK ரம்யா துவக்கிய ‘உனக்கும் எனக்கும் ஆனந்தம்’ ஒரு சரணம் முடிந்ததும் அப்படியே அடங்கி பிண்ணனியில் Black Eyed Peas remix முழுதாக ஒலித்து முடித்தது. அர்த்தமேயில்லாத தேவையில்லாத plug. ராஜாவை யார் கன்வின்ஸ் செய்தார்கள் எனத் தெரியவில்லை. முழுநேரமும் ஆடியன்ஸை பார்க்காமல் அந்தப்பக்கம் திரும்பி நின்றுகொண்டிருந்தார். முகத்தில் கொஞ்சம் சங்கடம். அந்த adaptationஐ நாம் கேட்க வேண்டுமென ராஜா விரும்பியதாக எஸ்பிபி விளக்கினார். அடுத்த சிக்ஸர் ‘பூவரசம்பூ பூத்தாச்சு’. மிகவும் பிடித்த பாடல். பிரியதர்ஷினி பிரமாதமாகப் பாடினார். ரயில் ஒலிகள் கச்சிதமாக அமைந்த fun ride. ராதிகா வானம் பார்த்து சுற்றிச் சுற்றி தடுக்கி விழுந்து எழுந்து நின்று பார்க்கும் பொழுது வயலின்களுக்கு தலை சுற்றுமே – அது Perfect. தெலுங்கு ரசிகர்களை கொஞ்சம் சாந்தப்படுத்த மறுபடி ஜகதீக வீருடு அதிலோக சுந்தரியிலிருந்து abba nee பாடலை எஸ்.பிபியும் கீதா மாதுரியும் பாடினார்கள். அவர்களே மறுபடி மனோவுடன் botany பாட்டை பாடினார்கள்.

மறுபடி ஒரு pure moment. தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ. சித்ராவும் ராஜாவும். ஆர்கெஸ்ட்ரா இன்னும் கொஞ்சம் உயிரூற்றி வாசித்திருக்கலாம் எனத் தோன்றியது. இருந்தாலும் பாடலின் உயரம் ஏகமென்பதால் கொஞ்சம் குறைந்தாலும் பொன். ஜானகி தந்திரமாக அந்தப் பாட்டின் நோட்ஸுகளுக்கிடையே தன் குரலையும் சேர்த்து எழுதிவிட்டார் என்பது சித்ரா பாடுகையில் கேட்டது. (சித்ரா அடிக்கடி கூட நின்று கொண்டிருந்த கோரஸ் பாடகர்களிடம் என்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்). அங்கங்கே மைக் கொஞ்சம் சொதப்பியது.  சும்மா கேட்டுகொண்டிருந்தே நாங்களே சோர்ந்து போயிருக்க ராஜா ஐந்து மணி நேரமாக நின்றிருந்தாலும் ‘ஓரம் போ ஓரம் போ’ பாடலை உற்சாகச் சைக்கிளேற்றினார். கோரஸ் மக்களும் செந்தில் தாஸ் (பல குரல்களில்) ஜாலியாகப் பாடினார்கள். ’ருக்குமணிய பின்னால உக்கரவெச்சு’ என்று பாடும் போது ராஜாவின் பாவனையெல்லாம் அத்தனை அழகு. (அழகன்யா எங்காளு!). உடனே அன்னக்கிளியிலிருந்து ‘சுத்தச்சம்பா’ மிகத் திறமையாகப் பாடப்பட்டது – காரணம் பாடகி பிரயதர்ஷினி. டீம் லீட் போல அவர் ஒரு மினி கண்டக்டராக கோரஸ்களை ஒழுங்குபடுத்தி பாட வைத்தார். அதே ஜோஷுடன் ‘நிலா அது வானத்து மேல’ ஒரு பாதி பாடப்பட்டது. ராஜா ‘நிலா அது வானத்து மேல’ எப்படி முதலில் தாலாட்டாக இசையமைக்கப்பட்டது (தென்பாண்டிச்சீமையில இடத்தில்) என்று விளக்கி பாடி காண்பித்தார். (பின்னால் அமர்ந்திருந்த தெலுங்கு குடும்பத்தினருக்கு அதிசயம் தாங்க முடியவில்லை. எனக்குப் புரியாத தெலுங்கிலும் அவர்கள் கண்ட அதிசயத்தை புரிந்துகொள்ள முடிந்தது ஜீன்ஸ் படப்பாடலில் வராத அதிசயமாக மிஞ்சியிருந்தது. வெளியே கலைந்து போகும் பொழுது ஒரு தமிழ்நாட்டு வெள்ளைதாடி பெரியவர் தன் குடும்பத்தினரிடம் மிக மகிழ்ச்சியாக ‘என்ன அநியாயம் பாத்தீங்களா அந்த நிலா அது வானத்துலு பாட்டு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இத்தனை லேட்டாக இதெல்லாம் புரிந்து தெரிந்து என்னத்த..) அபிநந்தனாவிலிருந்து ‘ப்ரேமா எந்த்தா மதுரம்’  - எஸ்.பி.பி. தெலுங்கு ரசிகர்களின் தேசிய கீதம் போல. இது போன்ற மெட்டை தான் வேறெங்கும் பாடியதேயில்லை என்று எஸ்பிபி உணர்ச்சிவசப்பட்டார். நான் முதல் முறையாக கேட்கிறேன். (வெட்கம், வேதனை). பின்னர் ராஜா தென்பாண்டிச் சீமையிலே பாடி முடித்து வைத்தார்.

சப்பா, ஒரு சோடா.

சரி, பாட்டு லிஸ்ட்டெல்லாம் ஓகே, கருத்து சொல்ல வேண்டிய கட்டம். ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக.

இடம் – சரியாக இருந்தது. போனவுடன் ‘ஏன் ஸ்டேஜ் அங்க இருக்கு’ ‘இத்தன சின்னதா இருக்கு’ ‘நம்ம இடத்துல சவுண்ட் கேக்குமா’ போன்ற கலவர கேள்விகள் எழுந்தன. (முதல் கான்ஸர்ட் அல்லவா?). எல்லாம் சரியாக இருந்தது.

கூடிய மக்கள் – இசை ரசிக்கத் தெரிந்த மக்கள். தெலுங்கு – தமிழ் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் கடைசி நேரத்தில் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சில் என்பதால் அதிகம் தமிழ் பாடல்கள் இருந்தன. அது சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. மனோ, எஸ்பிபி, ராஜா என எல்லோரும் ஓரிரு முறை தெலுங்கு பாடுகிறோம் என்று வாக்களிக்க வேண்டியிருந்தது. கடைசியில் சில தெலுங்கு பாடலை பாடி சரிகட்டினார்கள். இருந்தாலும், அவர்வர் சங்கங்களில் (தமிழ்ச் சங்கம், தெலுங்கு சங்கம்(லு?)) அடுத்த மீட்டிங்கில் சலசலப்பு இருக்குமென்றே நினைக்கிறேன். மக்கள் ராஜா கேட்டுக்கொண்டும் அவ்வப்போது கொஞ்சம் சத்தம் போடவே செய்தனர். பியர் நிறைய புழங்கியது. நிறைய குழந்தைகள் தென்படவில்லை, நன்றி.

ஆர்கெஸ்ட்ரா – (ஏனோ எஸ்பிபி ஆர்செஸ்ட்ரா என்கிறார்) – நினைவு சரியெனில் இரண்டு முறை தான் நிறுத்தப்பட்டார்கள். மற்றபடி நல்ல உழைப்பு.

பாடகர்கள் – எஸ்பிபி லலிதபிரியகமலம் தவிர மற்ற எல்லாப் பாடல்களையும் வெளுத்து வாங்கினார். சமீபகாலமாக ஏற்படிருக்கிற தொய்வு இங்கே அதிகம் தென்படவில்லை. சித்ராவும் அவரும் நிகழ்ச்சியின் delight. எஸ்பிபி மனோ கார்த்திக் யுவன் என எல்லோரும் அங்கங்கே ஏதேதோ பேச சித்ரா பாடுவது மட்டுமே. ‘ஏன் பேசவே மாட்டேங்கிற? ராஜாகிட்ட பாடின எக்பீரியன்ஸ் சொல்லு’ என எஸ்பிபி வம்பிழுக்க சித்ரா சம்பிரதாய வார்தைகள் சொல்ல ‘அது என்ன இது என்ன’ கிட்டதட்ட ராகிங் நடந்தது. (’என்னோட கேரியர்லயே..’ ‘கேரியரா அது என்ன டிஃபன் கேரியரா?). இருவரையும் அந்த நிகழ்ச்சியில் பார்த்தது உண்மையில் புல்லரிப்ஸ். மனோ எத்தனை MC செய்ய முயன்றாலும் ராஜா விடாது தடுத்தார். என்ன கேள்வி மனோ கேட்டாலும் ‘சரி சரி பாட்டு பாடலாம் வா’ என கலாய்த்தார். ‘இந்த மாதிரி பாட்டெல்லாம் நீங்க’ என மனோ நா தழதழுத்தாலும் ‘நிறுத்து நிறுத்து நீ ஊதவே வேணாம்’ தொனியில் தடா. மற்ற இளம் பாடகர்கள் அனைவரும் சுகமாகப் பாடினார்கள் – குறிப்பாக ப்ரியா ஹிமேஷ்.

பாடல்கள் தேர்வு – ராஜாவின் oeuvreஇல் இருந்து பாடல்கள் தேர்ந்தெடுப்பது ராஜாவாகவே இருந்தாலும் கடினம் தான். ஆக அதில் விமர்சனம் செய்து ஒன்றும் ஆவதில்லை. (மக்கள் ‘அந்தப் பாட்டு வேணும் இந்தப் பாட்டு வேணும்’ என குரல் கொடுக்க ராஜா இரண்டு முறை பொறுமையாக ‘சில பாடல்கள் எடுத்து prepare பண்ணியிருக்கோம். அதத் தான் பாடறோம்’ என்று விளக்கியும் ‘கண்ணே கலைமானே’ என்று ஒரு கூவல் எழுந்தால் அதற்கு ‘கத்தியவன் என கண்டேன் உனை நானே’ என பாடிக் கலாய்த்தார். பின் ஒரு முறை கொஞ்சம் கடுப்பாக ‘நான் கம்போஸ் பண்ணின பாட்டத்தானே உங்களாக கேக்கமுடியும். நான் கம்போஸ் பண்ணாத பாட்டு (மனசுக்குள்) ஆயிரம் இருக்கு, அதெல்லாம் என்ன பண்ண, கேக்க முடியுமா?’ என்ற கேட்டார். அவர் சொன்னதின் உண்மையை சுருக்கென உணர புரிந்தது. இசையைப் பற்றிய ராஜாவின் philosophy புரிய நமக்கு ரொம்ப நாளாகும் போல.

கடைசியாக ராஜா. ராஜா கான்ஸர்ட்களை எத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்கிறார் என்பது புரிந்தது. ‘நிறைய தப்பு பண்றோம் கான்ஸர்ட்ல. அது உங்களுக்குத் தெரியறது இல்ல. ஆனா என்னால தாங்க முடியறதில்ல. அதான் கான்ஸர்ட்ஸ் பண்ண இஷ்டமில்ல’ என்றார். தவறுகள் இருந்தால் உடனே மறுபடி வாசிக்கை வைக்கிறார். பாடும் போது அத்தனை சின்சியாரிட்டி. என்னவோ, சிறு குழந்தைகள் தங்கள் பணியில் கொள்கிற கவனம் போல தோன்றியது. (குறிப்பாக ஜனனி ஜனனியில்). அவ்வப்போது சுற்றி இருப்பவர்களை சதாய்ப்பதெல்லாம் சூப்பர். (கடைசியாக மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது ஒரு பாடகியை அறிமுகப்படுத்திவிட்டு ‘என்னம்மா உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்களா இல்லையா’?) எஸ்பிபியுடன் நல்ல நட்பு. ஸ்கூட்டரில் சுற்றிய கதைகள் சொன்னார். எஸ்பிபி ஏராளமான பாராட்டுகளை பொழிந்துகொண்டே இருந்தார். (’இன்னும் குறைந்தபட்சம் நூறு வருஷத்துக்காவது இந்த மாதிரி ஒரு கம்போஸர் எங்கயும் வர மாட்டார்”). ஒரு கட்டத்தில் எஸ்பிபியை முதல் முறையாக ‘அவன்’ என்று குறிப்பிடுவதாக ராஜா சொன்னார்.

Meta referenceகளை சரியாகக் கையாளுகிறார். ‘தாய் குழந்தைக்கு தருவது போல’ போன்ற பிரயோகங்கள் இருந்தன. ரசிகர்களுக்காக பாட்டெழுதி வருகிறார். இதெல்லாம் old style என்றாலும் நேர்மையாக இருக்கிறது. பாடுகிற பாடலில் சரியான வரிகளில் சரியான செய்திகளை சேர்ப்பிக்கிறார். மேடையேறியதும் அரங்கம் முழுக்க ஏற்கனவே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க ‘என்ன இவங்க முகத்தையெல்லாம் பாக்கலனா எப்படி?’ என்று கேட்டுவிட்டு ஒவ்வொரு செக்‌ஷனாக விளக்கை ஒளிரச் செய்து நேராக மனசுக்குள் டார்ச் அடிக்கிறார். இசையை நடத்திச் செல்கையில் அவர் உடல்மொழி பிரமிப்பானது. ‘அதிக நேரம் கிடைக்கல ரிஹர்சலுக்கு. தப்பு இருந்தா பொறுத்துக்குங்க’ என்று சொல்கிறார். சத்தம் போடாம பாட்டக் கேளுங்க என்கிறார். வெறும் இசைவழி மட்டும் பேசுகிறார். நமக்கிருக்கும் சோகங்களை அங்கீகரிக்கிறார்.

ராஜாவிடம் மிகமிக பிடித்த விஷயம் – தன் ரசிகர்களிடன் தனிக்கிருக்கிற authorityயை முழுதாக புரிந்துகொண்டிருப்பது; அதை grantedஆக எடுத்துக்கொள்வது. அதையெல்லாம் நாம் அவருக்கு விளக்கிச் சொல்லி புரியவைக்கவேண்டுமானால் ஆகுமா என்ன? ‘என் இசை உனக்கு இன்றியமையாதது’ என்பதை அவர் அறிவது தான் எனது பணியை மிகச் சுலபமாக்குகிறது. அதை சொல்லிகொண்டிருக்கவோ கேட்டுக்கொண்டிருக்கவோ நேரமில்லை; துவங்கினாலும் முடிக்க நேரமில்லை. புதிதாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை ஆனால் உரையாடல் தொடர்ந்திருக்கிறது என்பதான புரிதல்.

கடைசி கட்டத்தில் ஏகக்களேபரம். மாபெரும் அபிமானத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாமல் திணற வேண்டியதாயிருக்கிறது. அன்பை சரியாகக் கொண்டு சேர்த்தாயிற்றா என்று கவலையெல்லாம் எழுகிறது. மெல்ல மெல்ல அது கூட்டம் முழுக்க பரவுகிறது. ராஜா அந்தக் கணத்தை சரியாகக் கணிக்கிறார். ‘எல்லாம் எனக்குத் தெரியும், பாட்டக் கேட்டுட்டே இரு எப்பவும் போல’ என்று சுலபமாகச் சொல்லி வைக்கிறார். மறுபடி இதெல்லாம் நிகழுமா என்று தெரியாத நிலையில் எதையும் யோசிக்காமல் இசையை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தால் அதையும் சரியாகச் சொல்லிவிடுகிறார். தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு புது வரிகளாக ‘உன் வாழ்வில் சில நொடிகள் / என் வாழ்வில் சில நொடிகள் / என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடி தான்’ என்று பாடி வைக்கிறார். (அதைப் பாடுகையில் நம்மையும் அவரையும் காட்டிக்கொள்கிற விரலில் அத்தனை அழுத்தம்). மறுபடி தென்பாண்டிச் சீமையிலேயே அறுந்த குரலில் முழுதாகப் பாடுகிறார். இரண்டு நிமிடங்களில் பாடல் முடிந்தால் நிகழ்ச்சி முடிந்து விடும். ஆர்கெஸ்ட்ரா அமைதியாயிருக்க வெறும் கைதட்டல்கள் மட்டும் பாடலை பின்தொடருகிறது. பாடல் முடிந்ததும் விடை கொடுக்க சரியான வழி தெரியாமல் எல்லோரும் கத்தித் தீர்க்கிறார்கள். ராஜா நின்று அனைவருக்கும் தலைக்கு மேல் கை கூப்பி நன்றி சொல்லி கையசைத்து ஒரு சுற்று அப்படியாக முடிகிறது. அமைதி வந்ததும் துண்டை எடுத்து போட்டுக்கொள்கிறார். புத்தகத்தை மூடிவைக்கிறார். யாரும் நகர்வதாயில்லை. யாரோ திடீரென கூட்டத்திலிருந்து ராஜாவென அழைக்க பத்திக்கொண்டது போல மறுபது கூட்டம் மொத்தம் அலறுகிறது. துண்டை மறுபடி கீழே வைத்துவிட்டு மைக் ஸ்டாண்டை விட்டு விலகி பொறுமையாக நடந்து முன்னே வந்து குனிந்து தரையை தொட்டு வணக்கம் வைக்கிறார். அதிர்ச்சியா கோபமா வருத்தமா  என்னவென்று புரியாமல் மறுபடி கூட்டம் அலற கத்தி போல கிழிக்கிறது சத்தம். இன்னுமொரு அலை கைதட்டல்களும் ராஜாவின் கையசைப்புகளும் வணக்கங்களும் மக்களின் கூக்குரல்களும் அடங்கித் தீர்ந்ததும் எல்லோருமாகக் கலைகிறோம்.

Written by Aravindan

பிப்ரவரி 25, 2013 இல் 5:19 முப

இசை இல் பதிவிடப்பட்டது

Tagged with , ,

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers